தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த வேட்டி,
 • தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த வேட்டி,

  தமிழர்களுக்கே உரித்தான தனித்துவமான ஆடையாகவுள்ள வேட்டி,  தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

  சேலை அணிதல் தமிழ்ப் பெண்களுக்கு  கலாசார முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பது போலவே வேட்டி அணிவது ஆண்களுக்கு முக்கியமானதொரு பண்பாட்டுச் சின்னமாக விளங்குகின்றது.

  எனினும், ஆடை அணிதல் என்பது, அந்தக் காலகட்டத்தின் வசதிவாய்ப்புக்கள், தேவைகள், நாகரீகம் ஆகியவற்றின் பாற்பட்டு மாற்றம் அடைந்து வருகின்றன. அத்துடன், காலநிலைச் செயற்பாடுகளும் ஆடை அணிவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

  தட்ப வெப்ப நிலமைகளுக்கு உட்பட்ட நாடுகளில் வாழ்பவர்கள் கனம் குறைந்த இலேசான ஆடைகளை அணிய முற்பட்டிருந்ததினால்  ஒன்றும் வியப்புக்குரியதல்ல. அந்த வகையில் தமிழர்களின் ஆடையாக வேட்டி அணிதல் முக்கியமானதாக அமைந்திருக்கலாம்.

  வேட்டி அணிதலைப்பற்றி சிந்திக்கிற போது கி.பி 3 ஆம் நூற்றாண்டுக்குப்பின் வேட்டியணிதல் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்பர் இலக்கிய ஆய்வாளர்கள். தொல்காப்பியகாலம், சிலப்பதிகார காலத்தில் வேட்டி அணியும் வழக்கம் இருந்துள்ளது என்பர்.

  கோவலனை வேட்டியணிந்தவனாகக் காண்கிறோம். ஆனால் அக்காலகட்டத்தில், வேட்டியை முழங்கால் அளவில் அணியும் வழக்கம் இருந்தது. அரசனும் பெரும் தனவந்தர்களும் தமது அந்தஸ்தையும் அதிகாரத்தையும் காட்டும் வகையில் வேட்டியை நீளமாக அணிவார்கள். பொதுவாகப் பருத்தி வேட்டி தான் எல்லோராலும் அணியப்பட்டது.

  சிலப்பதிகார காலத்தில் பூம்புகார் சிறப்புற்ற நகரமாக விளங்கியதாக நாம் படித்திருக்கிறோம். அக்காலப்பகுதியில் வெளிநாட்டு வணிகர்கள் பூம்புகார் நகருக்கு வந்து பட்டு மற்றும் உயர்ந்த மதிப்புள்ள பொருட்களைப் பண்டமாற்றுச்செய்து வணிகத் தொடர்புகளை பலப்படுத்தினர்.

  அந்த வகையிலே பட்டாடைகளை மன்னர்களும் பெரும் தனவந்தர்களும் அணிந்தனர். எனவே பளபளப்பான பட்டு வேட்டிகளை அணியும் வழக்கம் அக்காலத்தில் ஏற்பட்டுவிட்டது எனலாம்.

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து, தெய்வத்திருமுறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர் ஒரு நெசவாளர். நூல்நூற்று ஆடைகளை நெசவு செய்த அக்காலத்தில் வேட்டி அணிதல் வழமையான ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.

  சாதாரணமாக வீட்டிலிருக்கும் போதும் சாதாரணமான வேலைகளைச் செய்யும் போதும் சாதாரண வேட்டிகள் அணியப்படுகின்றன. விசேட நிகழ்வுகளின் போது குறிப்பாக திருமணம் போன்ற மங்களகரமான வைபவங்கள் மற்றும் பொதுநிகழ்வுகள், ஆலயத்திருவிழாக்கள் போன்றவற்றின் போது தரம் வாய்ந்த அழகான வேட்டிகள் விரும்பி அணியப்படுகின்றன.

  வேட்டிகள், நான்கு முழம், எட்டு முழம் ஆகிய அளவுகளில் உள்ளன. அது மரபு சார்ந்தது என்பதாக மட்டுமல்லாமல் வேட்டி, சேட் அல்லது நஸனல், உத்தரியம் எனப்படும் சால்வை ஆகியன அணிந்திருப்பது ஒரு தனிக் கம்பீரத்தை தரும்.

  வேட்டிகளில் பல வகைகள் உள்ளன. மல்வேட்டி, டயமன்கரைவேட்டி, மாறுகரைவேட்டி என்பவற்றுடன் பல்வேறு நிறங்கள் கொண்ட கரைவேட்டி, சிவப்புக்கரைவேட்டி, மெல்லிய சரிகைக்கரை வேட்டி, அகல சரிகைக்கரை வேட்டி, காவிவேட்டி, மஞசள்நிற வேட்டி எனப் பல்வேறு வகைகளிலும் தராதரங்களிலும் வேட்டிகள் உள்ளன.

  ஆலயக் குருக்கள்மார் மற்றும் பழமையை விரும்பும் பெரியவர்கள், தவில் நாதஸ்வரக் கலைஞர்கள் எப்போதும் வேட்டியை அணிபவர்களாகக் காணப்படுகின்றனர். அத்துடன் கிராமப் புறத்திலும் மக்கள் வேட்டியை வழமையாக அணிகின்றனர். தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை வேட்டி, சேட், சால்வை அணிபவர்கள் அதிகமாகவுள்ளனர். சடங்கு, சம்பிரதாயங்கள் என்றால் வேட்டி அணிவதை அவர்கள் முக்கியமாகக் கொள்வர். அங்கு அரசியல்வாதிகளும் வேட்டியை அணிவதை முக்கியமாகக் கொள்வதை காண்கிறோம்.

  நம் நாட்டுக்கு ஆங்கிலேயர் வருகை, அவர்தம் நாகரீகம், கலாசாரம் பரவியமை, அரசஉத்தியோகங்களை ஏற்பவர்கள் ஆங்கிலேயரின் ஆடை மரபான காற்சட்டை, சேட், கோர்ட் ஆகியவற்றை அணிவதை எதிர்பார்க்கப்பட்டமை அல்லது கட்டாயப்படுத்தப்பட்டமை போன்ற சில காரணங்களால் தமிழர் தம் பாரம்பரிய ஆடைகள் அணிவதில் மாற்றத்தை தோற்றிவித்துவிட்டது.

  அந்த மாற்றமே இன்று தமிழர்தம் கலாசாரத்துடன் ஒட்டிக் கொண்டு விட்டது. காற்சட்டை அணிவதில் சில சௌகரியங்கள் உள்ளன என்பதாலும் அதற்கு சமூகத்தில் ஒரு மதிப்பு இருப்பதனாலும் அது விருப்பத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது என்ற உண்மையையும் மறுக்க முடியாது.

  இருப்பினும் நமக்கென்று இருக்கின்ற கலாசார மரபுகளைப் பேணுவது நமது இனத்தின் தனித்தன்மையைப் பேணுவதாகும் என்பதை பெரியோர்கள் எடுத்துக்காட்டுவர். இன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் குறிப்பாக இலங்கைத்தமிழர்கள், புலம் பெயர்ந்து பல பாகங்களிலும் வாழ்கின்றனர். புதிய சூழல், சீதோஸண நிலை போன்ற இன்னோரன்ன காரணங்களால் அவர்கள் அந் நாடுகளுக்கேற்ப ஆடையணிந்து வாழ வேண்டியிருப்பது மறுக்க முடியாத உண்மை.

  இருப்பினும் அவர்கள் திருமணம், திருவிழாக்கள் மற்றும் பொது விழாக்கள் போன்றவற்றிலாவது வேட்டி, சேட், சால்வை அணிவதை விரும்புபவர்களாக இருக்கிறார்கள். இது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

  தமிழர்கள் தமது இனத்தின் மொழி, கலை, கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைப் பேணி தமது இளைய சமுதாயத்தினரும் அவற்றைப் பின்பற்ற வைக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அதில் வேட்டி அணியும் கலாசாரமும் ஒன்று. அந்த மரபை பேணிக்காக்க வேண்டும்.

 • பகிர்ந்தளிக்க :

ஆன்மிகம்
ஜோதிடம்
எம்மவர் நிகழ்வுகள்
உலக சட்டம்
 மரண அறித்தல்