அ.தி.மு.க.-வுக்குள் ஒரே தடதட!!
 • அ.தி.மு.க.-வுக்குள் ஒரே தடதட!!

  அம்மா அமைச்சர்கள், ‘பலிகடா’ பாக்கியம் பெற ஆட்களை தேடுகிறார்கள்! அ.தி.மு.க.-வுக்குள் ஒரே தடதட!!

  தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க.-வுக்குள் ஒரே தடதட-வாக உள்ளது. காரணம், தேர்தல் முடிவு, ஒரு தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு காலை வாரியது என்று வந்தால், அந்த தொகுதியில்  யாரை ‘பலிகடா’ ஆக்குவது என்று ஆளாளுக்கு ரூம் போட்டு யோசிக்கிறார்கள்.

  குறிப்பிட்ட ஒரு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தோற்றால், அந்த மாவட்ட அமைச்சர், அல்லது மாவட்ட செயலாளருக்கு பதவி காலி என்பதுதான், பொதுவாக அடிபடும் பேச்சு. வழமையாக நடப்பதும் அதுதான்.

  ஆனால்,  பலிகடா ஆகும் பாக்கியத்தை, தனக்கு கீழ் உள்ள ஆட்களிடம் பாஸ் பண்ண விரும்புகிறார்கள், பெரும்பாலான அமைச்சர்கள், மா.செ.கள்.

  இதனால், “நம்ம தொகுதியில் நகராட்சி மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் சரியாக தேர்தல் பணியாற்றவில்லை” என இப்போதிருந்தே பிட் போடத் தொடங்கியுள்ளனர் சில அமைச்சர்கள்.  அதே நேரத்தில், அமைச்சர்கள் இந்த ரூட்டில் போகலாம் என்று தெரிந்து,  நகராட்சி மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்களும் உஷாராகவே உள்ளார்கள்.

  அவர்களும், கார்டனுக்கு பேக்ஸ்-களை தட்டி விடுகின்றனர்.

  இப்படி கார்டனுக்கு வரும் சில கடிதங்களில், நிறையவே உண்மைகள் உள்ளன என்பதை, நாம் விசாரித்ததில் தெரிந்துகொள்ள முடிகிறது. இதோ, சாம்பிளுக்கு ‘ஃபாக்ட்ஸ்’ உள்ள கடிதம் ஒன்று:

      பெறுனர்

      மாண்புமிகு தமிழக முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள்
      சென்னை

      பொருள்: நாடாளுமன்ற தேர்தலில் நம் கழக வேட்பாளர் அண்ணன் தம்பிதுரைக்கு வந்த எதிர்ப்புக்கள் சம்பந்தமாக, நகராட்சி மற்றும் உள்ளாட்சி உறுப்பினர்கள் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

      அம்மா,

      கரூர் இளம் பாசறை உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் சார்பில் எங்கள் வணக்கத்தை தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம்.

      நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணன் தம்பிதுரை மற்றும் வாக்கு சேகரிக்க சென்ற போது ஆங்காங்கே பொதுமக்களிடையே எதிர்ப்புகள் தோன்றின. ஆனால் திட்டமிட்டு இந்தப்பழி கழக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளின் சுமத்தப்படுகிறது.

      உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது தவறுகள் இருந்தால், அம்மாவின் நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம்.

      அதே சமயத்தில், மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி, மற்றும் கழக வேட்பாளர் அண்ணன் தம்பிதுரை மீதும் அதிருப்தி பெருமளவில் இருந்தது குறித்தும் அம்மா அவர்கள் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

      அண்ணன் தம்பிதுரை டில்லியில் தன் செல்வாக்கை பயன்படுத்தி இங்குள்ள ஜவுளித்துறையின் பிரச்சினை தீர்க்க வழி வகை செய்யவில்லை என்று டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் அவர் மீது அதிருப்தியில் இருந்தன.

      ஸ்பின்னிங் மில் பின்னணி உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ராமச்சந்திரன், அரவக்குறிச்சி ஸ்பின்னிங் மில் முதலாளிகளிடம் கணிசமாக தேர்தல் நிதி பெற்றார்.

      சேலம் – கரூர் ரயில் திட்டம் நிறைவேற தி.மு.க. எம்.பிக்களான டி.ஆர். பாலு, டி.எம். செல்வகணபதி போன்றவர்கள் பெருமுயற்சி எடுத்து கொண்டனர், ஆனால் அண்ணன் தம்பிதுரை முயற்சி எடுக்கவில்லை என்று தேர்தல் வாக்கு சேகரிப்பில் மக்கள் எங்களிடம் நேரிடையாக அதிருப்தி தெரிவித்தனர்.

      டையிங் கம்பெனிகள் மத்திய அரசிடம் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க சிட்டிங் எம்.பி.யாக இருந்து டில்லியில் பேசி மான்ய தொகை கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை என்று மக்கள் அண்ணன் தம்பிதுரை மீது குறை சொன்னார்கள்.

      தேர்தல் பிரசார சமயத்தில், கரூர் சுங்க கேட் அருகே மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி,  தெரசா தனியார் பள்ளி வாகனத்தை நிறுத்தி,  “மாணவிகளை பஸ்சோடு கொளுத்திவிடுவேன்” என்று ஆவேசமாக கத்தியது நம் கழகத்துக்கு அவப்பெயரை கொடுத்தது.

      சிட்டிங் எம்.பி.யும், அமைச்சரும் தங்கள் பணியை செய்யாமல் மக்களிடம் அதிருப்திக்கு உள்ளாகி இருக்கும் சூழ்நிலையில், பழியை உள்ளாட்சி பிரதிகள் மீதும் மட்டும் திருப்புவது விஷமத்தன முயற்சியாகும்.

      “கழக வேட்பாளர் அண்ணன் தம்பிதுரை  வெற்றி பெற்றால், மத்திய அமைச்சர் ஆவார்” என்று மக்களிடம் பிரசாரம் செய்தும், மக்கள் அதிருப்தி நம் வேட்பாளர் மீதும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் குறையவில்லை.

      கடந்த ஐந்து ஆண்டுகளாக டில்லியில் எதையும் சாதிக்கவில்லை என்றே மக்கள் நம் கழக வேட்பாளரை புறக்கணித்தனர்.

      சிட்டிங் எம்.பி மீது உள்ள அதிருப்தியை உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது போடுவது எங்களுக்கு மிக்க மனவேதனையை கொடுக்கிறது.

      இந்த தொகுதியில் நாம் ஒருவேளை தோல்வி அடைந்தால், கட்சியில் மூத்த தலைவர், மற்றும் நாடாளுமன்ற தலைவர் என்ற முறையில் அண்ணன் தம்பிதுரையும், மாவட்ட செயலாளர் என்ற வகையில் மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜியும் பொறுப்பேற்க வேண்டுமே தவிர, பழியை உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது போடுவது எங்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.

      இவண்

      கரூர் மாவட்ட கழக இளம்பாசறை உறுப்பினர்கள்
      கரூர் நகராட்சி உறுப்பினர்கள் (கழக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட)
      கரூர் மாவட்ட கழக முன்னோடிகள்

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
சாதனையாளர்கள்
சுவிஸ் செய்தி
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்