5.78 கோடி கொள்ளை 7 பேர் கைதான விவகாரம் புழல் சிறையில் நாளை அடையாள அணிவகுப்பு,
 • 5.78 கோடி கொள்ளை 7 பேர் கைதான விவகாரம் புழல் சிறையில் நாளை அடையாள அணிவகுப்பு,

  சென்னை: ரயிலில் ஓட்ைட போட்டு ரூ.5.78 கோடி கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் சிபிசிஐடி போலீசார் புழல் மத்திய சிறையில் நாளை அடையாள அணிவகுப்பு நடத்துகின்றனர். சேலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி ரூ.342 ேகாடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

  ரயில் எழும்பூர் நிலையத்திற்கு வந்தபோது, பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டியை வங்கி அதிகாரிகள் திறந்து பார்த்தபோது ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ரயில் கொள்ளையில் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து, சிபிசிஐடி தனிப்படை போலீசார் சென்னையில் பதுங்கி இருந்த தினேஷ் (38), ரோஹன் பார்தி (29) ஆகிய 2 பேரையும் கடந்த மாதம் 12ம் தேதி கைது செய்து, தனி இடத்தில் வைத்து விசாரித்தனர்.

  அவர்கள் அளித்த தகவலின் படி மத்திய பிரதேசத்தில் உள்ள குணா மத்திய சிறையில் உள்ளூர் வழக்கில் அடைக்கப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான மோஹர் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளான காளியா (எ) கிருஷ்ணா (எ) கபு, மகேஷ் பர்டி, ரூசி பர்டி, பிலித்தியா (எ) பர்ஜிமோகன் என 5 பேரை கடந்த 29ம் தேதி கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

  பின்னர், 5 பேரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதை தொடர்ந்து 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அப்போது, கொள்ளை சம்பவத்திற்கு உதவிய அதிகாரிகள் குறித்து முழு தகவல்களையும் வாக்குமூலமாக சிபிசிஐடி போலீசாரிடம் அளித்ததாக கூறப்படுகிறது.

   14 நாட்கள் தொடர் விசாரணையை தொடர்ந்து ேநற்று 5 கொள்ளையர்களையும் சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் பிரகாஷ் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது, அரசு தரப்பு வக்கீல் ஜெயந்தி, குற்றவாளிகளிடம் அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டும். இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் பிரகாஷிடன் கோரினார்.

  அதன்படி, நாளை புழல் மத்திய சிறையில் சிபிசிஐடி போலீசார் ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்டுள்ள மொத்தம் 7 குற்றவாளிகளிடம்  அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்தார். மேலும், 14 நாட்கள் காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட 5 குற்றவாளிகளையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். அதன்படி சிபிசிஐடி போலீசார் நேற்று மாலை 5 பேரையும் புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

  ரயில் கொள்ளையில் கைது செய்யப்பட்ட 7 பேரையும் கொள்ளை நடந்த ரயிலில் பயணம் செய்த சிலர் அடையாளம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரயில்வே அதிகாரிகள் சிலர் நாளை நடைபெறும் அடையாள அணி வகுப்பில் கலந்து கொண்டு அடையாளம் காட்ட உள்ளனர் என்று சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
சாதனையாளர்கள்
இலக்கியம்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்