இனி பின்வாங்கப் போவதில்லை மைத்திரிபால சிறிசேன,
 • இனி பின்வாங்கப் போவதில்லை மைத்திரிபால சிறிசேன,

  பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ஷவுக்கு அளிப்பதற்கு முன்பாக, தற்போதைய சபாநாயகர் கரு ஜெயசூர்யவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரமதாஸவுக்கும் அளிக்க முன்வந்ததாகவும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கிறார்.

  'ரடம ரகின ஜன மஹிமய' என்ற பெயரில் கொழும்பு நகரில் மிகப் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக மஹிந்த ராஜபக்ஷவும் மைத்திரிபால சிறிசேனவும் ஒரே மேடையில் தோன்றிப் பேசினா்.

  கொழும்பு பத்ரமுல்லையில் நடந்த இந்தக் கூட்டத்திற்கென விரிவான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செய்திருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறை மற்றும் ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

  கடந்த செவ்வாய்க் கிழமையன்று ரணில் விக்ரமசிங்கே கொழும்பு நகரில் நடத்திய மிகப் பெரிய பொதுக்கூட்டத்திற்கு பதிலடியாக இந்தக் கூட்டம் ஏற்பாடுசெய்யப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

  நன்பகல் 12 மணிக்குத் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தக் கூட்டம் மிகத் தாமதமாகத் துவங்கியது. மைத்திரிபால சிறிசேனவும் மஹிந்த ராஜபக்ஷவும் சுமார் 4 மணி அளவிலேயே மேடைக்கு வந்தனர்.

  முதலில் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, தனது உரையை சுருக்கமாக முடித்துக்கொண்டார். கடந்த தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய கருத்தை உணர்ந்து இந்த முடிவை எடுத்ததற்காக ஜனாதிபதிக்கு நன்றி கூறுவதாக ராஜபக்ஷ தெரிவித்தார். உரையை முடிக்கும் முன் தமிழில் பேசிய அவர், சிங்களர், தமிழர், முஸ்லிம்கள் என மூன்று சமூகத்தினரும் தனது அரசுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

  இதற்குப் பிறகு பேசவந்த மைத்திரிபால சிறிசேன, கடந்த சில நாட்களாக தன்னைச் சந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், தங்கள் கட்சிதான் அவரை 2015ல் ஜனாதிபதியாக்க உதவிய நிலையில், தங்களில் ஒருவரை பிரதமராக்காமல் மஹிந்தவை ஆக்கியது ஏன் எனக் கேட்டதாக குறிப்பிட்டார்.

  பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாகவே தற்போதைய சபாநாயகர் கரு. ஜெயசூர்யவிடம் தான் கேட்டதாக குறிப்பிட்டார் மைத்திரி. பல நாட்கள் அவரிடம் கேட்டபோதும், தன்னால் ரணிலை எதிர்க்க முடியாது என்பதால் அவர் அந்தப் பதவியை ஏற்க மறுத்திவிட்டதாக தெரிவித்தார்.

  பிறகு, இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சஜித் பிரதாசவிடம் இதைப் பற்றிப் பேசியபோது அவரும் இதே காரணத்தால் மறுத்திவிட்டதாகக் கூறினார்.

  ரணிலை பதவியிலிருந்து நீக்கியிருப்பதன் மூலம் வேறு ஒரு ஆளுமையை பதவிக்குக் கொண்டுவந்திருப்பது மட்டுமல்லாமல், வேறு ஒரு அரசியல் திட்டத்தையே கொண்டுவந்திருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு உள்ளூர் மதிப்பீடுகள் என்பதாலும் ரணிலை எதிர்த்து நிற்கும் திறன் உள்ளவர் என்பதாலும் அவரை நியமித்ததாகவும் கூறினார்.

  அறுதிப் பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்கள் தங்களிடம் இருப்பதாகவும் சபாநாயகர் கரு. ஜெயசூர்ய தங்களோடு ஒத்துழைக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.

  "பிரதமரை நீக்கிவிட்டு ராஜபக்ஷேவை நியமித்தது சட்டபூர்வமாகவே நடந்தது. இதில் பாதிக்கப்பட்டதாக நினைப்பவர்கள், உச்ச நீதிமன்றத்தை அணுகலாம்" என்று குறிப்பிட்டார்.

  வெளிநாட்டுத் தூதரகங்களை வணங்கும் ரணில் விக்ரமசிங்க, உள்நாட்டு அரசியல்விவகாரங்களில் தலையிடும்படி அவர்களிடம் கோரிவருவதாகவும் தான் எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப்போவதில்லையென்றும் சிறிசேன தெரிவித்தார்.

  கடும் மழைக்கு நடுவில் பெரும் திரளான மக்கள் இந்தக் கூட்டத்திற்கு வருகை தந்திருந்தனர்.

  மைத்திரிபால சிறிசேனவின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ள ரணில் விக்ரமசிங்க, "என்னுடன் தனிப்பட்ட முறையில் ஜனாதிபதி சிறிசேனவுக்கு பிரச்சனைகள் இருக்கலாம். ஆனால், அதற்காக எந்த மக்களுக்கு சேவைசெய்ய தேர்ந்தெடுக்கப்பட்டாரோ அந்த மக்களை பிணைக் கைதிகளாக்கி சட்டவிரோதமான, முறையற்ற வகைகளில் நாட்டை அரசியல்சாஸன நெருக்கடிக்குள் தள்ளக்கூடாது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

  இதற்கிடையில் திங்கட்கிழமை காலையில் சபாநாயகர் கரு ஜெயசூர்ய வெளியிட்ட அறிக்கையில், புதிய அரசாங்கம் பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் நிரூபிக்கும் வரையில், முந்தைய அரசியல் நிலை இருப்பதாகவே தான் கருதுவதாக கூறியிருந்தார். நவம்பர் 5ஆம் தேதியோ, ஏழாம் தேதியோ பாராளுமன்றம் கூட்டப்படுமென தெரிவித்த ஜனாதிபதி அவ்வாறு செய்யவில்லை என்பதையும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

  இந்த பரபரப்பிற்கு இடையில் பாராளுமன்றத்தின் புதிய அவைத் தலைராக தினேஷ் குணவர்தனே பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இதற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த லக்ஷ்மண் கிரியல்ல அவைத் தலைவராக செயல்பட்டுவந்தார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
ஆய்வுக் கட்டுரை
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்