சென்னை வெள்ளத் தடுப்புக்கு ரூ.4,445 கோடி தேவை,
 • சென்னை வெள்ளத் தடுப்புக்கு ரூ.4,445 கோடி தேவை,

  பிரதமரிடம் முதல்வர் நேரில் வலியுறுத்தல் தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

  சென்னையில் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்புப் பணிகளுக்குத் தேவையான சுமார் ரூ.4,445 கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடியை தில்லியில் திங்கள்கிழமை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.

  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் அவர்அளித்தார்.

  தமிழகத்தின் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் மோடியை சந்திக்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரம் ஒதுக்கித் தருமாறு ஏற்கெனவே கேட்டிருந்தார். அதன்படி, முதல்வருக்கு திங்கள்கிழமை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி வந்தார். அவருடன் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் வந்திருந்தனர். 

  இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள செளத் பிளாக்கில் பிரதமர் மோடியை முதல்வர் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிஷங்கள் நீடித்தது. அப்போது 20 கோரிக்கைகள் அடங்கிய, 43 பக்கங்கள் கொண்ட மனுவை பிரதமரிடம் அவர் அளித்தார். அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

  அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா: தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோருக்கு தமிழக அமைச்சரவை ஒருமனதாக பரிந்துரை செய்துள்ள பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டை என்றென்றும் நினைவுகூரும் வகையில், தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் எனப் பெயரிட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை மானியங்களை விரைந்து வழங்க வேண்டும்.

  மதுரை தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும். சென்னை மாநகரத்தில் நிரந்தர வெள்ளத் தடுப்பு கட்டமைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் சுமார் ரூ. 4,445 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். 2017-18-ஆம் ஆண்டுக்கான ஐ.ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையான ரூ. 5,426 கோடியை உடனடியாக வழங்க வேண்டும்.

  தமிழகத்தின் உரிமையைப் பாதிக்கும் வகையில் உள்ள கர்நாடக அரசின் மேக்கேதாட்டு நீர்த்தேக்கத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக்கூடாது. மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரூ.17,600 கோடியிலான காவிரி நீர்ப் பாசன மேம்பாடு மற்றும் மறுவாழ்வுத் திட்டத்துக்கு உரிய அனுமதியையும் நிதியையும் வழங்க வேண்டும்.

  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களுக்கும் உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்க வேண்டும். புயலின் போது காணாமல் போகும் மீனவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மீட்டு வரும் வகையில், கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய ஒரு புதிய நிரந்தரக் கப்பல் படைத் தளம் அமைக்க வேண்டும்.

  ராமநாதபுரத்தில் மருத்துவக் கல்லூரி: தமிழகத்துக்குப் பல்வேறு திட்டங்களின் கீழ் வர வேண்டிய மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ. 8,699 கோடியை விரைவில் வழங்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். சேலம் உருக்காலையில் பயன்படுத்தாமல் உள்ள காலி நிலத்தில் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  ஒசூர், நெய்வேலி, ராமநாதபுரம் பகுதிகளுக்கு உடான் திட்டத்தின் கீழ் விமானப் போக்குவரத்து சேவையை செயல்படுத்த வேண்டும். கொப்பரைத் தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சந்தை நிலவரத்துக்கு ஏற்றாற் போல கிலோவுக்கு ரூ. 75 லிருந்து ரூ.105 ஆக உயர்த்த வேண்டும் என மனுவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
சட்டம்
உலக சட்டம்
 மரண அறித்தல்