விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு,
 • விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு,

  பரிணாம கொள்கை மூலம் என்சைம் உற்பத்தியை வெற்றிகரமாக செயல்படுத்திய அமெரிக்கா, இங்கிலாந்து விஞ்ஞானிகளுக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

  மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், வேதியியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. உலக அளவில் மிகப்பெரிய கவுரவமாக கருதப்படும் இந்த பரிசை, இந்த ஆண்டு பெறும் சாதனையாளர்களின் விவரங்கள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

  இதில் மருத்துவம், இயற்பியல் துறைக்கான பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் வேதியியல் துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த பரிசு, அமெரிக்காவை சேர்ந்த பெண் விஞ்ஞானி பிரான்சஸ் அர்னால்டு (வயது 62), விஞ்ஞானி ஜார்ஜ் ஸ்மித் மற்றும் இங்கிலாந்து விஞ்ஞானி கிரகோரி வின்டர் (67) ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

  வேதியியல் துறையில் பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வு மற்றும் அதன்மூலம் மனித இனத்துக்கு மிகப்பெரும் பலனை ஏற்படுத்தியமைக்காக இந்த விஞ்ஞானிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக பரிணாம கொள்கையை பயன்படுத்தி, பயோ எரிபொருளில் இருந்து மருந்தியல் துறைக்கான பொருட்களை தயாரிப்பதற்கான என்சைம்களை (நொதி) உற்பத்தி செய்தமைக்காக இந்த கவுரவம் அளிக்கப்படுகிறது.

  இது குறித்து நோபல் அகாடமியின் வேதியியல் குழுத்தலைவர் கிளேஸ் கஸ்டப்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜீன் மாறுபாடு மற்றும் தேர்வுக்கான பரிணாம கொள்கையை இந்த விஞ்ஞானிகள் பயன்படுத்தி உள்ளனர். டார்வினின் பரிணாம கொள்கையை இவர்கள் சோதனைக் குழாய்களில் பயன்படுத்தி, தங்கள் ஆய்வுக்கூடங்களில் மறு உருவாக்கம் செய்திருக்கின்றனர். இதன் மூலம் ஆயிரமாயிரம் மடங்கு வேகமான பரிணாம வளர்ச்சியையும், அதன்மூலம் புதிய புரதங்களையும் இவர்களால் உருவாக்க முடிந்திருக்கிறது’ என்று தெரிவித்தார்.

  அவர் மேலும் கூறும்போது, ‘இத்தகைய புதிய புரதங்கள் உருவாக்கும் வழிமுறை மூலம் கரும்பில் இருந்து பயோ எரிபொருள் உருவாக்குதல் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிபொருள் உருவாக்குதலுக்கு சிறந்த வாய்ப்பு உருவாகியுள்ளது. அத்துடன் பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த ரசாயன பொருட்கள், தினசரி பொருட்கள், குளிர் காலநிலையில் சிறந்த பலனளிக்கும் சலவைத்தூள் போன்றவை தயாரிக்கவும் வழி ஏற்பட்டுள்ளது’ என்றார்.

  வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 5–வது பெண் விஞ்ஞானி, பிரான்சஸ் அர்னால்டு ஆவார். கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவரது கண்டுபிடிப்புகள், நச்சு ரசாயனங்களை இடமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

  மொத்த பரிசுத்தொகையான 1.01 மல்லியன் டாலரில் (சுமார் ரூ.7 கோடியே 37 லட்சம்) பாதியை பிரான்சஸ் அர்னால்டு பெறுவார். மீத தொகையை ஜார்ஜ் ஸ்மித் மற்றும் கிரகோரி வின்டர் ஆகியோர் பகிர்ந்து கொள்வர். இவர்கள் இருவரும் முறையே மிசவுரி பல்கலைக்கழகம் மற்றும் கேம்பிரிட்ஜில் உள்ள எம்.ஆர்.சி. உயிரியியல் மூலக்கூறு ஆய்வுக்கூடத்தில் பணியாற்றி வருகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
ஜோதிடம்
தையல்
உலக செய்தி
 மரண அறித்தல்