புல்லட் நாகராஜனுக்கு சிறப்பு எஸ்.ஐ பாலமுருகனுடன் நெருக்கமான தொடர்பு,
 • புல்லட் நாகராஜனுக்கு சிறப்பு எஸ்.ஐ பாலமுருகனுடன் நெருக்கமான தொடர்பு,

  துணை நடிகை உட்பட 6 மனைவிகள்: விசாரணையில் பகீர் தகவல்கள் பெரியகுளம்: போலீஸ் அதிகாரிகளுக்கு சரமாரியாக கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி புல்லட் நாகராஜனுடன், தேனி மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு எஸ்ஐ பாலமுருகனுக்கு நெருக்கமான தொடர்பு இருந்து வந்தது அம்பலமாகியுள்ளது. மேலும் ரவுடி புல்லட் நாகராஜனுக்கு, துணை நடிகை உட்பட 6 மனைவிகள் உள்ளனர் என்பதும், கள்ளநோட்டு பரிமாற்றம், ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன்(50). இவர் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் கடந்த வாரம் இவர் மதுரை சிறைத்துறை பெண் எஸ்பி ஊர்மிளா மற்றும் பெரியகுளம் தென்கரை பெண் இன்ஸ்பெக்டர் மதனகலா ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசிய ஆடியோ பதிவுகள் வாட்ஸ்அப்பில் வைரலாக பரவியது. மேலும் தேனி மாவட்ட கலெக்டர், எஸ்.பி ஆகியோரை விமர்சித்து அடாவடியாக பேசி, அந்த ஆடியோ பதிவுகளையும் அவரே வெளியிட்டு, ஒட்டுமொத்த காவல் துறைக்கே சவால் விடுத்தார்.

  இதையடுத்து இவர் மீது மதுரை கரிமேடு மற்றும் பெரியகுளம் காவல் நிலையங்களில் வழக்குகள் பதியப்பட்டன. தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ரவுடி நாகராஜனின் செல்போன் சிக்னல் மூலம் அவரது நடவடிக்கைகளை போலீசார் தொடர்ந்து கண்காணித்ததில் அவர் சிவகங்கை அருகே பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிவகங்கை விரைந்தனர். ஆனால் போலீசார் வரும் தகவலறிந்து, நாகராஜன் அங்கிருந்து ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு தப்பிச் சென்று விட்டார்.

  பின்னர் பரமக்குடியில் நேற்று அதிகாலை 3 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வந்துள்ளார். அங்கு விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த அவர், நேற்று காலை பெரியகுளம் வந்துள்ளார். அவர் பெரியகுளம் வருவதை முன்னரே அறிந்து கொண்ட போலீசார் சாதாரண உடையில் நகர் முழுவதும் ரோந்து வந்தனர். பெரியகுளம் அருகே தென்கரை சர்ச் ரோட்டில் ஹெல்மெட் அணியாமல் புல்லட்டில் சென்று கொண்டிருந்த அவரை, அந்த வழியாக ஜீப்பில் வந்த ஏடிஎஸ்பி சுருளிராஜா மற்றும் போலீசார் அடையாளம் கண்டு விரட்டிச் சென்றனர்.

  ஒரு கிமீ தூரம் வரை அவரது பைக்கை விரட்டிச் சென்று, மறித்த போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள், 2 பொம்மை துப்பாக்கிகள், 2 கத்திகள், தங்கநகை, போலி ஐடி கார்டுகள், ஜட்ஜ் போர்டு, செல்போன்கள், வக்கீல் உடை, போலி ரப்பர் ஸ்டாம்ப் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

  பெரியகுளம் காவல் நிலையத்தில் தேனி எஸ்.பி பாஸ்கரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் இன்று அதிகாலை பெரியகுளம் மாஜிஸ்திரேட் அருண்குமார் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்தினர். புல்லட் நாகராஜனை 15 நாட்கள் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்குமாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பலத்த பாதுகாப்புடன் திருச்சி அழைத்து சென்று, மத்திய சிறையில் அடைத்தனர்.

  போலீசார் விசாரணையில், வத்தலக்குண்டுவில் ரவுடி நாகராஜன் தங்கியிருந்த விடுதியின் அறை, பெரியகுளத்தில் எஸ்எஸ்ஐயாக வேலை பார்த்து வந்த பாலமுருகன் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிந்தது. எஸ்எஸ்ஐ பாலமுருகன், தற்போது தற்காலிக விடுமுறையில் உள்ளார். பெரியகுளம் பாலசுப்பிரமணிய சாமி கோயில் கும்பாபிேஷக விழாவில் ஏராளமான பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன.

  எஸ்எஸ்ஐ பாலமுருகனுக்கு தொடர்பு உள்ளதாகவும், இதையடுத்தே அவர் விடுப்பில் சென்று விட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் ரவுடி நாகராஜனுக்கு, போலீசாரின் தேடுதல் நடவடிக்கைகள் குறித்து எஸ்எஸ்ஐ பாலமுருகன் அவ்வப்போது தகவல் கொடுத்துள்ளார். அவரது உதவியுடனேயே அடிக்கடி நாகராஜன், தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டு, போலீசாரை ஏமாற்றி வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து விடுப்பில் சென்றுள்ள பாலமுருகன் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட துறைரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.

  துணை நடிகை உட்பட 6 மனைவிகள்

  ரவுடி புல்லட் நாகராஜன், கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்க்கை வந்துள்ளார். துணை நடிகை உட்பட தனக்கு மொத்தம் 6 மனைவிகள் உள்ளனர் என நாகராஜன், நேற்று போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் கள்ள நோட்டுக்களை மாற்றி, ஏராளமாக சம்பாதித்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. கள்ள நோட்டுகளை இவரே அச்சிட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
வினோத நிகழ்வுகள்
மங்கையர் பகுதி
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்