ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரம்,
 • ராஜீவ் கொலை கைதிகள் 7 பேர் விடுதலை விவகாரம்,

  மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் சட்டவல்லுனர்களுடன் ஆலோசித்த பின் நடவடிக்கை  

  ராஜீவ் கொலை கைதிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று அறிக்கை அனுப்பினார். சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின் இந்த நடவடிக்கையை கவர்னர் மேற்கொண்டதாக தெரிகிறது.

  ஆயுள் தண்டனையாக...

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் வருடம் மே மாதம் 21-ம் தேதி ஸ்ரீபெரும்புதூர் அருகே மனித வெடிகுண்டுக்கு பலியானார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சுப்ரீம் கோர்ட் கடந்த 2014-ல் தீர்ப்பளித்தது.

  இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்த நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கனவே 20 ஆண்டுக்கும் மேலாக சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் சுப்ரீம் கோர்ட் அப்போது தெரிவித்தது.

  சட்டசபையில் தீர்மானம்

  அதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்யும் பொருட்டு  முதல்வராக இருந்த போது ஜெயலலிதா தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றினார். இதுதொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதமும் எழுதியது. ஆனால், இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அப்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சார்பிலும் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

  முடித்து வைத்தது...

  இந்த நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுத்து கவர்னருக்கு பரிந்துரைக்கலாம் என்று கூறி, மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவையும் முடித்து வைத்தது.

  அறிக்கை அனுப்பினார்

  சுப்ரீம் கோர்ட்டின் இந்த முடிவைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசமைப்பு சட்டப் பிரிவு எண்.161-ன் கீழ் கவர்னருக்கு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை அளித்த பரிந்துரையின் அடிப்படையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நேற்று அறிக்கை அனுப்பினார்.

  சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்த பின் இந்த நடவடிக்கையை கவர்னர் மேற்கொண்டதாக தெரிகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
சிறுவர் உலகம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்