முதியவரின் உடலில் இருந்த 40 கிலோ கட்டி,
 • முதியவரின் உடலில் இருந்த 40 கிலோ கட்டி,

  ராமநாதபுரம்: முதியவரின் உடலில் இருந்த 40 கிலோ கட்டி ஆபரேஷன் மூலம் அகற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ராமநாதபுரம் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் மோகன் (55). இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டார்.

  இதனால் அவரது விதைப்பை வீக்கம் அடைந்து நாளடைவில் 40 கிலோ எடை அளவுக்கு பெரிதாகிவிட்டது. ஒருவரின் துணையின்றி எழுந்து நடக்கவோ, உட்காரவோ முடியாமல் கடும் சிரமம் அடைந்து வந்தார். இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக மோகன் அனுமதிக்கப்பட்டார்.

  தொடர்ந்து முதியவரை பரிசோதனை செய்து, ஆர்எம்ஓ ஞானக்குமார் ஆலோசனையின் பேரில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் அறிவழகன், பொது அறுவை சிகிச்சை நிபுணர் தினேஷ் முகில் மற்றும் மயக்க மருந்து நிபுணர் சாகுல்ஹமீது குழுவினர் நேற்று ஆபரேஷன் செய்து, மோகன் உடம்பில் இருந்த 40 கிலோ கட்டியை அகற்றினர். இதுகுறித்து அறுவை சிகிச்சை நிபுணர் அறிவழகன் கூறுகையில், ‘ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மோகன் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். யானைக்கால் நோய் காலில் மட்டுமே வரும். 1 அல்லது 2 சதவீத பேருக்கு மட்டுமே மற்ற இடங்களில் வரும்.

  மோகனுக்கு விதைப்பையில் இந்த நோய் வந்துள்ளது. கடந்த 8 வருடங்களாக அவரது விதைப்பை வீக்கம் அடைந்து 40 கிலோ அளவுக்கு வளர்ந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலமாக கட்டியை அகற்றியுள்ளோம்.

  மேலும் அவரது நீர்ப்பாதை புதைந்து போய் இருந்ததை சரிசெய்து மற்ற நபர்கள் போல் அவரும் இனிமேல் சிறுநீர் கழிக்கலாம். தற்போது மோகன் நலமுடன் இருக்கிறார். இதுவரை தேசியளவில் அதிகபட்சமாக 32 கிலோ எடையுள்ள கட்டியை மட்டுமே அகற்றி உள்ளதாக தகவல்கள் உள்ளன. ஆனால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 40 கிலோ எடை கொண்ட கட்டி அகற்றப்பட்டுள்ளது’’ என்றார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
தொழில் நுட்பம்
மங்கையர் பகுதி
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்