வகுப்புத் தோழர்களாக ஒரே கல்லூரியில் தந்தை, மகன்: கான்பூரில் வாஜ்பாய் அனுபவம்
 • வகுப்புத் தோழர்களாக ஒரே கல்லூரியில் தந்தை, மகன்: கான்பூரில் வாஜ்பாய் அனுபவம்

  அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் அவரது தந்தையான பண்டிட் கிருஷ்ணா பிஹாரிலால் வாஜ்பாய் ஆகியோர் வகுப்புத் தோழர்களாக ஒரே கல்லூரியில் பயின்றுள்ளனர். உ.பி.யின் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் வாஜ்பாய்க்கு இந்த அனுபவம் கிடைத்துள்ளது.

  உ.பி.யின் கான்பூரில் உள்ள டிஏவி கல்லூரியில் 1945-ல் வாஜ்பாய், சட்டக்கல்வி பயில சேர்ந்துள்ளார். அப்போது தன் 30 வருட பணிக்கால ஓய்விற்குப் பின் அவரது தந்தை பண்டிட் கிருஷ்ண பிஹாரிலால் வாஜ்பாயும் அதே வகுப்பில் இணைந்து பயின்றுள்ளார். இது தொடர்பான வாஜ்பாயின் நினைவுகள் அவர் பிரதமராக இருந்த போது கல்லூரியின் 2002-2003 ஆண்டுவிழா மலரில் பிரசுரமாகி உள்ளது.

  ஒன்றாக மேடை நாடகம்

  அதில் தன் நினைவுகளாகப் பகிரும் வாஜ்பாய் குறிப்பிடுகையில், ''ஒரே கல்லூரி மற்றும் வகுப்பில் பயின்ற தந்தை, மகனை எங்காவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லை எனில் அதை கான்பூர் டிஏவி கல்லூரியில் படித்தவர்களிடம் கேளுங்கள். இங்கு நானும் எனது தந்தையும் இணைந்து பயின்றவதுடன் அக்கல்லூரிக்காக பல நாடக மேடைகளிலும் ஒன்றாக நடித்தும் உள்ளோம்'' எனத் தெரிவித்துள்ளார்.

  வகுப்புப் பிரிவை மாற்றிக்கொண்ட வாஜ்பாய்

  இது குறித்து கான்பூர் டிஏவி கல்லூரியின் முதல்வரான அமித் ஸ்ரீவாத்சவா நினைவுகூறும்போது, ''ஒரே வகுப்பில் இருப்பதால் தாமதமாக வாஜ்பாய் வரும் போது அவரிடம் உங்கள் மகன் எங்கே என ஆசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் அவரது தந்தை தாமதமாக வகுப்பிற்கு வந்தால் வாஜ்பாயிடம் இந்தக் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அஞ்சிய இருவரும் இணைந்து பேசி அப்போது தனது வகுப்பின் பிரிவை வாஜ்பாய் மாற்றிக் கொண்டார்'' எனத் தெரிவித்தார்.

  தந்தை ஓய்வால் குடும்ப பாரம்

  கடந்த 1945-ல் ம.பி.யின் குவாலியரில் உள்ள விக்டோரியா கல்லூரியில் வாஜ்பாய் பி.ஏ. முடித்துள்ளார். அப்போது அவரது தந்தையும் அரசுப் பணியில் இருந்து ஓய்வுபெற்று விட்டார். அப்போது வாஜ்பாயின் இரு சகோதரிகளும் திருமணத்திற்குத் தயாரான வயதில் இருந்தனர். எனவே, அவர்களுக்கு வரதட்சணை மற்றும் இதர செலவைச் சமாளிக்க தன் பட்டமேற்படிப்பை சட்டக்கல்வியாகப் பயின்றுள்ளார் வாஜ்பாய்.

  உதவித்தொகையாக ரூ.75

  இந்த சம்பவத்தையும் தனது கட்டூரையில் குறிப்பிட்டுள்ள வாஜ்பாய்க்கு அப்போது குவாலியரின் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. எனினும், குவாலியரின் ராஜகுடும்பமான மஹராஜா ஸ்ரீமந்த் ஜீவாஜிராவ் சிந்தியாவின் அறக்கட்டளை சார்பில் வாஜ்பாய்க்கு மாதம் ரூ.75 உதவித்தொகை கிடைத்துள்ளது. இத்துடன் கான்பூரின் டிஏவி கல்லூரியிலும் இடம் வாங்கித் தரப்பட்டதால் வாஜ்பாய் அங்கு கல்வி பயிலச் சென்றார்.

  வேடிக்கை பார்க்க வந்த மாணவர்கள்

  இதே காரணத்திற்காக அவரது தந்தையும் பணி ஓய்விற்குப் பின் அந்தக் கல்லூரியில் கல்வி பயின்றார். அப்போது நரைத்த தலைமுடியும், கையில் கைத்தடியுடனும் சென்ற வாஜ்பாயின் தந்தை பேராசிரியர் பணிக்கு வாய்ப்பு கேட்டு வந்ததாகக் கருதப்பட்டதாம். இதையும் குறிப்பிட்ட வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை ஒரே வகுப்பில் பயில்வதைக் காண மற்ற மாணவர்கள் வேடிக்கை பார்த்துச் சென்றதாகவும் நினைவுகூர்ந்துள்ளார்.

  பாதியில் விட்ட கல்வி

  எனினும், நாடு சுதந்திரம் அடைந்த பின் மாறிய சூழலில் பல மாணவர்கள் தம் கல்வியைப் பாதியில் விட்டுச் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத காரணத்தினால் தானும் அக்கல்வியை முடிக்கவில்லை என வாஜ்பாய் குறிப்பிட்டுள்ளார். இருப்பின், அக்கல்லூரியின் கழிந்த இருவருட காலங்களை தம்மால் மறக்க முடியாது எனவும் வாஜ்பாய் தன் கட்டூரையில் நினைவு கூர்ந்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

இலங்கை செய்தி
இலங்கை சட்டம்
சட்டம்
உலக செய்தி
 மரண அறித்தல்