காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் கர்நாடகம் மீண்டும் முட்டுக்கட்டை,
 • காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் கர்நாடகம் மீண்டும் முட்டுக்கட்டை,

  காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் மீண்டும் முட்டுக்கட்டை போடும் வகையில், மேலாண்மை ஆணையத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப் போவதாக கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

  இந்த பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங் காற்று குழுவையும் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி அந்த இரு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தியது.

  இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகம், நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன்தான் இந்த இரு அமைப்புகளையும் மத்திய அரசு ஏற்படுத்தி இருக்கவேண்டும் என்று கூறியது.

  இதற்கிடையே தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கும், ஒழுங் காற்று குழுவுக்கும் தங்கள் உறுப்பினர்களை நியமித்த நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகம் தனது உறுப்பினர்களை நியமனம் செய்தது.

  மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் டெல்லியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

  இந்த நிலையில், காவிரி பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமி தலைமையில் நேற்று பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி தலைவர்களுடன், கர்நாடக எம்.பி.க்கள், காவிரி படுகையைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் காவிரி வழக்கில் கர்நாடகத்தின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

  2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

  கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

  காவிரி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின் மூலம் கர்நாடகத்துக்கு கூடுதலாக 14.75 டி.எம்.சி. நீர் கிடைத்தது. ஆயினும் கர்நாடக நலனுக்கு எதிரான சில அம்சங்கள் தீர்ப்பில் உள்ளன. இதுகுறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்ற கூட்டத்தில் விவாதித்து அதன் பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து இருக்க வேண்டும்.

  ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், கர்நாடகத்துடன் கலந்து ஆலோசிக்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவை மத்திய அரசு
  அவசரகதியில் அமைத்து உள்ளது. டெல்லியில் திங்கட்

  கிழமை நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடக பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள். கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிப்பார்கள்.

  காவிரி மேல்முறையீட்டு வழக்கில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை எந்தெந்த அம்சங்கள் அடிப்படையில் தயாரிப்பது என்பது குறித்து மூத்த வக்கீல் பாலி நாரிமன் உள்ளிட்ட சட்ட நிபுணர்கள் ஆலோசித்து முடிவு செய்வார்கள்.

  இந்த வி‌ஷயத்தில் கர்நாடகத்தின் நலன்களை பாதுகாக்க இறுதிவரை போராடுவோம். மேலும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க கர்நாடக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பிரச்சினையை கிளப்புவார்கள்.

  இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

  நீண்ட கால இழுபறிக்கு பிறகு, காவிரி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சுமுகமாக பகிர்ந்துகொள்வதற்காக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிதான் மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. ஆனால் இதற்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

  மேலாண்மை வாரியத்தின் முதல் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) டெல்லியில் நடை பெற இருக்கும் நிலையில், காவிரி நீர் பிரச்சினையில் மீண்டும் முட்டுக்கட்டை போடும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்போவதாக கர்நாடகம் அறிவித்து இருக்கிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
ஆன்மிகம்
எம்மவர் நிகழ்வுகள்
உலக செய்தி
 மரண அறித்தல்