சுவிஸில் குடியேறும் வெளிநாட்டினர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்,
 • சுவிஸில் குடியேறும் வெளிநாட்டினர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள்,

  தரமான வாழ்வாதார சூழ்நிலைகள், செழிப்பான பொருளாதாரம், அதிக வருமானம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களை கொண்ட பணக்கார நாடுகளின் பட்டியலில் சுவிட்சர்லாந்து தவிர்க்க முடியாத நாடு.

  ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பில் சுவிட்சர்லாந்து நாடு இணையாமல் இருந்தாலும் கூட, சுவிஸ் நாட்டிற்கென தனி சிறப்பு அம்சங்கள் உள்ளன.

  சுவிட்சர்லாந்தில் மொத்தம் 26 மண்டலங்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு மண்டலத்திற்கும் சுயாட்சி வழங்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மண்டலத்தின் நிர்வாகமும் சீர்த்திருத்தங்களும் பெரும்பாலும் ஒன்றாக காணப்படாது.

  ஜேர்மன், பிரெஞ்ச், இத்தாலி மற்றும் ரோமனிய மொழிகள் பேசப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில் முதன் முதலாக குடியேற வரும் வெளிநாட்டினர்கள் சந்திக்கும் முக்கிய 4 சவால்கள் குறித்து காண்போம்.

  1. வசிப்பதற்கு ஒரு இருப்பிடம்

  சுவிட்சர்லாந்து அடிப்படையிலேயே நில உரிமையாளர்கள் அதிகம் நிறைந்த நாடு. இதனால், சூரிச், ஜெனிவா, பெர்ன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள வீடுகள் மற்றும் நிலங்களின் தேவைகள் மிக அதிகமாகவே காணப்படுகின்றன.

  குறிப்பாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை பெறுவதற்கு சுமார் 60 விண்ணப்பங்கள் கூட பெறப்பட்டு வருகிறது.

  இவ்வளவு போட்டி நிறைந்த சூழலில் குடியிருப்பை பெற விரும்பும் நபர்கள் தங்களுடைய விண்ணப்பத்தை கூடிய வகையில் முதலில் உள்ளதாக வைத்துக்கொள்வது மிகப்பெரிய சவாலாகும்.

  இதற்கு மாற்று வழியாக, Swiss Association of Relocation Agents என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ள ஒரு ஏஜெண்ட் மூலமாக விண்ணப்பங்களை செலுத்தினால் உங்களுக்கு எளிதில் குடியிருப்பு கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது.

  அதேபோல், ஒரு வீட்டை ஒப்பந்தத்தின் அடிப்படியில் குத்தகைக்கு(Lease) எடுத்தப்பிறகு, அந்த வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டால் 3 மாதங்களுக்கு முன்னதாகவே மேற்கூறிய அமைப்பிற்கு தகவல் அளிப்பது அவசியமாகும்.

  2. விசா மற்றும் வேலைக்கான அனுமதி பெறும் சவால்

  சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேற விரும்பும் வெளிநாட்டினர்கள் எதிர்க்கொள்ளும் மிக முக்கிய சவால்களில் ஒன்று விசா மற்றும் பணிக்கான அனுமதியை(Visa and Work Permit) சட்டப்பூர்வமாக பெறுவது தான்.

  நீங்கள் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்து நாட்டிற்கு குடியேற சென்றாலும் கூட, அதற்கென சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  முதலில், நீங்கள் பணி செய்யவுள்ள நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த ஆவணங்களை பெற்றுருக்க வேண்டும். இரண்டாவதாக, நீங்கள் வசிக்கக்கூடிய வீட்டின் குத்தகை அல்லது வாடகை ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  ஆனால், ஐரோப்பிய நாடுகளை தவிர, இலங்கை, இந்தியா அல்லது ஏனைய மற்ற நாடுகளிலிருந்து நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு குடியேறும்போது ஐரோப்பிய குடிமக்களை விட அதிக சவால்களை மேற்கொள்ள வேண்டும்.

  உங்களிடம் விசா மற்றும் வேலைக்கான அனுமதி ஆவணங்கள் இருந்தாலும் கூட, அரசு வெளிநாட்டினர்களுக்காக ஒதுக்கியுள்ள ஒதுக்கீடுகளுக்குள் உங்கள் விண்ணப்பம் வந்தால் மட்டுமே நீங்கள் சுவிஸில் குடியேற முடியும்.

  குடியேறுவதற்கான சுவிஸ் அரசின் அனுமதி பெறுவதற்கு சில மாதங்கள் முன்பாகவே, விசா மற்றும் பணி ஒப்பந்தம் தொடர்பான பணிகளை ஏற்கனவே தொடங்க வேண்டும்.

  இதற்கு சில மாத காலம் தேவைப்படும் என்பதால், விசா, பணி ஒப்பந்தம் மற்றும் அரசின் ஒதுக்கீடுகளை பெறுவது உள்ளிட்ட முக்கிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஒரு திறமையான நிபுணரின் ஆலோசனையை பெறுவது உங்கள் பணிகளை எளிமையாக்கும்.

  3. கணவன்/மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பது

  தற்போது உள்ள காலக்கட்டத்தில் கணவன் மற்றும் மனைவி என இருவருமே பணிக்கு செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. மனைவி பணிக்கு செல்வதன் மூலம் அவரது உரிமைகள் காக்கப்பட்டு தனிப்பட்ட முறையில் அவருக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

  எனவே, சுவிஸ் நாட்டிற்கு வரும் ஒரு கணவன் தன்னுடைய மனைவியை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுடன் அவருக்கான ஒரு பணியையும் தயார் செய்வது மிக முக்கியமானதாகும்.

  தன்னுடைய துணை மகிழ்ச்சியான இல்லை என்றால், கணவனின் மகிழ்ச்சி பறிபோய்விடும். இதனால், சுவிஸ் நாட்டிற்கு குடியேறியதின் நோக்கமே கேள்வி குறியாகிவிடும்.

  இதுபோன்ற தம்பதிகளுக்கு உதவ Geneva Relocation என்ற நிறுவனம் செயல்பட்டு வருவதால், அவர்களின் உதவி மற்றும் ஆலோசனைகளை பெற்றால், இந்த சவாலை எளிதாக எதிர்க்கொள்ளலாம்.

  4. கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை எதிர்கொள்ளும் சவால்

  இறுதியாக, சுவிஸ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டினர்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால், அந்நாட்டு குடிமக்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டிற்கு ஏற்றவாறு தங்களை தயார் செய்துக்கொள்வது தான்.

  ஐரோப்பா அல்லது அமெரிக்க நாடுகளிலிருந்து நீங்கள் சுவிஸ் நாட்டிற்கு குடியேற விரும்பினால், அந்நாட்டின் கலாச்சாரம் மிக கடினமானதாக காணப்படாது.

  எனினும், நீங்கள் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், சுவிஸில் பிரெஞ்ச் மொழி பேசப்பட்டாலும் கூட அவர்களின் கலாச்சாரம் வேறாக இருக்கும்.

  ஆனால், ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளை தவிர்த்து வளரும் ஆசிய நாடுகளை சேர்ந்தவராக இருந்தால், சுவிஸ் மக்களின் கலாச்சாரம் உங்களுக்கு மிக வியப்பாக இருக்கலாம். அதற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்வதற்கும் சிறிது காலம் கழிக்கவேண்டும்.

  ஆசிய நாடுகளை போல் இல்லாமல், சுவிஸ் மக்கள் நேரத்திற்கு பணிக்கு செல்வார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக கூட பணியை முடித்துவிட்டு வீடு திரும்புவார்கள். ஏனெனில், அவர்களுக்கு நேரம் தவறாமை என்பது மிக முக்கியமானதாகும்.

  மேற்கூறிய இந்த 4 முக்கிய சவால்களை எதிர்க்கொண்டு வெற்றி பெற்றால், வெளிநாட்டினர்களுக்கு சுவிட்சர்லாந்து நாடு ஒரு சொர்க்கபுரியாக திகழும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தங்க நகை
 மரண அறித்தல்