தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதை ஏற்கமுடியாது ஐகோர்ட் உத்தரவு,
 • தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதை ஏற்கமுடியாது ஐகோர்ட் உத்தரவு,

  மதுரை: தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது என கூறியுள்ள ஐகோர்ட் கிளை, துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட துணை தாசில்தார்களையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

  மதுரையை சேர்ந்த வக்கீல் முத்து அமுதநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தூத்துக்குடியில் கடந்த மே 22, 23ம் தேதிகளில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

  துப்பாக்கி சூட்டிற்கு காரணமான தமிழக தலைமை செயலர், உள்துறை செயலர், டிஜிபி, டிஐஜி, தூத்துக்குடி கலெக்டர், தூத்துக்குடி எஸ்பி, சிப்காட் இன்ஸ்பெக்டர், துணை தாசில்தார்கள் உள்ளிட்டோர் மீது கொலை மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய மத்திய உள்துறை செயலருக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கின் விசாரணைைய சிறப்புக்குழு அமைத்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும்,’’ என கூறியிருந்தார்.

  இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில், ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரசு உயர் அதிகாரிகள் முறையாக கையாளவில்லை. 2 நாட்களில் 3 இடங்களில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 13 பேர் இறந்தனர். பலர் காயமடைந்தனர். திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

  துணைத் தாசில்தார்களால் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட முடியாது. எனவே, இந்த வழக்கில் 3 துணை தாசில்தார்களையும், எதிர்மனுதாரர்களாக சேர்த்து கூடுதலாக மனு செய்துள்ளோம். அந்த மனுவையும் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். உயரதிகாரிகள் தங்கள் பணியை முறையாக செய்ய தவறிவிட்டனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என வாதிடப்பட்டது.

  அப்போது கூடுதல் அட்வகெட் ஜெனரல் ஆஜராகி, ‘‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு நபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களின் விசாரணையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான காரணங்கள் தெரியவரும். முக்கியமாக, காவல்துறை வாகனம், கலெக்டர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்பு தீவைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

  இருதரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,’’ என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.டி.செல்வம், ‘‘இது முக்கியத்துவம் வாய்ந்த தீவிரமான பிரச்னை. துப்பாக்கிச் சூட்டை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. நியாயப்படுத்தும் நோக்கத்தை ஏற்க முடியாது. துப்பாக்கிச் சூடு நடந்தது தொடர்பான உண்மை தெரிய வேண்டியது அவசியம். இதுதொடர்பான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

  அங்கு பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை பொறுத்தே இந்த மனு மீது முடிவு எடுக்க முடியும். 3 துணை தாசில்தார்களையும் எதிர் மனுதாரர்களாக சேர்க்க கோரிய கூடுதல் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது,’’ என்றார்.இதனை தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாக கூறப்படும் தூத்துக்குடி சிறப்பு துணை தாசில்தார் சேகர் (தேர்தல்), மண்டல துணை தாசில்தார் கண்ணன், துணை தாசில்தார் சந்திரன் (கலால்), ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 13க்கு தள்ளி வைத்தனர். இதேபோல், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான மேலும் 10 மனுக்கள் மீதான விசாரணையையும் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
தொழில்நுட்பம்
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்