25 கோடி செலவில் தலா 50 கோழிகள் வீதம் 38,500 பெண்களுக்கு இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டம்,
 • 25 கோடி செலவில் தலா 50 கோழிகள் வீதம் 38,500 பெண்களுக்கு இலவச நாட்டுக்கோழி வழங்கும் திட்டம்,

  சென்னை : தமிழக அரசு சார்பில் ஏழைகளுக்கு இலவசமாக ஆடு, மாடுகள் வழங்கியதை தொடர்ந்து தற்போது, ரூ.25 கோடி செலவில் 38, 500 பெண்களுக்கு தலா 50 கோழிகள் வீதம் நாட்டுக் கோழி வழங்கும் திட்டத்தை நேற்று சட்டசபையில் 110-வது விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

  சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை படித்து சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

  பால் பொருட்கள் ...

  விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் கால்நடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், சமூகப் பொருளாதார மாற்றங்களை உருவாக்குவதிலும், வேலை வாய்ப்புகளை தோற்றுவிப்பதிலும் முக்கியப் பங்காற்றி வரும் சத்துள்ள உணவான பாலின் உற்பத்தியைப் பெருக்கவும், பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதாயமான விலை கிடைக்கவும், நுகர்வோருக்கு தரமான பால் மற்றும் பால் பொருட்கள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் கிடைக்கவும் தேவையான ஆக்கபூர்வான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

  புதிய கட்டிடங்கள்

  எனவே தான், கால்நடை மேம்பாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதற்கான திட்டங்கள் அம்மாவின் வழியிலேயே, அம்மாவின் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் சிறந்த கால்நடை மருத்துவ சேவைகளை வழங்க ஏதுவாக, சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை அம்மாவின் அரசு அமைத்து வருகின்றது. அதன் அடிப்படையில் இதுவரை, 1,895 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. நடப்பாண்டில், 30 கால்நடை நிலையங்களுக்கு 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

  ரூ.46 லட்சம் ...

  கால்நடை வளர்ப்போருக்கும் விவசாயிகளுக்கும் மருத்துவம் மற்றும் ஈனியல் சம்பந்தமான நோய்களால் ஏற்படும் பொருளாதார இழப்பை தவிர்க்க, நவீன நோய் கண்டறியும் கருவிகளை கால்நடை நிலையங்களுக்கு வழங்குவது அவசியமாகும். அதனடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு கால் நடை நிலையத்திற்கு என்ற அளவில், 32 கால்நடை நிலையங்களுக்கு தலா ஒரு நுண்ணலை நுண்ணாய்வுக் கருவியும், ஒரு கணினி மயமாக்கப்பட்ட ஊடுகதிர் கருவியும், 8 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும்.

  தரம் உயர்த்துதல்

  தமிழ்நாட்டில் தற்போது 6 மாநகராட்சிகளில் கால்நடை பன்முக மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தகைய நிலையங்களை பிற மாநகராட்சிகளிலும் ஏற்படுத்தும் நோக்கோடு திண்டுக்கல், தஞ்சாவூர், வேலூர், தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாநகராட்சிகள் ஒவ்வொன்றிலும் ஒரு கால்நடை நிலையம் கால்நடை பன்முக மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும். இந்த பன்முக மருத்துவமனைகளுக்கு அறுவை சிகிச்சைக் கூடம், உள்நோய் சிகிச்சை வசதி, நுண்ணலை நுண்ணாய்வுக் கருவி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட ஊடுகதிர் கருவி போன்ற வசதிகள் 6 கோடியே 24 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். அவை 24 மணி நேரமும் செயல்படும்.

  நோய் புலனாய்வுப் பிரிவு...

  தமிழ்நாட்டில் தற்போது 26 கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள் 32 மாவட்டங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக, மேலும் 2 புதிய கால்நடை நோய் புலனாய்வுப் பிரிவுகள், 2 கோடி ரூபாய் செலவில் நாமக்கல் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தோற்றுவிக்கப்படும். கோமாரி நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்டங்களில் 93.89 லட்சம் மாட்டினங்களுக்கு 15வது மற்றும் 16வது சுற்று தடுப்பூசிப்பணி முறையே செப்டம்பர், 2018 மற்றும் மார்ச், 2019 ஆகிய மாதங்களில் 24 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

  தலா 50 கோழிகள்

  தமிழ்நாட்டில் நாட்டுக் கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்புத் தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக, அனைத்து மாவட்டங்களிலும் 38,500 பெண் பயனாளிகளுக்கு, தலா 50 கோழிகள், 25 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

  கூடுதல் வகுப்பறைகள்

  மேலும் திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் தற்போது 280 மாணவர்கள் பயிலுகிறார்கள். இம்மாணவர்களுக்கு கூடுதல் கட்டமைப்பு வசதிகளாக கூடுதல் வகுப்பறைகள், தேர்வு அறைகள், விடுதி வசதிகள் மற்றும் எச்.டி. மின்சக்தி ஆகிய பணிகள் ஒவ்வொரு கல்லூரிக்கும், தலா 14 கோடி ரூபாய் வீதம் 28 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்.  இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சினிமா
தொழில்நுட்பம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
உலக சட்டம்
 மரண அறித்தல்