2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்,
 • 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்,

  சென்னை : நடப்பு நிதியாண்டில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் 2 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று சட்டசபையில் சமுக நலத்துறை அமைச்சர் சரோஜா அறிவித்துள்ளார்.
  தமிழக சட்டசபையில் சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறைமானியக் கோரிக்கை விவாதங்களுக்கு அமைச்சர் சரோஜா பதிலளித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

  11.79 லட்சம்...

  2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கண்டறியப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 11.79 லட்சம் ஆகும். மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் சட்டம் 2016-ல் புதிதாக இரத்தம் சம்மந்தமான குறைபாடுகளான ஹீமோபீலியா, தலகீமியா, சிக்கிள் செல் அனீமியா நோய் பாதிப்பு உட்பட 21 விதமான குறைபாடுகள் உடையோர் மாற்றுத்திறனாளிகளாக வகைபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் சரியான எண்ணிக்கையை, குறைபாடுகள் வாரியாக கணக்கெடுத்து, விவரங்கள் சேகரித்து, அவர்களுக்கு உதவிடும் நடவடிக்கைகளை அரசு முனைப்புடன் துவக்கவுள்ளது. மேலும் இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களை நிறைவேற்றும் விதமாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை குழு அமைக்கப்பட்டு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

  காதொலிக் கருவிகள்

  பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர், மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் கடும் உடல் பாதிப்பிற்கு உட்பட்டோருக்காக, 22 அரசு சிறப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இத்துடன் 52 அரசு மானியம் பெறும் சிறப்பு பள்ளிகள், 400-க்கும் மேற்பட்ட, அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகள் மூலம் சிறப்புக் கல்வியினை அரசு ஊக்குவித்து வருகிறது. இச்சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் காதொலிக் கருவிகள் வழங்கப்படுகின்றன. இவை மட்டுமல்லாது, கல்வி உதவித் தொகை, வாசிப்பாளர் உதவித்தொகை, தேர்வு எழுதுபவர்களுக்கான உதவித் தொகை வழங்கப்படுகிறது.மேலும் பள்ளி இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் 10 முதல் பிளஸ் 2 வரை பயிலும் பயனாளிகளுக்கு ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.

  சிறப்பு நாற்காலிகள்

  சிறப்பு பள்ளிகளில் தங்கிப்பயிலும் மாணவர்களுக்கு உணவூட்டு மானியத்தை ரூ.450/- லிருந்து ரூ.650/- ஆக உயர்த்தி வழங்கியும், சிறப்பு ஆசிரியர்கள் மதிப்பூதியத்தை ரூ.5,000/-லிருந்து ரூ.10,000/- ஆக உயர்த்தியும், தடையின்றி நிதியுதவி வழங்கியும், அரசு உதவி வருகிறது. 2011-12-ம் ஆண்டு முதல், இதுநாள் வரை மூளை முடக்குவாதம் பாதித்த 3,042 நபர்களுக்கு, 1.61 கோடி ரூபாய் மதிப்பில் “சிறப்பு நாற்காலிகள்” வழங்கப்பட்டுள்ளன. இரு கால்களும் செயலிழந்த 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் நடைபயிற்சிக்காக உதவும் சாதனம், 10 லட்சம் ரூபாய் செலவில், 1,000 குழந்தைகள் பயன்பெறும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் 2017-18-ம் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

  ரூ.13 கோடி செலவில்...

  2011-12-ம் ஆண்டு முதல், பேட்டரியால் இயங்கும் மின்சார ஸ்கூட்டருக்கு மாற்றாக, பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகிறது. இதுவரை 31.47 கோடி ரூபாய் மதிப்பில், 4,829 பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், 2,000 நபர்களுக்கு, 13 கோடி ரூபாய் செலவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சுவிஸ் செய்தி
அரசியல் கட்டுரைகள்
உலக செய்தி
ஜோதிடம்
 மரண அறித்தல்