போரினாற் பாதிக்கப்பட்ட விதவைகளின் புனர்வாழ்வு
 • போரினாற் பாதிக்கப்பட்ட விதவைகளின் புனர்வாழ்வு

  போரினாற் பாதிக்கப்பட்ட விதவைகளின் புனர்வாழ்வு

  இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தப்படும் எந்தப் புனர்வாழ்வு மற்றும் புனர்நிர்மாணத் திட்டங்களென்றாலும் அவை அங்கு ஆயிரக்கணக்கில் வாழும் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகளைக் கருத்திற் கொள்ளவேண்டியது அவசியமாகி விட்டது.

  போரினாற் பாதிக்கப்பட்ட சகல சமூகங்களுக்குமுள்ளே இவர்கள்தாம் மிகவும் நலிவுற்ற சமூகமாக இருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். இதற்கு அத்தாட்சியாக சமீப காலங்களாக பல அவல சம்பவங்கள் எமது கவனத்திற்கு ஊடகங்களினால் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

  வாழ வழியின்றி தனது மூன்று பிள்ளைகளையும் கிணற்றில் தள்ளிவிட்டுத்தானும் பாய்ந்து உயிர் நீக்க முயன்ற ஒரு தாய், வேறு வழியின்றி தன்னோடு சேர்த்து பாடசாலைக்குப் போய்க்கொண்டிருக்கும் தனது மகளையும் பாலியல் தொழிலில் ஈடுபத்தும் இன்னுமொரு தாய் எனப் பலவிதமாகக் கேள்விப்படுகின்றோம். இவை தமது உழைப்பாளிகளை இழந்து நிராதரவாக நிற்கும் குடும்பங்களின் கதையாகும்.

  1990களிலிருந்து ஆரம்பித்து ஏராளமான திட்டங்கள் இவர்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டனதாம். சுயதொழில் வாய்ப்புத் திட்டங்கள், சிறுகடனுதவித் திட்டங்கள், தொழிற்பயிற்சித் திட்டங்கள், வீடு மற்றும் மலசலகூட வசதித் திட்டங்கள் போன்ற கருத்திட்டங்களை சிறிய அரசு சாராநிறுவனங்கள் தொடங்கி உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பாரிய சர்வதேச நிறுவனங்கள் வரை குடும்பங்களைத் தலைமை தாங்கும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்படுத்தியிருக்கின்றன.

  அப்படியிருந்தும் கூட, அரசு 2010ம் ஆண்டு நியமித்த கற்ற பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவானது இப்பெண்களின் பரிதாபகரமான நிலையை எடுத்துரைத்து, அரசும் அரசு சாராநிறுவனங்களும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் வெவ்வேறு நிறுவனங்களும் ஒருங்கிணைந்த அணுகுமுறையிலான வேலைத்திட்டம் ஒன்றே அவர்கள் வாழ்க்கையின் சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய திட்டங்களைக் கொண்டு வரக்கூடும் என்று தெரிவித்திருந்தது. அந்த அளவுக்கு இந்நிறுவனங்கள் அனைத்தினதும் அனுபவங்கள், நிபுணத்துவங்கள் மற்றும் நிதி வளங்கள் கூட்டியெடுக்கப்பட வேண்டும் என அது பரிந்துரைத்தது.

  அவ்வாறு கூட்டியெடுக்கும்போதுதான் இப்பெண்களுக்குத் தேவையான உள ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகள், தொழிற் பயிற்சிகள், பரிகாரக் கல்வி நடவடிக்கைகள், சுயதொழில் வாய்ப்புக்கள், சிறுகடனுதவித் திட்டங்கள், சந்தை வாய்ப்புக்கள், பிள்ளைகளுக்கான கல்வி உதவிகள் போன்றன வழங்கப்படலாம் எனக் கூறியது. இவ்வாணைக்குழு சிக்கலென விபரித்த அப்பிரச்சினைகளை சமூகமும் நிதிக்கொடை நிறுவனங்களும் விளங்கிக் கொண்டாலேயன்றி அவை ஒருசேர இயங்கி அவற்றிற்கான தீர்வுகளைக்காண முடியாதாகும்.

  விதவை அல்லது குடும்பத்திற்குத் தலைமை தாங்குகின்ற பெண் என்கின்ற சமூக நிகழ்வு

  ஆண்களும் மனிதர்கள்தாம் பெண்களும் மனிதர்கள்தாம் இருசாராரும் ஒரே ஆற்றல்களுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று வாயளவில் சொல்லிக் கொண்டாலும், ஒரு மனைவியை இழந்த கணவனை விடவும் கணவனை இழந்த மனைவியைத்தான் பரிதாபத்துடன் சமூகம் நோக்குகின்றது. இதற்குக் காரணங்கள் ஏராளம் அடுக்கலாம். திருமணமே ஒரு பெண்ணின் வாழ்க்கையாக சமூகம் நோக்குவது பிரதானமான முதற் காரணமாகும். திருமணம் செய்வதை ‘வாழ்வளிப்பது’ என்னும் பதமாக உருவகித்து ஆண்களுக்கு உபயோகிக்கப்படுவதில்லை. அது பெண்களுக்கு மட்டும்தான் உபயோகிக்கப்படுகிறது. எனவே, இத்திருமணவாழ்வு ஏதோவொரு காரணத்தினால் இல்லாது போகும்போது அப்பெண்கள் ‘வாழ்விழந்தவர்கள்’ ஆகின்றனர்.

  ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடிய சகல எதிர்கால நம்பிக்கைகளையும் இல்லாதொழிக்கும் சக்தி வாய்ந்த சொல் இதுவாகும். அடுத்து, இந்துசமயப் பாரம்பரியங்கள் ‘வாழ்விழந்தவர்கள்’ என்பதற்காக இவ்வாறான பெண்களை அமங்கலிகளாகக் கருதுகின்றன. இதனால், மங்களகரமான நிகழ்ச்சிகளில் முன்னிற்க முடியாதவர்களாய் தமது சமூக அந்தஸ்தும் தேய்வடைந்து மனித மாண்பினை இழந்து நிற்கின்றனர் இப்பெண்கள். தங்கள் இழப்பின் சோகத்துடன் கூடவே இவ்வகையான உளப்பாதிப்பிற்கும் உள்ளான பெண்கள் ஊக்கத்துடன் தமது வாழ்க்கையை முன்னெடுக்க இயலாதவர்களாகின்றனர். இது அவர்களின் வாழ்வில் பாரிய பின்னடைவைத் தோற்றுவிக்கின்றது.

  பெண்களை எமது சமூகம் வளர்க்கும் விதத்தில் அவர்கள் மத்தியில் ஆற்றல் குறைபாடுகளை ஏற்படுத்துவது அடுத்த பிரச்சினையாகும். குழந்தைப் பராயம் முதல் பொத்திப்பொத்தி வீட்டுக்குள் வைத்து வளர்க்கப்படுகின்றனர். அவர்களின் பாலியலைக் கட்டுப்படுத்துவதே இதன் ஒரே நோக்கமாகும். இதனால் அவர்கள் வெளியுலக அறிவு மட்டுப்படுத்தப்பட்டவர்களாக, சமூகத்தில் நாலு பேர்களின் அறிமுகம் இல்லாதவர்களாக வாழப் பழகுகின்றனர். வெளியுலகில் சஞ்சாரிப்பதென்றாலே அவர்கள் அதனைப் பயத்துடன் நோக்கும் நிலை காணப்படுகின்றது. அவர்கள் தனியே போய்த் திரிய இயலாது என்றும் போதிக்கப்படுகின்றது. அத்துடன், பெண்கள் பார்க்கக்கூடிய தொழில்கள் என ஒரு சில தொழில்கள்தாம் அவர்களுக்குப் பழக்கப்படுகின்றன.

  தையல், கோழி வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் என்பன அவற்றில் சிலவாகும். அனேகமாக, வேறெந்த வினைத்திறன்களும் அவர்களிடம் இருக்காது. இத்தொழில்கள் குறைந்த வருமானம் தரும் தொழில்களாகத்தானிருக்கும் என கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். ஏனெனில், கூடிய வருமானம் தரக்கூடிய தொழில்களாயின் அவற்றை ஆண்கள் எப்பொழுதோ அப்பிக் கொண்டு போயிருப்பர். உதாரணமாக, தையல் சமையல் இவைதான் பெண்களின் தொழில்கள் என்று பாரம்பரியமாகக் கருதப்படுகின்றதாயினும், பெரிய விடுதிகளில் சமையல்காரர்களாக, கடைகளில் தையல்காரர்களாக ஆண்கள்தான் இருப்பதை நாம் காணலாம். தனது சொந்த வீட்டில் ஒரு துடைப்பங் கட்டை எடுத்துக் கூட்டிப் பெருக்காத பீயோனொருவர் தான் வேலை செய்யும் அலுவலகத்தில் மட்டும் தினமும் தூசி தட்டிக் கூட்டி விடுகிறார். ஆண்கள்தாம் உழைப்பாளிகள், பெண்கள் அவர்களில் தங்கி வாழ்பவர்கள் என்கின்ற சித்தாந்தம் எமது சமூகத்துக்குள் ஊறிப்போய் விட்டதனாலே, பெண்களும் இதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதில்லை.

  இப்படியாக, கிட்டத்தட்ட மாற்றுவலு உள்ளவர்கள்போல பெண்கள் வளர்க்கப்படுவதனால், அவர்கள் தங்கள் கணவர்களை இழக்கும்போது உண்மையிலேயே கையும் காலும் இழந்தவர்கள் போல்தான் ஆகின்றனர். இது மட்டுமல்லாது, தனியே வாழும் பெண்கள் என்கின்ற நிலையினால் சமூகமும் அவர்களின் பாலியல் ஒழுக்கத்தினைக் கண்காணிக்கும் கடமையையும் தானே பொறுப்பெடுக்கின்றது. சும்மாவே வெளியிடங்களுக்குச் சென்று பழக்கமில்லாத பெண்கள், இப்பொழுது அப்படிச் சென்றுவரவும் பலருடன் பழகவும் இன்னும் அதிகமாகப் பயப்படுவர். தாம் அழகாக உடையுடுத்தால் தாம் பாலியல் ரீதியாக இன்னமும் செயற்பட்டுக்கொண்டிருப்பதாக சமூகம் அனுமானித்துவிடும் என்று அப்படிச் சந்தோஷமாகக் கூட இருக்க முடிவதில்லை. அடுத்து ஊரிலுள்ள ஆண்களின் பாலியல் தொந்தரவுகளும் இவர்களுக்கு அதிகரிக்கின்றன. ‘ருசி கண்டவள் தனியே வாழ்கின்றாள்’ என்கின்ற அடிப்படையில் அவர்களும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.

  இத்தகைய பெண்கள் தாமே உழைத்து தமது குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அவர்கள் என்னதான் செய்வார்கள்? இவர்களை எங்கு சந்தித்தாலும் வீட்டோடு இருந்து செய்யக்கூடியதாக தொழில் தாருங்கள் என்று இறைஞ்சுவார்கள். வீட்டில் தங்கி வாழும் குழந்தைகள் மற்றும் வயோதிபர்கள் இருப்பதும், மற்றும் வெளியிடங்களுக்குத் திரிவதில் இயல்பாகவே உள்ள தயக்கமும்தான் இக்கோரிக்கைக்குக் காரணமாகும். வீட்டோடு இருந்து எங்கள் குடும்பங்களைப் பராமரிக்கக்கூடிய அளவு வருமானம் தரக்கூடிய தொழில்களை மேற்கொள்ள முடியுமென்றால் நாமெல்லோருமே வீட்டோடு இருந்திருப்போமே. அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் சென்றலைந்து வேலை செய்வதற்கு யாருக்குத்தான் விருப்பம் இருக்கின்றது? ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இந்த உலகில் வேலை வாய்ப்பு இருக்கின்ற இடத்திற்கு, சந்தை எங்கேயோ அது இருக்கும் இடத்திற்கு, அங்கே அதனைத் தேடி நாங்கள் போகும் நிலைதான் உள்ளது. எவருக்காவது இவ்வாறு போய்த்திரிய முடியாதெனில் அவருடைய கதை அவ்வளவுதான்.

  எங்கும் பொதுவாகச் செய்யப்படும் சுயதொழில் வாய்ப்பு உதவிகளைப் பற்றியும் இங்கு கூற வேண்டும். ‘நீங்கள் செய்யக்கூடிய வியாபாரத்திற்கு உதவி இருக்கின்றது, அல்லது கிரமமான மாதாந்த வருமானம் தரக்கூடிய தொழில் இருக்கின்றது, எது வேண்டும்?’ என்று யாராவது கேட்பார்களேயானால் நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது பேர் ஸ்திரமான வேலைக்குத்தான் தங்கள் வாக்கினைப் போடுவார்கள். ஏனெனில், வியாபாரத்தினை வெற்றிகரமாக மேற்கொள்ளுபவர்கள் ஆயிரத்திலொருவர் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஏனையோருக்கு தினமும் வேலைக்குப் போய் கொடுத்த வேலையைச் செய்து முடித்து வீட்டுக்கு வரத்தான் இயலும். படித்தவர்களுக்கே இந்த நிலைமையெனில், அதிகம் படிப்பறிவில்லாத மற்றும் வினைத்திறன்களும் இல்லாத பெண்கள் எவ்வாறு தாம் சுயதொழில் புரிந்து நிறைந்த வருமானம் ஈட்டுவார் என நாம் கருத முடியும்? இதனைக் கருத்தில் கொள்ளாது, எழுந்தமானமாக இவர்களுக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக உதவிகள் வழங்கப்படுகின்றன. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கடந்த முப்பது வருடங்களாகக் கொடுக்கப்பட்ட தையல் இயந்திரங்களைக் கணக்கெடுத்து அடுக்கினால் அப்பிராந்தியத்தையே மூடி விடலாம் என்று ஒரு நண்பர் நகைச்சுவையாகக் கூறினார். அவர் கூறியதிலும் உண்மை இருக்கிறது.

  குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களுக்கான வாழ்வாதார உதவிகள்

  இதிலிருந்து, விதவைகள் என்கின்ற சமூக நிகழ்வு ஏதோ தானே உருவாகியதல்ல என்பதும், இப்பிரச்சினைக்கு சமூகமே முழுப்பொறுப்பாளி என்பதும் தெளிவாகின்றது. உழைப்பாளிகளை இழந்து குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களுக்கு வழங்கப்படும் வாழ்வாதாரத்துக்கான எந்த உதவிகளும் மேலே விபரிக்கப்பட்ட சமூக கலாசாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டு செயற்படுத்தப்படவேண்டியது அவசியமாகும் இவர்களுக்கான உள ஆற்றுப்படுத்தல் பயிற்சிகள், தலைமைத்துவப் பண்புகளையும் தற்துணிவினையும் வளர்க்கும் பயிற்சிகள், சமூக கலாசார அகப்படுத்துதலை மேவி அதனை உடைத்துக்கொண்டு இவர்கள் வெளிவரக்கூடிய பால்நிலைப் பயிற்சிகள், சந்தைப்படுத்தக்கூடிய தொழில்களுக்கான பயிற்சிகள், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் முகாமைத்துவம் போன்ற பல வகையான பயிற்சிகளைக் கொடுத்த பின்னரே அவர்கள் எந்தத் தொழிலிலும் ஈடுபடுத்தப்படலாம். அவர்களுடன் பணி செய்தால் மட்டும் போதாது, சமூகத்துடனும் பணி செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணையும் அவளுடைய சுய கௌரவத்தினையும் ஆற்றலையும் இழிவுபடுத்தாத வகையில் மரியாதையுடன் நடத்துவதற்கு அதனைப் பழக்கியெடுக்க வேண்டும். பாலியல் செயற்பாடு ஒன்றுதான் பெண்ணுடைய பிரதான அம்சம் என்ற அடிப்படையில் அவளுடைய உடலைப் பற்றியும் அணியும் ஆடைகள் பற்றியும் மட்டும் அது கவனம் செலுத்துவதை நிறுத்த வேண்டும். இத்தனை சிக்கல்கள் இருக்கும் காரணத்தினால்தான் கற்ற பாடங்கள் ஆணைக்குழு சகல விதமான நிறுவனங்களும் ஒன்றிணைந்த வேலைத் திட்டம் இவர்களுக்கு அவசியம் என வலியுறுத்தியது.

  இப்போதுள்ள நிலையோ இதற்கு மாறுபாடானது. அரச நிறுவனங்களும் அரசு சாரா நிறுவனங்களும், ஏன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட, தத்தமது போக்கிலே தனித்தனியாக சிறு கடன் திட்டங்களையும் சுயதொழில் வாய்ப்புத் திட்டங்களையும் செயற்படுத்துகின்றனர். அவற்றிற்கு முறையான பின்னூட்டல்களும் வழங்கப்படுவதில்லை. ஒரு தொழிலில் ஒரு பெண்ணை புதிதாக ஈடுபடுத்தும்பொழுது முதலில் ஓரிரு வருடங்கள் அவள் கைகளைப் பிடித்து வழிகாட்ட வண்டிய தேவை இருக்கின்றது. அதனைச் செய்வதற்குரிய பொறுமையோ வளங்களோ இந்நிறுவனங்களிடம் இல்லை என்பதே உண்மை. அத்துடன், ஒவ்வொரு பெண்ணுக்கும் தனித்தனித் தொழில்களை வழங்குவதை தவிர்த்து, கூட்டாகப் பெரிய தொழில்களை நிறுவி அத்தொழில்களில் எனைய பெண்கள் வேலை வாய்ப்புப் பெறக்கூடியதாகத் திட்டமிடுதலே சாலச் சிறந்ததாகும். கூட்டுத்தொழில்கள் அதிகளவு முதலிடக்கூடியனவாக இருப்பதனால் அதன் விகிதாசாரத்திற்குரிய வருமானத்தை ஈட்டுகின்றனளூ வியாபாரத்தில் அவ்வப்போது ஏற்படும் நட்டங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை அதில் ஈடுபடும் பெண்களுக்குக் கொடுக்கின்றன. அத்துடன், அப்பெண்களின் குடும்பச் சுமைகளை அவள் உறுப்பினராக இருக்கும் குழுவினர் தமக்குள் பங்கு போட்டு ஏற்றுக்கொண்டு உதவ வழி செய்கின்றது. உதாரணமாக, கூட்டாகத் தொழில் செய்யும் பெண்களின் பிள்ளைகளைப் பராமரிப்பதற்கான பராமரிப்பகம் ஒன்றை நிறுவி அதனை மேற்பார்வை செய்து நடத்துவதற்கெனவே அதிலொரு பெண்ணுக்கு வேலை வாய்ப்பளிக்கலாம்.

  இவற்றையொன்றையுமே சிந்திக்காது உதவிகளை வழங்கிவிட்டுப் பின் அத்தொழில்கள் தோல்வியில் முடிவடையும்பொழுது அப்பயனாளிப் பெண்களையே குற்றஞ் சாட்டுகின்ற போக்குகள்தாம் காணப்படுகின்றன. உதாரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில், ‘முஸ்லிம் கிராமத்துப் பெண்களைப் பாருங்கள். தொழிலில் எவ்வளவு முன்னேற்றம் காண்கிறார்கள்.. தமிழ்ப் பெண்கள் அவ்வாறில்லையே’ என பெண்கள் அபிவிருத்தித் திட்டங்களில் பணிபுரியும் சில அரச அலுவலர்கள் சலித்துக்கொள்வதைப் பார்க்கலாம். இங்கு முஸ்லிம் கிராமங்களிலும் தமிழ்க் கிராமங்களிலும் காணப்படும் பின்னணிகளின் வேறுபாட்டினை நாம் உணர்வது அவசியமாகும். முஸ்லிம் கிராமங்களில் சனத்தொகை அதிகம், அவர்கள் அடர்ந்து வாழ்கின்றனர். இதனால் சந்தை வாய்ப்புக்கள் ஐதாக மக்கள் வாழும் தமிழ்க் கிராமங்களைவிடவும் பன்மடங்கு அதிகமாகும்.

  அங்கு எதனை உற்பத்தி செய்தாலும் அயல்களில் கொண்டு சென்று விற்று விடலாம். தமிழ்க் கிராமங்களின் உற்பத்தியாளர்கள் வெகுதூரம் சந்தையைத் தேடிப் போகவேண்டும். அத்துடன், தமிழ்ப்பெண்கள் போரினாலும் இடப்பெயர்வுகளினாலும் எதிர்கால நம்பிக்கை இழந்திருக்கின்றனர். இந்த நிலை அவர்கள் இரத்த சோகையினால் பீடிக்கப்பட்டு ஊக்கமிழந்தவர்களாக இருப்பதற்கும் இட்டுச் செல்லுகின்றது. வடக்கு கிழக்கு பிராந்தியங்களில் வாழும் 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்ட தமிழ்ப் பெண்களின் பாரதூரமான போசாக்குக் குறைபாட்டினைப் பற்றி எமது சுகாதார அமைச்சின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. சுயதொழில் உதவிகளை வழங்க முயற்சிக்கும் எத்தனை நிறுவனங்கள் முதலில் அப்பெண்களின் போசாக்கு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அதற்காக வேலை செய்கின்றன? உடலில் ஊட்டச் சத்து குறைவடையும்பொழுது கற்றுத் தருவது விளங்குவதில்லை, கடின உழைப்பினை மூலதனமாக இட முடிவதில்லை. இதனால் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒன்றையுமே சாதிக்க முடியாமற் போகின்றது.

  விதவைப் பெண்களையும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்களையும் அணி திரட்ட வேண்டியதன் அவசியம்

  எனவே இத்தனை நிறுவனங்களையும் ஒன்று திரட்டி தமது நலன்களைப் பாதுகாக்கும் திட்டங்களை நிறைவேற்றச் செய்ய வேண்டுமாகில், குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் தாம் முதலில் அணி திரள வேண்டும். தமது பொதுப் பிரச்சினைகளை இனம் கண்டு, அதற்கான தீர்வுகளை அரச உத்தியோகத்தர்கள் அரசியல் தலைவர்கள் போன்றோரிடம் சமர்ப்பித்து அதனை அவர்கள் செயற்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமல்லவா?

  இக்காரணத்தினால்தான், இந்த வருடம் கிராமம் கிராமமாகவும் பிரதேச செயலாளர் பிரிவுகள்தோறும் விதவைகள் தாம் குழுக்களாக உருவாகி வந்தனர். தமது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு வங்கி முகாமையாளர்களுடனும் அரசு சாரா நிறுவனங்களுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடி பல உதவிகளைத் தமக்கெனப் பெற்றுக்கொண்டனர். பொங்கல் விழாக்கள், வருடப்பிறப்புக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் இவை யாவற்றிலும் இப்பெண்களை முதன்மைப்படுத்தி அவர்களே பொங்கல் பானையை இறக்குவது, விளக்கேற்றுவது போன்ற மங்கள காரியங்களைச் செய்ய வைத்தனர். அவர்களுக்கென விசேடமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஜுன் 23ந்திகதி சர்வதேச விதவைகள் தினத்தினை அனுஷ்டித்து தமது பிரச்சினைகளை ஆராயும் வாய்ப்புக்களாக இதனைப் பயன்படுத்தினர். இந்நிகழ்வுகள் இப்பெண்களுக்கு பெரும் உத்வேகத்தினைத் தந்ததென்பதில் ஐயமில்லை.

  வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐந்து மாவட்டங்களிலிருந்து வந்த இக்குழுவினர் தம்மை ‘அமரா, குடும்பத் தலைமைப் பெண்களின் ஒன்றியம்’; எனப் பெயரிட்டுக்கொண்டனர். அத்துடன் நில்லாது, தமது பிரச்சினைகளைக் கோடு காட்டி அவற்றின் அடிப்படையில் தமது கோரிக்கைகளையும் ஒரு நினைவுப் பத்திரமாக முன்வைத்துள்ளனர். ஊர் ஊராக, ஒவ்வொரு குழுக்குழுவாக அப்பெண்களின் உள்ளக் குமுறல்களைப் பதிவு செய்த ஆவணமல்லவா இது? அதனால் பல புதிய கருத்துக்களை இது தாங்கி வந்துள்ளது. கடத்தப்பட்டோர் மற்றும் காணாமற்போனோருக்கு உத்தியோக பூர்வமாக சகல கொடுக்கல் வாங்கல்களிலும் செல்லுபடியாகும் ‘காணாமற் போனோர்’ சான்றிதழ் அரசினால் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை ஒன்று. வாழ்க்கைச் செலவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் விதவைகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை அடுத்தது. உர மானியம் நெல் விவசாயிகளுக்கே கொடுக்கப்படுகின்றது, ஆனால் பெண்கள் அனேகமாக மேட்டு நிலப் பயிர்ச்செய்கையாளர்கள் எனவே அவர்களுக்கும் உர மானியம் தரப்படவேண்டும் என்கின்ற கோரிக்கை மற்றொன்று.

  சுயதொழில் வாய்ப்புக்கான அரச திட்டங்கள் பயனாளிகளுக்கான 50 வருட வயதெல்லை குறிக்கப்பட்டே வருகின்றன, ஆயினும் தனியே வாழும் 50 வயதுக்குக் கூடிய பெண்களும் தாமே உழைத்து வாழ வேண்டியவர்களாக இருப்பதனால் இந்த வயதெல்லையை நீக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை வேறொன்று. மேற்கூறிய இந்த நினைவுப் பத்திரத்தினைத் தயாரிப்பதற்கு அப்பெண்கள் காட்டிய ஊக்கமும் பங்களிப்பும் அவர்களை சுயாதீன அமைப்பாகக் கட்டியெழுப்ப முனைந்த மூலோபாயத்தின் பொருத்தத்தினை நிறுவும் உரைகல்லாக இருந்தது. இத்தனை வலுவும் செயற்பாட்டுத் திறனும் அவர்கள் எங்கோ ஓர் மூலையில் தனித்தனியாக முடங்கிக் கிடந்தபோது தென்படவில்லையே.

  தனியே உள்நாட்டில் மட்டும் அவர்களை வலையமைப்பாக ஆக்குவதுடன் நிற்காது, தென்னாசியப் பிராந்தியத்திலும் சர்வதேச மட்டங்களிலும் உள்ள வலையமைப்புக்களுடன் இணைக்கும் வேலைகள் இப்போது நடந்து கொண்டிருக்கின்றன. தென்னாசிய நாடுகளை மையமாகக் கொண்டு விதவைகளின் வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான தென்னாசிய வலையமைப்பு என்கின்ற அமைப்பு செயற்பட்டுக்கொண்டு வருகின்றது. இதனைத் தவிர, சர்வதேச ரீதியில், சமாதானத்தினூடான ஜனநாயகத்துக்கான விதவைகள் என்கின்ற அமைப்பு போர்க்கால விதவைகளுக்காக வாதாடவென உருவாக்கப்பட்டது.

  இவ்விரு வலையமைப்புக்களுக்குமூடாக, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் பெண்களுக்கெதிரான சகலவிதமான பாகுபாடுகளையும் ஒழிக்கும் சீடோ என அழைக்கப்படும் சமவாயத்தின் அடிப்படையில், அதன் அமர்வுக்குழு விதவைகளுக்கான விசேட பரிந்துரைகளை சர்வதேச நாடுகளுக்கு வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இக்குழுவினரால் விசேட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டால் அவை இலங்கை உட்பட உலக நாடுகள் யாவும் தமது விதவைகளுக்கான விசேட செயற்றிட்டங்களை செயற்படுத்துவதற்கான அழுத்தமாக மாறும்.

  விதவைகளுடனான வேலைத் திட்டங்களில் கற்றுக் கொள்ளப்பட்டவை

  தமக்கென பிரத்தியேகமான பொதுப் பிரச்சினைகள் உள்ள மக்கள் குழுக்கள் இவற்றின் அடிப்படையில் சுயாதீனமாக அணி திரள்வது என்றும் நன்மை பயக்கும் என்பதுதான் இதில் ஈடுபட்டவர்கள் பிரதானமாக கற்றுக்கொண்ட விடயமாகும். இந்த விதவைகள் தம்மைத் தெளிவாக அடையாளப்படுத்த ஆரம்பித்தவுடனே எங்கிருந்தெல்லாமோ உதவிகள் அவர்களை வந்து சேர்ந்தன. உதவிகளைப் பெற்றுக் கொள்வதுடன் நில்லாமல், தமது வாழ்க்கையில் காத்திரமான மாற்றங்களை மேற்கொள்ளுவதற்கு, அதற்கான கொள்கைத் திட்ட மாற்றங்களைக் கோருவதற்கு இவ்வணி உதவியது.

  அடுத்து, விதவைகளுக்கான நடவடிக்கைகள் அரச திட்டங்களுக்குள் உட்படுத்தப்படவேண்டுமானால் விதவைகளையும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் பற்றியும் அச்சொட்டான தகவல்கள் வேண்டும் என்பதையும் உணர்ந்தோம். அத்தகவல்களைப் பெறுவதற்கு, குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் என்பவர்கள் யாவர் என்கின்ற வரைவிலக்கணம் உத்தியோகபூர்வமாக உருவாக்கப்படவேண்டும். இதைப் பற்றியும் அரச அலுவலர்களுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது.

  விதவைகள் அல்லது கைம்பெண்கள் என இப்பெண்கள் அழைக்கப்படலாமா என்கின்ற விவாதமும் இம்முறைவழியில் ஆரம்பிக்கப்பட்டது, அவர்கள் தம்மை எவ்வாறு அடையாளப்படுத்தினால் அது வெற்றிகரமான மூலோபாயமாகும் என்ற விடயத்தைப் பற்றி எங்களைச் சிந்திக்க வைத்தது. . இவ்விவாதத்தினை நாம் சர்வதேச மட்டங்களுக்குக் கொண்டு சென்றபோது, உண்மையை உண்மையாக நீங்கள் ஏன் பெயரிடத் தயங்குகிறீர்கள் என எங்களையே அவர்கள் திருப்பிக் கேட்டார்கள். விதவையை விதவை என்றல்லாது வேறெப்படி அழைக்க முடியும்? இந்த அந்தஸ்து அப்பெண்களின் தவறல்லவே, எதற்காக அவர்கள் வேறு பெயர்களில் ஒளிந்து கொள்ள வேண்டும் என்றார்கள்.

  மேலும், தம்மை தெளிவாக விதவை என அடையாளம் காட்டும்போதுதான் உதவிகளைப் பெறுதலிலும் தமது சமூக அந்தஸ்து குறித்து போராடுவதிலும் அவர்கள் ஈடுபட முடியும் என்று வலியுறுத்தினர். இதிலிருந்து எடுத்துக்கூறல் மற்றும் பரிந்துரைத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும்பொழுது ஒரு குழுவினர் தம்மை எப்படி அழைத்துக் கொள்கின்றனர் என்பதும் ஒரு முக்கியமான விடயம் என்று உணரப்பட்டது. இந்த அமைப்பினுள், காணாமற் போனோரின் மனைவிமார், மற்றும் மாற்று வலுவுள்ளோரின் மனைவிமார் என்று பல தரப்பட்ட பெண்களையும் இணைத்துக் கொண்டதனால், குடும்பத் தலைமை வகிக்கும் பெண்களின் ஒன்றியமாக இது இருக்கவேண்டுமென்று இறுதியில் தீர்மானமாயிற்று.

  அமரா என்னும் குடும்பத் தலைமைப் பெண்களின் ஒன்றியமானது சரியான பாதையில் கால் தடம் பதித்துள்ளது. இதன் மூலம் இனிவருங்காலங்களில் தமது சமூக கலாசாரத் தடைகளை அறுத்து அபிவிருத்திப் பாதையில் வெற்றிநடை போடும் என்பது திண்ணம்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஜோதிடம்
சிறுவர் உலகம்
உலக சட்டம்
தொழில் நுட்பம்
 மரண அறித்தல்