விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்,
  • விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்,

    தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா.(LLB-MP-TGTE)Zurich.Switzerland.

    (அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரம் 1ம் பாதம் வரையிலும்  சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துகளை பெயரில் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்)

    கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே கோட்சார ரீதியில் நல்ல பலன்கள் நடக்காத மேஷ ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விளம்பி தமிழ்ப் புத்தாண்டு துன்பங்கள் எதையும் தராமல் இன்பங்களை மட்டுமே தருகின்ற ஆண்டாக இருக்கும்.

    சென்ற வருட அஷ்டமச்சனி அமைப்பினால் வேலையில் சங்கடங்கள், வேலை இழப்பு,  தற்காலிக பணிநீக்கம், மனதிற்கு பிடித்தமான வேலை கிடைக்காதவர்கள் அனைவரும் விளம்பி வருட ஆரம்பத்தில் இருந்தே வேலை சம்பந்தப்பட்ட குறைகள் நீங்கப் பெற்று நிம்மதி அடைவார்கள்.

    சிலருக்கு இருந்து வந்த மன அழுத்தம், கணவர் – மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு, வழக்கு, கடன்தொல்லைகள், ஆரோக்கிய குறைவு, தொழில் நஷ்டம், பணம் கொடுத்து ஏமாந்தவை போன்றவைகளும் நீங்கி, வாழ்க்கை இனி நல்ல வழியில் செல்லத் துவங்கும்.

    இந்தத் தமிழ்ப் புத்தாண்டு முழுவதும் உங்களின் பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

    ராஜகிரகங்கள் என்று சொல்லப்படும் முக்கியமான கிரகங்கள் அனைத்தும் தற்போது  மேஷ ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதாலும், கடுமையான பலன்களைத் தந்து வந்த அஷ்டமச்சனி சமீபத்தில் விலகி விட்டதாலும்  மேஷத்தினர் இனிமேல் எந்த ஒரு விஷயத்திலும் தயக்கத்தினை விட்டொழித்து முன்னேற்றத்திற்கான ஆக்கப்பூர்வ விஷயங்களில் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம்.

    பிறந்த ஜாதகத்தில் யோகமான தசாபுக்திகள் நடந்து கொண்டிருக்கும் மேஷ  ராசிக்காரர்களுக்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா என்பது போல இரட்டிப்பு நல்ல பலன்கள் நடக்கும். குறிப்பிட்ட சிலர் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் அடைவீர்கள். பொதுவாழ்வில் உள்ள அரசியல்வாதிகளுக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

    கடந்த காலங்களில் பெரும்பாலான மேஷத்தினர் அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் அனைத்திலும் மனக்கஷ்டங்களையும் தடைகளையும் சந்தித்தீர்கள். அப்படிப்பட்ட நிலை எதுவும் இப்போது இருக்காது. எல்லா விஷயங்களும் நிதானமாக நல்லபடியாக நடக்கும்.

    வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் கூடிவரும். நீண்டகாலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக் கவலை நீங்கும்.

    காதலிப்பவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் நினைத்தவரை மணமுடிப்பீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் போலீஸ், கோர்ட் என்று திரிந்தவர்களுக்கு அனைத்துப் பிரச்னைகளும் நல்லபடியாக முடிந்து இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக உருவாகும்.

    இதுவரை புத்திர பாக்கியம் தாமதப்பட்டுக் கொண்டு வந்தவர்களுக்கு புத்திர காரகனாகிய குருபகவான் ஏழில் இருப்பதால் குழந்தைச் செல்வத்தை வழங்குவார். தாத்தா பாட்டிகள் வீட்டில் பேரக் குழந்தையின் மழலைச் சத்தத்தை கேட்கப் போகும் நேரம் வந்துவிட்டது.

    நல்லவேலை கிடைக்காமல் சோர்ந்து போயிருந்தவர்களுக்கு மனதுக்கு பிடித்த வகையில் நல்ல சம்பளத்துடன்  வேலை கிடைக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள்,  ஊடகம், பத்திரிக்கை போன்ற துறையில் இருப்பவர்கள், கலைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு இது வசந்த காலமாகும். கலைத்துறையினர்  நல்ல திருப்பங்களைக் காண்பீர்கள். வாய்ப்புகள் இனி வந்து வாசல் கதவைத் தட்டும்.

    பொருத்தமில்லாத வேலையில் இஷ்டமில்லாமல் இருந்த இளைஞர்களுக்கு உடனடியாக மாற்றங்கள் உருவாகி நினைத்த மாதிரியான வேலை கிடைக்கும். உங்களைப் பிடிக்காத மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு அனுசரணையானவர் அந்த இடத்திற்கு வருவார். அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். ஏற்கனவே தொழில் ஆரம்பித்து இன்னும் காலூன்ற முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வருடம் தொழில் நல்ல முன்னேற்றமாக நடக்கும்.

    அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், இயக்கும் வேலையில் உள்ளவர்கள் போன்ற துறையினர் தங்களது தொழிலை விரிவாக்கம் செய்வதற்கோ புதிய கிளைகள் ஆரம்பிப்பதற்கோ இது மிகவும் நல்ல நேரம். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள்.

    தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். மனதில்  உற்சாகமும் புத்துணர்ச்சியும் இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். இன்பச் சுற்றுலா சென்று வருவீர்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சகோதரர்கள் உதவுவார்கள்.

    தொழிலதிபர்களுக்கு இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். அரசாங்க ஆதரவு உண்டு. இடைத்தரகர்களை நீக்கி நேரடியாக அமைச்சர்களையோ அதிகாரிகளையோ பார்த்து காரியங்களை வெற்றியாக்க முடியும். எந்த ஒரு காரியத்திலும் எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

    குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். இதுவரை சொந்த வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டும் வாய்ப்போ அல்லது கட்டிய பழைய வீடோ வாங்கும் யோகம் வருகிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

    மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே எழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும். குறிப்பிட்ட சிலருக்கு  நீண்ட நாட்களாக தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு சிறப்பாகச் செய்ய முடியும். நேர்த்திகடன்கள் செலுத்துவீர்கள். வெகு நாட்களாக திட்டம் போட்டுக் கொண்டிருந்த வடமாநில புனித யாத்திரை இப்போது போக முடியும். ஞானிகள் அருள்புரியும் ஜீவசமாதிகளுக்கு சென்று அவர்களின் அருள் பெற முடியும்.

    மொத்தத்தில் மேஷ ராசிக்கு சிறப்புகள் மட்டுமே உள்ள புத்தாண்டு இது.


    இடபராசி 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (கார்த்திகை, 2, 3, 4ம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ, ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    ரிஷப ராசிக்காரர்களுக்கு புதிதாகப் பிறக்கும்  விளம்பி தமிழ்ப் புத்தாண்டு மாற்றங்களையும் படிப்பினைகளையும் தரும் ஆண்டாக இருக்கும். குறிப்பாக இளைய பருவத்தினருக்க தற்போது இருக்கும் நிலையில் இருந்து வேலை, தொழில் போன்ற அமைப்புகளில் எதிர்பாராத மாற்றங்கள் வரும்.

    இளையவர்களுக்கு வரப் போகும் மாற்றங்களினால் உங்களின் எதிர்காலத்திற்கான நன்மைகள் மட்டும்தான் இருக்கும் என்பதால் இளம் வயது ரிஷபத்தினர் இந்த தமிழ்ப் புத்தாண்டில் கவலைப்படுவதற்கு ஒன்றும் இல்லை. நடுத்தர வயதினருக்கு வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பின்னடைவுகள் ஏற்படும் என்பதால் அனைத்திலும் கவனமுடன் இருப்பது நல்லது.

    விளம்பி வருடத்தின் சிறப்புபலனாக தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் உங்களுடைய வேலைக்காரர்களை அதிகம் நம்ப வேண்டாம்.

    வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம்.  வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

    சுயதொழில் நடத்துவோருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். ஆயினும் வாங்கும் கடன் நல்லபடியான முதலீடாகவோ அல்லது  முன்னேற்றத்திற்கானதாகவோ, வருமானம் வரும் வகையிலோதான் செலவாகும். ஏற்றுமதி, இறக்குமதி போன்ற தொழில்கள் தொடர்புடையவர்கள் வெளிநாடுகளில் வர்த்தக அமைப்புகளை வைத்திருப்பவர்கள், மாநிலங்களுக்கு  இடையே தொழில் செய்பவர்கள் போன்றவர்களுக்கு ஓரளவு நல்ல பலன்கள் உண்டு.

    அரசு, தனியார்துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். வீடு மாற்றம், தொழில் மாற்றம் போன்ற ஏதேனும் ஒன்று இப்போது நடக்கும்.

    அஷ்டமச்சனியின் ஆதிக்கத்தினால் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். வெளிமாநிலங்களுக்கு செல்வீர்கள். நீண்டதூரப் பயணங்களால் லாபங்கள்  இருக்கும். இதுவரை வெளிநாடு போக முயற்சித்தவர்களுக்கு இப்போது வெற்றி கிடைக்கும். வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருக்கும் பேரக்குழந்தைகளை போய்ப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். இளம்பருவத்தினர் வேலை விஷயமாக வெளிநாடு செல்வீர்கள்.

    பூர்வீக சொத்து விவகாரங்களில் ஏதேனும் வழக்கு போன்ற வில்லங்கம் வரும். பங்காளிகளுடன் கருத்து வேற்றுமை வர வாய்ப்பு இருக்கிறது. உறவினர்களுடன் கவனமாக பழக வேண்டியது அவசியம். தேவையற்ற பேச்சுக்கள் வேண்டாம். சிலருக்கு  மறைமுகமான வழியில் தனலாபங்கள் இருக்கும். எப்படி வந்தது என்று வெளியில் சொல்ல முடியாத வகையில் பண வரவுகளும் இருக்கும்.

    யூகவணிகம், பங்குச்சந்தை முதலீடு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற ரிஸ்க் எடுக்கும் தொழில்களில் கவனமுடன் இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது லாபம் வருவது போல காட்டி பிறகு மொத்த முதலீடும் சிக்கலுக்கு ஆளாகும் நிலை வரலாம்.

    குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாடு மற்றும் நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். கம்ப்யூட்டர் சம்பந்தமாக படிக்கும் மாணவர்களுக்கு படிப்பில் தேக்க நிலையும், மந்தமான போக்கும், மறதிகளும் ஏற்படும். பொறியியல் துறை மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக்க வேண்டிய காலம் இது.

    பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே விரோதிகளும்  எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.

    நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே அனைத்திலும் உஷாராக இருங்கள்.

    ஒரு சிறப்புப் பலனாக எந்தக் காரணம் கொண்டும், எவ்வளவு நெருக்கடியிலும் வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்குவது மற்றும் தொழில் செய்வது வேண்டாம். அது சரியாக வராது. இருக்கும் வீட்டை விற்று புது வீடு வாங்குவது போன்றவைகளும் இப்போது வேண்டாம். சொந்த வீட்டை விற்று அந்தப் பணம் வேறுவகையில் செலவாகி வாடகை வீட்டில் இருக்கும்படி நேரும்.

    நடுத்தர வயதை எட்டுபவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் கண்டுபிடிக்கப்படும் நேரம் இது என்பதால் உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

    நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

    ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம். தற்போது தீர்ப்பு வரும் நிலை இருந்தால் அவற்றை தள்ளி வைக்க முயற்சிப்பது நல்லது. தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வருவது கடினம். குடும்பப் பிரச்னைகளும் நீதிமன்றம் செல்லக் கூடிய காலகட்டம் இது.

    பெண்களுக்கு நல்லபலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தலைவியாக இருக்கும் பெண்களுக்கு அதிகமாக நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம்.  வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இதுவரை தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் தற்போது கிடைக்கும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உங்களுடைய வேலைத்திறன் முதலாளியாலோ அல்லது மேலதிகாரிகளாலோ மதிக்கப்படும்.

    உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. அதனால் சிக்கல்கள் வரலாம். பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் நிமிட நேரத்தில் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

    ரிஷபத்தினர் வேலை, தொழில் விஷயங்களில் நிதானமாகவும் பொறுமையுடனும்  இருப்பதன் மூலம் சாதகமற்ற பலன்களை நல்லவைகளாக மாற்றிக் கொள்ளும்  வருடம் இது.

     

    மிதுன ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3ம்  பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்)

    பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி ஆண்டில் மிதுனத்தினரின் கிரக நிலைகள் கெடுபலன் எதுவும் தராத நிலையில் இருப்பதால் விளம்பி ஆண்டு உங்களுக்கு துன்பங்கள் எதுவும் தராமல் நன்மைகளை மட்டுமே தரும் ஆண்டாக இருக்கும்.

    இதுவரை உங்களுக்கு எது கிடைக்காமல் இருந்ததோ அது இப்போது கொடுக்கப்படும். எது நடக்காமல் இருந்ததோ அது இப்போது நடக்கும். எனவே இந்த தமிழ்ப் புத்தாண்டில் உங்களுடைய தயக்கங்கள் அனைத்தையும் தள்ளி வைத்து விட்டு முயற்சியுடன் அனைத்தையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்.

    கிரக நிலைமைகள் மிதுன ராசி இளைய பருவத்தினருக்கு சாதகமாக அமைவதால் இனிமேல் படிப்படியாக உங்களின் வாழ்க்கை அனைத்து விதங்களிலும் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். இதுவரை எந்த விஷயத்தில் உங்களுக்கு தடைகள் இருந்ததோ அவை அனைத்தும் இப்போது நீக்கப்படும்.

    விளம்பி வருடத்தின் சிறப்பு பலனாக உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் எனற ஒத்திப் போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த விஷயங்களில் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும். அடுத்தவர்களின் உதவி உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கிடைக்கும். ஒரு சிலர் வலிய வந்து உதவுவார்கள்.

    இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உடனடியாக கைக்கு வரும். சுயதொழில் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள்.

    வியாபாரிகளுக்கு அற்புதமான காலகட்டம் இது. புதிய தொழில் ஆரம்பிக்கவோ கிளைகள் ஆரம்பிக்கவோ, இருக்கும் தொழிலை விரிவாக்கம் செய்யவோ ஏற்ற நேரம். எனவே, தயக்கத்தையும், யோசனைகளையும் உதறி தள்ளி சுறுசுறுப்பாக வேலைகளை கவனிக்க ஆரம்பித்தால் வெற்றி கொடி நாட்டலாம்.

    தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும்.

    பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தர கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு, தனியார் துறை பணியாளர்களுக்கு சம்பளத்தை தவிர்த்த மறைமுக வருமானம்  இருக்கும். விவசாயிகளுக்கும் கலைத்துறையினருக்கும் இது மிகவும் அதிர்ஷ்டமான கால கட்டம் என்பதால் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும்.

    குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

    ராகு சுபத்துவமாக இரண்டாம் வீட்டில் இருப்பதால் சிலருக்கு எப்படி இந்தப் பணம் வந்தது என்று வெளியே சொல்லமுடியாத அளவிற்கு மறைமுகமான வகைகளில்  பணலாபம் இருக்கும். வாக்குறுதிகளை இந்தவருடம் உங்களால் காப்பாற்ற இயலும். குறிப்பாக கடனைத் திருப்பித் தருவதாக உறுதி அளித்திருந்த நாளுக்கு முன்னதாகவே அதை செலுத்தமுடியும். யாரேனும் ஒருவருக்கு உதவி செய்வதாக வாக்குக்கொடுத்து  இருந்தால் அதையும் பழுதின்றி நிறைவேற்றுவீர்கள்.

    கணவன் மனைவி உறவில் விட்டுக் கொடுத்துப் போங்கள். ஏழாமிடத்தில் சனி இருப்பதால் குடும்ப விஷயத்தில் கெடுதல் எதுவும் இருக்காது. ஆயிரம் இருந்தாலும் சனி சனிதான் என்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போவது நல்லது. கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எதிலும் அவசரப்பட வேண்டாம். சிறு சண்டைகள் பெரிதாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

    முதல் வாழ்க்கை கோணலாகிப் போய் இரண்டாவது திருமணத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு அந்த அமைப்பு இப்போது கூடி வரும். அது நன்றாகவும் நீடித்தும் இருக்கும். வருட ஆரம்பத்தில் ஏழாமிடத்தில் செவ்வாய்,சனி இணைவதால் பங்குதாரர்கள் விஷயத்தில் கவனம் தேவைப்படும்.

    குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். சிலர் புதிய வாகனம் வாங்குவீர்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

    நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி புதிய வீடு கட்டுவதோ மனைவாங்குவதோ இனிமேல் செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

    இதுவரை தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் தற்போது வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உறவு வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.  பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்து பிரச்னை சுமுகமாக ஒரு முடிவுக்கு வரும்.

    வழக்கு கோர்ட் காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும். இதுவரை உடல் நிலை சரி இல்லாமல் இருந்தவர்கள் குணம் அடைவார்கள். தொந்தரவு செய்து வந்த கடன்கள் கட்டுக்குள் இருக்கும். உங்களை பிடிக்காமல் பின்னால் பேசும் மறைமுக எதிரிகள் காணமல் போவர்கள்.

    பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். அலுவலகத்தில் ஆண்கள் உங்களுக்கு அடங்கி இருப்பார்கள். இதுநாள் வரை இருந்து வந்த மேல் அதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும். மாமியாரை நீங்கள் வேலை வாங்க முடியும். .

    கமிஷன் தரகு போன்றவைகளின் மூலமாக நல்ல பெரிய தொகை ஒரே நேரத்தில் ‘லம்ப்’பாக கிடைக்கும். மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவும் நன்மைகளும் இருக்கும். சகோதர சகோதரிகள் உதவிகரமாக இருப்பார்கள். பங்குச்சந்தை லாட்டரி போட்டி பந்தயங்கள் போன்றவைகள் இப்போது ஓரளவிற்குக் கை கொடுக்கும். அதற்காக பேராசைப்பட்டு தவறான சில முடிவுகளை எடுக்காதீர்கள். வருகின்ற வருமானத்தை முதலீடாக்குவது நல்லது. வீட்டுமனை, நிலம் போன்றவைகள் இப்போது வாங்கிப் போடுவீர்கள். குழந்தைகளின் பேரில் டெபொசிட் செய்யலாம்.

    மிதுனராசிக்காரர்களுக்கு இது திருப்பு முனையான தமிழ்ப்புத்தாண்டு என்பதில் சந்தேகமில்லை.

     

    கடகம் ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் மற்றும் ஹி, ஹீ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    புதிதாகப் பிறக்க இருக்கும் தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடத்தில் கடக ராசிக்கு சிறப்பான அம்சம் என்னவென்று பார்த்தோமேயானால் ராசிக்கு ஆறாமிடத்தில் இரு பெரும் பாபக் கிரகங்களான செவ்வாயும், சனியும் ஒன்று கூடி நிலை கொண்டிருப்பது அதிர்ஷ்டம் தரும் அமைப்பு. எனவே  வரவிருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டை கடக ராசிக்காரர்கள் வரவேற்கவே செய்வீர்கள்.

    பாபக் கிரகங்கள் மூன்று ஆறு பதினொன்றில் கோட்சாரரீதியில் அமர்ந்திருப்பது நன்மைகளைத் தரும் என்று நமது மூலநூல்கள் குறிப்பிடுகின்றன. அதன்படி புத்தாண்டின் ஆரம்பத்தில் ராசிக்கு ஆறாமிடத்தில் செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதும், வருடம் முழுவதும் சனி பகவான் ஆறில் இருக்கப் போவதும்  கடகத்திற்கு நல்ல பலன்களைத் தரும்.

    அதேபோல புத்தாண்டின் ஆரம்பத்தில் குருபகவான் சாதகமற்ற பலன்களை தரும் நான்காமிடத்தில் இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப் பெயர்ச்சிக்கு பிறகு குருபகவான்  நல்ல ஸ்தானமான ஐந்தாம் பாவத்திற்கு இடம் பெயர்வதால் குருவாலும் இனிமேல் கடகத்திற்கு நன்மைகள் இருக்கும்.

    கடகராசியைச் சேர்ந்த தொழில் செய்பவர்களுக்கும், வியாபாரிகளுக்கும்  மிகப் பெரிய திருப்புமுனையான நல்ல சம்பவங்கள் இந்த வருடம் நடக்க இருக்கிறது. தொழிலை விரிவுபடுத்தும் உங்களின் எண்ணங்கள் ஈடேறும்.  தொழில், வியாபாரம் போன்றவைகள் முன்னேற்ற வழியில் இருக்கும். அதேநேரத்தில் வேலைப்பளுவும் அதிகமாக இருக்கும். கூட்டுத்தொழில் ஆரம்பிக்க நல்ல நேரம் இது.

    காவல்துறை, வனத்துறை போன்ற சீருடை அணிந்து வேலை செய்யும் துறையினருக்கும் இந்த வருடம் பதவிஉயர்வு கண்டிப்பாக கிடைக்கும். சம்பள உயர்வு, இதர படிகள் போன்றவை எதிர்பார்த்தபடி ஓரளவு கிடைக்கும். பொதுவாக தொழிலாளர்களுக்கு வேலை செய்யுமிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேலை அமைப்புகளில் மாற்றம் வரலாம்.

    அரசு தனியார்துறை ஊழியர்களுக்கு ‘இதர வருமானங்கள்’ சிறப்பாக சொல்லிக் கொள்ளும்படி இருக்கும். தொழிலாளர்களுக்கு வேலைப்பளு குறைந்து சம்பளஉயர்வு, பதவி உயர்வு போன்றவைகள் கிடைக்கும். தொழிற்சங்கங்களில் பதவியில் இருப்பவர்கள் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

    இதுவரை குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். கணவன் மனைவி உறவு நல்லபடியாக மாறும். கருத்து வேறுபாடு, குடும்ப பிரச்னைகள் அல்லது வேலை விஷயமாக பிரிந்து இருந்த தம்பதியினர் ஒன்று சேர்வார்கள். கணவன் ஓரிடம், மனைவி வேறிடம் என்று வேறு வேறு இடங்களில் பணிபுரிந்தவர்களுக்கு ஒரே இடத்தில் பணிமாறுதல் கிடைத்து குடும்பம் ஒன்று சேரும்.

    நீண்டநாட்களாக திருமணமாகாமலோ அல்லது திருமணத்தை எடுத்துச் செய்ய குடும்பத்தில் சரியான நபர்கள் இல்லாமல் இருப்பவர்களுக்கும் குடும்பத்தில் மூத்தவர்களாக பிறந்தவர்களுக்கும் நவம்பர் மாதத்திற்கு பிறகு நல்லசெய்திகள் இருக்கும்.

    நவம்பருக்குப் பிறகு இளைய பருவத்தினருக்கு திருமண அமைப்புகள் கூடிவந்து ஜாம்ஜாம் என்று திருமணம் நடக்கும். காதலித்துக் கொண்டிருப்பவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் நுழைவீர்கள். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

    குழந்தை பிறக்காமல் தாமதமாகி வரும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கும். உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

    பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். இதுவரை வருமானம் இன்றி பணப்பற்றாக்குறையால் அவதிப் பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பணப்பிரச்னை இல்லாத அளவுக்கு நல்ல வருமானம் இருக்கும்.

    பிற இன மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் இந்த வருடம் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

    இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வருட முற்பகுதியில் மிகவும் யோகமான நிகழ்ச்சிகளை சந்திப்பீர்கள். எதிர்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போடும் காலம் இது. எதிர்காலத்தில்  நீங்கள் எந்தத் துறையில் இருக்கப் போகிறீர்கள் என்பதை இந்த வருடம் நிர்ணயிக்கும் என்பதால் மிகவும் பயனுள்ள வருடமாகும் இது.

    கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த வந்த கருத்து வேறுபாடுகளும், மந்தமான நிலைமையும் மாறி தொழில் நல்லபடியாக நடக்கும். நண்பர்களும், பங்குதாரர்களும் உதவிகரமாக இருப்பார்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உதவிகள் நன்றாக இருக்கும். அப்பா வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டு. தர்ம காரியங்கள் செய்ய முடியும். அறப்பணிகளில் ஈடுபட்டு நல்ல பெயர் வாங்குவீர்கள்.

    புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனிதப்பயணம் செல்வீர்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.

    வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளி தேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். குறிப்பிட்ட சிலருக்கு இப்போது இருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போட்டி பந்தயங்களில் சிறிதளவு லாபம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதுவரை இழுபறியில் இருந்து வந்த பேச்சு வார்த்தைகள், நடவடிக்கைகள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். இனிமேல் வராது என்று கை விடப்பட்ட பணம் கிடைக்கும். வயதான பெற்றோரைக் கொண்டவர்கள் அவர்களுடைய உடல் நலத்தில் சிறு பிரச்னை இருந்தாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது நல்லது. பெற்றோரால் விரயங்கள் இருக்கக் கூடும்.

    பூர்வீகச் சொத்தில் இதுவரை இருந்து வந்த வில்லங்கம் தீர்ந்து உங்கள் பங்கு உடனே கிடைக்கும். பங்காளித் தகராறுகள் சுமுகமாகத் தீர்த்து வைக்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு இதுவரை வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். பதவி உயர்வு உண்டு. இடமாற்றம், கேட்டபடியே கேட்கும் இடத்தில் கிடைக்கும். கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் தனிக்குடித்தனம் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்.

    பெண்களுக்கு கழுத்துநகை வாங்கும் யோகம் வந்திருக்கிறது. இளம்பெண்களுக்கு தாலிபாக்கியமும் திருமணமானவர்களுக்கு நகைகள் சேருதலும் நடக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் அருமையான வாய்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் இது. அலுவலகத்தில் பிறரால் மதிக்கப்பட்டு பாராட்டுப் பெறுவீர்கள். கடக ராசிக்கு குறைகள் எதுவும் இல்லாத புது வருடம் இது.


    சிம்ம ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் மற்றும் மா, மி, மீ, மு, மே, மோ, டா, டூ, டே ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    சிம்ம ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடம் துயரங்கள் எதையும் தரப் போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக சிம்மத்திற்குச் சொல்லலாம்.

    விளம்பி ஆண்டில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சிம்மத்திற்கு இப்போது இருப்பதை விட நல்ல  பலன்களை தரும் என்பதாலும் மற்ற கிரகங்களின் அமைப்பும் கெடுபலன்கள் எதுவும் தராத நிலையில் உள்ளதாலும் புத்தாண்டின் முதல்பகுதியை விட பிற்பகுதி நற்பலன்களை கொண்டதாக இருக்கும்.

    பிறக்க இருக்கும் புதுவருடத்தில் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள்.  எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சிறிது சுணக்கமான பலன்கள் இருந்தாலும் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புக்கள் இந்த வருடத்தில் முன்னேற்றமாக இருக்கும்.

    அரசுத்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமரிசனங்கள் போன்ற விஷயங்களை தவிருங்கள். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத்தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம்தான்.

    சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களின் ஆசை இப்போது நிறைவேறும். வீடு கட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பேரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

    இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். இதுவரை வாகனம் அமையாதவர்களுக்கு வாகனம் அமையும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும். சொகுசு வாகனம் வாங்குவதற்கும் அமைப்பு இருக்கிறது.

    தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீரும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

    வீட்டில் மங்களநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாத இளைய பருவத்தினருக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்தக்கவலை இப்போது நீங்கும்.

    புத்திரஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. வேறு ஏதாவது வம்புகளில் சிக்கி உங்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்குவார்கள் என்பதால் அவர்களை கண்காணிப்பது நல்லது. பிள்ளைகளின் உடல்நலத்திலும் அக்கறை கொள்ளுங்கள்.

    பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டம். நொந்து கொள்ள வேண்டம். இது உங்கள் தகப்பனாரிடம் நீங்கள் கட்டுப் பெட்டியாக வாழ்ந்த காலம் போல இல்லை. இது இளைஞர்களின் காலம். செல்போன் யுகம். நீங்கள் பிறந்த போது தொலைபேசி, டிவி, வீடியோ, இன்டர்நெட் என்று எதுவுமே கிடையாது. ஆனால் இப்போது உங்களின் குழந்தைகள் பிறக்கும்போதே கர்ணனின் கவசகுண்டலம் போல அவற்றோடுதான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

    உடல்நலத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் அடிக்கடி நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

    நிலம் வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.

    ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு  பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

    பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் மகளிருக்கு பதவிஉயர்வு கூடுதல்சம்பளம் போன்ற நல்ல பலன்கள் இருக்கும். நீண்டநாட்களாக நினைத்திருந்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப் படுவீர்கள்.

    கடன் வாங்கும் முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். சமரசம் செய்து வைப்பது, பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள்.

    வருடத்தின் பிற்பகுதியில் சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும்  ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

    குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

    சிம்ம ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும் காலம் வந்து விட்டது. இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு கெடுதல்களைச் செய்யக் கூடிய அமைப்பில் இல்லை. உங்களின் எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த விளம்பி வருடத்தில் நடக்கும்.

     

    கன்னி ராசி : 2018-விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (உத்திரம் 2, 3, 4ம் பாதங்கள், ஹஸ்தம், சித்திரை, 1, 2ம் பாதங்கள் மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    கன்னி ராசிக்காரர்களுக்கு வரப்போகும் தமிழ் புதுவருடமான விளம்பி ஆண்டு நல்ல பலன்களைத் தருவதாகவும் கடந்த ஆண்டு உங்களுடைய வேலை தொழில் வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் இருந்த பின்னடைவுகளை நீக்கி நல்ல பலன்களை தருவதாகவும் இருக்கும். குறிப்பாக சென்ற வருடம் பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்தவர்கள் தற்போது அது நீங்கப் பெறுவீர்கள்.

    வேலையில் இருக்கும் இளைய பருவத்தினருக்கு வேலை மாற்றம், வெளியூர் மாற்றம், மாற்றத்தினால் உண்டாகும் பதவி உயர்வு போன்றவைகள் உண்டாகும். தொழில் அதிபர்கள், கலைஞர்கள் போன்றவர்களுக்கு மாற்றங்களுடன் கூடிய நல்லவிதமான திருப்பங்கள் இருக்கும்.

    இளையபருவத்தினர் இதுவரை இருந்து வந்த ஏமாற்றத்திலும் மன அழுத்தத்திலும் இருந்து விடுபடுவீர்கள். இந்தப் புதுவருடம் யோகத்தைத் தரும்  என்பதோடு இதுவரை இருந்து வந்த மனக்குழப்பங்களையும் காரியத் தடைகளையும் துரதிர்ஷ்டங்களையும் விரட்டி அடிக்கும் விதமாக அமையும். இன்னும் வேலை திருமணம் போன்றவைகள் நல்லபடியாக அமைந்து செட்டிலாகாத இளைய பருவத்தினருக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். விரைவில் திருமணம் நிச்சயம் ஆகும்.

    வியாபாரிகளுக்கு லாபம் இருக்கும் என்பதால் குறை சொல்ல எதுவும் இல்லை. வருமானத்தில் எந்தவித குறைவும் இருக்காது. நான்கில் சனி அமர்ந்து பத்தாமிடத்தைப் பார்ப்பதால் சொந்தத்தொழில் செய்பவர்கள் தங்களுடைய தொழில் விரிவாக்கத்தினை சற்றுக் கவனமுடன் செயல்படுத்துவது நல்லது.

    அர்த்தாஷ்டமச் சனி நடப்பதால் அரசு தனியார்துறை பணியாளர்கள் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். சம்பளம் தவிர்த்த ‘இதர’ வருமானங்கள் வரும் துறைகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். எந்த ஒரு விஷயத்திலும் அலட்சியமாகவோ கவனக்குறைவாகவோ இருக்க வேண்டாம். எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அடுத்தவர்களை நம்ப வேண்டாம்.

    கேது ஐந்தில் இருப்பதால் சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.  நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை இப்போது போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு இப்போது கிடைக்கும்.

    ராகு கேதுக்களின் சுப நிலையினால் ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற மிகப்பெரும் புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும். தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

    சிலர் தங்களுடைய எதிர்கால வாழ்க்கைத்துணையை இப்போது சந்திப்பீர்கள். இளைய பருவத்தினருக்கு காதல் வரும் நேரம் இது. சிலருக்கு மனம் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். காதலர்களுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். முதல் திருமண வாழ்க்கை முறிந்து இரண்டாம் திருமணத்திலாவது நிம்மதி இருக்குமா என்று பயந்து கொண்டிருப்பவர்களுக்கு இப்போது திருமண அமைப்பு உண்டாகும். அந்த இரண்டாவது வாழ்க்கை நன்றாகவும் நிம்மதியாகவும் இருக்கும்.

    தொழில் வியாபாரம் வேலை மற்றும் இருப்பிடங்களில் இடமாற்றம் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். உங்களில் சிலர் வெளிநாட்டுப் பயணம் செய்வீர்கள். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும்.

    சிலருக்கு மறைமுக வழியிலான தனலாபம் உண்டாகும். பணத்திற்கு பஞ்சம் இருக்காது. யார் வீட்டு பணமாக இருந்தாலும் உங்கள் கையில் தாராளமாக நடமாடும் என்பதால் பணச்சிக்கல் வராது. கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். சிலருக்கு நம்பர் டூ தொழில் இப்போது கை கொடுக்கும்.

    வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் உங்களுக்கு கை கொடுக்கும். வெளிநாட்டில் படிக்கவோ, வேலை செய்யவோ முயற்சிப்பவர்களுக்கு உடனடியாக விசா கிடைக்கும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்கள் இப்போது வெளிநாட்டுப் பயணம் செல்லும்படி இருக்கும். பயணங்கள் மூலம் நன்மைகள் இருக்கும்.

    வீட்டில் குழந்தைகளில் உடல் நலத்தில் அக்கறையும், கவனமும் தேவைப்படும். சிறு குழந்தைகளுக்கு சாதாரண உடல்நலக் குறைவு என்றால் கூட அலட்சியமாக இருக்காமல் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைக்கு செல்வது நல்லது. இதுவரை போகாத ஊர்களுக்கு செல்வீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

    தந்தைவழி உறவினர்களிடம் நெருக்கம் உண்டாகும். இதுவரை இருந்துவந்த பங்காளிப் பிரச்னை தீரும். பூர்வீக சொத்துக்களில் உங்கள் பாகம் சேதமில்லாமல் உங்களுக்கு கிடைக்கும். பெரியப்பா சித்தப்பாக்கள் மற்றும் தந்தையுடன் பிறந்த அத்தைகளால் லாபம் இருக்கும். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும்.

    வயதான தாயாரை நன்கு கவனியுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். அவர்களின் கல்வியில் முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகள் விரும்பும் பள்ளியிலோ, படிப்பிலோ அவர்களை சேர்த்து விட முடியும். நல்ல காலேஜில் சீட்டு கிடைக்கும்.

    இதுவரை கருத்து வேற்றுமைகளாலும், குடும்பச் சிக்கல்களினாலும் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள். சொத்துச் சேர்க்கை இருக்கும். பிள்ளைகளின் பெயர்களிலோ மனைவியின் பெயரிலோ ஏதேனும் சொத்து வாங்க முடியும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நகை வாங்கி சேமிக்கலாம்.

    வழக்கு, கோர்ட், காவல்துறை போன்றவற்றில் சிக்கித் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு அவை அனைத்தும் நல்லபடியாக முடிவுக்கு வரும். அநியாய வட்டிக்கு கடன் வாங்கி அதில் இருந்து மீள முடியாமல் அவஸ்தைப் பட்டு விழி பிதுங்கி கொண்டிருந்தவர்களுக்கு கடனை அடைப்பதற்கு நல்ல வழி பிறக்கும்.

    பெண்களுக்கு இந்த வருடத்தில் நல்ல பலன்கள்தான் அதிகம் இருக்கும். குடும்பத்தில்  செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால் இருக்கும் சேமிப்பு செலவழிந்து உங்கள் பாடு திண்டாட்டமாகலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தள்ளிப் போய் இருந்த பதவிஉயர்வும், சம்பளஉயர்வும் கிடைக்கும்.

    சுபக்கிரகமான குருபகவான் மூன்றாமிடத்திற்கு மாறப் போவதால் உங்களில் சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள். தேவையற்றவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

    தொலைக்காட்சி, சினிமாத்துறை போன்ற ஊடகங்களில் இருக்கும் கலைஞர்கள், பத்திரிகைத்துறையினர், காவல், நீதித்துறையினர், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள், தொழில் அதிபர்கள்,  வெளிநாட்டுத் தொடர்புடையவர்கள், கணிப்பொறி சம்பந்தப்பட்டோர், சொல்லிக்கொடுப்போர் போன்ற அனைத்துத் தரப்பினருக்கும் இந்த தமிழ்ப் புத்தாண்டு  நல்ல பலன்களைத் தரும்.


    துலாம் ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (சித்திரை 3, 4ம் பாதங்கள், சுவாதி, விசாகம், 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் ர, ரா, ரி, ரு, ரே, ரோ, த, தா, தி, து, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    துலாம் ராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டு நன்மைகளை அள்ளித் தரும் வருடமாக இருக்கும்.

    மொத்தம் 30 வருடங்கள் அடங்கிய தன்னுடைய சுற்றில் சனிபகவான் 3,6,11-ம் இடங்களில் மட்டுமே நன்மைகளை தருவதற்கு கடமைப்பட்டவர். இந்தப் புது வருடத்தில், முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் நிலையான மூன்றாமிடத்தில் சனி இருப்பது துலாத்திற்கு மிகவும் மேன்மைகளைத் தருகின்ற ஒரு அமைப்பாகும்.

    இந்த அமைப்பின் மூலம் இதுவரை வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்பில் செட்டில் ஆகாதவர்கள் மேம்பட்ட வருமானங்களைத் தரக்கூடிய வகையில் நிரந்தர அமைப்புகளை பெறுவீர்கள். மாதம் பிறந்தால் நிலையான  வருமானம் உண்டு என்ற அமைப்பு இந்த வருடம் முதல் ஆரம்பிக்கும்.

    இதுவரை கை கொடுக்காத சொந்தத் தொழிலும், வியாபாரமும் இனிமேல் லாபகரமாக நடக்கத் துவங்கும். வேலை இடங்களில் இருந்த சிக்கல்களும், எதிர்ப்புகளும் புத்தாண்டு முதல் விலக துவங்கும். வீண்செலவு மற்றும் விரையங்களை தடுத்து நிறுத்தி சேமிக்கும் அளவிற்கு வருமானம் வரும். பிறக்க இருக்கும் விளம்பி வருடத்தில் துன்பங்கள் எதுவுமின்றி இன்பங்களை மட்டுமே துலாத்தினர் பெறுவீர்கள் என்பது உறுதி.

    இதுவரை நல்லவேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்த இளைஞர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

    வியாபாரிகளுக்கு தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். சொந்தத்தொழில் செய்பவர்கள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து சுயதொழில் செய்பவர்கள் அனைவருக்கும் இது முன்னேற்றமான காலம். சுயதொழிலர்களுக்கு  பணவரவு தடைப்படாது.

    வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் தொந்தரவு இருக்காது. கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். விவசாயிகளுக்கு இம்முறை இயற்கை ஒத்துழைக்கும். தேவையான நேரத்தில் மழை பெய்யும். பணப்பயிர் விளைவிக்கும் விவசாயிகளுக்கு பெரிய நன்மைகள் உண்டு.

    தள்ளிப் போய் இருந்த வெளிநாடு தொடர்பான வேலை விஷயங்களும் வெளிநாட்டு பயணங்களும் வெற்றிகரமாக கை கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவுகளும் லாபங்களும் இருக்கும்.  பெற்றோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். பங்காளிச் சண்டை தீரும். பூர்வீக சொத்துப் பிரச்னை சுமுகமாக முடிவுக்கு வரும்.

    அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு அலுவலகத்தில் தொந்தரவுகள் எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உங்களுக்கு கீழே வேலை செய்பவர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். சம்பள உயர்வு பதவி உயர்வு போன்றவைகள் தற்போது கிடைக்கும்.

    வீடு வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கி கட்டிய வீடோ அல்லது காலி மனையோ, குறைந்தபட்சம் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட்டோ வாங்குவீர்கள். இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு அதைவிட நல்ல வாகனம் வாங்க முடியும். இதுவரை வாகனம் இல்லாதவர்களுக்கு தற்போது வாகனம் வாங்குவதற்கான யோகம் இருக்கிறது.

    பெண்களுக்கு நல்ல பலன்கள் அதிகம் இருக்கும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாத கணவர் இனிமேல் உங்களை புரிந்து கொண்டு, உங்கள் மனம் போல் நடந்து கொள்ள ஆரம்பிப்பார். பிள்ளைகள் உங்களின் கஷ்டங்களைப் புரிந்து கொள்வார்கள். வேலை செய்யும் இடங்களில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். உங்களின் அந்தஸ்து உயரும். கூட்டுக் குடும்பத்தில் மருமகளின் பேச்சு மாமியாரால் ஏற்கப்படும்.

    வயதானவர்கள் உடல்நலத்தில் கவனம் வையுங்கள். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம். நீண்டகால குறைபாடுகளான சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

    திடீர் அதிர்ஷ்டம், மற்றும் புதையல், லாட்டரி போல முற்றிலும் எதிர்பார்க்காத இடத்திலிருந்து பணம் கிடைப்பது இப்போது நடக்கும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இழுபறியாக இழுத்துக் கொண்டிருந்த விஷயம் சட்டென்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கலாம்.

    சிலருக்கு ஆலயப்பணி செய்யும் பாக்கியம் கிடைக்கும்.  நீண்ட நாட்களாக போக முடியாமல் தள்ளிப் போயிருந்த தீர்த்த யாத்திரை போக முடியும். காசி கயா பத்ரிநாத் கேதார்நாத் போன்ற வடமாநில புண்ணியத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகளின் தரிசனம் கிடைக்கும். மகாபெரியவரின் அதிஷ்டானம் போன்ற புனித இடங்களை வழிபடும் பாக்கியம் உண்டாகும்.

    தள்ளிப் போயிருந்த நேர்த்திக்கடன்களை இப்போது நிறைவேற்ற முடியும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். தந்தையிடமிருந்து ஏதேனும் ஆதாயம் இருக்கும். மூத்த சகோதரர், சகோதரிகளின் உறவு மேம்படும். அவர்களால் உதவிகள் இருக்கும். அண்ணன் தம்பி அக்கா தங்கை உறவுகள் பலப்படும்.

    குடும்பப் பிரச்னை காரணமாக பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். விவாகரத்து வரை போன தம்பதிகள் வழக்கைத் திரும்பப் பெற்று சமரசமாகி திரும்ப இணைவீர்கள். முதல் வாழ்க்கை கோணலாகிப் போனவர்களுக்கு இரண்டாவது வாழ்க்கை நல்லபடியாக அமையும். தனிப்பட்ட வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த கசப்பான அனுபவங்கள் நீங்கி இனிமேல் வாழ்க்கை சரியான பாதையில் போகத் துவங்கும்.

    அதிர்ஷ்டம் இனிமேல் உங்களுக்குக் கை கொடுக்கும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் ஆதரவு உண்டு. மகன் மகள்களால் பெருமைப்படக் கூடிய செய்திகள் இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்யும் பிள்ளைகளை தற்போது பார்க்க முடியும். பிள்ளைகள் விரும்பும் பள்ளி, கல்லூரிகளில் அவர்கள் விரும்பும் படிப்பில் சேர்க்க முடியும்.

    இதுவரை சேமிக்க முடியாதவர்கள் ஏதேனும் ஒரு வழியில் சேமிப்புகள் செய்ய முடியும். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் கை கொடுக்கும். பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதிநிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிருங்கள். என்னதான் பணவரவு நிறைவாக இருந்தாலும் எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    ஐ.ஏ.எஸ், குரூப்ஒன் போன்ற அரசுவேலைகளுக்கு நல்லமுறையில் தேர்வுகளை எழுத முடியும். ஏற்கனவே தேர்வுகளை எழுதி முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். மொத்தத்தில் நல்ல விஷயங்களைத் தரும் தமிழ்ப் புது வருடம் இது என்பதால் துலாம் ராசியினர் எதிலும் துணிந்து இறங்கி வெற்றி காண்பீர்கள்.

     


    விருச்சிக ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தோ, நா, நீ, நே, நோ, ய ,யி, யு, நு, ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.)

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இதுவரை இருந்து வந்த துன்பங்களை நீக்கி மனதில் இருக்கும் சுமையையும், பாரத்தையும் இறக்கி வைக்கும் புத்தாண்டாக இந்த தமிழ் புது வருடம் இருக்கும் என்பது நிச்சயம். சில மாதங்களுக்கு முன்பு வரை உங்களுக்கு நடந்த ஜென்மச்சனியினால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த உங்களுக்கு துன்பங்களை முழுமையாக தீர்க்கும் ஆண்டாக விளம்பி வருடம்  இருக்கும்.

    விருச்சிக ராசிக்காரர்களின் கஷ்டங்கள் அனைத்தும் தீரும் வருடம் இது. அவரவர் வயது, தகுதி, இருப்பிடம், மனநிலை போன்றவைகளுக்கேற்ப உங்களுக்கு நடந்த மன அழுத்தம் தரும் விஷயங்களில் இருந்து இந்த தமிழ்ப் புத்தாண்டு முதல் விடுபடுவீர்கள்.

    ஏற்கனவே உங்களில் சிலருக்கு விடியலின் பாதை தெரிய ஆரம்பித்து விட்டது. சிலர் அந்த வெளிச்சப் பாதையில் பயணிக்கவும் தொடங்கி விட்டீர்கள். பாதை தெரியாத இன்னும் சிலருக்கு வழிகாட்டும் வருடமாக விளம்பி வருடம் இருக்கும்.

    சென்ற காலங்களில் இருந்த சரியில்லாத கோட்சார நிலையினால் உங்களுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களும், வாழ்க்கைச் சிக்கல்களும், கடன் தொல்லைகளும், உடல்நலப் பிரச்னைகளும் வம்பு வழக்கு கோர்ட் பிரச்னைகளும் முழுமையாக விலகி இனி நன்மைகள் நடக்கப் போகிறது.

    இந்த புது வருடம் முதல் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். இனிமேல் உங்களுடைய மனதைரியம் கூடும். எதையும் சந்திக்கும் ஆற்றல் பெறுவீர்கள். நாளைக்குப் பார்க்கலாம் என்ற ஒத்திப் போடுதல் இருக்காது. இதுவரை நீங்கள் பயந்து கொண்டிருந்த செயல்கள் அனைத்திலும் தலைகீழ் மாற்றங்கள் இருக்கும்.

    இளைஞர்களுக்கு வழிபிறக்கும் அதேநேரத்தில் பெற்றவர்களுக்கு பிள்ளைகள் பற்றிய கவலைகள் தீரும் வருடமாக இது அமையும். மகனுக்கு இதுவரை நல்ல வேலை கிடைக்கவில்லையே, வயது ஏறிக்கொண்டே போகிறது. மகளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நித்தம் நித்தம் கவலைப்பட்டு தூக்கம் இல்லாமல் இருக்கும் விருச்சிக ராசி பெற்றோர்களின் மனக்குறை தீரும். மகன், மகள் போன்றவர்களின் வேலை, திருமணம் தற்போது தடைகள் இல்லாமல் நடைபெறுவதை பார்க்க முடியும்.

    மனதிற்கு பிடித்த வேலை கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்த இளைய பருவத்தினருக்கு அவர்கள் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு இதுவரை கிடைக்காத பதவி உயர்வு, சம்பள உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து கைக்கு வரும்.

    சுயதொழில் செய்வர்கள் தொழில் வளர்ச்சியை காண்பார்கள். வியாபாரிகளுக்கு நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. தொழிலில் சிக்கல்களை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் இனிமேல் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் காண்பீர்கள். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

    விவசாயிகளுக்கும், கலைத்துறையினருக்கும் நீங்கள் ஏற்கனவே மனதில் நினைத்திருந்த முன்னேற்றத் திட்டங்களைச் செயல்படுத்த அதிர்ஷ்டம் இனி கை கொடுக்கும். பொது வாழ்க்கையில் இருக்கக் கூடியவர்களுக்கு இது மிகவும் மேன்மையை தரக்கூடிய காலமாக அமையும். அதிகாரப் பதவிகள் தேடி வரும்.

    சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். நண்பர்களால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் இருக்கும். இதுவரை சுப காரியங்களுக்கு இருந்த தடை விலகி குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளும் சுற்றுலா செல்வது போன்ற மனதிற்கு இனிமை தரும் நிகழ்வுகளும் நடக்கும்.

    கூட்டுத்தொழில் ஆரம்பிக்க உகந்த நேரம் இது. தொழில் விரிவாக்கங்கள் பலன் தரும். சுயதொழில் செய்வோருக்கு எடுக்கும் முயற்சிகள் கை கொடுக்கும். பொருளாதார நிலை மிகவும் மேம்பாடானதாகவும் சரளமான பணவரவு இருந்து கொண்டே இருப்பதாகவும் அமையும். தொட்டது துலங்கும். எடுக்கும் முயற்சிகள் இப்போது பலிதமாகும். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய சோதனை முயற்சிகளை இப்போது செய்யலாம்.

    மத்திய மாநில நிர்வாகப் பதவிகளுக்கான ஐ. ஏ. எஸ், குரூப்ஒன் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கும் ஏற்கனவே அரசு வேலைக்கு தேர்வெழுதி முடிவுகளுக்கு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்திகள் கிடைக்கும். இதுவரை வெளிமாநில வேலைக்குச் செல்ல இருந்த தடைகள் விலகும்.

    பிற, இன, மொழி மதக்காரர்கள் உங்களிடம் நேசமாக இருப்பார்கள். வெளி மாநிலத்தவர்கள் நண்பர்களாகக் கிடைப்பார்கள். அவர்களால் நன்மைகள் உண்டாகும்.  தூரத்தில் பணியிடம் அமையும். பிரயாணங்களால் உற்சாகமாக இருப்பீர்கள். வருடத்தின் பிற்பகுதியில் மிகவும் நல்ல பலன்கள் உங்களுக்கு நடக்கும்.

    வீடு கட்டுவதற்கு இதுவரை இருந்து வந்த தடைகள் விலகும். சிலருக்கு கட்டிய வீடோ, காலிமனையோ வாங்குவதற்கு இப்போது நல்ல சந்தர்ப்பம் வரும். புதிதாக நல்ல வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சொத்து சேர்க்கை மற்றும்  பொன்நகை சேர்க்கை இருக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து விதமான பொருட்களையும் இப்போது வாங்க முடியும்.

    உடல்நலம் சரியில்லாமல் இருந்தவர்களின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தெரியும். இதுவரை இருந்து வந்த விரயச் செலவுகள் இனிமேல் இருக்காது. எனவே ஏதேனும் ஒரு தொகையை அது சிறியதாக இருந்தாலும் சேமிக்க முடியும். குடும்பத்தில் மங்களகாரியங்கள் நடக்கும் என்பதால் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப சுபச்செலவுகளும் இருக்கும்.

    நீண்ட தூர புனித யாத்திரைகள் இப்போது செல்ல முடியும். வயதானவர்கள் காசி கயா போன்ற புனித யாத்திரைகள் செல்வீர்கள். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும். குலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். தள்ளிப் போயிருந்த குலதெய்வ வழிபாட்டினை உடனடியாக  நேர்த்திக்கடன்களுடன் நிறைவேற்ற முடியும்.

    குடும்பத்தில் இதுவரை தடைப்பட்டு கொண்டிருந்த மங்கள காரியங்கள் இனிமேல் வெகு சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு குருபலம் வந்து விட்டதால் இந்த வருடம் திருமணம் நடைபெறும். காதலித்துத் கொண்டு இருப்பவர்களுக்கு பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். சிலர் புதிதாக காதலிக்க ஆரம்பிப்பீர்கள். குழந்தை பாக்கியம் தாமதித்தவர்களுக்கு தற்போது நல்ல முறையில் குழந்தை பிறக்கும்.

    பெண்களுக்கு இது சிறப்பான நன்மைகளைத் தரும் ஆண்டாகும். உங்களின் மதிப்பு உயரும். நான்கு பேர் கூடும் இடத்தில் தனித்துவமாக தெரிவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் இதுவரை இருந்த வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். இதுநாள் வரை இருந்து வந்த மேலதிகாரி தொந்தரவு இனி இருக்காது. புகுந்த வீட்டில் அந்தஸ்து, கௌரவம் கூடும்.

    மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்லவைகளை மட்டுமே தரும் ஆண்டாக இது அமையும்.


    தனு ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (மூலம், பூராடம், உத்திராடம் 1,ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் யே, யோ, ப, பி, பூ, த, ட, பே, ஜ, ஜா ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக  கொண்டவர்களுக்கும்.)

    தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்கால நன்மைக்கான மாற்றங்கள் நடக்க இருக்கும் காலம் இது. இருக்கும் இடத்தை விட்டு வெளியே சென்றால் ஒளிமயமான எதிர்காலம் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதை அறியாமல் தயங்கித் தயங்கி ஒரே இடத்தில் உழன்று கொண்டு இருப்பவர்களை கிரகங்கள் இதுபோன்ற நேரங்களில்தான் பிடரியில் உதைத்து வெளியே தள்ளும்.

    அப்போதைக்கு அது கசப்பானதாகவும், வாழ்க்கையே இருண்டு விட்டதாகத் தோன்றினாலும் சிலகாலம் கழித்துத்தான் எல்லாம் நன்மைக்கே என்று நம் அறிவுக்குப் புலப்படும். அதன் பிறகுதான் நடந்தது கடவுள் செயல் என்பது உங்களுக்கு புரியும்.

    எனவே தனுசுவினர் எதிர்காலத்தில் மிகவும் நன்றாக இருக்கக்கூடிய சூழலுக்கு மாறுவதற்கான ஆரம்பகட்ட அடிப்படை நிகழ்வுகள் இப்போது உங்களுக்கு  கசப்புடன் நடக்கும். எனவே, கிரகங்கள் தரப்போகும் மாற்றத்தை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அதற்குத் தயாராகுங்கள்.

    தனுசுராசிக்காரர்களுக்கு தற்போது ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. ஐம்பது வயதை தாண்டியவர்களுக்கு சனியின் பாதிப்புகள் எதுவும் நிச்சயமாக இருக்காது. அவர்களுக்கு இது பொங்கு சனியாக நன்மைகளைத் தரும் விதத்தில் அமையும் ஆனால் எப்போதும் விளையாட்டுத்தனமாக இருக்கக் கூடிய இளைஞர்களுக்கு இப்போது வாழ்க்கையைப் புரிய வைக்கும் விதமாக சொந்த வாழ்க்கையிலும் வேலை விஷயத்திலும் மனஅழுத்தம் தருபவை நடந்து கொண்டிருக்கின்றன.

    பணம் என்றால் என்னவென்று இளைய பருவத்தினர் தெரிந்து கொள்ளக் கூடிய விஷயங்களை இப்போது சனி செய்து கொண்டிருக்கிறார். அதேபோல உணமையான உறவுகளையும், கஷ்டத்தில் கை கொடுக்கக்கூடிய நட்புகளையும் சனி இப்போது அடையாளம் காட்டுவார்.

    தமிழ்ப் புது வருடமான விளம்பி ஆண்டின் சிறப்பு பலனாக இளைய பருவத்தினருக்கு சொல்ல வேண்டியது என்னெவென்றால் காதல் என்பதை சற்றுத் தள்ளி வையுங்கள். ஆனால் நீங்கள் சொல்வதைக் கேட்க மாட்டீர்கள். இப்போது காதல் வந்தே தீரும். பின்னாலேயே அதனால் கடுமையான மன அழுத்தம் வரும்.

    இந்த தமிழ்ப் புத்தாண்டின் பிற்பகுதியில் இருந்து நீங்கள் எதிலும் அகலக்கால் வைக்காமல் நிதானத்துடனும், கவனத்துடனும் செயல்பட வேண்டிருக்கும். புதிதாக எதையும் தொடங்காமல் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தால் மட்டும் போதும்.

    இதுபோன்ற நேரங்களில் சனி புதிதாக ஒருவரை அறிமுகப்படுத்தி 1 லட்சம் போட்டால் 10 லட்சம் எடுத்துவிடலாம் என்றோ, வெறும் 10 ஆயிரத்தில் பல கோடி சம்பாதிக்கலாம் என்றோ சில தூண்டில்களை போட்டு தொழில் ஆரம்பிக்க வைத்து உங்களை ஏதேனும் ஒரு விஷயத்தில் நுழைத்து, புலி வாலைப் பிடிக்க வைப்பார். பிறகு அதனை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் சிக்கலுக்குள்ளாக்கி பரிதவிக்க வைப்பார் என்பதால் இந்த வருடம் புதிதாக அறிமுகமாகும் நபர்களிடமோ, இதுவரை தெரியாத ஒரு தொழிலை பற்றி தெரிய வந்தாலோ கவனமாக இருங்கள்.

    இந்த காலகட்டத்தில் உங்களுக்கு வேலை மாற்றம், ஊர் மாற்றம், வீடுமாற்றம், தொழில் இடமாற்றம் போன்றவைகள் நடக்கும். அதே நேரத்தில் அனைத்து மாற்றங்களும் உங்களின் எதிர்காலத்திற்கு நல்லதாகவே அமையும். இளைய பருவத்தினருக்கு வெளியூரிலோ வெளிமாநிலத்திலோ தூரதேசங்களிலோ தங்கி வேலை செய்யக் கூடிய அமைப்புகள் உருவாகும்.

    அரசு, தனியார்துறைகளில் பணிபுரிபவர்கள் சம்பளம் தவிர்த்த மேல் வரும்படிகளுக்கு ஆசைப்பட வேண்டாம். அதனால் சிக்கல்கள் வரலாம். முறைகேடான வருமானங்கள் வரும்போது விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். பணியிடங்களில் யாரையும் நம்ப வேண்டாம். அதிகாரியைப் பற்றிய விமர்சனங்களும் வேண்டாம்.

    வியாபாரிகளுக்கு தொழில் நன்றாக இருந்தாலும் லாபம் குறைவாகவே இருக்கும். வியாபாரிகள் தொழில் இடத்திலேயே இருந்து கவனிக்க வேண்டியது அவசியம். கொள்முதலுக்கு பணம் கொண்டு போகும் நேரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பெரிய தொகை பரிமாற்றங்களில் எச்சரிக்கையாக இருக்கவும். அனைத்திற்கும் வேலை செய்பவர்களை நம்பாமல் கவனமாக இருப்பது நல்லது.

    நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். அவற்றால் சிக்கல்கள் வரலாம். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். பங்குச் சந்தை போன்ற ஊக வணிகங்கள் இப்போது கை கொடுக்காது. நஷ்டம் வரும் என்பதால் ஷேர் மார்க்கட்டில் மிகவும் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கல்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்வது நல்லது.

    அடிதடி சண்டை போன்றவைகளால் கோர்ட் காவல்துறை போன்ற இடங்களுக்கு அலைய வேண்டியது ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏற்கனவே வழக்கு விவகாரங்கள் இருந்தால் அவற்றை முடிப்பதற்கும் அவசரப்பட வேண்டாம்.

    ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இப்போது இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள். அடிக்கடி ஞாபகமறதி வரும். எனவே கைப்பொருளை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுவது நல்லது. வங்கியிலிருந்து பணம் எடுக்கும் போதோ அல்லது பெரிய தொகைகளை கையாளும்போதோ  கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.

    தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் கீழ் வேலை செய்பவர்களை நம்ப வேண்டாம். நம்பிக்கைத் துரோகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. அரசாங்க உதவிகள் கிடைப்பதற்கு தடைகள் உண்டு. எதையும் நேர்வழியில் சென்று சாதிப்பதே நல்லது. குறுக்குவழியில் செல்லாதீர்கள். சிக்கல்கள் வரும். பன்னாட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில்  வேலை செய்பவர்களுக்கு  துறை சார்ந்த நெருக்கடிகள் இருக்கும். மேலதிகாரிகளிடம் சற்றுத் தள்ளியே இருங்கள். செய்யாத தவறுக்கு வீண்பழி வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    உடன்பிறந்த சகோதரர்கள் வழியில் உதவிகளை எதிர்பார்க்க வேண்டாம். பெற்றோருடன் கருத்து வேற்றுமை வரலாம். பெரியவர்களின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடந்து கொள்வது நல்லது. சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டியது அவசியம். உடல்நல விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் சிறு சுகக்குறைவு என்றாலும் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

    பெண்களுக்கு இந்தப் புத்தாண்டு நல்ல பலன்களைத்தான் தரும். அதே நேரத்தில் பணி புரியும் இடங்களில் யாரையும் நம்பி எதையும் செய்ய வேண்டாம். குறிப்பாக அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருக்கும் என்பதால் அனைத்திலும் முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது. வேலை மாற்றம், வீடுமாறுதல், அலுவலகம் மாறுதல் போன்றவைகள் நடந்து கணவர் ஓரிடம் நீங்கள் ஓரிடம் என்று அலைச்சல்கள்  இருக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

    நாற்பது வயதுக்குட்பட்டவர்கள் ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் இருப்பதால் விளம்பி வருடத்தில் புதிய தொழில் முயற்சிகள் எதையும் செய்யாமல் எதிலும் நிதானத்துடன் இருப்பது நல்லது.


    மகர ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (உத்திராடம் 2, 3, 4ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம், 1, 2ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் ஜி, கி, கு, கே, கோ, க, சி, சே, சோ ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    மகரராசிக்கு பிறக்க இருக்கின்ற விளம்பி தமிழ்ப் புத்தாண்டு எதிர்காலத்திற்கான  மாற்றங்களை தருகின்ற ஒரு ஆண்டாக இருக்கும்.

    மகரத்திற்கு தற்போது ஏழரைச்சனி நடந்து கொண்டிருக்கிறது. சென்ற வருடம் அக்டோபர் மாதம் நடந்த சனிப் பெயர்ச்சியின் மூலம் சனிபகவான் உங்களின் ராசிக்கு பனிரெண்டில் அமர்ந்து  விரையச்சனி எனும் அமைப்பில் இருக்கிறார். ஏழரைச்சனி நடக்கும்போது வேலை, தொழில் விஷயங்களில் சாதகமான பலன்கள் நடக்காது என்பது  ஜோதிட விதி.

    ஒன்பது கிரகங்களிலும் சனிபகவான் மட்டுமே ஒருவருக்கு அஷ்டம, ஏழரைச் சனி நேரங்களில் பொருளாதாரச் சிக்கல்களை கொடுத்து பணத்தின் அருமையைப் புரிய வைக்கின்ற கிரகம் என்பதால் இந்த வருடம் உங்களின் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் உங்களுக்கு விருப்பமற்ற, சாதகமற்ற நிலைகள் இருக்கும். எனவே தொழில் விஷயங்களில் நீங்கள் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது.

    தற்போது உங்களுக்கு நடப்பது விரயச்சனிதான் என்பதால் சனியின் பாதிப்புகள் இந்த ஆண்டு பெரிய அளவில் இருக்காது. ஆயினும் “அரசனை நம்பி புருஷனை கைவிடும்” கதையாக சில விஷயங்கள் மகர ராசிக்கு இப்போது நடக்கும் என்பதால் முப்பது வயதுகளில் இருக்கும் இளைய பருவத்தினர் வேலை விஷயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

    ஒரு முக்கிய விஷயமாக மகரராசியின் நாற்பது வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கு மட்டுமே சனியினால் பாதிப்புகள் இருக்கும். நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு இது பொங்கு சனி என்று சொல்லப்படும் நன்மைகளைத் தரும் அமைப்பாக பலன் தரும் என்பதால் ஐம்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு வேலை தொழில் அமைப்புகளில் நன்மைகள் மட்டுமே நடக்கும். இளைஞர்கள் மட்டும்தான் கவனமாக இருக்க வேண்டும்.

    இளையவர்களின் தெளிவான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி இருக்கும் வேலையை பறிக்க சனி முயற்சிப்பார் என்பதால் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.

    புது வருடத்தின் கடைசி மாதங்களிலும் அடுத்த வருட ஆரம்பத்திலும் சனியின் தாக்கம் மகரத்திற்கு இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த வருடமே நீங்கள் புதிய முயற்சிகள் எதையும் தொடங்காமல் விழிப்புடன் இருப்பது நல்லது.

    அஷ்டமச்சனி, ஏழரைச்சனி காலங்களில் சனிபகவான் புதிய தொழிலையோ, அல்லது வியாபாரத்தையோ தொடங்க வைத்து அதை நடத்தவும் முடியாமல், விடவும் முடியாமல் புலிவாலைப் பிடித்த கதையாக அதன் போக்கில் ஓட வைப்பார் என்பதால் மகரராசி இளைஞர்கள் இந்த வருடம் தொழில், வியாபாரம் போன்றவைகளில் கவனமாக இருப்பது நல்லது.

    குறிப்பிட்ட சிலருக்கு இந்த நேரங்களில் இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிப்பதற்கு ஆசை வந்து அதைப் பறந்து பிடிக்கப் போய் “உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா” கதை வரும் என்பதால் வேலை பார்க்கும் இடங்களில் கவனமாக இருக்க வேண்டியதும் அவசியம்.

    இருக்கும் வேலையை விடுத்து அடுத்த வேலைக்கு மாற நினைப்பவர்கள் கண்டிப்பாக வேலையில் இருந்து கொண்டே மாறுதலுக்கு முயற்சி செய்து அடுத்த வேலைக்கான உறுதி ஆர்டர் வந்த பின்பு இருக்கும் வேலையை விடுவது நல்லது. சிலநேரங்களில் வேலைமாற்றத்திற்குப் பின் முன்பிருந்த வேலையே அருமை என்று நினைக்க வைப்பார் சனி.

    முப்பது வயதுகளில் இருப்பவர்கள் இந்த வருடமும் அடுத்த வருடமும் செட்டிலாக விடாமல் அலைக்கழிக்க வைக்கப் படுவீர்கள். குறிப்பாக பொருளாதார சிக்கல்கள், பணவரவில் திருப்தியின்மை, பாக்கெட்டில் பணம் வைக்க முடியாத நிலை போன்றவைகள் இருக்கும்.

    பிறந்த ஜாதகத்தில் யோகவலுவுள்ள தசாபுக்திகள் நடப்பவர்களுக்கு  சாதகமற்ற பலன்கள் சற்றுக் குறைவாக இருக்கும். ஆயினும் சனி என்பது உங்களுக்கு துன்பங்கள் என்ற பெயரில் அடுத்தவர்களிடம் எப்படி ஏமாறாமல் இருப்பது மற்றும் எப்படித் தொழில் நடத்துவது. போன்ற வாழ்க்கை அனுபவங்களை கற்றுத்தரும் என்பதால் இளைய பருவத்தினரைப் பொருத்தவரை இந்த வருடம் அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வருடமாக இருக்கும்.

    தொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும். புதிய வீடு வாங்குவது அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும். நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.

    அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் போன்ற முறைகேடான வருமானங்கள் இப்போது வருவது கடினம். எனவே மேல் வரும்படி இல்லாததால் செலவுகளை சமாளிக்க திண்டாடுவீர்கள்.பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். அதனால் நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்துக் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

    சில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும்  என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.

    ஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.

    வெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும்.  மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு  உடனடியாக அந்த வேலை கிடைக்கும்.

    எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும்  ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

    எதிர்மறையான பலன்களைக் கொடுத்தாலும் நல்ல மாற்றங்களை இந்த புது வருடம் கொடுக்கும் என்பதால் கவலைப் பட தேவையில்லாத வருடம் இது.


    கும்ப ராசி : 2018 – விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (அவிட்டம் 3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி, 1, 2, 3ம் பாதங்கள் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸீ, ஸோ, த ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    விளம்பி எனப்படும் புதிய தமிழ்ப் புத்தாண்டு கும்பத்தினருக்கு நல்லவைகளையும், பொருளாதார வளர்ச்சியினையும் தருகின்ற வருடமாக இருக்கும்.

    கும்பராசியைச் சேர்ந்த பெரியவர்களுக்கு இதுவரை பிள்ளைகள் வழியில் இருந்து வந்த மனக் கஷ்டங்களும், பிள்ளைகளுக்கு கல்யாணம் போன்ற சுப காரியங்களை நடத்தி பார்க்க முடியாமல் இருந்து வந்த மன வேதனைகளும் அடியோடு விலகி குழந்தைகள் மூலம் சந்தோஷமான விஷயங்கள் இந்த வருடத்தில் இருக்கும்.  கிரக நிலைகள் நல்ல விதமாக அமைவதால் வருடம் முழுவதும் நீங்கள் நிச்சயம் சந்தோஷங்களை அனுபவிப்பீர்கள்.

    இளைய பருவத்தினருக்கு இதுவரை வேலை விஷயங்களில் இருந்து வந்த இடையூறுகள் இப்போது நீங்கும். இதுவரை மனதை போட்டு அழுத்திக் கொண்டிருந்த சில விஷயங்கள் தெளிவாக ஆரம்பிக்கும். எந்த பாதையில் செல்வது என தீர்மானிக்க முடியாமல் இருந்தவர்கள் இப்போது தெளிவாகி பாதையை தேர்ந்தெடுப்பீர்கள்.

    உயிர் நண்பன் என்று சொல்லிக் கொண்டவர்களையும், உறவினர்களையும் ஏற்கனவே நடந்த சம்பவங்கள் புரிய வைத்துவிட்டபடியால் இனிமேல் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாகவே வைப்பீர்கள் என்பதால் இனிமேல் கும்பத்திற்கு கலக்கங்கள்  இல்லை. நடுத்தரவயதில் உள்ளவர்களுக்கு இனிமேல் வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் சிக்கல்கள் எதுவும் இருக்காது. இதுவரை இருந்து வந்த கஷ்டங்களும், நஷ்டங்களும் இனிமேல் தொடராது.

    வருட பிற்பகுதியில் இருந்து உங்களுக்கு நல்ல வருமானங்களும், ரொம்ப நாட்கள் மனதில் நினைத்திருந்த லட்சியங்கள் நிறைவேறுதலும்,  வீடு வாங்குதல் போன்ற சுபநிகழ்ச்சிகளும்  நடைபெறும். வீடுமாற்றம் அல்லது தொழில் இடமாற்றம் போன்றவைகள்  நடக்கும் என்பதால் பொறுமை தேவை.

    கடன் பிரச்னைகளிலும் வழக்கு விவகாரங்களிலும் சிக்கித் தவித்து தூக்கத்தை இழந்திருந்தவர்களுக்கு அவைகள் நல்லபடியாக ஒரு முடிவுக்கு வந்து நிம்மதியைத் தரும். வீடு கட்டுவது இடையிலேயே தடைப்பட்டவர்கள், வீட்டுக் கடன் கிடைக்காமல் இருந்தவர்கள் இனிமேல் அந்த குறை நீங்கப் பெறுவார்கள்.

    செலவுகளை சுருக்க வேண்டியது அவசியம். வீண் செலவுகள் செய்யாதீர்கள். எவருக்கும் உதவி செய்வதாக வாக்கு கொடுத்தால் அதை நிறைவேற்றுவது கடினமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் கலந்து கொள்ள வேண்டாம். அவைகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது கடினம். தேவை இல்லாமல் யாரையும் பகைத்து கொள்ள வேண்டாம். கூடுமானவரை எல்லோரையும் அனுசரித்து போவது நல்லது. என்னதான் பிரச்னைகள் இருந்தாலும் பணவரவிற்கு கண்டிப்பாக குறைவு இருக்காது. எனவே எதையும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள்.

    குடும்பத்தில் சந்தோஷமும் மங்கள நிகழ்ச்சிகளும் இருக்கும். தனலாபமும் இந்த வருடம் உண்டாகும். கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள். அம்மா வழி உறவினர்களுடன் நல்ல சுமுகமான உறவு இருக்கும். அவர்களால் ஆதாயம் வரும். பூர்வீக தாயார்வழி சொத்துகள் தற்போது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

    இருக்கும் பழைய வாகனத்தை மாற்றி புதியதாக வாங்குவீர்கள். வாகனம் இல்லாதவர்களுக்கு வாகனயோகம் இப்போது உண்டு. மாணவர்களுக்கு படிப்பு நன்கு வரும். உயர்கல்வி கற்பதற்கு இருந்து வந்த தடைகள் நீங்கி மேல்படிப்பு படிக்க முடியும்.

    மகன், மகளுக்கு திருமணம் நடக்கும். வளைகாப்பு, பூப்புனித நீராட்டு விழா போன்ற பெண்கள் சம்பந்தப்பட்ட மங்கள நிகழ்ச்சிகளால் நீங்கள் சகோதரிகளுக்கோ, மகள்களுக்கோ, பேத்திகளுக்கோ கடன் வாங்கி சுபச்செலவு செய்ய வேண்டி இருக்கும். ஏற்கனவே திருமணமாகி முதல் வாழ்க்கை கோணலாகி வாழ்க்கையை இழந்தவர்களுக்கு இரண்டாவது திருமணம் தற்போது நல்லபடியாக நடந்து அந்த வாழ்க்கை குறையின்றி நீடித்தும் இருக்கும்.

    சகோதர சகோதரிகளின் விஷயங்களில் நல்ல சம்பவங்களும் ஒருவருக்கொருவர் ஆதரவான நிகழ்வுகளும் இருக்கும். மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். வீட்டில் ஆபரணச் சேர்க்கையும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குதலும் நடக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நீண்ட நாட்களாக போக முடியாமல் இருந்த குலதெய்வக் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும்.

    புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். புதிய அறிமுகங்கள் கிடைக்கும். ஒரு சிலர் தங்கள் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை சந்திப்பார்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் உங்களிடமிருந்து விலகி இருந்தவர்கள் உங்களைப் புரிந்து கொண்டு தற்போது பக்கத்தில் வருவார்கள்.

    இனிமேல் வாழ்க்கை முன்னேற்றப் பாதையில் செல்லத் துவங்கும். இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத பல விஷயங்கள் இனிமேல் தெய்வத்தின் அருளால் முயற்சி இல்லாமலேயே வெற்றி பெறும். பண வரவுகள் சரளமாகி குடும்பத்தில் பணப் பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நிம்மதி இருக்கும்.

    இதுவரை உங்களுக்கு இருந்து வந்த தேவையற்ற பய உணர்வுகளும் கலக்கமான மனநிலையும் சிறிய விஷயங்களைக் கூட பெரிதாக்கி பார்த்து பயந்து கொண்டிருந்த சூழ்நிலையும் இனிமேல் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறந்து புதுமனிதராக மாறப் போகிறீர்கள். இதுவரை விடை தெரியாமல் தத்தளித்து கொண்டிருந்த விஷயங்களுக்கான பதில்களும் தீர்வுகளும் உங்கள் மனத்தில் நல்லவிதமாகத் தோன்றி உங்களின் அனைத்துப் பிரச்னைகளும் உங்களுக்கு சாதகமாக முடிய போகிறது.

    மந்தமாக இருந்த வந்த கூட்டுத் தொழில் இனி சிறப்பாக நடைபெறும். பங்குதாரர்கள் உதவியாக இருப்பார்கள். சரியான வருமானம் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு இனிமேல் நிலையான ஒரு தொழில் அமைப்பு உருவாகி மாதாமாதம் நிரந்தர வருமானம் வரும். தொழில் அதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உற்பத்தியை மேலும் பெருக்கித் தருவார்கள்.

    உங்களில் சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் அமையும். அதிகாரம் செய்யும் துறைகளில் இருப்போருக்கு மிகவும் நல்ல பலன்கள் உண்டு. யூனிபாரம் அணிந்து வேலை செய்யும் துறைகளில் இருப்போருக்கு கடும் வேலை நெருக்கடியிலும் சில நல்ல பலன்கள் நடக்கும்.  வாழ்க்கைத்துணை மூலம் இந்த வருடம் உங்களுக்கு மிகச்சிறப்பாக அமையும். கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து பேசி எதிர்கால வாழ்க்கையை திருப்திகரமாக அமைத்துக் கொள்வீர்கள். நல்ல திட்டங்களைத் தீட்டி அதை செயல் படுத்தவும் செய்வீர்கள்.

    குறிப்பிட்ட சிலருக்கு கோவில் திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். சிதிலமடைந்து ஊருக்கு வெளியே கவனிப்பாரின்றி கிடக்கும் சிவன் கோவிலை புனருத்தானம் செய்யும் பாக்கியமும் அதன் மூலம் புண்ணியமும் கிடைக்கும். சிவன் அருள் கிடைக்க பெறுவீர்கள்.

    விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத்துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற கும்ப ராசிக்காரர்கள் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்காலத்தை வளப்படுத்திக் கொள்ள முடியும்.

    கும்பத்தினர் மனமார வரவேற்கும் ஆண்டாக விளம்பி இருக்கும்.


    மீன ராசி : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்

    (பூரட்டாதி 4ம் பாதம் உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் மற்றும் தி, து, ஸ, ச, த, தே, தோ, ச, சி ஆகிய எழுத்துக்களை பெயரின் முதல் எழுத்தாக கொண்டவர்களுக்கும்.)

    சென்ற ஆண்டு மீன ராசிக்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு கை கொடுக்காத ஆண்டாக இருந்தது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே பின்னடைவுகள் ஏதுமின்றி குறைகளை அனுபவிக்காதவர்களாக இருந்தீர்கள். பெரும்பான்மையான மீன ராசிக்காரர்களுக்கு அனைத்து விஷயங்களும் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடந்தன.

    சென்ற சிலமாதங்களாக எட்டாமிடத்தில் இருந்த குருவாலும், ஐந்தில் இருக்கும் ராகுபகவானாலும் பெரும்பாலான மீனத்தினருக்கு சரியான வருமானம் இன்மை, குடும்பத்தில் சண்டை, வாழ்க்கைத்துணையிடம் கருத்து வேறுபாடு, நண்பர்களுக்குள் தேவையற்ற மனஸ்தாபம், கூட்டுத்தொழிலில் சங்கடங்கள், பங்குதாரர்களிடம் குழப்பம் போன்ற பலன்கள் நடந்து வந்தன.

    அந்த நிலைமை தற்போது பிறக்க இருக்கும் தமிழ்ப் புதுவருடமான விளம்பி ஆண்டில் நீங்கி இந்த வருடம் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தும் நடக்கும் சுறுசுறுப்பான வருடமாக இருக்கும். எல்லாத் துறையினருக்கும் லட்சியங்கள் நிறைவேறும் காலகட்டம் இது என்பதால் உங்களுடைய நீண்டகால திட்டங்களை இப்போது தடங்கலின்றி நிறைவேற்றிக் கொள்ளலாம்.

    இதுவரை பணவிஷயத்தில் புரட்ட முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பணவரவில் நல்ல மேம்பாடான நிலையைக் காண்பீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் மனதில் உருப்போட்டு வந்திருந்த எண்ணங்கள் திட்டங்கள் கனவுகள் ஆகியவை நீங்கள் நினைத்தபடியே நடக்கப்போகும் காலம் இது. எனவே இனிமேல் உங்களின் உடல்நிலையும் மனநிலையும் மிகவும் தெளிவாகவும் உற்சாகத்துடன் இருக்கும்.

    இதுவரை நல்ல வேலை கிடைக்காமல் திண்டாடிக் கொண்டிருந்தவர்களுக்கு பொருத்தமான சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்ய முடியாமல் திணறிக் கொண்டிருந்தவர்களுக்கு முதலீடு செய்வதற்கு பணம் கிடைத்து நினைத்தபடி தொழிலை விரிவாக்கம் செய்ய முடியும்.

    அலுவலகத்தில் இதுவரை புரமோஷன் கிடைக்காதவர்கள் இரட்டிப்பு பதவிஉயர்வு கிடைக்கப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த சம்பளஉயர்வு உடனடியாகக் கிடைக்கும். இதுவரை உங்களை முறைத்துக் கொண்டிருந்த மேலதிகாரி மாறுதலாகி உங்களுக்கு சாதகமான, உங்களைப் புரிந்து கொள்ளும் நபர் உங்களுக்கு அதிகாரியாக வருவார்.

    சுயதொழில் புரிபவர்களுக்கு இதுவரை இருந்து வந்த தேக்க நிலைகள் மாறி தொழில் சூடு பிடிக்கும். வருமானம் நன்கு வரும். வியாபாரிகள் அனைத்திலும் வெற்றி காண்பார்கள். உங்களின்  எதிரிகள் ஓட்டம் பிடிப்பார்கள். புதிய ஏஜென்சி எடுக்கலாம். நல்ல கம்பெனியின் டீலர்ஷிப் கிடைக்கும்.

    விவசாயிகள், கலைஞர்கள், பொதுவாழ்வில் இருப்பவர்கள், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர், தொழிலாளர்கள், அன்றாடம் சம்பளம் வாங்குபவர்கள் போன்ற எந்த துறையினர்களாக இருந்தாலும் இந்த நல்லநேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு நினைத்ததை சாதிக்கலாம். மத்திய மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகள் மற்றும் வங்கி சம்பந்த பட்ட தேர்வுகள் எழுதுவோருக்கு இம்முறை வெற்றி கிடைக்கும். ஏற்கனவே எழுதி முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.

    பொதுவாக மீன ராசிக்காரர்கள் நல்லவர்களாக, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு நல்ல உழைப்பாளர்களாக இருப்பீர்கள். பள்ளிப்படிப்பை விட அனுபவத்தை வைத்தே வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சுலபத்தில் உங்களை ஏமாற்ற முடியாது. யாராவது உங்களை அன்பு காட்டி ஏமாற்றினால்தான் உண்டு.

    கணவன் மனைவி உறவில் இதுவரை இருந்து வந்த கருத்துவேற்றுமைகள் நீங்கும். மூன்றாவது மனிதரால் குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் அடையாளம் காணப்பட்டு நீங்களே பிறர் உதவியின்றி குழப்பங்களைத் தீர்த்துக் கொள்வீர்கள்.

    கூட்டுக்குடும்பத்தில் ஒருவருக்கொருவர் துணையாக இருப்பீர்கள். வயதில் பெரியவர்கள் மூத்தவர்கள் மூலம் லாபம் உண்டு. குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாமல் இருந்த இளைய பருவத்தினர்களுக்கு மளமள வென்று வரன்கள் நிச்சயிக்கப்பட்டு திருமண மண்டபம் புக்கிங் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று நடந்து திருமணம் கூடி வரும்.

    குழந்தை இல்லாத தம்பதியினருக்கு உடனடியாக குழந்தை பிறக்கும். குடும்பத்தில் சொத்துச் சேர்க்கை இருக்கும். நகை வாங்க முடியும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் விலகி உங்கள் பங்கு கைக்கு கிடைக்கும். எந்த ஒரு விஷயத்திலும் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். நிலமோ, வீட்டுமனையோ வாங்க முடியும்.

    பொதுமக்களோடு தொடர்புள்ள பணிகள் செய்யும் துறைகள், அரசியல்வாதிகள் போன்றோருக்கு கௌரவமான பதவிகள் மற்றும் அதிகாரம் செய்யக் கூடிய பதவி தேடி வரும். அரசு மற்றும் தனியார்துறை ஊழியருக்கு சம்பளம் தவிர்த்த ‘மேல்வருமானம்’ இருக்கும்.

    பங்குதாரர்கள் இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு விலகும். கூட்டுத்தொழில் லாபம் தரும். புதிதாக ஆடம்பர வாகனம் வாங்குவீர்கள். அரசாங்க வழியில் நன்மைகள் நடக்கும். மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும். உங்களுடைய மாற்றங்களை அடுத்தவர்கள் உணரும்படி நடந்து கொள்வீர்கள்.

    நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலம் பொருளாதார உதவிகள் ஆதரவானபோக்கு மற்றும் அனுசரணையான பேச்சு இருக்கும். இதுவரை கோர்ட்கேஸ் போன்ற வழக்குகளில் சிக்கி அவதிப்பட்டவர்களுக்கு நல்ல திருப்புமுனையான நிகழ்ச்சிகள் நடந்து உங்கள் பக்கம் அனைத்தும் சாதகமாகும்.

    இதுவரை உடல்நலமில்லாமல் இருந்தவர்கள் ஆரோக்கியம் திரும்பக் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்தொல்லைகள் எல்லை மீறாது. கடன்கள் கட்டுக்குள் இருக்கும். கடன்களை அடைக்க வழி பிறக்கும். சிலர் புதிய கடன்களை வாங்கி பழைய கடன்களை அடைப்பீர்கள்.

    உங்களைப் பிடிக்காதவர்களின் கை வலுவிழக்கும். எதிரிகளின் சூழ்ச்சிகள் உங்களை ஒன்றும் செய்யாது. எதிர்ப்புகளைக் கண்டு நீங்கள் தயங்கிக்  கொண்டிருந்த நிலை மாறி எதிரிகள் உங்களைப் பார்த்து ஒளிகின்ற நிலை ஏற்படும்.

    இதுவரை தவிர்க்கவியலாமல் செய்து கொண்டிருந்த வீண் செலவுகள் நிற்கும். ஏதாவது ஒரு வகையில் சிறுதொகையாவது சேமிக்க முடியும். வெளிநாட்டு விஷயங்கள் நல்லபடியாக கை கொடுக்கும். வெளிநாட்டு வேலைக்கு காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இப்போது விசா கிடைக்கும்.

    வருடம் முழுவதுமே நல்ல பலன்கள் நடக்கும். பணவரவு திருப்தியாக இருக்கும். நீண்ட நாள் கனவு ஒன்று இந்த வருடம் நனவாகும். பிரிந்திருந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவீர்கள். வேற்று மதத்தினர் உங்களுக்கு உதவுவார்கள். கணிதம் சாப்ட்வேர் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இம்முறை ஏதேனும் பரிசு அல்லது விருது கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

    பொதுவில்  மீன ராசிக்கு நன்மைகள் மட்டுமே உள்ள ஆண்டு இது.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
மங்கையர் பகுதி
எம்மவர் நிகழ்வுகள்
உலக செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink