கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் ராகு,
 • கோடிகளைக் கொட்டிக் குவிக்கும் ராகு,

  நிழல் கிரகங்களான ராகு, கேதுக்களைப் பற்றிய இந்த தொடரை ஆரம்பத்திலிருந்து படித்து வரும் வாசகர்கள் ஒரு விஷயத்தை கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

  இதைக் குறிப்பாக கண்டுணர்ந்து கேட்ட சேலம் ஓய்வு பெற்ற இன்ஜினியரிங் கல்லூரிப் பேராசிரியரையும், உடுமலைப்பேட்டை மற்றும் தூத்துக்குடி வாசகர்களையும் நான் பாராட்டுகிறேன்.

  அதாவது பெரும்பாலான நமது கிரந்தங்கள் ராகுவிற்கு 3, 6, 11 மிடங்கள் நல்ல இடங்கள், இந்த ஸ்தானங்களில் இருக்கும் ராகு நன்மைகளைச் செய்வார் என்று சொல்லும் நிலையில் இந்த தொடரில் நான் 3, 11 மிடங்களில் மட்டுமே ராகு நன்மைகளைச் செய்வார் என்றே சொல்லி வந்திருக்கிறேன்.

  அது ஏனெனில் நமது மூலநூல்கள் யாவும் பெரும்பாலான நுணுக்கங்களை பொதுவாகவும், குறிப்பால் உணர்த்தியும் சொல்லும் தன்மை கொண்டவை.

  இதைப் பற்றி நான் ஏற்கனவே “பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்” கட்டுரையில் “நமது ஞானிகள் ஒன்றும் கணக்கு வாத்தியார்கள் அல்ல……. உங்களின் காதுகளைப் பிடித்துத் திருகி ஜோதிட ரகசியங்களைக் கற்றுத் தருவதற்கு” என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

  ஜோதிடக்கலை என்பது அனுபவத்தில் படிப்படியாக உணர்ந்து முன்னேற வேண்டிய ஒரு கலை. நெஞ்சில் குத்தி குத்தி மனப்பாடம் செய்யும் பள்ளிக்கூட கலை அல்ல. இங்கு அடிப்படை விஷயங்கள்தான் தெளிவாக்கப்படும். அதன் மேல் நீங்கள்தான் உங்களின் அனுபவத்தைக் கொண்டு கட்டிடம் எழுப்பிக் கொள்ள வேண்டும். அதுதான் நீடித்தும் இருக்கும்.

  எப்படி எல்கேஜி மாணவனுக்கு எம்ஏ பாடத்தை நடத்த முடியாதோ அது போல ஆரம்ப நிலையில் உள்ளவருக்கு சூட்சுமங்களைச் சொன்னாலும் புரியாது என்பதால் பல விஷயங்கள் இங்கே நீங்கள் படிப்படியாக ஒவ்வொரு நிலையாகக் கடக்கும் போது மட்டுமே புரியும்படியாக ஞானிகளால் சொல்லப்பட்டன. அதன்படியே அமைக்கப்பட்டன.

  அதன்படி மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய இடங்கள் ஜாதகத்திற்கு எந்த பாவமாக இருந்தாலும் அதில் இருக்கும் ராகு கெடுதல்களைச் செய்ய மாட்டார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்களேயானால்,

  இந்த ஐந்து இடங்களைத் தவிர மற்ற இடங்கள் ஜாதகருக்கு ஆறாம் இடமானால் அதில் இருக்கும் ராகு ஜாதகருக்கு கெடுதல்களைச் செய்வார் என்பதையும் உங்களால் புரிந்து கொண்டிருக்க முடியும்.

  உத்தரகாலாம்ருதத்தில் 3, 6, 11 மிடங்களை ராகுவிற்கு நன்மை தரும் இடங்களாகக் கூறும் மகாபுருஷர் காளிதாசரே இன்னொரு சுலோகத்தில் 6, 8, 12ல் இருக்கும் ராகு கேதுக்கள் ஜாதகனுக்கு முதலில் நன்மையைச் செய்து பிறகு அவனுக்கு மாரகம் அல்லது மரணத்திற்கு நிகரான துன்பத்தை தருவார்கள் என்று சொல்லுகிறார்.

  ஆறாமிடம் என்பது வழக்கு, வம்பு, விபத்து, நோய், கடன், எதிரி இவைகளுக்கான ஸ்தானம் என்பதால்தான், இருக்கும் வீட்டை கெடுக்கும் இயல்புடைய பாவக்கிரகமான ராகு அங்கே அமரும் போது மேற்படி ஆறாம் பாவத்தின் கெட்ட ஆதிபத்தியங்களை கெடுத்து நல்லபலன்களைத் தருவார் என்பதன் அடிப்படையில் ராகுவிற்கு ஆறாம்பாவம் நன்மைகளைத் தரக்கூடிய இடம் என்று சொல்லப்பட்டது.

  ஆனால் ஒரு சுபகிரகம் தான் இருக்கும் பாவத்தை வலுவாக்கும் என்பதன் அடிப்படையில் சில நிலைகளில் ராகு சுபர்களின் பார்வை தொடர்பு இவைகளைப் பெற்று முழு சுபத்தன்மை அடையும் நிலையில் ஆறாம் பாவத்தில் அமர்ந்தால் அந்த பாவத்தை வலிமை பெறச் செய்து வம்பு வழக்கு விபத்து கடன் நோய் போன்ற கெடுபலன்களைச் செய்வார்.

  மிதுனம் துலாம் தனுசு மீனம் போன்ற சுபராசிகள் ஆறாம் இடமாகி, இந்த பாவங்களின் அதிபதிகளான குரு சுக்கிரன் புதன் ஆகியோர் உச்சம் போன்ற வலிமை பெற்று அந்த பாவம் வலுப்பெற்ற நிலையில் அங்கே ராகு அமர்ந்து சுபர்களின் தொடர்பையும் பெற்றிருந்தால் ராகுதசை நல்ல பலன்களைச் செய்வது கடினம்.

  பெரும்பாலும் ஆறாமிடத்தில் இருக்கும் ராகு தனது தசை புக்திகளில் தன்னுடன் இணைந்திருப்பவரின் நெருக்கத்தையும் இணைந்திருக்கும் தூரத்தையும் பொறுத்து உடன் இருப்பவரின் காரகத்துவத்தையும் அழிப்பார்.

  உதாரணமாக மிதுனம் ஆறாமிடமாகி புதன் சுபத்துவம் பெற்று ராகு சுக்கிரனுடன் இணையும் நிலையில் ராகுதசை புக்திகளில் வாழ்க்கைத் துணையைப் பாதிப்பார். இதே போன்ற நிலையில் ஆறாமிடம் சுபரின் வீடாகி வலுப் பெற்ற நிலையில் செவ்வாயுடன் இருந்தால் சகோதரனையும், சனியுடன் இருந்தால் ஜாதகரின் ஆயுளையும் பாதிப்பார்.

  அதேநேரத்தில் இன்னொரு நிலையாக இத்தகைய சுபர் வீடுகளில் தனித்து இருக்கும் ராகுவும் தான் இருக்கும் வீட்டின் அதிபதியான அந்த சுபக்கிரகம் வலிமை பெறும் நிலையில் ஆறாம் வீட்டின் கெடுபலன்களைத்தான் செய்வார். நல்ல பலன்களை எதிர்பார்க்க முடியாது.

  சொல்வது புரியவில்லையா?… திரும்பத் திரும்ப படியுங்கள். புரியும்.

  ராகு என்பவர் ஏமாற்றும் தன்மை கொண்ட, எந்த வழியிலாவது ஏராளமான வருமானத்தை தரும் ஒரு இயற்கை பாவக்கிரகம். அவர் கெட்ட நிலைகளில் இருந்தால்தான் நல்ல பலன்கள் இருக்கும். முற்றிலும் சுபத்தன்மை அடைந்தால் தன் இயல்புக்கு மாறான தன்மைகளை அளிக்க முடியாமல் ராஜபக்சே முன் பிரபாகரன் இப்போது தோன்றினால் எப்படி குழம்பிப் போவாரோ அதுபோல குழம்பி அந்த பாவத்தின் தன்மைகளை மட்டும் செய்ய ஆரம்பித்து விடுவார்.

  அதேபோல தன் காரகத்துவங்களான முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தல், சுலபமான முறைகளில் வருமானம் பெறுதல், சாதுர்யமாக ஏமாற்றுதல் உள்ளிட்டவைகளை அவர் முழுமையாக எவர் தயவும் இன்றி, யாருடைய தலையீடும் இல்லாமல் தர வேண்டுமெனில் அவர் மேஷம் ரிஷபம் கடகம் கன்னி மகரம் ஆகிய வீடுகளில் மட்டுமே இருக்க வேண்டும்.

  மேற்படி பாவங்களில் தனித்தோ அல்லது வேறு எவருடன் சேர்ந்தோ இருக்கும் ராகு மட்டுமே சுயமாக எவருடைய கட்டுப்பாடும் இன்றி தன் விருப்பப்படி இயங்க கூடிய அதிகாரம் படைத்தவர்.

  அதே நேரத்தில் 3, 11 மிடங்களில் இருக்கும் ராகு கேதுக்கள் அத்தனை சிறப்பாக சொல்லப்படுவதன் சூட்சுமத்தை இந்த தொடரின் ஆரம்பத்திலேயே நான் உங்களுக்கு விளக்கியது நினைவிருக்கும்.

  அதாவது மேற்படி இரண்டு பாவங்களில் ராகுவோ அல்லது கேதுவோ இருக்கும் நிலையில், அதன் இன்னொரு மறுமுனைக் கிரகம் அந்த லக்னத்தின் யோக திரிகோண பாவங்களான ஐந்து அல்லது ஒன்பதாமிடத்தில் இருந்து அந்த பாவத்தின் நன்மைகளை எடுத்துக் கொடுக்கும் என்பதால்தான் 3, 11 மிடங்கள் ராகு கேதுக்களுக்கு சிறப்பாகச் சொல்லப்படுகின்றன.

  இன்னும் சில சூட்சுமங்களை அடுத்த வெள்ளி பார்க்கலாம்.

  மேஷ மகர ராகுவின் சூட்சுமங்கள்

  ராகுதசை ஒருவருக்கு பூரண நல்லபலன்களைத் தர வேண்டுமெனில் அவருக்கு வீடு கொடுத்த கிரகம் உச்சமாக இருக்க வேண்டும் என்பது முக்கியமானது.

  ராகு மேன்மையான மறைமுக தனலாபங்களைக் கொடுக்கும் சிறப்பான இடங்களாகச் சொல்லப்படும் இந்த மூன்று பதினொன்றாமிடங்கள் ஒருவரின் ஜாதகப்படி மேஷம் மகரமாக அமைந்தால் அவற்றின் அதிபதிகளான செவ்வாய் சனி உச்சமடைந்தால்தான் ராகுதசை சிறப்புக்களைத் தரும்.

  அதேநேரத்தில் எந்த ஒரு ஜாதகத்திலும் சனி செவ்வாய் எனும் பாபக்கிரகங்கள் ஆட்சி உச்சம் எனும் நேர்வலு அடையக்கூடாது. அப்படி அடைந்தால் மறைந்தோ வேறுவகையிலோ பலவீனம் அடைய வேண்டும் என்பதை என்னுடைய பாபக்கிரகங்களின் சூட்சும வலுத்தியரி மூலம் ஏற்கனவே உங்களுக்கு நான் விளக்கியிருக்கிறேன்.

  அதன்படி மிதுன லக்னத்திற்கு பதினொன்றான மேஷத்தில் ராகு அமரும்போது ராகுதசை நன்மைகளை அளிக்க செவ்வாய் உச்சமானாலும் அவர் எட்டில் மறைந்துதான் உச்சமடைவார்.

  விருச்சிகத்திற்கு மூன்றான மகரத்தில் ராகு அமர்கையில் அதன் அதிபதியான சனி பனிரெண்டில் மறைந்துதான் உச்சமடைவார். கும்பத்திற்கு மூன்றான மேஷத்தில் ராகு அமர்ந்தால் அவருக்கு வீடு கொடுத்த செவ்வாயும் பனிரெண்டில் மறைந்துதான் உச்சமடைய முடியும்.

  அதைப்போலவே மீனத்திற்கு பதினொன்றான மகரத்தில் ராகு அமர்கையில் ராகுதசை நன்மைகளைச் செய்ய சனி உச்சமடைய வேண்டுமெனில் எட்டில் மறைந்துதான் உச்சமடைவார்.

  இந்த இடங்களைத் தவிர ராகுவிற்கு நல்ல பாவமாக கூறப்படும் ஆறாமிடத்தை எடுத்துக் கொண்டாலும் சிம்மத்திற்கு ஆறாமிடமாக மகரமும் விருச்சிகத்திற்கு ஆறாமிடமாக மேஷமும் அமையும். இந்த இரண்டு பாவங்களில் ராகு அமரும் நிலையில் கூட அதன் அதிபதிகளான சனி செவ்வாய் இருவரும் இன்னொரு மறைவு ஸ்தானமான மூன்றில்தான் உச்சமடைவார்கள்.

  இதுபோன்ற அமைப்பில் பாபக்கிரகங்களின் வீட்டில் ராகு அமரும் நிலையில்தான் ஒருவருக்கு மறைமுகமான வழியில் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவது போல கோடிகளைக் கொட்டித் தருவார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
மரண அறிவித்தல்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்