ராகு எப்போது உங்களுக்கு மரணத்தைத் தருவார்,
 • ராகு எப்போது உங்களுக்கு மரணத்தைத் தருவார்,

  சாயாக் கிரகங்களைப் பற்றிய மிக நுண்ணிய விஷயங்களை இந்தவாரமும் தொடர்ந்து பார்க்கலாம்…

  ராகுகேதுக்கள் உபயராசிகள் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளிலும் அந்த லக்னத்தின் கேந்திர கோணாதிபதிகளுடன் இணைந்திருந்தால் அவர்களது தசாகாலத்தில் ஜாதகனுக்கு அதிகாரத்தையும், அதன்மூலமான செல்வத்தையும் தருவார்கள் என்று மகாகவி காளிதாசர் தனது ஒப்பற்ற நூலான உத்தர காலாமிருதத்தில் கூறுகிறார்.

  இந்த அமைப்பின் மூலம் ஒருவருக்கு லக்னாதிபதியும் ராகுவிற்கு வீடு கொடுக்கும் குருவும், புதனும் வலுவாக இருக்கும் பட்சத்தில் ஒருவருக்கு அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும் என்ற உட்கருத்து இதில் மறைந்து இருக்கிறது.

  தனுசுராசியில் ராகு இருக்கும் நிலை “கோதண்ட ராகு” எனப்படுகிறது. அது ஏனெனில் பகவான் ஸ்ரீ ராமபிரானின் ஜாதகத்தில் தனுசில் ராகு இருந்ததால் அவரது வில்லின் பெயரான கோதண்டத்தை நினைவுறுத்தி வில்லினை அடையாளமாகக் கொண்ட தனுசில் இருக்கும் ராகுவிற்கு இப்பெயர் ஏற்பட்டது.

  இந்த அமைப்பில் இருக்கும் ராகுவிற்கு ஆறு, எட்டு, மற்றும் பனிரெண்டிற்குடையவர்களின் பார்வையோ, சேர்க்கையோ இருப்பின் நன்மைகள் குறையும் என்றும் மேற்கண்ட ராகுவின் தசையில் ஜாதகனின் தாயார் அல்லது தாயார் வழி நெருங்கிய உறவினருக்கு மரணம் சம்பவிக்கும் என்றும் காளிதாசர் அதே ஸ்லோகத்தில் குறிப்பிடுகிறார்.

  மேலும் ராகு-கேதுக்கள் ஆறு, எட்டு, பனிரெண்டாம் இடங்கள் எனப்படும் மறைவு ஸ்தானங்களில் அமர்ந்து மேற்கண்ட மறைவு ஸ்தானாதிபதிகளின் பார்வை அல்லது இணைவை பெற்றிருந்தால் தங்களது தசாகாலத்தில் துன்பங்களையே தருவார்கள் என்றும் காளிதாசர் குறிப்பிடுகிறார்.

  இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சூட்சுமம் என்றவெனில் ராகு-கேதுக்கள் ஆறு, எட்டு, பனிரெண்டில் மறைந்தாலும் அந்த மறைவு ஸ்தானாதிபதிகளின் தொடர்பு எனப்படும் பார்வை மற்றும் சேர்க்கையைப் பெறக்கூடாது என்பதுதான்.

  “கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்” எனும் ஜோதிடமொழிப்படி கெட்ட ஸ்தானங்களில் இருக்கும் ராகு-கேதுக்கள் கெடுபலனைத் தரவேண்டும் என்றால் அந்த ஸ்தானங்களின் அதிபதிகளான கெட்டவர்களுடன் சம்பந்தமும் பட வேண்டும் என்பதுதான் விதி.

  மேற்கண்ட கெடுபலன் தரும் ஸ்தானாதிபதிகளின் சம்பந்தம் இல்லாமல் அந்த பாவங்களில் அமரும் ராகு-கேதுக்கள் தனித்திருக்கும் நிலையில் கெடுபலன்களைச் செய்வது இல்லை.

  இன்னும் ஒரு பலனாக மேற்கண்ட ஆறு, எட்டு, பனிரெண்டாமிடங்களில் அமரும் ராகு-கேதுக்கள் அந்த மறைவு ஸ்தானாதிபதிகளுடனோ அல்லது அந்த ஜாதகத்தின் மாரகாதிபதிகளுடனோ சேரும் பட்சத்தில் தங்களது தசா புக்திகளில் மரணத்தையும் தருவார்கள் என்று காளிதாசர் குறிப்பிடுகிறார்.

  சர லக்னமான மேஷம் கடகம் துலாம் மகரத்திற்கு இரண்டு, ஏழுக்குடையவர்களும், ஸ்திர லக்னமான ரிஷபம் சிம்மம் விருச்சிகம் கும்பம் ஆகியவற்றுக்கு மூன்று, எட்டாம் அதிபதிகளும், உபய லக்னங்கள் எனப்படும் மிதுனம் கன்னி தனுசு மீனத்திற்கு ஏழு, பனிரெண்டாம் வீட்டிற்குடையவர்களும் மாரகாதிபதிகள் ஆவார்கள்.

  இதிலும் சற்று விளக்கமாக ராகு-கேதுக்கள் கேந்திர கோணாதிபதிகளோடு இணைந்து ஆறு, எட்டு, பனிரெண்டாமிடங்களில் இருக்கும் நிலையில் ஜாதகனுக்கு முதலில் கொஞ்சம் சந்தோஷத்தை அளித்து பின்னர் விபத்து, ஆயுதம், நோய், ஜலகண்டம், தற்கொலை மூலமாக மரணத்தை அளிப்பார்கள் என்றும் மகாபுருஷர் காளிதாசர் குறிப்பிடுகிறார்.

  மேற்கண்ட இந்த நிலையில் இருந்தாலே இது போன்ற கொடிய பலன்களையோ மரணத்தையோ ராகு கொடுத்து விடுவதில்லை. ஜோதிடத்தில் மரண நேரத்தைக் கணிப்பதற்கு அபாரமான அனுபவமும் கணிப்புத் திறனும் எல்லாவற்றையும் விட மேலாக பரம்பொருளின் கருணை எனப்படும் இறையின் அனுமதியும் தேவைப்படும்.

  ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் வாசகர்களின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கும் போது கோவில்பட்டியைச் சேர்ந்த ஒருவரின் கேள்விக்கு அவருக்கு மிதுன லக்னமாகி ஸ்ரீராமபிரானின் ஜாதகத்தில் இருப்பது போன்று குரு உச்சமாகி ராகு ஏழில் இருந்ததால் குருதசை ராகுபுக்தியில் மனைவி இவருடன் இருக்க முடியாது என்று கணிக்க முடிந்தது.

  ஆனால் மனைவியின் ஜாதகம் இல்லாததால் மனைவி இவரை விட்டுப் போயிருப்பாரா அல்லது இறந்திருப்பாரா என்று கணிக்க இயலாமல் மேற்கண்ட குருதசை ராகுபுக்தியில் இருந்து மனைவியைப் பிரிந்திருப்பீர்கள் அல்லது இழந்திருப்பீர்கள் என்று பதில் கொடுத்திருந்தேன்.

  பதில் வெளியாகி இரண்டு தினங்களில் நீங்கள் சொன்ன குருதசை ராகுபுக்தியில் பதினைந்து வருடங்களுக்கு முன்னால் என் மனைவி நோயால் மரணமடைந்தார் என்று பொட்டில் அடித்தாற்போல் அந்த வாசகரிடமிருந்து தபால் வந்தது.

  இதுபோலவே சமீபத்தில் மாலைமலர் கேள்விபதில் பகுதியில் படுத்த படுக்கையாக இருந்த எண்பது வயது கடந்த ஜோதிடம் அறிந்த ஒரு பெரியவர் “எனக்கு எட்டுக்குடைய குரு ஏழில் அமர்ந்து லக்னத்தில் ராகு அமர்ந்திருப்பதால் அஷ்டாமதிபதி குருவின் அந்தரத்தில் நான் மரணம் அடைவேன். இது சரியா?” எனக் கேட்டிருந்தார்.

  அதற்கு நான் தன்னைப் பார்க்கும் கிரகத்தின் பலனை ராகுவே எடுத்துச் செய்வார் என்பதன்படியும் உங்கள் ஜாதகத்தின் வேறு சில நிலைகளின் படியும் நீங்கள் குறிப்பிட்டதற்கு நான்கு மாதம் முன்பாக ராகு அந்தரத்திலேயே நல்முடிவு அடைவீர்கள் என்று பதில் கொடுத்திருந்தேன்.

  அவருக்கு சிம்மலக்னமாகி மாரகாதிபதியாகிய குருபகவான் ராகுவிடம் பார்வை எனும் தொடர்பைக் கொண்டிருந்ததால் காளிதாசரின் மேற்கண்ட விதியை இங்கே பயன்படுத்தியிருந்தேன்.

  இந்த கேள்விபதில் பகுதி வெளிவந்த பகுதியை தன்னுடைய டைரியில் வெட்டி ஒட்டிவைத்த அந்தப் பெரியவர் இந்த பதிலின்படி குருஜி சொன்ன நேரத்தில் எனது முடிவு இருக்குமாயின் நான் இறந்த பிறகு என் குடும்பத்தினர் சென்னை சென்று என்னுடைய நன்றியினையும் ஆசிகளையும் அவருக்கு நேரில் சொல்ல வேண்டும் என்று எழுதி வைத்திருக்கிறார்.

  எனது கணிப்பின்படியே ராகு அந்தரத்தில் அவர் இறந்த சிலமாதங்களுக்குப் பிறகு தற்செயலாக அந்த டைரியினைப் பார்த்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக வந்து என்னைச் சந்தித்தார்கள்.

  அதில் ஒருவர் “செவ்வாய் வியாழன் ஆகிவிட்டால் மதியநேரம் நெருங்க நெருங்க எனது தாத்தா எங்கே மாலைமலர்.. எங்கே மாலைமலர் என்று வீட்டைப் படுத்தி எடுத்து விடுவார். அவரது கடைசி நாட்களில் அவர் அதிகம் உச்சரித்த பெயர் ஆதித்யகுருஜி…. எனது தாத்தாவின் இறுதி நாட்களை சந்தோஷமாக்கிய தங்களுக்கு என் நன்றிகள்.” என்று சொன்னபோது பரம்பொருளின் கருணையை நினைத்து நெகிழ்ந்து நின்றேன்.

  ஒரு சம்பவம் அல்லது ஒரு நிகழ்வு என்பது ஒரு தனிக்கிரகத்தினால் ஆனதல்ல. அது கிரகங்களின் கூட்டுச் செயல் என்று நான் ஏற்கனவே எழுதியிருப்பதைப் போல ராகுபகவான் மேற்கண்ட அமைப்பில் இருந்தாலே மரணம்தான் என்று முடிவு கட்டிவிடக் கூடாது.

  ராகு தரும் இது போன்ற மரண நிலையைப் பற்றி மகாபுருஷர் காளிதாசர் குறிப்பிடுவது ஒரு பொதுவிதிதான். நமது வாழ்வின் இறுதிச்செயல் எனப்படும் மரணத்தைப் பற்றி கணிப்பதற்கு இந்த மகா சாஸ்திரத்தில் ஆயிரம் விதிகள் இருக்கின்றன.

  லக்னவலு, லக்னாதிபதி வலு, அஷ்டமாதிபதி வலு, அஷ்டம ஸ்தான வலு, ஆயுள் காரகன் சனியின் சுப சூட்சும வலுக்கள் என ஏராளமான சூட்சுமங்கள் மரணம் பற்றி ஜோதிடத்தில் பொதிந்துள்ளன. எனவே மரணத்தை ஒரு கிரகத்தின் நிலையாலோ அல்லது ராகு மாரகம் செய்யும் நிலையில் இருக்கிறார் என்பதாலோ கணித்து விடக் கூடாது. மரணமும் நிகழ்ந்து விடாது.

  மேலே காளிதாசர் சொல்வதும் மரணநிலை பற்றி அறிய ஜோதிடத்தில் உள்ள விதிகளில் ஒன்று. அவ்வளவுதான்.
  ராகு கேதுக்களின் உச்ச நீச நிலைகளில் காளிதாசரின் கருத்து என்ன?

  அனைத்து மூலநூல்களும் ராகுகேதுக்களின் உச்ச நீச நிலைகளில் மாறுபாடான கருத்துக்களைக் கொண்டிருப்பதைப் போலவே காளிதாசரும் இந்த அமைப்பில் முரண்படுகிறார்.

  ராகு-கேதுக்களுக்கு ஒரே நேரத்தில் உச்சமும், நீசமும் அமையும் எனவும் ராகு ரிஷபத்திலும், கேது விருச்சிகத்திலும் இருக்கின்ற நிலை இருவருக்குமே உச்ச நிலை என்றும் உச்சத்தில் இருக்கும்போது இவர்கள் அதிகபலம் பெறுகிறார்கள் என்றும் காளிதாசர் சொல்கிறார்.

  ஜோதிடத்தை நமக்கு அருளிய தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளுக்குகிடையே இவ்விஷயத்தில் நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக குருவிற்கும் சிஷ்யருக்கும் இடையில் கூட ராகு கேதுக்களின் உச்ச நீச ஆட்சி வீடுகளைப் பற்றி கருத்துபேதங்கள் உள்ளன. ஜோதிடம் பற்றிய ஆய்வு வலுவடையும் போது ராகு கேதுக்களின் உச்ச நீச வீடுகளைப் பற்றிய இந்த முரண்பாடுகள் களையப் பெற்று இவை ஒருமுகப் படுத்தப்படும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
இந்திய சட்டம்
மருத்துவம்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்