இலங்கைப் பணிப்பெண்களின் துயரம்,
 • இலங்கைப் பணிப்பெண்களின் துயரம்,

  இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக வேலைக்குச் செல்வது படிப்படியாக மிகுந்த ஆபத்துக்குரியதாக மாறி வருகின்றது.

  மத்திய கிழக்கு நாடுகளில் பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்த இலங்கைப் பெண்கள் பரிதாபத்துக்குரியவர்களாக நாடு திரும்பிய ஏராளமான செய்திகளை ஊடகங்களில் நாம் பார்த்து விட்டோம்.

  உடலுக்குள் ஆணிகளைச் செலுத்துதல், பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகளால் உடலில் சூடு வைத்தல், மின்னழுத்தியால் சுடுதல், கூரிய ஆயுதங்களால் உடல் காயங்களை உண்டாக்குதல், பாலியல் ரீதியான இம்சைகள்... இவ்வாறாக மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. இவற்றை ஆதாரங்களுடன் நாம் அறிந்திருக்கின்றோம்.

  இலங்கைப் பணிப்பெண்களில் கூடுதலானோர் சித்திரவதைகளை அனுபவித்த நாடு சவூதி அரேபியா. இலங்கைப் பணிப்பெண்கள் மாத்திரமன்றி உலகின் வேறுபல நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இவ்விதம் இம்சைகளை அனுபவித்திருக்கின்றனர்.

  பலர் சித்திரவதைகளால் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் குற்றுயிரும் குலைஉயிருமாக நாடு திரும்பியுள்ளனர். மேலும் பலர் அத்தனை கொடுமைகளையும் தாங்கியபடி அங்கேயே தொடர்ந்தும் தொழில் புரிந்து வருகின்றனர்.

  காரணம் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்காகச் செலவிட்ட பணத்தை எவ்வாறாவது உழைத்து மீள எடுத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணம். வறியவர்களான அப்பெண்கள் பலரிடமும் வட்டிக்குக் கடன் வாங்கியே, பெரும் கனவுகளைச் சுமந்த வண்ணம் மத்திய கிழக்குக்குப் புறப்பட்டிருந்தனர்.

  வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவதாயின் சித்திரவதைகளைத் தாங்கியபடி அங்கேயே தொடர்ந்தும் தொழில் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறுவழி கிடையாது.

  அதேசமயம், சித்திரவதைகள் தாளாத நிலையில் இலங்கைக்குத் திரும்புவதற்கு விரும்புகின்ற பணிப்பெண்களில் பலரும் இங்கு வருவதற்கு முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருப்பதாக தகவல்கள் வருகின்றன.

  அங்குள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலையிலும் அநேக பெண்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது.

  மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கைப் பணிப்பெண்கள் பலர் சித்திரவதைகளை மாத்திரம் அனுபவிக்கவில்லை. ஏற்கனவே உறுதியளித்தபடி சம்பளம் வழங்கப்படுவதில்லையென்ற முறைப்பாடுகளும் பரவலாகக் கூறப்படுகின்றன.

  திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவரும் இவ்வாறு சித்திரவதைகளுக்கு உள்ளாவதாக இப்போது தகவல் கிடைத்திருக்கின்றது.அப்பெண் மின்னழுத்தியால் சுடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளதற்கான வீடியோ ஆதாரங்களை அவரது மகன் வைத்திருக்கின்றார்.

  இது தொடர்பாக அப்பெண்ணின் மகன் நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார். தனது தாயாரை எவ்வாறாவது மீட்டுத் தர வேண்டுமென்பது அப்பெண்ணின் மகன் முன்வைக்கின்ற வேண்டுகோள்.

  அப்பெண்ணின் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் இரு தினங்களுக்கு முன்னர் அதுபற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன.அப்பெண் மத்திய கிழக்குக்கு தொழிலுக்காகச் சென்று இரு வருடங்களும் நான்கு மாதங்களும் கடந்துவிட்ட போதிலும், அவருக்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லையென்ற முறைப்பாட்டையும் இங்கு வாழும் அப்பெண்ணின் மகன் முன்வைத்துள்ளார்.

  இது விடயத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகமும், வெளிநாட்டு அமைச்சும் தலையிட்டு அப்பெண்ணை மீட்டெடுக்க அவசர முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். இல்லையேல் அப்பெண்ணுக்கு மேலும் ஆபத்தான நிலைமை ஏற்படக் கூடும்.

  இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாகத் தொழிலுக்குச் செல்வதென்பதில் எமது அரசாங்கத்துக்கு உடன்பாடு கிடையாது. ஏனெனில் பணிப்பெண்களாக எமது பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்வதனால் ஏற்படுகின்ற சமூகப் பாதிப்புகள் மிகவும் அதிகமாகவே உள்ளன.

  ஆனாலும் இப்பிரச்சினையானது வறிய குடும்பங்களின் தொழில்வாய்ப்புடன் தொடர்புடையதென்பதால் இவ்விடயத்தில் அரசினால் தலையிட முடியாதிருக்கின்றது. வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பின் மூலம் இலங்கைக்கு அந்நிய செலாவணி அதிகம் கிடைக்கின்றது.

  அதுமாத்திரமன்றி, இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்குக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை அதிகரித்துக் கொள்ளவும் அரசு விரும்பப் போவதில்லை.ஆனாலும் இவ்விடயத்தில் எமது சமூகம் சிந்திக்க வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன.

  எமது பணிப்பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சித்திரவதைகளை அனுபவிப்பது ஒருபுறம் இருக்கட்டும்...வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்குச் சென்ற பெண்களின் குடும்பங்களில் இடம்பெறுகின்ற சீரழிவுகளையும் கவனத்தில் எடுக்க வேண்டியிருக்கின்றது.

  அப்பெண்களின் குழந்தைகள் உரிய பராமரிப்புக் கிடைக்காததால் சீரழிந்து போவது, கணவன்மார் தீயவழிகளை நாடுவது என்றெல்லாம் சமூக சீரழிவுகளே அதிகம்!

  மத்திய கிழக்கில் பணிப்பெண் தொழில்வாய்ப்பு என்பது இலங்கையின் இன்றைய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது.

  இது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு சமூக ஆர்வலர்களுக்கு உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
மங்கையர் மருத்துவம்
எம்மவர் நிகழ்வுகள்
உலக சட்டம்
 மரண அறித்தல்