என் மகளை கொன்றவனை சும்மா விடக்கூடாது கல்லூரி மாணவியின் தாயார் கதறல்,
 • என் மகளை கொன்றவனை சும்மா விடக்கூடாது கல்லூரி மாணவியின் தாயார் கதறல்,

  என் மகளை கொன்றவனை சும்மா விடக் கூடாது’ என்று கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தாயார் அழுதபடியே தெரிவித்தார்.

  ‘என் மகளை கொன்றவனை சும்மா விடக் கூடாது’ என்று கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தாயார் அழுதபடியே தெரிவித்தார்.

  சென்னை கே.கே.நகரில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாலை கொண்டு வரப்பட்டது.

  அப்போது அஸ்வினியின் உடலை பார்த்து, அவருடைய தாயார் சங்கரி, சகோதரர் அபினேஷ், பெரியம்மா சரஸ்வதி உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். கல்லூரி மாணவியின் உடல் இன்று (சனிக்கிழமை) காலை பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கல்லூரி மாணவியின் தாயார் சங்கரி அழுது கொண்டே நிருபர்களிடம் கூறியதாவது:-

  என் கணவர் இறந்த போது என்னுடைய மகளுக்கு 5 வயது. அப்போதில் இருந்து வீட்டு வேலை செய்து என்னுடைய மகளை படிக்க வைத்தேன். என் மகள் ரொம்ப அழகாக இருப்பாள். நானும் என் மகளும் எங்கே வெளியில் சென்றாலும் என் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு நடப்பாள். அந்த அளவுக்கு என் மீது பாசமாக இருப்பாள்.

  அவள் கண்ணில் தண்ணீர் வந்தால், என் கண்ணில் ரத்தம் வருவது போல பொத்தி பொத்தி வளர்த்தேன். இப்போது என் மகள் என்னிடம் இல்லையே. என் மகளை கொன்றவனை சும்மா விடக்கூடாது. என் மகள் இல்லாமல் என்னால் வாழ முடியாது. நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம்?

  என்னுடைய சொந்த பந்தம் என்னை காரி துப்பப்போகிறார்கள். நான் நம்பி மோசம் போய்விட்டேன். இப்படி கொடூரமாக கொலை செய்த அவனும் ஒரு தாய் வயிற்றில் இருந்து தானே பிறந்தான்.

  அவனுக்கும் சகோதரிகள் இருக்கின்றனர். எப்படி அவனுக்கு இந்த மனம் வந்தது. நீதி எங்கே? நேர்மை எங்கே? நியாயம் எங்கே?. கடவுளே என் மகள் உயிரை திருப்பிக்கொடு.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி அஸ்வினியின் பெரியம்மா சரஸ்வதி நிருபர்களிடம் கூறியதாவது:-

  அழகேசன் மீது ஏற்கனவே மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் நாங்கள் புகார் கொடுத்தோம். போலீசார் அவனை கைது செய்யவில்லை. அவனை கைது செய்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது. எங்களுடைய மகள் உயிரோடு இருந்திருப்பாள்.

  அவளை கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்து கொள்வேன் என்று ஏற்கனவே மிரட்டி இருந்திருக்கிறான். இப்போது தான் அதை இவர்கள் சொல்கிறார்கள். 2 வருடத்துக்கு முன்பே இந்த காதல் விவகாரம் எங்களுக்கு தெரியவந்தது. அப்போதே என்னுடைய தங்கையிடம் அவளை என் வீட்டுக்கு அனுப்பி வை என்று சொன்னேன். அவள் கேட்கவில்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அஸ்வினி கொலை செய்யப்பட்ட தெருவில் வசிக்கும் பெண்கள் அஸ்வினிக்காக கண்ணீர் வடித்தார்கள். அந்த பெண்ணுக்கு இதுபோன்ற கொடுமை நேர்ந்திருக்க கூடாது. அந்த பெண்ணை கொலை செய்ய அந்த கொடூரனுக்கு எப்படிதான் மனம் வந்ததோ? என்று பெண்கள் ஆவேசமாக பேசினார்கள்.

  சியாமளா என்ற பெண் கூறும்போது, ‘அஸ்வினி கத்தியால் அறுக்கப்பட்டு, தெருவில் விழுந்த பிறகுதான், அவரது அலறல் சத்தம்கேட்டு நான் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்தேன்’. முதலில் நான் பார்த்திருந்தால், அஸ்வினியை கொலை செய்யவிடாமல், நான் காப்பாற்றி இருப்பேன். அஸ்வினியை கொன்ற பாதகனை நான் கொன்றிருப்பேன். அவனை சும்மா விடக் கூடாது. அவனுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அவனை தண்டிப்பதன் மூலம் காதல் பிரச்சினையில் இதுபோல் வாழவேண்டிய இளம்வயது பெண்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும். இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்’ என்றார்.

  அஸ்வினி கொல்லப்படுவதை சிலர் வீட்டிற்குள் இருந்தபடியே பயந்தவாறு பார்த்துள்ளனர். அழகேசன் கத்தியை சுழற்றியதால் அஸ்வினியோடு வந்த அவரது இரண்டு தோழிகள் ஓட்டம் பிடித்ததாக கூறப்படுகிறது. அஸ்வினியை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு தயார் நிலையில் இரண்டு கத்திகளோடு அழகேசன் வந்தார்.

  ஒருவேளை கத்தியால் குத்த முடியாவிட்டால், அஸ்வினியின் மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் அழகேசன் வந்துள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக சட்டம்
வீடியோ
உலக செய்தி
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்