அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் இலங்கை சுவிஸ் ஒப்பந்தமும்,
 • அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும் இலங்கை சுவிஸ் ஒப்பந்தமும்,

  சுவிட்சர்லாந்து அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துடன் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடுகடத்துவது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடப் பட்டது,

  சுவிற்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனேட்டா சொம்மாறுகாவுக்கும், சிறிலங்காவின் உள்விவகார அமைச்சர் எஸ்.பி.நாவின்னவுக்கும் இடையில் இந்த உடன்பாடு  கையெழுத்திடப்பட்டுள்ளது.

  சுவிட்சர்லாந்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்கின்றனர். 1980ஆம் ஆண்டுகளின் பின்னரே இலங்கையிலிருந்து தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் குடியேற ஆரம்பித்தனர்.

  இவர்கள் பின்வரும் அடிப்படையில் சுவிட்சர்லாந்தில் வாழ்கின்றனர்.

  1. சுவிட்சர்லாந்து குடியுரிமை பெற்றவர்கள்.
  2. சுவிட்சர்லாந்து நிரந்தர வதிவுரிமை பெற்றவர்கள் ( சீ அனுமதி என அழைக்கப்படுகிறது)
  3. சுவிட்சர்லாந்து தற்காலிக வதிவுரிமை பெற்றவர்கள் ( பி அனுமதி என அழைக்கப்படுகிறது.
  4. சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும் சுவிஸில் தங்கியிருந்து வேலை செய்வதற்கான அனுமதி ( எவ் அட்டை என அழைக்கப்படுகிறது.)
  5. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களும், அகதி தஞ்ச கோரிக்கை பற்றிய முடிவு கிடைக்காதவர்களும் ( N அடையாள  அட்டை இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.)

  சுவிட்சர்லாந்திற்கும் சிறிலங்காவுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அகதிகளை நாடு கடத்துவது என சொல்லவதை விட அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை நாடு கடத்து பற்றியதே ஆகும்.

  சுவிட்சர்லாந்தில் 50ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்ந்தாலும் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு வதிவிட உரிமை பெற்றவர்கள் 5ஆயிரத்திற்கு உட்பட்டவர்கள் தான். அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு B அடையாள அட்டை எனப்படும் தற்காலிக வதிவிட உரிமை வழங்கப்படும். 10 வருடங்களின் பின்னர் C அடையாள அட்டை எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும்.

  தற்போது செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தம் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்கள் மற்றும் தற்காலிக வதிவிட உரிமை பெற்றவர்களை எந்தவிதத்திலும் பாதிக்கப்போவதில்லை. அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் Fஅடையாள அட்டை வழங்கப்பட்ட நிலையில் சுவிட்சர்லாந்தில் தொழில் புரிந்து வருபவர்களையும் பாதிக்கப்போவதில்லை.

  5ஆவது வகையை சேர்ந்த அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களையும் அகதி தஞ்ச கோரிக்கைக்கு முடிவு கிடைக்காதவர்களையுமே இந்த ஒப்பந்தம் பாதிக்கும்  இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 600பேர் நாடுகடத்தப்பட உள்ளதாகவும் மிகுதியாக உள்ள 4ஆயிரம் பேர் அடுத்த ஆண்டு இறுதிக்குள் நாடு கடத்தப்படுவார்கள் என்றும் சுவிஸ் குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் சுமார் 5ஆயிரம் பேர் சுவிட்சர்லாந்தில் உள்ளனர் என்றும் சுமார் 1700பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

  நாடுகடத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது, நாடு திரும்பும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதம், மீண்டும் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான உதவி, மற்றும் துரிதமாக பிரயாண பத்திரம் அல்லது கடவுச்சீட்டை வழங்குதல் போன்ற விடயங்கள் இந்த உடன்பாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

  இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பித்திருந்தார். இலங்கையில் அமைதி திரும்பியிருப்பதாகவும் திருப்பி அனுப்படுபவர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


  அதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்திற்கு வருகை தந்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சுவிட்சர்லாந்தின் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாகவும் அகதிகளாக சுவிட்சர்லாந்தில் குடியேறியிருப்பவர்கள் இலங்கைக்கு திரும்பலாம் என்றும் தெரிவித்திருந்தார்.


  இதன் பின்னர் அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கை அகதிகளை நாடுகடத்தும் வேலையை சுவிட்சர்லாந்து ஆரம்பித்திருந்தது. கடந்த வருடத்தில் இதுவரை சுமார் 60பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

  இலங்கையில் அமைதி திரும்பிவிட்டதாக பிரசாரம் செய்யப்பட்டாலும் அதில் உண்மை இல்லை என்றும் இன்னமும் கைதுகளும் சித்திரவதைகளும் இடம்பெறுவதாக சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதி பட்ரிக் வொல்டர் தெரிவித்துள்ளார்.

  ஆனால் சர்வதேச மன்னிப்புச்சபையின் குற்றச்சாட்டை சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் நிராகரித்துள்ளார்.

  இலங்கைக்கு திரும்பி அனுப்படுபவர்கள் சித்திரவதைக்குட்படுத்தப்படுவார்கள் என்ற குற்றச்சாட்டையும் சுவிஸ் அமைச்சர் நிராகரித்துள்ளார்.

   

  அகதி தஞ்சம் கோரியவர்களின் விண்ணப்பங்கள் தனித்தனியாக பரிசீலிக்கப்படும். அவர்கள் மேன்முறையீடு செய்வதற்கும் கால அவகாசம் வழங்கப்படும், இவை அனைத்தும் முழுமையாக இடம்பெற்ற பின்னர் இலங்கைக்கு அவர்கள் திரும்பி அனுப்படும் போது அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதமும் பெற்ற பின்னரே அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  உண்மையாக உயிர் அச்சுறுத்தல் இருப்பவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் வழங்கப்படும், கடந்த மேமாதத்தில் கூட ஒருவருக்கு அகதி தஞ்சம் வழங்கப்பட்டிருந்ததாக அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

  இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னதாக சுவிட்சர்லாந்தில் அகதி தஞ்சம் கோரியிருக்கும் தமிழர்களின் சொந்த இடமான வடமாகாணத்திற்கும் விஜயம் செய்த சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் அமைச்சர் சிமோனேட்டா வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசினார்.


  இந்த சந்திப்பின் போது அகதிகளை நாடு கடத்துவது தற்போது ஆபத்தானது என்று சுவிஸ் அமைச்சரிடம் தான் கூறியதாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியிருந்தார்.

  இந்த உடன்படிக்கையில் நாடு கடத்தப்படுபவர்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரம், புனர்வாழ்வு, என்பன உத்தரவாதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் நாடு கடத்தப்படுபவர்கள் விமான நிலையத்திலோ அல்லது அதற்கு பின்னரோ விசாரணைக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதத்தை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியிருப்பதாக சுவிஸ் மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மூன்று நாள் விஜயத்தின் இறுதியில் சுவிட்சர்லாந்தின் நீதியமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை சந்திக்க இருந்தார். எனினும் இந்த சந்திப்பு இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டு சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராசபக்ச, மற்றும் இலங்கை ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் ஆகியோரை சுவிஸ் நீதி அமைச்சர் சந்தித்திருந்தார்.

  இந்த சந்திப்பில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சுவிஸ் நீதி அமைச்சர் வலியுறுத்தினார் என சுவிஸ் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த உடன்படிக்கை மிகவும் முக்கியமானது என்றும், குடிவரவுத் துறையில் தாங்கள் நடைமுறைப்படுத்தி வரும் நடைமுறைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்றும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் கொழும்பில் வைத்து சுவிஸ் ஊடகம் ஒன்றிற்கு சுவிற்ஸர்லாந்து நீதி அமைச்சர் தெரித்துள்ளார்.

  இந்த ஒப்பந்தம் 1951ஆம் ஆண்டு ஐ.நா. அகதிகள் சாசனத்தை மீறுவதாகவும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாத நிலையில் அங்கு வாழும் சிறுபான்மை இனமக்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் இல்லை என்றும் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதி பட்ரிக் வொல்டர் குற்றம் சாட்டியுள்ளார்.

  பொதுவாக ஐரோப்பிய நாடுகளில் அகதிகள் தொடர்பான அரசியல் அழுத்தங்கள் அதிகரித்து வருகிறது. வலதுசாரிகள் அகதிகள் நாட்டிற்குள் பெருமளவு உள்வாங்கப்படுவதை எதிர்த்து வருகின்றனர். சுவிட்சர்லாந்து சமஷ்டி அரசிலும் தற்போது வலதுசாரிகளின் கையே ஒங்கியிருக்கிறது. தற்போது நீதியமைச்சராக இருக்கும் சிமோனெட்டா அவர்களும் வலதுசாரி கட்சியை சேர்ந்தவராகும்.

  சுவிஸர்லாந்து சித்திரவதைக்கூடத்திற்குள் மக்களை தள்ளிவிடுவதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களை முழுமையாக நிராகரித்துள்ள சுவிஸ்ர்லாந்து நீதி அமைச்சர் சிமோனெட்டா சோம்மருகா, இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நாடு கடத்துவதற்கு முன்னர் நாடு கடத்தப்படவுள்ள ஒவ்வொருவரின் விண்ணப்பங்களும் தனித்தனியாக ஆராயப்பட்டே முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

  உண்மையில் இலங்கையில் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா யாரால் அந்த அச்சுறுத்தல் உள்ளது அகதி அந்தஸ்த்து வழங்கலாமா, அவர்களின் விண்ணப்பத்தை நிராகரிப்பது நியாயமானதா விரிவாக ஆராய்ந்த பின்னரே முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் இந்த முடிவுகளுக்கு அமைய அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் மீது இந்த புதிய உடன்படிக்கைக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும் என சுவிஸர்லாந்து நீதி தெளிவு படுத்தியுள்ளார்.

  எனினும் சுவிட்சர்லாந்தில் அகதிகளுக்கான கதவு மூடப்படுகிறது என கூறமுடியாது. இலங்கையில் உயிர்வாழ்வதற்கு உத்தரவாதம் இல்லை என்ற போதிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அவர்களுக்கு சுவிட்சர்லாந்தில் அவர்கள் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என சுவிஸ் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

  அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்கள் நாடு கடத்தப்படும் சமகாலத்தில் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வந்திருந்த ஒருவருக்கு கடந்த யூலை மாதம் அகதி தஞ்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

  யுத்தம் முடிந்த பின்னர் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்து உட்பட மேற்குலக நாடுகளுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பொருளாதார நோக்கத்தோடு வருகிறார்கள் என்பதை மேற்குலக நாடுகளின் அதிகாரிகள் உணர்ந்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு வருபவர்கள் முகவர்களுக்கு 30ஆயிரம் பிறாங்குகளை கொடுத்தே வருகிறார்கள் என சுவிஸ் குடிவரவு அதிகாரியை மேற்கோள் காட்டி சுவிஸில் உள்ள ஊடகம் ஒன்று தெரிவித்திருந்தது.

  அகதி தஞ்ச கோரிக்கையை முன்வைப்பவர்கள் பொய்யான தகவல்களையே வழங்கியிருக்கிறார்கள் என்பதை தாம் உறுதிப்படுத்திய பின்னரே அவர்களின் விண்ணப்பங்களை நிராகரிப்பதாகவும் அந்த குடிவரவு அதிகாரி தெரிவித்திருந்தார்.

  மைத்திரி அரசாங்கம் பதவி ஏற்றபின் புதிய அரசாங்கம் மேற்குலக நாடுகளில் செய்து வரும் பிரசாரங்களின் பலனாகவும் இலங்கை அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் விடயத்தில் கடும்போக்கை கடைப்பிடித்து வருகின்றன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
எம்மவர் நிகழ்வுகள்
இலங்கை சட்டம்
சரித்திரம்
மருத்துவம்
 மரண அறித்தல்