போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத்தொகை,
 • போக்குவரத்து துறை ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத்தொகை,

  பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும் முதல்வர் அறிவிப்பு,போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.750 கோடி நிலுவைத்தொகை பொங்கலுக்கு முன்பாக வழங்கப்படும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விதி எண்.110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்

  தமிழக சட்டசபையில்  விதி எண்.110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார் அதன் விவரம் வருமாறு:-

  மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

  மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும், முக்கியமானதாக விளங்குவது போக்குவரத்து வாகனங்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.  இதில், சாலைப் போக்குவரத்து முக்கியப் பங்கு வகிக்கிறது.

  மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள், போக்குவரத்துத் துறையின் மேம்பாட்டிற்காகவும், போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினரின் நலனை மேம்படுத்திடவும், எண்ணற்ற திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார்கள்.

  மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அதிகப்படியான நிதி வழங்கி வந்துள்ளது.

  கடந்த காலங்களில், அதிகரித்து வந்த செலவினத்தை ஈடு செய்வதற்கு ஏற்ப, நிரந்தர நிதி ஆதாரத்தை ஏற்படுத்தாததால், போக்குவரத்துக் கழகங்கள் பெரும் நஷ்டத்தில் இயங்கின.  இச்சூழ்நிலையில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆட்சியில், போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமையை சரி செய்யும் பொருட்டு, நிதி ஆதாரத்தை ஏற்படுத்துவதற்கான உத்திகளை கடைபிடித்ததோடு, அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2011 முதல் இந்நாள் வரை, டீசல் விலை ஏற்றத்திற்கான தொகை  2,848.36 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்கியுள்ளது.  மேலும், மாண்புமிகு அம்மாவின் அரசு பொது மக்களின் நலன் கருதி, போக்குவரத்துக் கட்டணத்தை குறைந்த அளவிலேயே பராமரித்து வருகிறது.

  மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் அரசு, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்திட, 5,138.57 கோடி ரூபாய் அளவிற்கு நிதி வழங்கியுள்ளது.  2017-18ஆம் ஆண்டில் மட்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க 1,397.39 கோடி ரூபாயும், தற்போது பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உள்ளிட்ட நிலுவைத் தொகைக்காக, 291.99 கோடி ரூபாயும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

  போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட மாண்புமிகு அம்மாவின் அரசு, போக்குவரத்துக் கழகங்களில் 30.11.2017 வரை பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக 750 கோடி ரூபாயினை மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு வழங்கும் என்பதை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.  மேலும், இந்த அறிவிப்பின் மூலம் வழங்கப்படும் 750 கோடி ரூபாய் தொகையானது, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அளிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இப்போது, அரசால் வழங்கப்படும் இத்தொகையுடன் சேர்த்து, போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களுக்காக மட்டும், இது வரை தமிழ்நாடு அரசு 2,147.39 கோடி ரூபாய் வழங்கியுள்ளது என்பதையும் இம்மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

  ஆகவே, போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகள் பலவற்றை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், பொது மக்களின் நலன் கருதி, தங்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட்டு, பணிக்குத் திரும்புமாறு இந்த அவையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
தங்க நகை
வீடியோ
ஆன்மிகம்
 மரண அறித்தல்