சட்டசபையில் சபாநாயகரை கண்டித்து தி.மு.க., டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு,
 • சட்டசபையில் சபாநாயகரை கண்டித்து தி.மு.க., டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு,

  சட்டசபையில் பேச அனுமதி மறுத்ததாக கூறி சபாநாயகர் ப.தனபாலை கண்டித்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் டி.டி.வி.தினகரனும் வெளிநடப்பு செய்தனர்.

  தமிழக சட்டசபையில் நேற்று நடந்த கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி) பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–

  உறுப்பினர் ஜெ.அன்பழகன்:– ஆளும் கட்சி வரிசையில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. (இவ்வாறு பேச்சை தொடங்கிய அவர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து ஒரு கருத்தை தெரிவித்தார். அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகரும் அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். தொடர்ந்து பேசிய ஜெ.அன்பழகன் கவர்னர் குறித்து மற்றொரு கருத்தை தெரிவித்தார்.)

  சபாநாயகர் ப.தனபால்:– கவர்னர் உரை குறித்து இங்கே விமர்சிக்கலாம். கவர்னரை விமர்சிக்க கூடாது.

  (இந்த இடத்தில் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

  சபாநாயகர் ப.தனபால்:– சட்டசபை விதிகளிலேயே தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஜனாதிபதி, கவர்னரை பற்றி விமர்சிக்க கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

  (இந்த இடத்தில் சட்டசபை விதிகளையும் சபாநாயகர் படித்துக் காண்பித்தார்)

  உறுப்பினர் ஜெ.அன்பழகன்:– மாநில சுயாட்சியை தலைவர் கருணாநிதி கொண்டு வந்தார். அதை நிறைவேற்ற முடியாத அரசாக இந்த அரசு உள்ளது.

  (மேலும், உறுப்பினர் ஜெ.அன்பழகன் அரசைப் பற்றி ஒரு வார்த்தை குறிப்பிட்டார். அதை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார். தொடர்ந்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் குறித்து சில கருத்துக்களை ஜெ.அன்பழகன் தெரிவித்தார்.)

  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– உறுப்பினர் ஜெ.அன்பழகனின் பேச்சு போக்குவரத்து தொழிலாளர்களை மேலும் தூண்டி விடுவதுபோல் உள்ளது.

  (இந்த இடத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆஸ்டின் குறுக்கிட்டு பேச முயன்றார். இதற்கு அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து குரல் எழுப்பினர். பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து குரல் எழுப்பியதால் அவையில் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது.)

  உறுப்பினர் ஜெ.அன்பழகன்:– 111 உறுப்பினர்களை நீங்கள் (அ.தி.மு.க.) வைத்துக்கொண்டு இங்கே கவர்னர் உரையாற்றி இருக்கிறார். இது மைனாரிட்டி ஆட்சி தான்.

  (இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்)

  அமைச்சர் பி.தங்கமணி:– உறுப்பினர்களில் 18 இடம் காலியாக இருக்கிறது. அதை கழித்துவிட்டு பாருங்கள். நாங்கள் மெஜாரிட்டி தான். நீங்கள் (தி.மு.க.) தான் மைனாரிட்டி ஆட்சியை நடத்துனீர்கள்.

  (இதற்கு தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பேசிய உறுப்பினர் ஜெ.அன்பழகன், 18 காலியிடங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கு பற்றி பேசினார்.)

  சபாநாயகர் ப.தனபால்:– நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு குறித்து அவையில் பேசக்கூடாது.

  அமைச்சர் பி.தங்கமணி:– தீர்ப்பு எப்படி வரும் என்று உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்கு தெரியும்?. நீங்கள் என்ன நீதிபதியா?. தீர்ப்பு வரட்டும். அதை நாங்கள் எதிர்கொள்வோம்.

  (இந்த நேரத்தில் சுயேச்சை உறுப்பினர் டி.டி.வி.தினகரன் எழுந்து, சபாநாயகரிடம் பேச வாய்ப்பு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.)

  உறுப்பினர் ஜெ.அன்பழகன்:– வடமாநில கொள்ளையர்களின் சொர்க்கபுரியாக தமிழகம் மாறி வருகிறது. ராஜஸ்தான் சென்று கொள்ளையர்களை பிடிக்க சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். உடன் சென்ற இன்ஸ்பெக்டரே அவரை தவறுதலாக சுட்டதாக ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– உறுப்பினர் இங்கே தவறான தகவலை தருகிறார். உடன் சென்ற இன்ஸ்பெக்டரே பெரிய பாண்டியனை சுட்டதாக ராஜஸ்தான் போலீசார் சொல்லவில்லை. அங்கு எடுக்கப்பட்ட தடயங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

  எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:– பெரிய பாண்டியனை தானே சுட்டதாக அவரது குடும்பத்தினரிடம் உடன் சென்ற இன்ஸ்பெக்டர் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வந்துள்ளது.

  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– அவரது துப்பாக்கியை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் பிறகே நடந்த உண்மை தெரியவரும். உடன் சென்ற இன்ஸ்பெக்டர் மீது ராஜஸ்தானில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்று உறுப்பினர் குற்றம்சாட்டுகிறார். நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 5–வது இடம் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு கிடைத்துள்ளது.

  (தொடர்ந்து உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசியபோது, சுயேச்சை உறுப்பினர் டி.டி.வி.தினகரன் எழுந்து சபாநாயகரிடம் பேச வாய்ப்பு கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கவில்லை. ஆனால், விடாப்பிடியாக டி.டி.வி.தினகரன் பேச வாய்ப்பு கேட்டுக்கொண்டே இருந்தார். அவருக்கு வசதியாக உறுப்பினர் ஜெ.அன்பழகனும் தனது பேச்சை நிறுத்தினார்).

  சபாநாயகர் ப.தனபால்:– உங்கள் (டி.டி.வி.தினரகன்) சவுகரியத்திற்கு வாய்ப்பு தர முடியாது. தி.மு.க. உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கிறார். அதனால், இப்போது பேச வாய்ப்பு தர முடியாது. வாய்ப்பு வரும்போது தருவேன்.

  (சபாநாயகரின் இந்த பதிலை ஏற்காமல், டி.டி.வி.தினகரன் வெளிநடப்பு செய்தார். தொடர்ந்து உறுப்பினர் ஜெ.அன்பழகன் பேசினார்)

  உறுப்பினர் ஜெ.அன்பழகன்:– என்னுடைய தொகுதியில் போலீஸ் ஒருவர் வீட்டிலேயே நகை திருடுபோய் உள்ளது. அதை கண்டுபிடிக்க திறன் இல்லை.

  (தொடர்ந்து பேசிய அவர் முதல்–அமைச்சர் குறித்தும் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்.)

  முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:– தி.மு.க. ஆட்சியில் நடந்த கொலைகளைவிட அ.தி.மு.க. ஆட்சியில் குறைவாகத்தான் நடந்துள்ளது. சட்டம் – ஒழுங்கு சீராக பராமரிக்கப்படுகிறது.

  (அதன்பிறகு, ஜெயலலிதா நினைவிடம் தொடர்பாக உறுப்பினர் ஜெ.அன்பழகன் கருத்து ஒன்றை தெரிவித்தார். அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் கூச்சல் – குழப்பம் ஏற்பட்டது).

  சபாநாயகர் ப.தனபால்:– மறைந்த தலைவரை பற்றி இவ்வாறு பேசக்கூடாது. இதை ஏற்க முடியாது. அவைக்குறிப்பில் இருந்து நீக்குகிறேன். உறுப்பினர் அன்பழகனின் நேரம் முடிந்து விட்டது. இனி பேச வாய்ப்பு தர முடியாது.

  (இவ்வாறு பேசிய சபாநாயகர், அடுத்த உறுப்பினரை பேச அழைத்தார். இதற்கு மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து சபாநாயகரை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்). இவ்வாறு அந்த விவாதம் நடந்தது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
ஆன்மிகம்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்