பஸ்களை இயக்குங்கள்: உயர் நீதிமன்றம் அறிவுரை,
 • பஸ்களை இயக்குங்கள்: உயர் நீதிமன்றம் அறிவுரை,

  பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.
  ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர். இதில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்துத் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

  இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை. இதனால் அரசுக்கு ஆதரவான தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்களின் உதவியோடு குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

  இதனால் தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளின் இயக்கம் பாதிக்கப்பட்டதால், பணிக்குச் செல்வோர், வெளியூர் செல்வோர், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் என அனைத்துத் தரப்பு மக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொழிலாளர்களின் போராட்டம் தொடர்வதை பொதுமக்களும் விரும்பவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

  இதற்கிடையில், போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி வாராகி என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் போராட்டத்துக்குத் தடை விதித்தது. இருப்பினும் தொழிலாளர்கள் போராட்டத்தைக் கைவிடாததால், மனுதாரர் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டது.

  இவ்வழக்கில் போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்த உயர் நீதிமன்றம், வழக்கை போக்குவரத்து தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது. தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அனைத்து பணப் பலன்களையும் உடனே வழங்குவதோடு, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் எந்தத் தொழிலாளியையும் பணிநீக்கம் செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

  இந்நிலையில், இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் எம்.கோவிந்தராஜ் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. பிரதான வழக்குடன் போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தின் காரணமாக நடுவழியில் இறக்கி விடப்பட்டு பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரக்கோரி தொடரப்பட்ட வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

  தமிழக அரசு சார்பில் அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் பிரகாஷ், என்.ஜி.ஆர்.பிரசாத், சி.கே.சந்திரசேகர், ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்ட வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.

  அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், 'போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வங்கியில் ரூ.750 கோடி கடனாக வாங்க அரசு முடிவு செய்துள்ளது' என்றார். அப்போது தொழிற்சங்கங்களின் சார்பில், 'இது ரூ.7 ஆயிரம் கோடிக்கான பிரச்னை, ரூ.750 கோடியை ஒதுக்குவது பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை தராது' என்றனர்.

  அப்போது நீதிபதிகள், 'தொழிலாளர்களின் நிலுவைத் தொகையை வழங்க இந்த நீதிமன்றம் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. அரசு அதை வழங்கியிருந்தால் இப்பிரச்னையே வந்திருக்காது. தொழிலாளர்கள் கேட்பதற்கும், அரசு வழங்குதாக அறிவித்துள்ள ஊதிய உயர்வுக்குமான வித்தியாசம் என்பது 0.13 மடங்குதான். எனவே, பொங்கல் பண்டிகையை கருத்தில் கொண்டு 2.44 மடங்கு ஊதிய உயர்வை ஏற்றுக்கொண்டு பணிக்குத் திரும்புங்கள்' என்றனர்.

  அப்போது தொழிற்சங்கங்கள் சார்பில் '2.44 மடங்கு ஊதிய உயர்வை நிறுத்தி வைத்து விட்டு, இதுகுறித்து அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தால் பணிக்குத் திரும்புகிறோம்' எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர், 'ஊதிய உயர்வு தொடர்பான ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது சாத்தியமற்றது. தொழிற்சங்கங்கள் மற்றவர்களைத் தடுக்காமல் இருந்தால் 70 சதவீதம் பேர் பணிக்குத் திரும்புவார்கள்' என்றார். எங்களது நிபந்தனையை அரசு ஏற்கவில்லை எனில் நீதிமன்ற அவமதிப்பைச் சந்திக்கத் தயார் என தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  பணிக்குத் திரும்புங்கள்: இதையடுத்து நீதிபதிகள், 'பொங்கல் பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு பண்டிகைக்காக வரும் ஜனவரி 17 ஆம் தேதி வரை பேருந்துகளை இயக்குவது குறித்து மனசாட்சியுடன் நல்ல முடிவு எடுக்க வேண்டும் எனக் கூறி, வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

  வேலை நிறுத்த போராட்டம் தொடரும்
  சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேவேளையில் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் எனவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

  இதுகுறித்து சிஐடியு தலைவர் அ. செளந்தரராஜன் கூறியது: ஊதிய உயர்வு தொடர்பாக போடப்பட்ட ஒப்பந்தத்தை அரசு திரும்பப் பெற்றால் பணிக்கு திரும்ப தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து பேசிய நீதிபதிகள், 0.13 சதவிகித காரணிதான் பிரச்னையாக உள்ளது என்பதை நீதிமன்றம் அறிகிறது. இந்த பிரச்னையை பின்னர் விசாரிக்கலாம். தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இறுதி உத்தரவில் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், பொங்கல் நேரம் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பேருந்துகளை புதன்கிழமை இரவே இயக்க வேண்டும் என தொழிற்சங்கங்களை நீதிபதிகள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர். பொதுமக்கள் நலனில் அரசுக்கு அக்கறை இல்லாத போது தொழிற்சங்கங்களுக்கு ஏன்? என எங்கள் தரப்பில் வாதிட்டோம்.

  இதையடுத்து வியாழக்கிழமைநீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
  அதுவரை வேலை நிறுத்தம் தொடரும் என்றார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மரண அறிவித்தல்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்