மதுசூதனன்-ஜெயக்குமார் திடீர் மோதல் இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு எழுதிய கடித விவகாரம்,
 • மதுசூதனன்-ஜெயக்குமார் திடீர் மோதல் இபிஎஸ், ஓபிஎஸ்சுக்கு எழுதிய கடித விவகாரம்,

  ஆர்கே நகர் தோல்வி குறித்து எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதியது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. வட சென்னை மாவட்டச் செயலாளர் பதவியை பிடிப்பதற்காகவே இந்த மோதல் உருவாகியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பதவி சண்டை என்பது அதிமுவில் தொடர் கதையாகி வருகின்றது. சசிகலா மீது ஓபிஎஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிரிந்தார். பின்னர் சசிகலா இல்லாத அதிமுகவாக எடப்பாடி தலைமையில் இயங்கி வந்தது. இதனால் எடப்பாடி அணியில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். அதிமுகவில் இரு அணியினரும் ஒன்றாக இணைந்த பிறகும் பதவி சண்டை நீடித்து வந்தது.

  பலமுறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் மதுசூதனன் ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் உள்கட்சிக்குள் சண்டையிட்டு வந்தனர். இந்த நிலையில், ஆர்.கே நகர் தேர்தலுக்கு முன்னர் அமைச்சர் ஜெயகுமார், மதுசூதனுக்கு எதிராக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்து வந்தது. ஆனால், அதை மறைக்கும் வகையில் இருவரும் செயல்பட்டு வந்தனர். இந்த நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால், தொடர்ந்து பல நிர்வாகிகள் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தனர். இந்தநிலையில் மதுசூதனன் தோல்வி அடைந்தார்.

  இதையடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு மதுசூதனன் நேற்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் அதிமுவிற்கு என்றே ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருந்து வந்தது. இருந்த போதிலும் தேர்தலில் என்னால் வெற்றிபெற முடியாமல் போனது. இதற்கு பகுதி முகவர்களும், தொகுதி செயலாலர்கள், தேர்தல் பொறுப்பாளர் மற்றும் ஒருசில அமைச்சர்கள் சரியாக வேலை பார்க்காமல் என்னை திட்டமிட்டு தோற்கடிக்கும் எண்ணத்திலேயே செயல்பட்டு உள்ளார்கள்.

  தலைமை தேர்தல் ஆணையம் என்னுடைய தலைமையில் உள்ள அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கியது. அதிமுகவில் நான் மூத்தவன். கைநழுவி சென்ற இரட்டை இலை சின்னம் என் தலைமையில் தான் கிடைத்துள்ளது. ஆனால், கட்சியில் எனக்கு எதிராக பலர் செயல்படுகிறார்கள். எனவே ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுகவில் தேர்தல் தோல்விக்கு காரணமாணவர்களை நீக்கினார்கள்.

  அதுபோல, அதிமுகவிலும் தேர்தல் வேலையில் ஈடுபடாமல் இருந்த யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை மதுசூதனன் வைத்துள்ளார். மேலும், 7 நாட்களில் இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

   இல்லையேல் மூத்த தலைவரான எனக்கு பல ஆதரவாளர்கள் உள்ளார்கள் மறுபடியும் கட்சிக்குள் பிரிவு வரக்கூடாது என நினைக்கிறேன். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சர் ஜெயகுமாரும், வடசென்னை எம்.பி வெங்கடேஷ் பாபு இவர்கள் கூட்டுசதி செய்து என்னை தோற்கடிக்க வைத்துள்ளார்கள். இவர்கள் மீதும் பலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
   
  மேலும், ஆர்.கே நகர் தேர்தல் முடிந்து சட்டபேரவை கூட்டத்தொடர் ஆரம்பித்துள்ள நிலையில், மதுசூதனன் இந்த பிரச்சனையை கிளப்புவதற்கு காரணம் அமைச்சர் ஜெயகுமாரின் ஆதரவாளரான வட சென்னை எம்பி வெங்கடேஷ் பாபுவிற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

  இதற்கான அறிவிப்பு 2 நாளில் வெளியிடப்பட உள்ளது. இதனால் தனது ஆதரவாளரான ராஜேசுக்கு அந்தப் பதவியை வாங்கித் தரும்படி ஓ.பன்னீர்செல்வத்திடம் மதுசூதனன் கூறி வந்தார். ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோபத்தில்தான் அவர் ஜெயக்குமார், வெங்கடேஷ்பாபு எம்பி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதியது தெரியவந்தது. இதனால் இருவரையும் சமாதானப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
அரசியல் கட்டுரைகள்
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்