பறக்கும் தட்டுகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்,
 • பறக்கும் தட்டுகள் பற்றிய அதிர்ச்சி தகவல்கள்,

  அறிவியல் உலகில் எப்பொழுதுமே மவுசு குறையாத சொற்களில் ஒன்று “ஏலியன்”. புராதனக் காலம் முதல் இன்றுவரை ஏலியன்கள் பற்றிய கதைகளுக்குப் பஞ்சமே கிடையாது. ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை வைத்துதான் கல்லா கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

  இது போன்ற கதைகளில் ஏலியன்கள் பயணம் செய்வதற்குப் பயன்படுத்தும் வாகனத்தை UFO(unidentified flying objects) என்று அழைக்கிறார்கள்.

  நம்மூரில் யார் வைத்தார்களோ தெரியவில்லை…. அதற்கு, “பறக்கும் தட்டு” என்று அழகுத்தமிழில் பெயர் வைத்திருக்கிறார்கள். அதேபோல இந்தப் பறக்கும் தட்டுக் கதைகள் வெறும் கட்டுக்கதையல்ல நிஜம்தான் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் சொல்வதுபோல உலகம் முழுவதும் பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

  பறவையா பறக்கும் விமானமா?


  1947-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி கென்னெத் அர்னால்டு என்ற விமானி ஒரு சிறிய ரக விமானத்தில் வாஷிங்டனுக்கு அருகே ஒரு மலைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தார்.

  அப்பொழுது அவரின் கண்களுக்கு அந்தக் காட்சி தென்படுகிறது. ஒன்பது ஒளிரும் பொருள்கள் “V” வடிவத்தில் அதிவேகமாகப் பறந்துகொண்டிருந்தன.

  அவரும் அது ஏதோ இராணுவ விமானங்கள் அணிவகுத்துச் செல்கின்றன என்று நினைத்துக்கொண்டார். தரையிறங்கிய பின்பு அவர் பார்த்த சம்பவத்தைக்  கூற, இராணுவமோ அந்த நேரத்தில் வானத்தில் எந்தப் பயிற்சியும் நடைபெறவில்லை என மறுத்தது.

  ஆனால் “ஒளிரும் பொருள்கள் 1700 மைல் வேகத்தில் சென்றதை நான் பார்த்தேன்” என்று இவர் மீண்டும் மீண்டும் கூற விஷயம் பெரிதானது. விசாரணை தொடங்கியது “வானில் இருக்கும் காற்று அடுக்குகளில் ஏற்பட்ட ஒளிவிலகல் காரணமாக இருக்கலாம்” அல்லது “கென்னெத் அர்னால்டு அரை மயக்க நிலையில் இருந்திருக்கலாம்” என்று அரசின் அறிக்கை வந்தது. அதை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை .


  அது 1951-ம் ஆண்டின் ஆகஸ்ட் 25-ம் தேதி. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லப்பாக் நகரத்தின் மாலை வேளையில், மக்களும் சூரியனும் ஓய்வைத்தேடி நகர்ந்துகொண்டிருந்தார்கள்.

  அதே நகரத்தின் ஒரு கட்டடத்தில் மூன்று அறிவியல் பேராசிரியர்கள் அன்றைய நாளின் வேலையை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

  அப்பொழுது அந்த மூவரும் வானத்தில் கண்ட காட்சி அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. வட்ட வடிவத்தில் இருந்த பிரகாசமான அந்தப் பொருள்கள் ஒரு பறவைக்கூட்டம் போல அரைவட்ட வடிவில் அதிவேகமாகப் பறந்து சென்றன.

  மூன்று பேராலும் அவர்கள் கண்ட காட்சியை நம்பவே முடியவில்லை. வெளியில் சொன்னாலும் யாரும் நம்பப்போவதில்லை என்பதால் அப்படியே விட்டுவிட்டனர்.

  ஆனால் அடுத்தநாள் அவர்கள் எதைப் பார்த்தார்களோ அதைத் தாங்களும் பார்த்ததாக பலரிடமிருந்து தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

  19 வயது இளைஞன் ஒருவன் அந்தச் சம்பவத்தை புகைப்படம் எடுத்திருந்தான். நகரமே பரபரப்பானது, விஷயம் அரசின் காதுகளுக்கு எட்ட, உடனே விசாரணைக்கு உத்தரவிடுகிறது அரசாங்கம்.

  “தெருவிளக்குகளின் ஒளி, பறவைகளின் மேல் பட்டு எதிரொளித்ததுதான் காரணம்” என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அரசின் பதிலை நம்புவதற்கு யாருமே தயாராக இல்லை. பறவைகள் அவ்வளவு வேகமாகப் பறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்பது சம்பவத்தைப் பார்த்தவர்களின் வாதம்.

  வரலாறு முழுவதும் கொட்டிக்கிடக்கும் பலநூறு சம்பவங்களில் இவை இரண்டும் சிறிய எடுத்துக்காட்டுகள்தாம். பறக்கும் தட்டை மக்கள் பார்த்த சம்பவங்கள் உலகம் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

  அதில் இந்தியாவும் அடக்கம். இது போன்ற பறக்கும் தட்டு சம்பவங்கள் பெரும்பாலும் அமெரிக்காவில்தான் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

  எனவே இது போன்று சம்பவங்கள் நிகழும் போதெல்லாம் எல்லோரின் பார்வையும் அமெரிக்க அரசு மீதும் நாசாவின் மீதும் விழும். அவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்  என்று உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும். கடைசியில் பதிலும் வரும்.

  “நீங்கள் பார்த்தது பறக்கும் தட்டுகள் இல்லை வெப்பநிலையை அறிவதற்காகப் பயன்படுத்தப்படும் பலூன்கள்”, “மின்னலைப் படம் பிடித்திருக்கிறார்கள்”, “அருமையான எடிட்டிங்”, “கேமரா பிரச்னையாக இருக்கலாம்” என்பதைப் போன்று பல பதில்கள் அவர்களிடமிருந்து வரும்.

  சரி இது தொடர்பான ஆரய்ச்சி ஏதாவது நடைபெறுகிறதா என்ற கேள்வி கேட்டால் “இல்லாத ஒன்றுக்கு நிதி ஒதுக்கி ஆராய்வது தேவையற்றது” என்று பதிலளிக்கும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன். இப்படிப்பட்ட நிலைமையில்தான் வெளியாகியிருக்கிறது ஒரு வீடியோ.

  2004-ம் ஆண்டு ஒரு போர் விமானத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோவை  அமெரிக்காவைச் சேர்ந்த தினசரி நாளிதழ் ஒன்று கடந்த வாரம் வெளியிட்டிருக்கிறது.

  அந்த வீடியோவில் போர் விமானத்தின் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இருக்கின்றன. அதில் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் தென்படுகிறது.

  போர் விமானம் அந்தப் பொருளைப் பின்தொடர்வதும் அதற்கு பின்னர் நடக்கும் உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்தப் போர் விமானத்தை இயக்கியவர் யூஎஸ் நேவி பைலட்டான கமாண்டர் டேவிட் ஃபிரவர் என்பவர்.


  “அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. அன்றைய தினம் கலிஃபோர்னியாவின் கடற்கரைப் பகுதியில் எங்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தோம்.

  அப்பொழுதான் அந்தப் பொருளைப் பார்த்தேன். கிட்டத்தட்ட 40 அடி நீளத்திலிருந்த அதற்கு இறக்கைகள் இல்லை. நீருக்கு அருகாமையில் அது பறந்துகொண்டிருந்தும் அது நீரின் மேற்பரப்பில் எந்தவித அசைவையும் ஏற்படுத்தாமல் பறந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

  அதை ஆராய்ந்து பார்க்க முடிவுசெய்து அதன் அருகில் சென்றேன். அடுத்த நொடியில் அது வேகமெடுத்து என் பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. அந்த இடத்தை சுற்றிப்பார்த்தபோது கடலின் நீல வண்ணம் மட்டுமே எனக்குத் தெரிந்தது.

  என் வாழ்நாளில் அப்படி ஒரு வேகத்தைப் பார்த்ததே கிடையாது அது நிச்சயமாக பூமியைச் சேர்ந்ததாக இருக்க வாய்ப்பில்லை”. இது டேவிட் ஃபிரவர் அளித்த பேட்டியில் கூறப்பட்டவை.

  நாம் இங்கே தனியாக இல்லை

  இந்த வீடியோ மற்றும் பேட்டி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்த இது தொடர்பாக மேலும் பல அதிர்ச்சியளிக்கும் பதிலை தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமெரிக்க செனட்டரான ஹேரி ரெய்ட்.

  UFO பற்றி ஆய்வு நடத்துவதற்காக 2007-ஆம் ஆண்டு முதல் 2012 வரை திட்டம் செயல்பாட்டில் இருந்ததாகவும் அதற்காக வருடத்திற்கு  600 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

  இந்தத் திட்டம் தொடர்பான தகவல்கள் பென்டகனில் இருக்கும் குறிப்பிட்ட சில அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறார்.

  வழக்கம்போலவே இந்த வீடியோ பொய்யானது, எடிட்டிங் செய்யப்பட்டது என்றும் டேவிட் ஃபிரவர் பொய் சொல்கிறார் எனவும் ஒரு தரப்பினர் கூறிவருகின்றனர்.

  இதற்கெல்லாம் உச்சகட்டமாக ஒரு பதிலை கூறியிருக்கிறார், பென்டகன் நடத்திய UFO ஆராய்ச்சியின் தலைவரான லூயிஸ் எல்சாண்டோ.

  “இந்த ஆராய்ச்சியில் பல விஷயங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். அரசாங்கத்தைப் பற்றியோ, அது நடத்தும் ஆய்வைப் பற்றியோ நான் பேசப்போவதில்லை. என்னுடயை தனிப்பட்ட கருத்தாக இதை கூறுகிறேன். நிச்சயமாக நாம் இங்கே தனியாக இல்லை”.

  இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா?

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
வினோத நிகழ்வுகள்
இந்திய சட்டம்
உலக சட்டம்
 மரண அறித்தல்