கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை வெளிவராத உண்மைகள்,
 • கிளிநொச்சி மாவட்டத்தின் வரலாற்றுத் தொன்மை வெளிவராத உண்மைகள்,


  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich.Switzerland.பண்டுதொட்டு அநுராதபுரத்திற்கு வடக்கில் அமைந்த பிரதேசம் (வட இலங்கை) பாளி மொழியில் நாகதீப(ம்) எனவும், தமிழில நாகநாடு எனவும் தனித்து அடையாளப்படுத்தப்பட்டு வந்துள்ளதைக் காணலாம். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் நாகதீப(ம்) என மஹாவம்ஸத்தில் அழைக்கப்பட்ட இப்பிராந்தியம் கி.பி. 1 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க நாட்டு யாத்திரிகரான தொலமியின் குறிப்பில் 'நாகடிப' எனவும், யாழ்ப்பாணத்தில் வல்லிபுரத்தில் கிடைத்த கி.பி. 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பொற்சாசனத்தில் 'நகதிவ' எனவும் அழைக்கப்படுகிறது.

  சற்றுப் பிற்பட்ட காலத்தில் தமிழகத்தில் தோன்றிய இரு பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை தமிழகத்திற்கு அப்பால் கடல் டந்து செல்ல வேண்டிய இடங்களில் ஒன்றாக இந்த நாகநாடு என்ற பிரதேசத்தைக் குறிப்பிடுகிறது. ஏறத்தாழ இதன் சமகாலத்திற்குரிய தமிழக வேலூர்ப்பாளையச் செப்பேட்டில் பல்லவ மன்னன் ஒருவன் தமிழகத்திற்கு அப்பால் சென்று நாககுல பெண்ணொருத்தியை மணந்த செய்தி சொல்லப்படுகிறது. சோழர் காலத்திற்குரிய கலிங்கத்துப்பரணியில் சோழ வம்சத்து கிள்ளிவளவன் நாகநாட்டு இளவரசி ஒருத்தியை மணந்தான் எனக் குறிப்பிடப்படுகிறது.

  மேற்கூறப்பட்ட ஆதாரங்களையும், அவற்றோடு தொடர்புடைய வரலாற்றுச் சம்பவங்களையும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்த அறிஞர்கள் இவற்றில் சுட்டிக்காட்டப்படும் நாகதீபம், நாகநாடு ஆகிய இடப் பெயர்கள் அக்காலத்தில் அநுராதபுரத்திற்கு வடக்காக அமைந்த தற்கால வடஇலங்கையையே குறித்ததாக அடையாளப்படுத்தியுள்ளனர். இவ்வாறு வரலாற்று ஆவணங்களில் வடஇலங்கை தனித்து அடையாளப்படுத்திக் கூறியிருப்பதற்கு அதன் சமகால அநுராதபுர, பொலநறுவை நாகரிக வட்டத்தில் இருந்து வட இலங்கை வேறுபட்டு இருந்தமை காரணம் எனக் கருத இடமளிக்கிறது.

  இக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமீபகாலத் தொல்லியல் ஆய்வுகளும் அமைந்துள்ளன. அதில் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளையும், தொல்லியல் கண்டுபிடிப்புக்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே இக்கட்டுரையின் கருப் பொருளாகும்.

  இரணைமடு அகழ்வாய்வும் இலங்கையின் பூர்வீக மக்களும்

  ஆபிரிக்கா, பிரான்ஸ், ஜேர்மன், சீனா, ஜாவா என உலகில் சில நாடுகளில் மனிதபரிணாமம் நிகழ்ந்ததற்கான சான்றுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இருண்ட கண்டம் என அழைக்கப்படும் ஆபிரிக்காவில் இதன் தோற்ற காலம் இற்றைக்கு 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென நம்பப்படுகிறது.

  ஆனால் இலங்கையில் மனிதபரிணாமம் நிகழ்ந்ததற்கான சான்றுகள் எவையும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இலங்கைக்குரிய பூர்வீக மக்கள் இன்னொரு நட்டிலிருந்தே புலம்பெயர்ந்திருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. இந்த மக்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்? எப்போது வந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்கள் நீண்ட காலமாக வாதப் பிரதி வாதங்களுக்குரியதாகவே இருந்து வந்துள்ளன. பாளி இலக்கியங்கள் இற்றைக்கு 2600 ஆண்டளவில் வட இந்தியாவில் இருந்து வந்த மக்களே இலங்கையின் பூர்வீக மக்கள் எனவும், அவர்களே இலங்கையில் நாகரிக சமூகம் தோன்றுவதற்கு காரணமாக இருந்தனர் எனவும் கூறுகின்றன.

  ஆயினும் விஞ்ஞானபூர்வமான சமீபகாலத் தொல்லியற் கண்டுபிடிப்புக்கள் பாளி இலக்கியம் கூறும் சில கருத்துக்களை மீளாய்வு செய்யத்தூண்டியுள்ளன. அதில் ஒன்றே இலங்கையின் பூர்வீக மக்கள் பற்றிய பாரம்பரியக் கருத்தாகும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வட இலங்கையில் உள்ள மாங்குளம், முருங்கன், கிளிநொச்சி (இரணைமடு) முதலான இடங்களில் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்ட சரசின், செலிக்மன், வேலண்ட, போல், பர்சனர் காட்லே முதலானோர் இங்கெல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்ற கருத்தை முன்வைத்துள்ளனர்.

  ஆயினும் நீண்ட காலமாக இக்கருத்துக்களுக்கு இலங்கை வரலாறு பற்றிய ஆய்வில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் 1970 களின் பின்னர் இலங்கைத் தொல்லியற் திணைக்களம் குறிப்பாக இலங்கையின் முதன்மை தொல்லியலாளரில் ஒருவரான கலாநிதி சிரான் தெரணியகல கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடுப் பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகள் இக்கருத்துக்களுக்குப் புதுவெளிச்சத்தை ஏற்படுத்தியதெனக் கூறலாம். அவர் இங்கு மேற்கொண்ட ஆய்வுகளின் போது கிடைத்த ஆதாரங்களில் இருந்து இற்றைக்கு 125000 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியத்தில் கற்கால மக்கள் (மேலைப்பழங்கற்கால மக்கள் - Upper Palaeolithic People) வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இம்மக்கள் நாடோடிகளாக மிருகங்களை வேட்டையாடியும், இயற்கையாகக் கிடைத்த பழங்களையும், கிழங்கு வகைகளையும், காய்கனிகளையும் உண்டும் வாழ்ந்து வந்தனர் என்பதை இங்கு கிடைத்த கல்லாயுதங்கள் உறுதிசெய்கின்றன. இவ்வாதாரங்கள் இலங்கையின் முதலாதவது மனித குடியிருப்பின் தொடக்கப் புள்ளியாக இரணைமடுவை அடைளாளப்படுத்தியதன் மூலம் கிளிநொச்சியின் வரலாற்றுத் தொன்மை வெளிச்சத்திற்கு வந்தது.

  இரணைமடுவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது முந்துல, இரத்தினபுரி ஆகிய இடங்களிலும் இதையொத்த கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின் போது கற்கருவிகளுடன் மனித எலும்பின் சில பாகங்களும் கிடைத்துள்ளன. இவை கோமோ சேப்பியன் (Homo Sapiens) இனவகையைச் சேர்ந்த தற்கால மனித வடிவத்தின் தொடக்ககாலமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது (Deraniyagala 2004:4). இக்கண்டுபிடிப்புக்கள் இலங்கை பற்றிய எதிர்கால ஆய்வுகளில் கற்கால மக்களுக்கும் பிற்காலத்தில் மொழியடிப்படையில் இரு இனங்களாகத் தோன்றிய தமிழ் சிங்கள மக்களுக்கும் இடையிலான உறவுகளைத் தெரிந்து கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.

  கற்கால மக்களைத் தொடர்ந்து கி.மு .37000 ஆண்டளவில் தென்னிந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த நுண்கற்கால (Mesolithic or Middle Stone Age) மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிளிநொச்சி மாவட்டத்திலும் இலங்கையில் ஏனைய இடங்களிலும் ஏறத்தாழ 75 மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மக்கள் தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து முதலில் வட இலங்கையில் குடியேறி இங்கிருந்தே இலங்கையின் ஏனைய பகுதிகளுக்குப் புலம் பெயர்ந்தனர் என நம்பப்படுகிறது.

  கிளிநொச்சியில் (பூநகரியில்) மண்டக்கல் மற்றும் மண்ணியாற்றுப் பகுதியில் 1982,1993 காலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய பலதரப்பட்ட கற்கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அண்மையில் இக்கட்டுரை ஆசிரியர் தொல்லியல் மாணவர்களுடன் இணைந்து பூநகரி கல்முனைப்பகுதியில் மேற்கொண்ட அகழ்வாய்வில் இப்பண்பாட்டு மக்கள் பயன்படுத்திய குவாட்ஸ், சேட் வகையைச் சார்ந்த கற்கருவிகளைக் கண்டு பிடிக்க முடிந்தது. இக்கருவிகள் முன்னர் இரணைமடுப் பகுதியில் வாழ்ந்த கற்கால மக்கள் பயன்படுத்திய கருவிகளை விட கூடிய தொழில் நுட்பமும், கலைநயமும் பொருந்தியதுடன் ஒரளவு நாகரிகமுடைய மக்களாகவும் இங்கு இருந்துள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றன.

  தென்னிலங்கையில் இப்பண்பாடு பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து இவர்களிடத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் மரபு, தானியங்களைச் சேகரிக்கும் முறை, மட்பாண்டத்தின் பயன்பாடு, குகைகள், பாறைகள் சமவெளிகள் என்பவற்றில் ஓவியங்கள், சிற்பங்கள் என்பவற்றைப் படைக்கும் முறை, நெருப்பின் பயன்பாடு என்பனவற்றை அறிந்திருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. இப்பண்பாட்டு வழிவந்த மக்களே தற்கால வேட இனத்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. வடஇலங்கையிலும் குறிப்பாக இம்மக்கள் வாழ்ந்த கிளிநொச்சி மாவட்டத்திலும் இதுபோன்ற விரிவான ஆய்வுகள்; மேற்கொள்ளப்படுமானால் இப்பிரதேசத்தின் பூர்வீக மக்கள், அவர்களது பண்பாட்டு வரலாறு என்பன வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை.

  மானிடவியல் அறிஞர்கள் இலங்கையிலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த இந்நுண்கற்கால, மக்கள் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடுகின்றனர். தொல்லியலாளர் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட நுண்கற்காலக் கருவிகளுக்கும் கர்நாடகம் உட்பட தென்னிந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கருவிகளுக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.

  அதிலும் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட இரு பக்க அலகுடைய நுண்கற்காலக் கல்லாயுதங்கள் தமிழகத்தில் பாம்பன் கடற்கரைக்கு அண்மையில் உள்ள தேரிக் கலாச்சாரத்துடன் ஒரே பிராந்தியம் எனக் கருதும் அளவிற்கு ஒற்றுமை கொண்டுள்ளதாக அல்ஜின் குறிப்பிடுகிறார். மொழியியலாளர் மொழி அடிப்படையில் இலங்கை தென்னிந்திய நுண்கற்கால மக்களிடையே நெருங்கிய ஒற்றுமை இருப்பதாகச் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வொற்றுமைகளின் அடிப்படையில் இலங்கையில் வாழ்ந்த நுண்கற்கால மக்கள் தென்னிந்தியா அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள தேரி மணற்குன்றுப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்து வந்தனர் எனக் கூறப்படுகிறது. கலாநிதி இந்திரபாலா வடஇலங்கை அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாடு தமிழகத்தின் தொடக்க வாயிலாக இருப்பதால் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்த இம்மக்கள் முதலில் யாழ்ப்பாணத் தீபகற்பத்திலேயே குடியேறியிருக்க வேண்டும் எனக் கருதுகிறார்.

  இந்நுண்கற்கால மக்களைத் தொடர்ந்து கி.மு.1000 அளவில் இலங்கை நாகரீகத்திற்கு வித்திட்ட பெருங்கற்கால திராவிட மக்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் ஏறத்தாள 50க்கும் மேற்பட்ட தொல்லியல் மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தென்னிலங்கையில் அநுராதபுரமும், வட இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரி மற்றும் கந்தரோடை என்பன மிகப்பெரிய பெருங்கற்கால குடியிருப்பு மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இம்மக்கள் இறந்தவர்களுக்கு மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கையில் அவர்களுக்கு மிகப்பெரிய கற்களைப் பயன்படுத்தி ஈமச் சின்னங்களை அமைத்ததினால் இப்பண்பாடு பெருங்கற்காலப் பண்பாடு என அழைக்கப்பட்டது.

  ஆனால் பெரிய கற்கள் காணப்படாத இடங்களில் மிகப் பெரிய தாழிகளை அமைத்து அதற்குள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் மரபு காணப்பட்டது. வட இலங்கையில் இந்த இருவகை ஈமச் சின்னங்களும் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இப்பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலும், அவர்களது குடியிருப்பு பகுதிகளில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்பண்பாட்டுடன் தான் தென்னிந்தியாவைப் போல் இலங்கையிலும் நிலையான குடியிருப்புக்கள், நீர்ப்பாசன விவசாயம், இரும்பின் உபயோகம், கறுப்பு – சிவப்பு நிற மட்பாண்டங்களின் (Black and Red Wares) பயன்பாடு, மந்தை வளர்ப்பு, சிறு தொழில் நுட்ப வளர்ச்சி அரச தோற்றம், நகரமயமாக்கம், சமூக உருவாக்கம் என்பன தோன்றியமை தெரியவந்துள்ளது. இதன் மூலம் இதுவரை காலமும் இலங்கையின் மனித வரலாறும், நாகரீக உருவாக்கமும் வடஇந்தியாவில் இருந்து கி.மு 6ஆம் நூற்றாண்டில் விஜயன் தலமையில் ஏற்பட்ட குடியேற்றத்துடன் தோன்றியதென்ற பாரம்பரிய கருத்து மீள்வாசிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

  கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை அங்கு நுண்கற்காலப் பண்பாட்டைத் தொடர்ந்து இப்பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான பலவகைப்பட்ட சான்றுகள் இரணைமடு, வெற்றிலைக்கேணி, குஞ்சுப்பரந்தன், பூநகரி போன்ற இடங்களில் பரவலாக கிடைத்துள்ளன. அதில் இரைணைமடு முக்கிய பெருங்கற்காலக் குடியிருப்பு மையமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் அங்கு இதுவரை முழுமையான அகழ்வாய்வு மேற்கொள்ளப்படாத நிலையிலும் இரணைமடுக் குளத்திற்கு கிழக்காக உள்ள மேட்டுநிலப் பகுதியில் இருந்து இப்பண்பாட்டு மக்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் தாழிகளின் உடைந்த பாகங்கள், கறுப்புச் சிவப்பு நிற மட்பாண்ட ஓடுகள், கழிவிரும்புகள், கல்மணிகள், சுடுமண் உருவங்கள் என்பன கிடைத்துள்ளன. இங்கு விரிவான அகழ்வாய்வுகள் நடத்தப்படுமானால் இங்கு வாழ்ந்த பெருங்கற்கால மக்களது பண்பாட்டின் பல சிறப்புக்கள் வெளிவரும் எனலாம்.

  இலங்கையில் பெருங்கற்கால ஈமத்தாழி சின்ன முறை காணப்பட்ட இடங்களில் ஒன்றாக கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குஞ்சுப்பரந்தன் காணப்படுகிறது. இங்குள்ள டி8 என்ற குடியேற்றத்திட்டத்தில் உள்ள காணி 1990 அளவில் பயிர்ச்செய்கைக்காகத் திருத்தப்பட்ட போது எதிர்பாராத வகையில் முழுமையான தாழியும் தாழியின் உடைந்த பாகங்களும் வெளிவந்தன. இது பற்றிய செய்தி அப்போதைய உதவி அரசாங்க அதிபராக இருந்த கலாநிதி .க.குணராசா அவர்களுக்குத் தெரியப்படுத்திய போது அவர் நேரில் சென்று அவற்றைப் பார்வையிட்டதுடன் அத்தாழிகள் பற்றியும் விரிவான கட்டுரையை எழுதியிருந்தார்.

  வட இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட முதலாவது முழுமையான பெருங்கற்கால ஈமத்தாழி என்ற வகையில் இதற்குத் தனி முக்கியத்துவம் உண்டு. நான்கடி உயரமும், எட்டடி சுற்றுவட்டமும் கொண்ட இத்தாழியின் விளிம்பு ஓரங்குலத் தடிப்புடையது. தாழியின் வெளிப்புறத்தில் சில அலங்காரக் கோடுகள் காணப்படுகின்றன. தாழிக்குள் மனித எலும்புக் கூட்டின் சில பாகங்களும், சாம்பல் போன்ற கரிய பொருள், இரு மட்கலங்கள் என்பன காணப்பட்டன. இப்பொருட்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இத்தாழி காணப்பட்ட வயற்பரப்பின் ஓரங்களில் காணப்படும் உடைந்த தாழிகளையும், பலவகைப்பட்ட மட்பாண்டங்களையும் நோக்கும் போது இங்கு பொம்பரிப்பு போன்ற பெருங்கற்கால ஈமத்தாழி மையம் இருந்திருக்கலாம் என்பது தெரிகிறது.

  கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்த அளவில் பெருங்கற்கால குடியிருப்புக்கள் இருந்த பிராந்தியமாகப் பூநகரி காணப்படுகிறது. 1980 களில் கலாநிதி இரகுபதியும், 1990-94, 2004-2005 காலப்பகுதியில் இக்கட்டுரை ஆசிரியரும் இங்கு மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் போது கல்முனை தொட்டு நாச்சிக்குடா வரையுள்ள கடற்கரை சார்ந்த பிரதேசத்தில் நுண்கற்காலம் தொட்டு தற்காலம் வரை வாழ்ந்து வரும் மக்களது பலதரப்பட்ட பண்பாட்டுச் சான்றுகளைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவற்றுள் பெருங்கற்காலக் குடியிருப்புக்கள், ஈமச் சின்னங்கள் தொடர்பாகக் கிடைத்த சான்றுகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இச்சான்றுகள் இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் விமலாபேக்கிலே என்ற அறிஞர் கந்தரோடை தொட்டு புத்தளத்தில் உள்ள பொம்பரிப்பு வரை தென்னிந்தியா குறிப்பாகத் தமிழகத்தை ஒத்த பெருங்கற்காலத் திராவிட மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறிய கருத்தை உறுதி செய்வதாக உள்ளது.

  மேற்கூறப்பட்ட கற்கால, நுண்கற்கால, பெருங்கற்காலப் பண்பாடு தொடர்பான சான்றுகள் கி.மு.6 ஆம் நூற்றாண்டு வட இந்தியாவில் இருந்து மக்கள் புலப்பெயர்வு ஏற்பட முன்னரே தென்னிந்தியாவின் தென்பகுதில் இருந்து புலம்பெயர்ந்த மக்கள் கிளிநொச்சியிலும், இலங்கையின் ஏனைய பிராந்தியங்கள் பலவற்றிலும் வாழ்ந்துள்ளனர் என்பதைக் கோடிட்டுக் காட்டுகின்றன. அந்த மக்களே கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து மொழியடிப்படையில் தமிழ் சிங்கள மக்களாக இன அடிப்படையில் வேறுபட்டனர். அதை இரணைமடுவிலும், பூநகரிலும் கிடைத்துள்ள தொடக்க கால எழுத்துக்கள், சாசனங்கள் உறுதி செய்கின்றன.

  தமிழகத்தில் பெருங்கற்காலப் பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தமிழ் மொழி தோன்றியதை அப்பண்பாட்டு மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டுள்ள 2300 ஆண்டுகளுக்கு முந்திய பிராமி எழுத்துக்கள் உறுதி செய்கின்றன. இதனால்தான் திராவிட மொழிகளில் முதலில் தமிழில் வளமான சங்க இலக்கியம் தோன்றக் காரணமாகும். இலங்கையிலும் இப்பண்பாட்டின் முதிர்ச்சி நிலையில் தமிழ் மொழி புழக்கத்திற்கு வந்ததை அநுராதபுரம், அம்பாந்தோட்டை, கந்தரோடை முதலான இடங்களில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் உறுதி செய்கின்றன.

  இருப்பினும் அதிக அளவில் இவ்வெழுத்துப் பொறித்த மட்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்களாக இரணைமடு, பூநகரி, ஈழவர் முதலான இடங்கள் இருப்பது இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது. இரணைமடுவில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் மேலாய்வின் போது குளத்தின் மேற்குக் கரைப் பகுதியில் சிதறுண்டு காணப்பட்ட மட்பாண்டங்களிடையே கி.மு. 3-2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்துக்கள் பல கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவ்வெழுத்துக்கள் தமிழுக்கும், பிராகிருத மொழிக்கும் உரியனவாகக் காணப்படுகின்றன. இவற்றின் அடிப்படையில் இனத்தால் ஒரே இனவர்க்கத்தைச் சேர்ந்த தமிழ் சிங்கள மக்கள் மொழிவேறுபாட்டால் இரு வேறுபட்ட பண்பாடு கொண்ட இனக்குழுக்களாக தோன்றி வளர்ந்தனர் என்பது தெரிகிறது.

  அயல்நாட்டு உறவுகள்

  கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த உரோம, வட இந்திய, தென்னிந்திய, சுதேச நாணயங்கள், இந்திய, உரோம, அரேபிய, மட்பாண்டங்கள், கல்மணிகள் என்பன கி.மு.3 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பிராந்தியம் மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் நெருங்கிய வணிக கலாசார உறவுகளைக் கொண்டிருந்ததை உறுதி செய்கின்றன. அதிலும் பூநகரி வட்டாரத்தில் கிடைத்த சங்ககால சேர, சோழ, பாண்டிய நாணயங்கள் பாளி இலக்கியங்கள் கூறுவது போல் அக்காலத்தில் வட இலங்கை தமிழகத்துடன் நெருங்கிய வணிக கலாசார உறவுகளைக் கொண்டிருந்தமைக்கு சான்றாக அமைகின்றன.

  இரணைமடுவில் இந்துப் பண்பாட்டின் தொன்மை

  தமிழகத்தைப் போல் இலங்கையிலும் இந்துக் கோவில்களைக் கற்களால் அமைக்கும் மரபு கி.பி. 6 ஆம் நூற்றாண்டின் பின்னரே தோற்றம் பெற்றன. இதற்கு முற்பட்ட காலத்தில் மண், மரம், சுதை கொண்டு அமைக்கப்பட்டதை கல்வெட்டுக்களும், இலக்கியங்களும் உறுதி செய்கின்றன. இதன் தொடக்க கால ஆதாரமாக பெருங்கற்கால குடியிருப்புக்கள், ஈமச் சின்னங்களில் கண்டுபிடிக்கப்பட்ட உருவங்கள், மட்பாண்டக் குறியீடுகள் உறுதி செய்கின்றன.

  கிளிநொச்சியில் பெருமளவான சுடு மண்ணாலான ஆண் பெண் - உருவங்கள், சிலைகள், சிற்பங்கள், மிருக, தாவர உருவங்கள் கிடைத்துள்ளன. இவை அக்கால வழிபாட்டுச் சின்னங்களாக நோக்கப்படுகின்றன. இரணணைமடு, உருத்திரபுரம், பூநகரி முதலான இடங்களில் ஆண் - பெண் உருவங்களுடன் இலிங்க வடிவில் அமைந்த பல சுடுமண் உருவங்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆய்வு செய்த கலாநிதி சிரான் தெரணியகலா அவர்கள் இலங்கையில் தாய்த் தெய்வ வழிபாடு தொன்மை என்பதற்கு இவை சான்றாக அமைகிறது எனக் குறிப்பிடுகிறார்.

  இங்கு கிடைத்த இலிங்க உருவங்களும், சூலம் பொறித்த மட்பாண்டங்களும் இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்னரே சிவ வழிபாடு இருந்ததற்குச் சான்றாகும், இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் இற்றைக்கு 2400 ஆண்டுகளுக்கு முன்னர் பண்டுகாபயன் காலத்தில் அநுராதபுரத்தில் இருந்த இரு இந்து ஆலயங்கள் பற்றிக் கூறுகின்றது. அச்சான்றை ஆராய்ந்த பேராசிரியர் பரணவிதான அவற்றில் ஒன்று சிவன் ஆலயம் எனவும், மற்றையது பிராமணர் வாழந்த இடம் எனவும் கூறியிருப்பது இங்கு நோக்கத்தக்கது.

  கிளிநொச்சி மாவட்டத்தில் பொதுவாக இலங்கையில் இற்றைக்கு 2500 முன்பிருந்தே இந்துப் பண்பாடு இருந்ததற்கான சான்றுகள் காணப்பட்டாலும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய (கி.பி.16 இக்கு முந்திய) ஆலயங்கள் பற்றி சான்றுகள் அதிகம் காணப்படவில்லை. இதற்கு போத்துக்கேயர்,ஒல்லாந்தர் இந்து மதத்திற்கு எதிராகக் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையே காரணமாகும். ஆயினும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முந்திய கால ஆயுதங்கள் பற்றிய தகவல்கள் கல்வெட்டுகள், நாயன்மார் பாடல்கள், இலக்கியங்களில் பல ஆதாரங்கள் உண்டு. ஏன் போத்துக்கேய ஆசிரியரான குவைரோஸ் சுவாமிகள் கூட தனது நூலில் யாழ்ப்பாணத்தில் இருந்த 500 க்கு மேற்பட்ட இந்து ஆலயங்களை இடித்தழித்து அவற்றின் கற்களைக் கொண்டு கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டியதாகக் கூறுகிறார்.

  அதை யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாய்வுகளும் உறுதி செய்கின்றன ஆயினும் போத்துக்கேயர். ஓல்லாந்தர் ஆட்சி கிளிநொச்சி போன்ற வன்னிப் பிராந்தியத்தில் அதிக ஆதிக்கம் ஏற்படாததால் அங்கெல்லாம் புராதன ஆலயங்கள் பல இருக்க இடமுண்டு. அவற்றின் வரலாற்றை ஆராய்ந்தால் பல உண்மைகள் வெளிவரும் என்பதற்கு இக்கட்டுரை ஆசிரியர் பூநகரியில் மேற்கொண்ட ஆய்வுகள் சிறந்த உதாரணமாகும்.

  இக்கட்டுரை ஆசிரியர் 1990-93 காலப்பகுதியில் பூநகரி மண்ணித்தலை வட்டாரத்தில் மேற்கொண்ட கள ஆய்வின் போது மண்ணில் புதையுண்ட நிலையில் அழிவடைந்த ஆலயத்தின் சிதைவுகளை அடையாளம் காணமுடிந்தது. கோறக்கல், சுதை, சுண்ணாம்பு, செங்கட்டி கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் ஐந்து அடி நீள அகலத்தில் கர்ப்பக்கிரகம், அந்தராளத்தைக் கொண்டுள்ளது. மூன்று தளத்தில் அமைந்த இதன் விமானம் 13 அடி உயரம் கொண்டது. இதன் தேவகோட்டம், சாலை, கர்ணக்கூடு என்பன கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழக்கலைமரபிற்குரியதென்பது தமிழ் நாட்டு கலை வரலாற்றாசிரியர்களின் கருத்தாகும்.

  அண்மையில் மண்ணித்தலை ஆலயத்திற்கு தெற்கே கௌதாரிமுனை என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் ஒரு ஆலயத்தின் அழிபாடுகளை அடையாளம் காண முடிந்தது. சிறிய பற்றைக் காடுகளாலும், பனை மரங்களாலும் ஆலயத்தின் அமைப்பை அடையாளம் காணமுடியாத நிலையில் இதை அடையாளப்படுத்தியபோது ஆலயத்தை மூடிய நிலையில் பாம்புப் புற்றுகளும் ஆலயத்திற்கு உள்ளேயும், வெளியே ஆலமரங்களும், பனை மரங்களும் வளர்ந்து காணப்பட்டன.

  மிகுந்த பயத்துடன் இவ்வாலயத்தை துப்பரவு செய்து பார்த்த போது ஏறத்தாள 70 அடி நீளத்திலும், 30 அடி அகலத்திலும் அமைந்த இவ்வாலயம் கர்ப்பக்கிருகம், அந்தராளம், முன்மண்டபம், கொடிக்கம்பம், துணைக்கோவில் கொண்ட ஆலயம் என்பது தெரிய வந்தது. கோறக்கல், சுதை, சுண்ணாம்பு, செங்கட்டி கொண்டு அமைக்கப்பட்ட இவ்வாலயம் மண்ணித்தலைச் சிவாலயத்தைவிடக் காலத்தால் பிற்பட்டதென்பது தெரிகிறது. ஆனால் சுற்றாடலில் பல நூறு ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்தற்கான சான்றுகள் காணப்பட்ட போதும் அந்த இடத்தில் பழமை வாய்ந்த ஒரு ஆலயம் கைவிடப்பட்ட நிலையிலும் அதன் தோற்றம் திராவிடக் கலைமரபுடன் காட்சியளிப்பது இவ்வாலயமும் ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்னர் கட்டப்பட்டிருக்கலாம் என்பதைக் கட்டியம் கூறுவதாக உள்ளது.

  கிளிநொச்சியின் தொன்மை பற்றிய மேற்கூறப்பட்ட சான்றுகள் அப்பிராந்தியத்தின் எதிர்கால ஆய்விற்கான ஒரு தொடக்கப்புள்ளியாகும். எதிர்கால ஆய்வுகள் மேலும் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என நம்புகிறேன்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
வினோத நிகழ்வுகள்
உலக சட்டம்
சினிமா
 மரண அறித்தல்