கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாறு,
 • கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாறு,

  (19-ந்தேதி வியாழக்கிழமை) கேதார கவுரி விரதம் கடைபிடிக்க வேண்டிய தினமாகும். இந்த கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாற்றை பார்க்கலாம்..

  மிக மிக பண்டைய காலத்தில் கைலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பர்.

  பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி ரிஷிகள், தேவர்கள் மற்றும் அநேக தேவ ரிஷிகளும் தினந்தோறும் இவர்கள் இருவரையும் சுற்றி வந்து நமஸ்கரித்துச் செல்வர்.

  இவ்வாறு அனைவரும் தினமும் செய்ய பிருங்கி ரிஷி என்பவர் மட்டும் பார்வதி தாயினை விட்டு சிவனை மட்டும் சுற்றி வந்து நமஸ்கரித்தார்.

  இதனால் பார்வதி தாய்க்கு கோபம் உண்டாயிற்று. ஏன் பிருங்கி ரிஷி இவ்வாறு செய்கிறார் என்று பார்வதி, சிவனைக் கேட்டார்.

  சிவன் அதற்கு பிருங்கி ரிஷி பாக்கியங்களை கேட்கவில்லை. மோட்சத்தினையே விரும்புகிறார். ஆகவே தான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்தார் எனக் கூறினார்.

  பார்வதி தேவி பிருங்கி ரிஷியினைப் பார்த்து ‘உன் தேகத்தில் இருக்கின்ற ரத்த மாமிசங்கள் நான் கொடுத்தது. அதனை திருப்பி கொடுத்து விடு என்று கூறினார்.

  பிருங்கி ரிஷியும் தேவி கூறியபடியே செய்தார். அதனால் அவருக்கு நிற்கக் கூட முடியாமல் போயிற்று.

  பரமசிவன் பிருங்கி ரிஷியினை நோக்கி, ‘நீ பார்வதி தேவியினை விட்டு என்னை நமஸ்கரித்ததால் அன்னை உனக்கு இந்த தண்டனை அளித்தாள்’ எனக் கூறி ஒரு கைத்தடி ஒன்றினைக் கொடுத்தார்.

  பிருங்கி ரிஷி அதனைப் பெற்றுச் சென்றார். பார்வதி தேவி சிவனிடம் கோபித்துக் கொண்டு கைலாயத்தினை விட்டுச் சென்று பூவுலகிற்கு வந்தார். அங்கு வால்மீகி மகரிஷி சஞ்சரிகா நின்ற ஒரு நந்தவனத்தில் ஒரு மரத்தின் அடியில் எழுந்து அருளினார்.

  அந்தப் பகுதியானது 12 ஆண்டுகள் மழையின்றி வறண்டு இருந்த பூமி. பார்வதி அம்மன் வந்து விருட்‌ஷத்தின் அடியில் அமர்ந்ததும் அங்கு மழை பெய்தது. செடி, கொடி, மரங்கள் தழைத்தன. பூத்துக் குலுங்கின.

  பல அரிய பூக்களின் வாசத்தினைக் கண்டு வால்மீகி மகரிஷி அங்கு வந்து அன்னையை தரிசித்தார்.

  பூஜை செய்து வணங்கி அம்பிகையிடம் முழு விவரங்களும் கேட்டறிந்தார். பின்னர் தேவியினை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தின சிம்மாசனத்தினில் அமரச் செய்தார்.

  பார்வதி தேவி வால்மீகி முனிவரைப் பார்த்து, “ரிஷியே, நான் மீண்டும் ஈசனுடன் சென்று சேருவதற்கு இந்த பூலோகத்தில் மிக மேலான ஒரு விரதத்தினை நான் ஏற்று செய்ய வேண்டும்.

  அப்படியொரு விரதத்தினை கூறுங்கள் என்று கூறினாள். அப்போது வால்மீகி முனிவர் அம்பிகையை வணங்கி கூறியதாவது:-

  “இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பு என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என்றார்.

  அம்பிகை அந்த விரதத்தினை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்க வால்மீகி முனிவர், ‘புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது.

  தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆல மரத்தின் கீழ் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து, அபிஷேகம் செய்து விபூதி, சந்தனம், பூக்கள், அட்சதை போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், பட்சணங்கள் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தினையே உண்ண வேண்டும்.

  நோன்பு கயிற்றினை கையில் அணிய வேண்டும். 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்று கூறினார். இந்த கேதார கவுரி விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

  இத்தகைய சிறப்புடைய கேதார கவுரி விரதம் பொதுவில் 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.

  பொதுவாக நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவபார்வதியாக வழிபடப்படுகின்றது. தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்டு இருப்பர். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார்-சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.

  இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.

  ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி பட்டுவஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும்.

  என 16 நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

  பின்னர் அம்மி குழவியினை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசே‌ஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ ஷ்தோத்ரம் செய்து பூஜிக்க வேண்டும்.

  தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு நமஸ்கரித்து பின்னர் வீட்டில் பெரியவர் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

  பார்வதியும் அவ்வாறே இந்த விரதத்தை கடை பிடித்தாள்.

  இறைவனும் 21-ம் நாள் தேவ கணங்கள் சூழ காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து அர்த்த நாரீஸ்வரராக கைலாயம் சென்றார்.

  அன்று முதல் தேவர்கள் அனைவரும் இந்த விரதத்தினை கடை பிடிக்க தொடங்கினார்கள்.

  ஒரு சமயம் தேவ கன்னியர் கங்கை கரையில் விரதத்தினை அனுஷ்டித்து வந்தனர். அச்சமயம் புண்ணியவதி, பாக்கியவதி என்ற இரு அரச குமாரிகள் அங்கு வந்தனர்.

  அரச குமாரிகளாக அவர்கள் இருந்தாலும் நாடு செல்வங்களை அவர்களது தந்தை இழந்திருந்த காரணத்தினால் மிகுந்த வறுமையில் இருந்தனர்.

  தேவ கன்னியர்கள் நோன்பு கயிற்றினை இவர்களுக்கும் கொடுக்க இருவரும் அதனை கையில் கட்டிக் கொண்டு வீடு திரும்பினர். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

  குடிசை வீடு மாட மாளிகை ஆகி இருந்தது. இழந்த நாடு மீண்டும் கிடைத்தது. இருவருக்கும் திருமணம் ஆகி புத்திர பாக்கியத்துடன் வாழ்ந்தனர்.

  இச்சமயத்தில் பாக்கியவதி தன் கையில் இருந்த கயிற்றினை புதரின் மேல் எரிந்து விட்டாள்.

  அதன் விளைவாக அவள் மிகுந்த வறுமையினை அடைந்தாள். நாடும் போயிற்று. இந்த நோன்பு கயிறு விழுந்த இடம் அவரைக் கொடி மீது என்பதால் நிறைய அவரை காய்த்துக் கொட்டியது. பாக்கியவதி குடும்பம் அவரைக் காய்களை உண்டே காலம் தள்ளினர்.

  ஒருநாள் பாக்கியவதி தன் மகனை அழைத்து ‘மகனே நாம் மிகவும் கஷ்டப்படுகின்றோம். ஆகவே நீ உன் பெரியம்மா புண்ணியவதியிடம் சென்று சிறிது பொருள் கேட்டு வாங்கி வா’ என்று அனுப்பினாள்.

  பையனும் அவ்வாறே பெரியம்மாவிடம் சென்றான். புண்ணியவதியும் மனம் வருந்தி பாக்கியவதி மகனிடம் பொருள் கொடுத்து அனுப்பினாள்.

  அதை வாங்கி வந்த பையன் குளக்கரையில் மூட்டையினை வைத்து விட்டு உணவு உண்ணும் போது மூட்டையை ஒரு கருடன் தூக்கிச் சென்று விட்டது.

  வருந்திய பையன் வந்தவாறே தனது பெரியம்மா புண்ணியவதியிடம் சென்று நடந்தவற்றை கூறினான். வருந்திய புண்ணியவதி மீண்டும் பொருள் கொடுத்து அனுப்பினாள்.

  இம்முறை திருடன் வழியில் அப்பொருளினை திருடிக் கொண்டு சென்று விட்டான். வருந்திய புண்ணியவதி பையனிடம் ‘ஏன் உன் அம்மா கேதார கவுரி விரதத்தினை அனுஷ்டித்து வருவதில்லையா’ என்று கேட்டாள். பையன் தன் அம்மாவின் நோன்பு கயிறு புதரில் விழுந்து விட்டதனை கூறினான்.

  ‘ஓ, அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் வந்துள்ளது’ என்று கூறி அப்பையனை தன்னோடு வைத்துக் கொண்டு ஐப்பசி மாத விரதத்தினை முடித்து நோன்பு கயிறு, பொருட்கள் இவற்றினை வைத்து புண்ணியவதி பாக்கியவதிக்கு அவன் மகன் மூலம் அனுப்பினாள்.

  பெரியம்மாவிடம் விடை பெற்று பையன் வீடு திரும்புவதற்குள் திருடன் தான் திருடிய பொருளை அச்சிறுவனிடம் கொடுத்தான்.

  கருடன் மூட்டையினை திரும்ப கொண்டு வந்து போட்டது. பாக்கியவதி பல செல்வங்களையும், நாடு உள்பட திரும்ப பெற அன்று முதல் பாக்கியவதி கேதார கவுரி விரதத்தினை விடாது செய்து மேன் மேலும் நன்மைகளைப் பெற்றாள்.

  நாளை நாமும் இந்த விரதத் தினை கடை பிடித்தால் எல்லாவித செல்வங்களையும் பெற முடியும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
வினோத நிகழ்வுகள்
உலக சட்டம்
 மரண அறித்தல்