கட்டலோனிய சுதந்திர பிரகடனம் நிறுத்திவைப்பு,
 • கட்டலோனிய சுதந்திர பிரகடனம் நிறுத்திவைப்பு,

  கட்டலோனியா சுதந்திர நாடாவதற்கான மக்களின் ஆணையை ஏற்பதாக அறிவித்திருக்கும் அந்த பிராந்திய தலைவர் ஸ்பெயினுடனான பேச்சுவார்த்தைக்காக சுதந்திர பிரகடனத்தை நிறுத்திவைப்பதாக கூறியுள்ளார்.

  எனினும் கட்டலோனிய தலைவர் கார்ல்ஸ் புயிக்டெமொன்டின் சுதந்திர அறிவிப்பை நிராகரித்திருக்கும் ஸ்பெயின் மத்திய அரசு, அது குறித்து பேச்சுவார்த்தையையும் ஏற்க மறுத்துள்ளது.

  கட்டலோனிய தலைவரை பற்றி விபரித்திருக்கும் ஸ்பெயின் துணை பிரதமர், “அவருக்கு தான் எங்கே இருக்கிறோம், தான் எங்கே செல்கிறோம்” என்று தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  பார்சிலோனாவில் உள்ள கட்டலோனிய பிராந்திய பாராளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை உரை நிகழ்த்தியபோதே புயிக்டெமொன்ட் சுதந்திரம் பற்றிய அறிவிப்பை விடுத்தார்.

  கடந்த ஒக்டோபர் 1 ஆம் திகதி கட்டலோனியாவில் இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து சுதந்திரம் பெற 92 வீத ஆதரவு வாக்கு கிடைத்திருந்தது. எனினும் இந்த வாக்கெடுப்பை கூட்டாட்சிக்கு ஆதரவானவர்கள் புறக்கணித்த நிலையில் 43 வீதமான வாக்குப் பதிவே இடம்பெற்றது.

  “ஒக்டோபர் முதலாம் திகதியின் வாக்கெடுப்பு முடிவு அடிப்படையில் கட்டலோனியா சுதந்திர நாடாவதற்கான உரிமையை பெற்றுள்ளது. அதனை ஏற்று மதிக்கும் உரிமையை பெற்றுள்ளது” என்று புயிக்டெமொன்ட் தனது உரையில் குறிப்பிட்டார்.

  “மக்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் என்பதை வாக்கு பெட்டிகள் வலியுறுத்தியுள்ளன. அந்த வழியிலேயே நாம் செல்வோம். ஜனாதிபதி என்ற வகையில் கட்டலோனியா ஒரு சுதந்திர நாடாக குடியரசொன்றை நிறுவும் பொறுப்பை பெற்றுள்ளேன்” என்று அவர் பிராந்திய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

  எனினும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உதவியாக உடனடியாக சுதந்திர பிரகடனம் வெளியிடுவதை ஒத்திவைக்கும்படி புயிக்டெமொன்ட் பாராளுமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

  செவ்வாய்க்கிழமை உரையில் கட்டலோனிய தலைவர் ஓர் அடையாள சுதந்திர பிரகடனத்தை வெளியிடுவார் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டபோதும் அது உடன் நிறுத்திவைக்கப்பட்டு மத்திய அரசை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.

  இதன்போது புயிக்டெமொன்ட் மற்றும் அவரது கூட்டணியினர் பாராளுமன்ற அரங்கிற்கு வெளியில் சுதந்திர பிரகடனத்தில் கைச்சாத்திட்டுவிட்டு பின்னர் அதனை ஒத்திவைத்து மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

  எனினும் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர பிரகடனத்தின் சட்ட அந்தஸ்த்து பற்றி உறுதி செய்ய முடியாதுள்ளது.

  கட்டலோனிய தலைவரின் உரைக்கு பார்சிலோனாவில் கூடிய சுதந்திரத்திற்கு ஆதரவானோர் கரகோசம் எழுப்பி வரவேற்றனர். எனினும் அவரது நிலைப்பாடு குறித்து பலரும் அதிருப்பிதியை வெளியிட்டுள்ளனர்.

  சர்வதேச மத்தியஸ்தத்திலான பேச்சுவார்த்தை ஒன்றுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஸ்பெயின் துணை பிரதமர் சொராயா சயென்ஸ் நிராகரித்துள்ளார். “புயிக்டெமொன்ட் மட்டுமல்ல வேறு எவராலும் மத்தியஸ்தத்தை திணிக்க முடியாது” என்று அவர் கூறினார்.

  இந்த சர்வஜன வாக்கெடுப்பு சட்டவிரோதம் என்றும் அதன் முடிவு செல்லாது என்றும் ஸ்பெயின் மத்திய அரசின் நிலைப்பாட்டை அதன் நீதி அமைச்சர் ரபாயேல் கடலா மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார்.

  கட்டலோனியா ஸ்பெயின் நாட்டிலுள்ள தன்னாட்சி பிரதேசம் ஆகும். தன்னாட்சி பிரதேசமாக இருந்த கட்டலோனியாவுக்கு, கடந்த 2005 ஆம் ஆண்டு, கட்டலோனிய மொழி, வரி மேலாண்மை, நீதித் துறை நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில், அப்பகுதிக்கு ‘நாடு’ என்னும் சிறப்பு அந்தஸ்தை வழங்கி ஸ்பெயின் நாட்டு அரசியலமைப்பு திருத்தப்பட்டது. அந்தத் திருத்தத்தை ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு ரத்து செய்தது தனி நாட்டு கோரிக்கையை வலுப்பெறச் செய்தது.

  கட்டலோனிய பாராளுமன்றத்தில் பிரிவினைக்கான ஆதரவு பெரும்பான்மையாக இருந்தாலும், ஸ்பெயின் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உட்பட பெரும்பாலானோர் இதற்கு எதிராகவே உள்ளனர்.

  திரும்பி வர முடியாத பாதையை தேர்வு செய்ய வேண்டாம் என்றும், தன்னிச்சையாக சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட வேண்டாம் என்றும் ஸ்பெயின் அரசு புயிக்டெமொன்டிக்கு அறிவுறுத்தி இருந்தது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சரித்திரம்
இலங்கை செய்தி
சிறுவர் உலகம்
 மரண அறித்தல்