தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டரை மடங்கு சம்பள உயர்வு,
  • தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இரண்டரை மடங்கு சம்பள உயர்வு,

    குறைந்தபட்சம் ரூ.15,700; அதிகபட்சம் ரூ.2,25,000,முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2.57 மடங்கு சம்பள உயர்வு அளிக்க முடிவு செய்து அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது.

    இந்த ஊதிய உயர்வை சரிகட்ட, மதுபான கட்டணத்தை தமிழக அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று காலை 11.25 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் மற்றும் முதல்வரின் தனி செயலாளர்கள் கலந்துகொண்டனர். அமைச்சரவை கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

    அமைச்சரவை கூட்டத்தில் எடுத்த முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கை:
    மத்திய ஊதிய குழு திருத்திய ஊதிய விகிதங்களை செயல்படுத்தும் போதெல்லாம், தமிழக அரசும் அதே  ஊதிய விகிதங்களை மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவித்து வந்துள்ளது. அதேபோல், ஒவ்வொரு முறையும் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்தும்போதும், உடனுக்குடன் மாநில அரசும் உயர்த்திய அகவிலைப்படியை வழங்கி வருகிறது.

    மத்திய அரசின் 7வது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள ஊதிய விகிதங்களின் அடிப்படையில், மாநில அரசின் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதத்தை உயர்த்தி வழங்குவது குறித்து தக்க பரிந்துரைகளை அரசுக்கு அளித்திட ‘அலுவலர் குழு’ அமைத்தது.      அதன்படி, அலுவலர் குழு ஆய்வுகள் மேற்கொண்டு தனது பரிந்துரைகளை கடந்த மாதம் 27ம் தேதி தமிழக அரசுக்கு சமர்ப்பித்தது. இந்த பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு விரிவாக ஆய்வு செய்து, இன்று (நேற்று) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதனை முழுமையாக ஏற்றுக்கொண்டு, அதை செயல்படுத்துவதற்கான அரசாணைகளை உடனடியாக பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளேன்.  

    மத்திய அரசு பின்பற்றிய அதே 2.57 என்ற பெருக்கல் காரணியால், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் தற்போதைய ஊதியத்தை பெருக்கி, அவற்றை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. (அரசு ஊழியர்கள் தற்போது சம்பளமாக பெறும் பேசிக் மற்றும் கிரேடு பே இரண்டையும் கூட்டி, 2.57ஐ பெருக்கி வரும் தொகை தான் தற்போதைய சம்பள உயர்வு. அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தற்போது பெறும் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் சம்பள உயர்வு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)

    மாநிலத்தின் நிதிநிலையையும், அதே சமயம் அரசின் திட்டங்களையும் பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் அவசியத்தை கருத்தில் கொண்டு, இந்த புதிய ஊதிய உயர்வை 1.1.2016 முதல் கருத்தியலாகவும், 1.10.2017 முதல் பணப்பயனுடனும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இதன்படி, தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100 மற்றும் அதிகபட்ச ஊதியம்  ரூ.77,000 என்பது உயர்த்தப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ரூ.15,700 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.2,25,000 எனவும்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய ஊதியக்குழுக்களால் தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு வாடகைப்படி போன்ற பல்வேறு படிகளுக்கான  உயர்வை விட இம்முறை அதிகமான உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    அதேபோன்று, அனைத்து தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும், மத்திய அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு  கடைபிடித்த அதே 2.57 என்ற பெருக்கல் காரணியை பின்பற்றி  ஓய்வு ஊதிய உயர்வை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

    இதனால், புதிய உயர்த்தப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூ.7,850 என்றும், அதிகபட்ச ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் முறையே ரூ.1,12,500 மற்றும் ரூ.67,500 என்றும் உயர்த்தி வழங்கப்படும். மேலும், ஓய்வு பெறும்போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான அதிகப்பட்ச வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம பஞ்சாயத்து செயலர் மற்றும் அனைத்து துறைகளில் பணியாற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் பணியாளர்களுக்கு  சிறப்பு காலமுறை ஊதியம் 2.57 என்ற  காரணியால் பெருக்கி, திருத்திய ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு அவர்களின் குறைந்தபட்ச  ஊதியம் ரூ.3000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.11,100 ஆகவும் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு தொகுப்பூதியம்,  நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குறைந்தபட்சமாக 30 சதவிகித ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகளின் அடிப்படையில், அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.8,016 கோடி கூடுதல் ஊதியமும், ஓய்வு பெற்றோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.6,703 கோடி கூடுதல் ஓய்வூதியமும் வழங்கப்படும்.  

    இதனால் ஆண்டுக்கு ஏற்படும் மொத்த கூடுதல் செலவான ரூ.14,719 கோடியை தமிழ்நாடு  அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தினரின் நலன் கருதி மாநில அரசே முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளது.      இந்த அறிவிப்புகள் மூலம் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சுமார் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களும் பலனடைவார்கள். இதற்கான ஆணைகளை விரைவில் வெளியிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முதல்வர் சம்பள உயர்வு அளித்துள்ள அதே நேரம், இந்த கூடுதல் செலவை சரிக்கட்ட மதுபானம் விலையை அதிரடியாக உயர்த்த நேற்று முதல்வர் எடப்பாடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது, அரசு டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் ஒரு குவாட்டர் (180 மி) பாட்டல் விலை ரூ.12 வரை உயருகிறது. பீர் பாட்டில் ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசு உத்தரவு விரைவில் வெளியாகும் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஊழியர்கள் மகிழ்ச்சி: குடிகாரர்கள் அதிர்ச்சி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 20 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்ற செய்தி நேற்று வெளியாகியது. இதைக்கேட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும், தாங்கள் எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கவில்லை என்ற வருத்தத்தை வெளியிட்டனர். அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.14,719 கோடி செலவாகும் என்று கூறப்படுகிறது.

    இந்த செலவை சரிக்கட்ட மதுபானங்களின் விலையை அரசு அதிரடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனால் மது குடிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடிகாரர்களிடம் இருந்து பணத்தை பறித்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதா? என்று குமுறினர். இதுபற்றி மது குடிக்காத பொதுமக்கள் சிலர் கூறும்போது, அரசு கஜானாவில் இருந்து அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மூலம் பணத்தை கூடுதலாக வழங்கி, மதுபானத்தின் விலையை அதிகரித்து அதே கூடுதல் பணத்தை அரசு கஜானாவுக்கு தமிழக அரசு திரும்ப கொண்டு வந்துள்ளது என்று கூறினர்.

    எப்போது அஅமுல்?:
    புதிய ஊதிய உயர்வு 1.1.2016 முன்தேதியிட்டு இந்த மாத சம்பளத்தில் அமல்படுத்தப்படும். அதற்கான பணப்பயன்களும் இணைத்து வழங்கப்படும்.

    எத்தனை சதவீதம்?:
    மத்திய அரசு பின்பற்றிய 2.57 மடங்கு அடிப்படையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும். ஓய்வூதியர்களுக்கும் இதே மடங்கு அடிப்படையில் ஓய்வூதியம் வழங்கப்படும்.

    அதிகபட்ச ஊதியம்:
    முன்பு ரூ.77ஆயிரம் இப்போது ரூ.2.25 லட்சம்

    பணிக்கொடை வரம்பு: ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிப்பு.
    சிறப்பு காலமுறை ஊதியம்: குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரம் அதிகபட்சம் ரூ.11,100.
    தொகுப்பு, நிலையான, மதிப்பு ஊதியம் பெறும் ஊழியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் 30 சதவீதம் உயர்வு
    வீட்டு வாடகைப்படி உள்பட பல்வேறு படிகள் இம்முறை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
    புதிய ஊதியம் வழங்குவதால் ஆண்டுக்கு ரூ.14,719 கோடி அரசுக்கு கூடுதல் செலவு
    12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 7லட்சம் ஓய்வூதியர்கள் பயன் அடைவார்கள்.

    புதிய ஓய்வூதியம்:
    குறைந்தபட்சம் ரூ.7,850
    அதிகபட்சம் ரூ.1,12,500
    மற்றும் ரூ.67,500

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
சட்டம்
இலங்கை செய்தி
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்