சிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்த அமெரிக்கா,
 • சிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்த அமெரிக்கா,

  தமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.

  1919ல் முடிவுற்ற முதலாம் உலக மகா யுத்தத்தில் பங்குகொண்டு அதிலிருந்து தப்பிய இராணுவ வீரர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் தற்போதும் முன்னணிப் போர் அரங்குகளில் பயிற்றுவிக்கப்படும் முக்கிய இராணுவப் பாடங்களாக உள்ளன.

  1875ல், உள்நாட்டு யுத்த வீரர்களுக்கான அமையத்தை அமெரிக்க இராணுவத் தளபதியான ஜெனரல் வில்லியம் ரி.செர்மன் தனது கட்டளைத் தளபதி பதவி நிலையிலிருந்தவாறு மீளவும் வடிவமைத்தார். இவர் யப்பான், சீனா, இந்தியா, பேர்சியா, ரஸ்யா, இத்தாலி, ஜெர்மனி, ஒஸ்ரியா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளின் இராணுவங்களை அமெரிக்க இராணுவத்தினர் நேரடியாகச் சென்று பார்வையிடுவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார். இவர் இது தொடர்பான தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

  இதேபோன்று 1855ல், அமெரிக்க இராணுவத் தளபதியாகக் கடமையாற்றிய றிச்சர்ட் டெலாபீல்ட், செவஸ்ரப்போல் மீதான கிறிமியா யுத்தத்தை நேரடியாகச் சென்று அவதானிப்பதற்கான குழுவொன்றுக்கு தலைமை தாங்கியதுடன், அமெரிக்காவின் இராணுவக் கல்லூரியான வெஸ்ற் பொய்ன்ரில் கண்காணிப்பாளராகப் பதவி வகித்த வேளையில் இது தொடர்பான தனது அனுபவங்களை அறிக்கையாக்கினார்.


  முல்லைத்தீவில் கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட சண்டைப்படகு ஒன்றை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள்

  முல்லைத்தீவில் கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட சண்டைப்படகு ஒன்றை ஆய்வு செய்த அமெரிக்க அதிகாரிகள்

  அமெரிக்கா யுத்தம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன்னர் 150 தடவைகளுக்கு மேல் தனது இராணுவத்தினரை வேற்று நாடுகளில் இடம்பெற்ற யுத்தங்களைப் பார்வையிடுவதற்கும் அதிலிருந்து அனுபவங்களைக் கற்றுக் கொள்வதற்கும் அனுப்பியிருந்ததாக வரலாறு கூறுகிறது.

  இந்த நடைமுறையின் அடிப்படையில், இவ்வாரம் அமெரிக்க இராணுவக் கல்லூரியின் கீழுள்ள நவீன போர் நிறுவகத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். இவர்கள் சிறிலங்காவில் கடந்த 2009ல் முடிவிற்கு வந்த மூன்று பத்தாண்டு கால உள்நாட்டு யுத்தத்தை ஆராய்வதற்கும் அதிலிருந்து போரியல் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடனும் சிறிலங்கா வந்துள்ளனர்.

  அமெரிக்க இராணுவ வீரர்களைப் பொறுத்தளவில் சிறிலங்காவின் போரியல் அனுபவங்களை இவர்கள் ஒருபோதும் அறிந்திராதவையாக இருக்கலாம்.

  உலக நாடுகளின் இராணுவங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் மற்றும் அவர்களது வரலாறு தொடர்பாக நூல்கள் மற்றும் உசாத்துணைகளின் ஊடாக மட்டும் நோக்கக் கூடாது எனவும் அவற்றை நேரடியாகத் தரிசிப்பதன் மூலம் எமக்கான பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே போரியல் தத்துவம் எடுத்துரைக்கிறது.

  அண்மையில் ஏற்பட்டு வரும் நோய்களின் தாக்கங்களை இளம் வைத்தியர்கள் கற்றுணர்வது போலவும், சட்ட மாணவர்கள் நாளாந்தம் நடைபெறும் வழக்குகளைத் தொடர்ந்தும் அவதானிப்பது போலவும், இளநிலை இராணுவ அதிகாரிகளும் தற்போதைய உலக நாட்டு யுத்தங்களை ஆராய வேண்டும்.  கடந்த கால இராணுவ வரலாறு தற்போதும் இராணுவ வீரர்களை வழிநடத்துவதற்கான முக்கிய வழிகாட்டிகளாக உள்ளன. சேர் மைக்கேல் ஹொவார்ட் எழுதிய, ‘1961 கட்டுரை’ என்ற நூலில் போரின் போது ‘ஆழம், அகலம், பின்னணி’ போன்ற மூன்று முக்கிய காரணிகளைக் கருத்திற் கொள்ள வேண்டும் என இராணுவ வீரர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதேபோன்று நவீன போரியல் தத்துவமானது, ‘மூலோபாயம், சமூகம் மற்றும் ஆளுமை’ ஆகிய மூன்று விடயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றது.

  யுத்தத்தின் மூலோபாயக் காரணத்தைப் புரிந்து கொள்வதென்பது மிகவும் முக்கியமானதாகும். ஏனெனில் இதன் மூலம் அடிப்படைப் பிரச்சினைகள், நோக்கங்கள் தொடர்பான பதில்களை முன்வைக்கின்றன. பெற்றோலிய வளத்திற்கான யுத்தம், ஆட்சியைக் கைப்பற்றுவதற்கான யுத்தம், அடக்குமுறையிலிருந்து விடுபடுவதற்கான யுத்தம்,

  தற்பாதுகாப்பற்றவர்களைப் பாதுகாப்பதற்கான யுத்தம் என யுத்தத்தின் நோக்கங்கள் பல வகைப்படுகின்றன.

  முல்லைத்தீவில், விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பசிலன் பீரங்கியை ஆய்வு செய்யும் அமெரிக்க அதிகாரிகள்