இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி 20’ கோலாகல துவக்கம்,
 • இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி 20’ கோலாகல துவக்கம்,

  ஐதராபாத், ஏப்.7: ஐ.பி.எல்., தொடர் நடிகை எமி ஜாக்சனின் கலக்கல் ஆட்டத்துடன் வண்ணமயமாக துவங்கியது.

  இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி 20’ தொடரின் 10வது சீசன் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்கும் எட்டு அணிகளும், தங்களது சொந்த மண்ணில் நடக்கும் முதல் போட்டியில் துவக்க விழா நடத்தலாம்.

  இதன் படி, ஐதராபாத், ராஜிவ் மைதானத்தில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் முதல் லீக் போட்டியில் மோதின. இதற்கு முன், ஐதராபாத் அணி சார்பில் துவக்கவிழா நடந்தது.

  கே.எம். இசைக் குழுவினரின், லகான் படத்தில் இடம் பெற்ற ‘பார்... பார்... ஹான்’ என்ற தேசப்பற்று பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. கடந்த ஒன்பது சீசன்களில் கோப்பை வென்ற அணிகளின் இனிமையான நிகழ்வுகள் ராட்சத ‘ஸ்கிரீனில்’ ஒளிபரப்பானது.

  பின் இந்திய கிரிக்கெட்டின் சாதனை வீரர்களான சேவக் (1999-&2013), கங்குலி (1996-&2008), லட்சுமண் (1996-&2012), சச்சின் (1989&2013) மைதானத்துக்கு வந்தனர்.

  இவர்களுக்கு, பி.சி.சி.ஐ.,யின் தற்போதைய நிர்வாகிகள் வினோத் ராய், சி.கே.கண்ணா, அனிருத் சவுத்ரி மற்றும் ஐ.பி.எல்., தலைவர் ராஜிவ் சுக்லா சார்பில் தங்க ‘பேட்’ வழங்கப்பட்டது. பின் பெங்களூரு, ஐதராபாத் அணி கேப்டன்கள் கோஹ்லி, வார்னர் மைதானத்துக்கு மேள, தாளத்துடன் அழைத்து வரப்பட்டனர்.

  ஜாக்சன் நடனம்

  ‘உண்மையான கிரிக்கெட் உணர்வுடன்’ விளையாடுவதை குறிக்கும் வகையிலான நினைவுப்பரிசை வார்னர், கோஹ்லிக்கு வழங்கினார். அடுத்து பெரிதும் எதிர்பார்த்த நடிகை எமி ஜாக்சன் நடன நிகழ்ச்சி நடந்தது. தங்க நிறத்தினால் ஆன ஆடையுடன், ‘டம்மா, டம்மா...’, ‘கிஸி கோ மேரா...’ என்ற பாடல்களுக்கு நடனம் ஆடினார். கடைசியில் வாண வேடிக்கையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

   நம்ப முடியவில்லை

  சச்சின் கூறுகையில், ‘‘ஐ.பி.எல்., தொடர் பத்தாவது ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை நம்பவே முடியவில்லை. ஒவ்வொரு ஆண்டும் பெரியளவில் வளர்ச்சி அடைகிறது,’’ என்றார்.

  லட்சுமண் கூறுகையில், ‘‘ கிரிக்கெட்டில் ஐ.பி.எல் பெரும் புரட்சியை ஏற்படுத்தி விட்டது. இதில் அறிமுகமற்ற இளம் இந்திய வீரர்களுக்கு இத்தொடர் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது,’’ என்றார்.

  கங்குலி கூறுகையில், ‘‘பிபா உலக கோப்பை தொடரின் பைனலின் போது காணப்படும் எதிர்பார்ப்புக்கு, கொஞ்சமும் குறைவில்லாமல் ஐ.பி.எல்., தொடர் உள்ளது,’’ என்றார்.

  சேவக் கூறுகையில், ‘‘ டெஸ்ட், ஒருநாள் மற்றும் ‘டுவென்டி- 20’ என, மூன்று வித கிரிக்கெட்டிலும் பங்கேற்ற முதல் இந்திய வீரர் நான் தான். ஐ.பி.எல்., தொடர் உண்மையில் சிறப்பானது,’’ என்றார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தமிழகச் செய்திகள்
மரண அறிவித்தல்
மங்கையர் மருத்துவம்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்