அகல் விளக்கு சொல்லும் அழகான தத்துவம்,
 • அகல் விளக்கு சொல்லும் அழகான தத்துவம்,

  கார்த்திகை மாதம் வந்தாலே பெரும்பாலான வீடுகளின் மாடப் பிறையில் மண்ணால் ஆன அகல் விளக்குகள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும். அத்துடன் கார்த்திகை தீபம் வரும் நாள் அன்று மண்ணால் ஆன புதிய அகல் விளக்குகள் வாங்கி ஏற்றி வைப்பர். அத்துடன் வருடா வருடம் புதிய மண் விளக்கு வாங்கும் பழக்கமும் உண்டு.

  வெள்ளி, வெங்கலம், ஐம்பொன், பித்தளை என்று பலவற்றால் ஆன விளக்குகள் இருந்தாலும், கார்த்திகை மாதம் வந்தால் மண்ணால் ஆனவற்றிற்கு தனி மவுசு உண்டு! ஏன் தெரியுமா?

  அவை நம் வாழ்க்கையின் தத்துவத்தை அழகாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதால்! படைப்பில் உயர்ந்தவனாகக் கருதப்படும் மனிதனுக்கு மட்டுமே ஆறாம் அறிவு உள்ளது. அறிவாற்றல் அவன் எண்ணங்களை வளப்படுத்துகிறது. அதாவது உடலும் மனமும் நல்ல முறையில் கை கோத்துக்கொள்ளும் போது மனித வாழ்வு உயர்கிறது. இந்த இரண்டு தத்துவத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது, சுடர் விட்டு எரியும் மண் அகல் விளக்கு.

  மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குப் போல், மனித வாழ்வும் மண்ணில் தான் தொடங்குகிறது. கை தவறியோ, காற்றிலோ தள்ளப்பட்ட விளக்குகள் உடைந்து விடுகின்றன. அது போலத்தான் மனித வாழ்வும் நிலையில்லாதது. மண்ணில் ஆரம்பிக்கும் வாழ்வு, மண்ணிலேயே முடிகிறது. இதைப் பின் வரும் பாடல் வரிகள் அழகாக விளக்குகின்றது.

  'நந்தவனத்திலோர் ஆண்டி,
  அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
  கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக்
  கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தான்டி'

  நம் வாழ்க்கை, ஒரு சக்கரம் போன்றது. அதைப் போலத்தான் அகல் விளக்கும் வட்ட வடிவமாக உள்ளது. ஆனாலும் தனக்கு என்று கொடுக்கப்பட்ட ஆயுள் காலத்திற்குள் மனிதன் சாதனைகளைச் செய்ய வேண்டும். நல்லவனாக வாழ வேண்டும் என்பதைச் சுடர் விட்டு எரியும் தீச்சுடர் உணர்த்துகிறது.

  அகல் விளக்கின் மூக்கு போன்ற பகுதி, மனித அறிவின் ஆன்ம சக்தியின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. ஆன்ம சக்தி வெளிப்படும் போது மனிதன் சாதனையாளர் என்ற பட்டியலில் இணைந்துகொள்கிறான். சுடர் விட்டு எரியும் தீபம், ஒளியைத் தன்னுள் அடக்கிக்கொள்வதில்லை. அதனைப் பிறருக்கு வழிகாட்டியாக ஆக்குவது போல் மனிதனும் தன் அறிவைப் பிறரின் நலனுக்கு, சமூக நலத்துக்குப் பயன்படுத்தித் தன் அறிவு மற்றும் அன்பின் எல்லையை விசாலமாக ஆக்க வேண்டும். இந்தக் கருத்தை உள்ளடக்கித்தான் அகல் விளக்கு என்று அழைக்கப்படுகிறது.

  அகல் என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதி தரும் பல பொருள்களில் ஒரு பொருள் என்ன தெரியுமா? விசாலித்தல். அதாவது விரிதல்! அத்துடன் மனித எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சுடர் தெளிவாக நமக்கு காட்டுகிறது. எந்த நிலையிலும் விளக்கின் சுடரானது மேல் நோக்கியே எரியும். அது போல் மனிதனும் எப்போதும் உயர்வான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதோடு அதற்காகப் பாடுபட்டால் உயர்வு என்பது உறுதி. விளக்கில் ஊற்றப்படும் எண்ணெயும் ஒரு தத்துவத்தை விளக்குகிறது. ஊற்றிய உடன் எண்ணைய் எங்கும் வியாபித்து எல்லா இடங்களையும் தொடுவது போல், மனிதனும் பிரபஞ்சம் எங்கும் உள்ள இறைவனின் கருணையை உணர வேண்டும்.

  ஜோதிட ரீதியாகவும் கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். இந்த ராசியின் அதிபதி யார் தெரியுமா? செவ்வாய். செவ்வாய்க்குப் பூமி புத்திரன், பௌமன் என்று ஒரு பெயரும் உண்டு. பூமிக்கு அதிபதியான செவ்வாயின் ஆதிக்கத்தின் கீழ் வரும் விருச்சிக ராசியில் மண்ணால் ஆன அகல் விளக்கினை வைத்துப் பண்டிகை கொண்டாடுவது பொருத்தம்தானே?

  எனவே இந்த வருடம், கார்த்திகை மாதம், அகல் விளக்கு ஏற்றும் போது நம் வாழ்க்கைத்
  தத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் நம் வாழ்வும் அழகாகச் சுடர் விடும்!

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
உலக சட்டம்
தையல்
தங்க நகை
 மரண அறித்தல்