தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி,
 • தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி,

  தமிழிலக்கியத்தின் வரலாறு பற்றியும் தமிழ் மக்களின் இலக்கிய வரலாறு பற்றியும் எழுதப்பட்டுள்ளனவற்றின் தோற்றல், ஆரம்ப கால வளர்ச்சி, இன்றைய வளர்ச்சி நிலைபற்றி அறிவதற்கா‘ன முயற்சி இவ் அத்தியாயத்தில் இடம் பெறுகின்றது.

  தமிழிலக்கியத்தின் வரலாறு, தமிழரின் இலக்கிய வரலாறு பற்றிய எழுத்துக்களை இவ்வாறு நோக்குவது இதுவே முதற்றடவையானமையால், அவ்வபிவிருத்திகளைக் கால வரிசைக்கிரமமான தொடர்நிலையாக எடுத்துக் கூறும் எண்ணமே முதலில் இருந்தது. ஆனால் இவ்வாய்வின் தேவைகள் அத்தகைய 'முற்று முழுதான ஒரு தொடர் நிலைக்கால வரிசைக்கிரமக் கூற்றினால்' பயனடையப் போவதில்லை. மேலும் அத்தகைய, 'முற்று முழுதான சம்பவத் தொடருரை' என ஒன்று இல்லை. எந்த ஒரு தொடருரையிலும் ஆதார எடுகோளாக ஒரு கருத்து இருக்கவே செய்யும். அந்தக் கருத்து, அத்தொடருரை கூறுவோனது. உலக நோக்கினைக் காட்டுவதாக அமையும், குறிப்பிட்ட ஒரு நடைமுறையின் ஆதாரசுருதியான கருத்து இல்லாது அந்நடைமுறையினை எடுத்துக் கூறிவிட முடியாது.

  தமிழில் இலக்கிய வரலாற்று வளர்ச்சியினைக் கோடிட்டுக் காட்ட முனையும் பொழுது, இதுவரை அவ்விடயம் சம்பந்தமாக எழுதப் பெற்ற நூல்கள் பற்றிய ஒரு விரிவான விவரத்தினைத் தருவதற்கு முயலுதல் வேண்டும். தமிழ் மொழியில் வெளிவந்துள்ள நூல்கள் யாவற்றையும் உள்ளடக்கிய விரிவான நூற்பட்டியல் எதுவும் தமிழில் இல்லை. "English books in print" (அச்சிலுள்ள ஆங்கில நூல்கள்) என்பது போன்ற ஒரு நூல் தமிழுக்கு இல்லை. ஆயினும் இந்தியாவின் 1958ஆம் வருடத்திய 'நூல், புதினப் பத்திரிகைகள் சேர்ப்பித்தற் சட்ட'மும், இலங்கையின் 1948ஆம் வருடத்துப் 'புத்தகங்கள், பருவ இதழ்கள் பதிவுச் சட்டமும்', அவ்வந்நாட்டின் மொழிகளின் வெளிவந்த நூல்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதனைக் கட்டாயமாக்கியுள்ளன. தமிழிலுள்ள நூல்கள் யாவற்றினையும் கொண்ட ஒரு நூற் பட்டியலை வெளியிடுவதற்குத் தமிழ்நாடு அரசு எடுத்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. சீகன்பால்கு ஐயரின் பிபிலோதிக்கா மலபாறிக்கா (Bibilotheca Malabarica, 1708) என்னும் தொகுதி பற்றிக் குறிப்புரை கூறும்பொழுது காமில் ஸ்வெலபில் கூறியுள்ளவை இன்னும் உண்மையாகவேயுள்ளன. 'அதன் மூன்றாம் பாகத்தின் சீகன்பால்க, 119 தமிழ் நூல்களின் பொருளமைதி இலக்கிய வடிவம் பற்றிய குறிப்புக்களை உள்ளடக்கியதும், மற்றவற்றுடன் ஒப்பு நோக்கும் பொழுது பூரண விவரங்களை அடக்கியுள்ளதுமான தமிழ் இலக்கியம் பற்றிய விவரத்திரட்டு ஒன்றினைத் தந்துள்ளார். சீகன்பால்குவிற்குப் பின் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேற் சென்றுவிட்ட பின்னரும் தமிழிலக்கியம் முழுவதும் பற்றிய, அதன் தொடக்கம் முதல் இன்றைய நிலை வரையுள்ள, ஓர் ஆய்வு இதுவரை இல்லை.'1

  இவ்வாய்வின் பொருள் பற்றி விவரிக்கும் நூல்களைப் பெறுவது மிகச்சிரமமான பொறுப்பு ஆகின்றது. சில விடயங்கள் பற்றிய அறிவினைச் சமூகத்தில் மற்றவர்க்குத் தெரியாமல் வைத்திருத்தலை ஊக்குவித்து வந்துள்ள ஒரு பண்பாட்டில், அந்த அறிவின் மூலங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான தடையிலா விருப்பநிலை கிடையாது. 'ஏஷியன் எடுயூகேஷனல் சேவிஸ்' (Asian Educational Service) நிறுவனத்தாரினா‘ல் சில நூல் மீளச்சுப் பதிவு செய்யப்படாதிருந்திருப்பின் அவற்றின் முந்திய அச்சுப் பிரதிகளைப் பெறுவது பெருஞ்சிரமமாகவே இருந்திருக்கும். மேலும் எல்லா நூல் நிலையங்களும் எல்லா நூல்களையும் உடையனவாகவும் இல்லை. எனவே, இவ்வத்தியாயத்தில் இவ்விடயம் பற்றிய சகல நூல்களையும் வாசித்துது ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகைமைக்கோரிக்கை முன் வைக்கப்படவில்லை. எனினும், கரந்தைப் புலவர் கல்லூரி, மறைமலையடிகள் நினைவு நிலையம், இந்தியவியலாய்வுக்கான ஃபிரெஞ்சு நிறுவனம் ஆகிய நிறுவனங்களிலுள்ள நூல் நிலையங்களிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், ஆகியவற்றின் நூல்நிலையங்களிலும், புத்தக வேட்கை கொண்டோருக்குத் திறந்த மனத்துடன் உசாத்துணைப் புகலிடமளிக்கும் தஞ்சை வழக்கறிஞர், சேக்கிழாரடிப்பொடி திரு.ரி.என், இராமச்சந்திரன் போன்றோரிடத்தும், இவ்விடயம் சம்பந்தமாகவிருந்த முக்கியமான நூல்களை வாசித்தறிவற்கான முயற்சி மேற் கொள்ளப்பட்டது. இவ்வகையிற் சேர்க்கப்பட்ட தரவுகளைக் கால ஒழுங்கில் வைத்து நோக்கும்பொழுது, தமிழில் இலக்கிய வரலாற்று வளர்ச்சியின் தன்மையினைக் காணக் கூடியதாகவுள்ளது.

  தமிழிலக்கியத்தின் வரலாறு பற்றிய எழுத்துக்கள் வளர்ந்துள்ள முறையினை அறிவதற்கு முன்னர், முதலில்,

  (அ) இலக்கியத்தின் வரலாற்றை எழுதுவற்கான தேவை பற்றிய பிரக்ஞை ஏற்பட்ட

  (ஆ) அந்த வரலாறுகள் எழுதப்பட்ட

  கல்வி நிலைப் பின்னணி பற்றி அறிந்து கொள்வது அத்தியாவசியமாகின்றது.

  இலக்கிய வரலாறெழுது நெறி ஆய்வியலின் முன்னோடி அறிஞர்களுள் றெனே வெலெக், இலக்கிய வரலாற்று ஆய்வு தோன்றிய முறையினைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.

  'இலக்கிய வரலாற்றின் எழுச்சி, வேகமற்ற, ஆறுதலான ஒரு நடைமுறையாகவே இருந்தது. அதனை, நவீன விமரிசனம், வாழ்க்கை வரலாற்றியல், வரலாறெழுது முறையியல் ஆகியவற்றுடன் மிக்க நெருக்கமாகத் தொடர்புபடுத்திப் பார்க்காவிடின், விளங்கிக்கொள்ளவே முடியாது. இது மனித இனத்தின் ஆய்வறிவு வரலாற்றின் மிகப் பெரிய புரட்சிகளிலொன்றினதும் வரலாற்றுணர்வினதும், நவீன சுயபிரக்ஞையின் விழிப்புணர்வினதும் ஓர் அம்சமாகும். இலக்கிய வரலாறு என்பது, அதன் பயில் துறைக்குரிய குறுவட்டப் பொருளில்ல, வாழ்க்கை வரலாறு போன்ற, ஏற்கெனவே நிலை வேறுடையனவான துறைகளிலிருந்து வேறுபட்டதாய் தனித்துவமான வனர்ச்சி முறைமை மூலம் தோன்றிய ஒன்றாகும். மேலே குறிப்பிட்ட வாழ்க்கை வரலாறு போன்ற பயில்துறைகள் இலக்கியத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டனவாகவிருக்கவில்லை. தனிப்பட்ட ஆக்கங்களினது அன்றேல் தனியொரு இலக்கிய வகையின் கீழ்வரும் செய்யுட்களின் விமரிசனங்களிலிருந்து இத்துறை மெதுவா‘க வளரத் தொடங்கிப் பின்னர் கடந்த காலம் பற்றிய வரலாற்ற நிலைப்பட்ட பொது மதிப்பாய்வா‘க வளர்ந்தது. இலக்கிய வரலாறு என்னும் பயில்துறை, வாழ்க்கை வரலாற்றியலும் விமரிசனமும் ஒன்றாக இணைந்தத பொழுதும், அரசியல் வரலாறெழுது நெறியியலின் செல்வாக்குக் காரணமாக சம்பவத்தொடர் முறை வடிவம் பயன்படுத்தப்பட்ட பொழுதுமே தனிப்பட்ட ஒரு விதிமுறை சேர் ஆய்வுத் துறையாகக் கிளம்பிற்று. ஆனால் இந்நடைமுறையானது, ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுக் காலமாக நடந்தது. பதினெட்டாம் நூற்றாண்டிலே, பூத்த இதன் விதைகளும் வடிவங்களும் முதலில் எவ்வாறிருந்தன என்பதைக் கண்டுகொள்வதற்கு ஆரம்ப காலத்தை மிக உன்னிப்பாக நோக்குதல் வேண்டும்.'2

  பிற்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு கருத்துநிலை இணங்காமைகளுக்கு வெலெக் ஆட்படாதிருந்த காலத்தில் (1947) எழுதப்பட்ட இக்கூற்று, இலக்கிய வரலாறானது தனிப்பட்ட, விதிநெறி ஆய்வொழுங்காக வளர்ந்த முறைமையை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது.

  'வரலாற்றுணர்வினதும், நவீன சுயபிரக்ஞையினதும் விழிப்புணர்வே' இலக்கிய வரலாற்றின; தோற்றத்துக்கான முக்கிய மூலமாகும் எனும் வெலக்கின் கூற்று உண்மையானது. தமிழில் இதன் வளர்ச்சி நடைமுறை அவ்வுண்மையை நிலை நாட்டுவதாக அமைகின்றது. ஆனால் இலக்கிய வரலாறு என்ற படத்தின் குறுகிய வரையறையெல்லைக்குள் அதன் மேலெழுச்சிக்குள் அதன் மேலெழுச்சிக்குக் காரணமாக விருந்தவை என அவர் கூறுபவை, அதாவது 'வாழ்க்கை வரலாறுகள்'. தனிப்பட்ட ஆக்கங்கள் பற்றிய விமரிசனங்கள்', 'தனி இலக்கிய வகைகளின் செய்யுளியலமிசங்கள்' ஆகியவை, எல்லா இலக்கியங்களுக்கும் பொருத்தமானவையாக அமையும் என்று கூறிவிடல் முடியாது. ஏனெனில், வெலெக் இவ்வாறு கூறும் பொழுது, மேனாட்டு இலக்கியப் பாரம்பரியப் பயிற்சியுடையோருக்கு புளூற்றா‘க் (Plutarch) அரிஸ்றோற்றில் (Aristotle) ஆகியோரின் நினைவே வரும்.3 ஆனால் புளூற்றாக்கின் வாழ்க்கை வரலாறு போன்ற ஒரு நூலும் அறிஸ்ற்றோற்றினின் கவிதையியல் (Poetics) போன்ற ஒரு நூலும் எல்லாப் பண்பாடுகளிலும் தோன்றுவதில்லை. உதாரணமாக, தமிழை எடுத்துக் கொண்டோமானால், 'புளூற்றாக்' போன்ற ஓர் ஆக்கம், 1859 வரை, அதாவது சைமன் காசிசெட்டி என்பார் தமிழிலக்கியப் புலவர்கள் பற்றி அத்தகைய ஒரு நூல் வேண்டுமெனக் கருதி எழுதும் வரையில், தோன்றவில்லை. எனினும் தமிழ்ப் புலவர்கள் சிலரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறமுனையும் தமிழ் நாவலர் சரிதை எனும் நூல், 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தோன்றுகின்றது. தமிழ்ச் சங்கம்பற்றிய ஐதிகக் கதையில் தமிழ்ப் புலவர்களின் பெயர்கள் மேற்கூறியவற்றுக்கு முற்றிலும் வேறுபட்ட முறையில் கோவைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழிலுள்ள 'உரைமரபினை'யும் தனிப்பட்ட ஆக்கங்கள் பற்றிய விமரிசன'த்தையும், இவை இரண்டுக்குமிடையே வேறுபாடுகளிருப்பினும், ஓரளவு இணைத்து நோக்கலாம். தனி இலக்கிய வடிவங்களின் கவிதையியல்புகள் பற்றிப் பேசும் நூல்களுக்கான தமிழ் உதாரணங்களைக் காட்டுதல் முடியாது. தொல்காப்பியம் செய்யுளியலை, அறிஸ்ற்றோற்றினின் கவிதையியலுக்குச் சமமானதாகக் கூற முடியாது. தொல்காப்பியத்தில் நூற்பா வடிவிலமைந்து விதிமுறையாகக் கிடக்கும் முறைமை, அறிஸ்றோற்றினின் வாத நெறிப்பட்ட விளக்கப் பண்புக்கு முற்றிலும் வேறுபட்டதாகும்.

  எனினும், பிற்காலத்தே, கொலோனியலிசத்தினால் நிர்ணயிக்கப் பெற்ற மேனாட்டுமயவர்க்கம் காரணமாகவும், மொழியைத் தளமாகக் கொண்ட தேசிய இனத் தனித்துவப் பிரக்ஞை காரணமாகவும், தமிழிரிடையே, 'வரலாற்றுணர்வும், நவீன சுயபிரக்ஞையும் ஏற்பட்ட பொழுது', இலக்கியம் பற்றிய பிரக்ஞையும் இவர்களிடையே தோன்றிவிட்டது என்பதற்கு சாட்சியுண்டு. உண்மையில், இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை தமிழ்த் தேசிய இனப் பிரக்ஞையின் காரணமாகவும் அதன் அளவீடாகவும் அமைந்திருந்தது.

  ஆனால், இந்தப் பிரக்ஞை ஏற்பட்ட கால கட்டத்தினை (அதாவது, 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியினை) எடுத்துக்கொண்டு, தமிழில் இலக்கிய வரலாற்றாய்வின் தொடக்கமாக அக்கால கட்டத்தையே கொள்வதென்பது. தமிழ் இலக்கிய வரலாற்றைப் பெரிதும் ஐரோப்பியமய நோக்குடையதாக்குவதாகும்.

  வரலாறெழுதுமுறையியலுக்கும் ஒரு வரலாறு உண்டு. இலக்கிய வரலாற்றின் வளர்ச்சியை வரலாற்று நிலையில் வைத்து, அதாவது கால வரிசைப்படுத்தப்பட்ட ஆசிரியர்கள், ஆக்கங்கள், நோக்குகள், கருத்து நிலைகளின் வைப்பு முறைத் தொடரினை ஆதாரமாகக் கொண்டு, எழுதுதல் வேண்டும். மேலே எடுத்துக் கூறியனவற்றை நோக்கும் பொழுது, நாம் இன்று கருதுகின்ற முறைமையிலமையும் இலக்கிய வரலாறு மேனாட்டுச் செல்வாக்குக் காலத்திலேயே தோன்றுவதனைக் காணலாம். ஆனால் இப்படிக் கூறுவதனால், தமிழில், மேனாட்டுத் தாக்கத்துக்கு முந்திய காலத்தில், இலக்கிய வரலாறு எனும் கருதுகோள் இருக்கவில்லை என கூறிவிட முடியாது. இன்று நாம் இலக்கிய வரலாறு எனக் கொள்ளும் ஆய்வொழுங்கானது, ஒரு குறிப்பிட்ட முறைமையிலமைந்த இலக்கியப் பிரக்ஞை காரணமாகவும் வரலாற்றுப் பிரக்ஞை காரணமாகவும் தோன்றியதாகும். இத்தேசிய அல்லது தேசிய இனப்பிரக்ஞை முறைமையின் தனித்துவமான, அதற்கேயுரிய பண்புகள் பற்றிய ஆய்வில் இறங்காது, இந்தப் பிரக்ஞை முறைமையானது, தமிழர்கள் தங்கள் மொழியினையே தமது தனித்துவத்தின் சின்னமாகக் கொள்ளும் ஒரு நிலைமை தோன்றுவதற்கு அவர்கள் அந்நியப்பட்ட ஓர் ஆட்சி முறைக்குக் கீழே, தமிழரல்லாதோருடன் இணைந்து வாழ்ந்தமையே காரணம் எனக் குறிப்பிடலாம். அதாவது, பிறிதொரு வகையாற் கூறுவதெனின், இன்றுள்ள தமிழரின் இன்றைய இலக்கியப் பிரக்ஞை முறைமை தோன்றுவதற்குத் தமிழர், பிறமொழிக் குழுவினரிடையே வாழ்ந்தமையே காரணமாகும். தமிழர்கள் தமிழிலக்கியங்களை நோக்கம் முறைமையினை இந்நிலை பெரிதும் நிர்ணயித்துள்ளது. தமிழுக்கு அரசியல் மேலாண்மை கிடையாத பன்மொழி நிலையில் தமிழின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுவதற்கு அதன் பழைமையை வற்புறுத்தவும், பிறமொழிகள மீதான அதன் செல்வாக்கைப் பற்றி வாதித்து நிறுவவும் வேண்டியமைக்கான தேவை இதன் காரணமாகவே ஏற்பட்டது.

  இவ்வாறு கூறும்பொழுது, மேனாட்டுத் தாக்கத்துக்கு முற்பட்ட காலத்தில், தமிழர்கள், தமிழரல்லதோரின் ஆட்சிகளின் கீழ் வாழ வேண்டிய வரலாற்று நிலைமை ஏற்படவில்லை எனக் கூறுவதாகாது. அவ்வாறான காலகட்டங்கள் இருந்தன. தெலுங்கு மொழிக்காரரான நாயக்கப் பிரதானிகளின் ஆட்சிக் காலம், மராட்டிய மொழிக்காரனின் ஆட்சிக் காலம், மலபார்ச் சுல்தானின் ஆட்சிக் காலம் என உதாரணங்களைக் காட்டலாம். எனினும் இவை தமிழ்நாடு முழுவதையும் தம்முள் அடக்கியவையாகவிருக்கவில்லை. இவ்வாட்சியாளர்களின் தாக்கம் குறிப்பிட்ட பிரதசத்துக்குள்ளேயே வரையறுக்கப் பட்டுக் கிடந்தது. மேலும், சுல்தானின் ஆட்சி தவிர்ந்த மற்றைய ஆட்சிகள், அத்துணை பண்பாட்டு அந்நியப்பாடு கொண்டவையல்ல. சுல்தானுடைய ஆட்சியின் கீழுங் கூட, பண்பாட்டுக் கலப்பு வேகம் ஓரளவு அதிகமாகவே இருந்தது.

  இலக்கியப் பாரம்பரியம் பற்றிய, மரபுணர்வு பற்றிய பிரக்ஞை முறைமை இத்தகைய சூழலில் வேறுபடுவது இயல்பே.

  அ. இப்பகுதியில் முதலில், தமிழ் இலக்கியத்தின் வரலாறு பற்றிய எழுத்துக்களின் வளர்ச்சியிற் கா‘ணப்படும் (கால) கட்டங்களைச் சுட்டுவதும்.

  ஆ. அக்கால கட்டங்களை ஓரளவு விரிவாக ஆய்வதுவும் மேற்கொள்ளப்படவுள்ளன.

  இந்த 'இலக்கியத்தின் வரலாறு' பற்றிய எழுத்துக்களின் வளர்ச்சியிலுள்ள பல்வேறு கால கட்டங்களை நிர்ணயிப்பதிலுள்ள பிரதான பண்பு, குறிப்பிட்ட இந்தக் கால கட்டங்களில், அவ்வக் காலத்தில் வாழ்ந்த, பண்பாடு பற்றித் தெளிவான கருத்துக்களையுடைய மக்கள் மட்டத்தில், இலக்கியப் பாரம்பரியம் பற்றிய நிலவிய பிரக்ஞையின் தன்மையை அறிந்து கொள்வதேயாகும். ஒவ்வொரு கட்டத்திலும் மேலாண்மையுடன் விளங்கிய பிரக்ஞை முறையைக் குறிப்பிட்டு, அப்பிரக்ஞை எத்தகைய பிண்டப் பிரமாணமான முறையில் வெளிப்படுத்தப்பட்டது என்பதை அறிவதற்கா‘ன ஒரு முயற்சி இங்கு மேற்கொள்ளப்படுகின்றது. சமூக இருக்கைநிலை சமூகப்பிரக்ஞையை நிர்ணயிக்கின்றது. இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞை, சில சமூக-பண்பாட்டுத் தேவைகளின் பிரதிபலிப்பேயாகும்.

  இலக்கிய வரலாற்றின் தோற்றம் வளர்ச்சியிலுதவிய பெரும் காரணிகளுள் ஒன்றாகத் தேசாபிமானத்தினை, றெனே வெலெக், குறிப்பிட்டுள்ளார்.5 தேசாபிமானம் என்பது குறிப்பிட்ட தேசக் குழுமத்தின் கடந்த காலச் சாதனைகளினால் ஏற்படும் பெருமித உணர்வினால் தோன்றுவது. அத்துடன் வென்றெடுக்கப்பட்டவற்றை நிலைபேறுடையனவாக்கும் முயற்சியும் முக்கியத்துவமுடைய வொன்றாகும்.

  தம் தேவைகளினைத் தெளிவாக எடுத்துரைக்கக் கூடியவரிடையே நிலவிய பிரக்ஞை முறைமையினை உரை கல்லாக் கொண்டும், அப்பிரக்ஞை முறைமையினைக் கொண்டும் நோக்கும்பொழுது, தமிழிலக்கிய வரலாறு எழுதுநெறி பற்றிய வரலாற்றைப் பின்வரும் கட்டங்களாக வகுத்துக் கொள்ளலாம் எனும் கருத்து முன் வைக்கப்படலாம்.

  I - 1700

  II - 1700-1835

  III - 1835-1929

  IV - 1930-க்குப் பின்வரும் காலம்
  (அ) 1930-1950
  (ஆ) 1950------

  இக்கட்டங்களாக வகுப்பதற்கான அடிப்படையினைத் தெளிவுபடுத்துதல் வேண்டும்.

  தமிழ்நாட்டுப் புலமை வாழ்வின் பாரம்பரிய அமைப்பில், பதினெட்டாம் நூற்றாண்டு முதல் மாற்றம் தொடங்குவதைக் காண்கின்றோம், பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர், இஸ்லாத்தின் வருகையைத் தவிர, தமிழின் இந்தியத் தன்மையை மறுதலிக்கத் தக்க எந்த ஒரு சக்தியும் தொழிற்பட்டதெனக் கூறிவிட முடியாது. இஸ்லாத்தைப் பொறுத்தவரையிலுங்கூட அது தனது மதத் தேவைகளுக்குத் தமிழ் லிபியைப் பயன்படுத்துவதைக் குறைத்தது, மார்க்க தேவைகளுக்கான தமிழ் எழுத்துக்களையும் அறபியிலே எழுதி, அறபுத் தமிழ் எனும் எழுத்து முறையாகப் போற்றி வந்தது. இதனால் தமிழ் நாட்டு முஸ்லிங்களைப் பொறுத்த வரையில் அவர்களது மாக்கத் தேவைகளுக்கா‘ன எழுத்துக்களை அவர்கள் இஸ்லாமியப் பாரம்பரியத்துக்கிணைய அறபு வடிவிலேயே பேணக் கூடியதாகவிருந்தது. இதனைத் தவிர, தமிழிலக்கியத்தின் இந்தியப் பண்பாட்டுக் கோலத்தைப் பாரதூரமான வகையில் இடையீடு செய்யக் கூடிய சக்திகள் எதுவும் தொழிற்படவில்லை. அது காலவரைப்பட்ட தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தினை, இந்தியப் பண்பாட்டின் முழுமையை நிறைவு செய்யும் அங்கங்களாக விளங்கும் இந்துக்களும், சமணர்களும், பௌத்தர்களும் பரஸ்பரச் செல்வாக்குகள் மூலம் உருவாக்கியிருந்தனர். 1700-க்கு முன்னர் றோமன் கத்தோலிக்கம் தமிழ்நாட்டிற்கு வந்து விட்டதென்பதும், டி.நொபிலி (தத்துவ போதக சுவாமிகள்) போன்ற பெரும் `மிசனறி'மார்கள் தமிழ் நாட்டிற் பணியாற்றத் தொடங்கி விட்டனர் என்பதும் உண்மையே. ஆனால் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே, புரட்டஸ்தாந்திகள் தமிழ்நாட்டில் தமது நடவடிக்கைகளைத் தொடங்குகிறார்கள். சீகன்பால்குவும் புளூட்சோவும் 1709 இலேயே தமிழ்நாட்டை வந்தடைகின்றனர்.6 மிகப் பெருந்தொகையான தமிழாக்கங்களை எழுதிய பெஸ்கிச் சுவாமியராகிய வீரமா முனிவர் 1710இலேயே வந்து சேர்கிறார். வீரமா முனிவருடனேயே தமிழ்க் கத்தோலிக்க இலக்கிய நடவடிக்கைகள் தமிழ் இலக்கியப் பாரம்பரிய முழுமையுடன் இணையத் தொடங்குகின்றன.

  18ஆம் நூற்றாண்டிற் புரட்டஸ்தாந்திகள் தமிழ் நாட்டிற்கு வந்து சேர்வது, இரு நிலைப்பட்ட முக்கியத்துவத்தையுடையதாகின்றது. முதலாவதாக, இவர்கள் மூலமே, மறுமலர்ச்சிக் காலத்தின் பின்னர் தோன்றிய (சமூகத்தினைப் புதிய முறையிலே நோக்குகின்ற) ஐரோப்பிய மனோபாவங்கள் தமிழுக்குள் வந்து சேர்கின்றன. இரண்டாவதாக, புரட்டஸ்தாந்தம், முற்றிலும் எழுத்தறிவை அடிப்படையா‘கக் கொண்ட ஒரு மதம் என்ற வகையில், தமிழ்நாட்டில், 'அச்சுப் பண்பாட்டை' பெருமளவில் ஆரம்பித்து வைப்பதற்கு இவர்கள் காரணர் ஆகின்றார்கள். புரட்டஸ்தாந்திகள் மதமாற்றத்தைக் கல்வியுடன் இணைத்தனர். அவர்கள் கல்விமுறை, அச்சடித்த பாடபுத்தகங்களை அடிப்படையாகக் கொண்டது. இதற்கு முன்னரே அச்சுமுறைமை தமிழுக்கு வந்து விட்டதென்பதும், 'மர அச்செழுத்தினை' முதன் முதலிற் பயன்படுத்திய இந்தியமொழி தமிழ் என்பதும் உண்மையே. ஆனால் அந்த அச்சு முறைமை, பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிற் கிறிஸ்தவர்களால் நடத்தப்பெற்று, 'எழுத்தறிவுடைய' பல்லோரின் போஷனைக்கு உதவிய அச்சுமுறைமையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும்.

  இவ்வாறாக நோக்கும்பொழுது, பதினெட்டாம் நூற்றாண்டானது, பண்பாட்டொருமைப்பாடு உடையதாகவிருந்தது என்று கூறப்பட முடியாது, ஆனால் ஒரே வகையான இலக்கியத் தொடர்பு முறைமையையுடையதாக விருந்த ஒரு கால கட்டத்திலிருந்து, அதனிலும் வேறுபட்ட ஒரு காலகட்டத்தைப் பிரித்துக் காட்டும் கால எல்லைக் கோடாகவிருக்கின்றது என்பது புலனாகின்றது. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் இலக்கிய உற்பத்திப் பண்பிற் காணப்படும் 'போஷகர்-சார்ந்தருக்கும் வாடிக்கையாளர்' (Patron-client) முறைமை பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மாறுகின்றது.

  தமிழிலக்கியப் பாரம்பரியப் பிரக்ஞையின் அடுத்த கட்டமாக அமைவது, அச்சுச் சாதனம், மத வேறுபாடின்றி எல்லோருக்கும் திறந்து விடப்பட்டமையுடன் நெருங்கிய தொடர்புடையது. இது 1835இல், சேர்சான்ஸ் மெற்காஃப் (Sir Charles Metcalfe) அது காலவரை அச்சுப் பயன்பாட்டிலிருந்து கட்டுப்பாடுகளை நீக்கிய பொழுது தொடங்கிற்று. 1835லேயே, அச்சுயந்திர சாலைகளை வைத்திருக்கம் உடைமையுரிமை 'சுதேசி'களுக்கு ஏடுகளாகக் கிடந்த பழைய தமிழிலக்கியங்கள் அச்சிடப்பட்டன என மயிலை சீனி, வேங்கடசாமி கூறுவர்.7 ஜோன் மேடொக் (John Murdoch) அவர்கள் கூறுவது, வேங்கடசாமியின் உறுதிநிலைப்பட்ட மேற்காணும் கூற்றுக்குச் சவாலாக அமைந்தாலும் அடிப்படையில் வேங்கடசாமியின் வாதத்தை நிலை நிறுத்துவதாகவேயுள்ளது. டபிள்யூ ரெயிலர் (Rev.W.Taylor) எனும் பாதிரியார், 1835 வரையில் திருக்குறளும், ஓளவையாரின் சில பாடல்களுமே அச்சிடப் பெற்றன என்பதைக் கூறியுள்ளார்.8 அச்சு முறைமையில் நிலவிய கட்டுப்பாடுகளை சேர் சாள்ஸ் மெற்காஃப் நீக்கியதன் பின்னர், சுதேச அச்சியந்திர சாலைகள் நிறுவப்படத் தொடங்கின.

  ஆகவே, தமிழிலக்கிய பாரம்பரியத்தின் மீளுற்பத்தியில் 1835 நிச்சயமான ஒரு காலக்கோடாக அமைந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும் அடுத்த நூற்றாண்டின் ஆரம்பக் காலத்திலும் அதி முக்கியத்துவமுடையனவாக முகிழ்க்கத் தொடங்கிய சமூகக் காரணிகள், தமிழரிடையே புதிய விழிப்பு நிலையை ஏற்படுத்தின.

  பிரித்தானிய ஆட்சியினால் தோற்றுவிக்கப் பெற்ற சென்னை மாநிலத்தின் புவியியல் அமைப்பும், சனத்தொகை உள்ளீடும் தமிழர்களுக்குத் தமது பாரம்பரியத் தாயகத்திலேயே, இனத்தனித்துவம் பற்றிய பிரச்சினையை ஏற்படுத்திற்று. சென்னை மாநிலத்தின் சனத்தொகை அமைப்பே இதற்குக் காரணமாகவமைந்தது. பிராமணர் பிராமணர்ல்லாதரின் முரண்பாடுகள், இப்பிரச்சினையின் மேற்கட்டுமானச் சின்னமான அமைந்தது. ஒரே நிருவாகப் பிரிவின கீழ் தெலுங்கர்கள் மலையாளிகள் பிரதேச மொழிப் பிரக்ஞையின் பங்கு, முனைப்புற எடுத்துக் கூறவதற்கான தேவை, ஆகிய யாவையும் இணைந்து தமிழர்களின் பண்பாட்டுப் பாரம்பரியம் பற்றிய ஒரு புதிய விழிப்பு நிலையை ஏற்படுத்தின. பண்டைய இலக்கியச் சாதனை பற்றிய பிரக்ஞை இவ்விழிப்பு நிலையின் ஓர் அமிசமாகிற்று.

  தமிழிலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையின் அடுத்த திருப்புமுனை பற்றிய, அதாவது, மேலே குறிப்பிட்ட செல்நெறிகளிலிருந்து மாறுபடும் நிகழ்வுத் தொடக்கம் பற்றிய தேடல், நம்மை இந்நூற்றாண்டின் முப்பதுகளுக்கு இட்டுச்செல்லும். இதில் 1935ஆம் வருடத்து இந்திய அரசாங்கச் சட்டம் மிக முக்கியமான ஒரு பிரிகோடாக அமைகின்றது.9 தமிழில் எழுதப்பட்ட, முழுமையுள்ள முதல் தமிழ் இலக்கியத்தின் வரலாறு-கா.சுப்பிரமணிய பிள்ளையின். 'இலக்கிய வரலாறு' 1930இலேயே வெளிவந்துள்ளமை உன்னிப்பான அவதானிப்புக்குரிய ஒரு நிகழ்வாகும்.


  முப்பதுத் தசாப்தம், இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு சமூக-அரசியல் நடைமுறையின் தொடக்க காலமாகும். 1947இல் வந்த சுதந்திரம் ஒரு முக்கிய காலக்கோடு என்பதிற் சந்தேகமில்லை. இந்தியாவின் தேசிய இன உருவாக்கம் பற்றிய பிரச்சினையை நோக்கும் பொழுதும், மாநில அரசு-மத்திய அரசுகளின் உறவினை நோக்கும் பொழுதும், 1947-க்குப் பின்வரும் காலத்தில் மொழிப் பிரக்ஞை முக்கிய இடம் வகிப்பதைக் காணலாம். சுதந்திரத்துக்கு இரண்டு வருடங்களுக்குப் பின்னர், 1949இல் திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கப்பட்டதும், தமிழர்களிடையேயுள்ள பல்வேறு மத, சமூகக் குழுக்கள் யாவும் தமிழர்களாக ஒருங்கிணைவதற்குத் தமிழிலக்கியப் பாரம்பரியத்தின அவ்வியக்கம் பயன்படுத்தியதும், இலக்கிய வரலாற்றுச் சிரத்தையை அரசாங்கத்தினை அரசியல் நிலையிற் பேணுவதற்கான ஒரு காரணியாக்கிற்று. இதனாலேயேதான், முப்பதுகளுக்குப் பின்வரும் வளர்ச்சியினை ஒரு அலகுகளாக, 1950 வரையில் ஒன்றாகவும், 1950-க்கு மேற்பட்ட காலப் பகுதியை அடுத்ததாகவும் கொள்வது பொருத்தமுடைத்தெனக் கொள்ளப்படுகின்றது.

  முன்வைக்கப்பட்ட கால கட்ட வகுப்புக்களை நியாயப்பாடுகள் இவையேயாம்.

  III

  இனி, பதினெட்டாம் நூற்றாண்டிற்கு முன்னர் நிலவிய இலக்கியப்பாரம்பரியப்பிரக்ஞை முறைமை பற்றி நோக்குவோம்.

  இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையானது இன்றியமையாத வகையில், அவ்விலக்கியத்தைத் தோற்றுவித்த குழுமத்தின் கடந்த கால நடவடிக்கைபற்றிய பிரக்ஞையேயாகும். அந்த இலக்கியப் பழைமைபற்றிய சிரத்தை, அக்குழுமத்தின் வரலாறோடு சம்பந்தப்பட்ட ஒரு முயற்சியாகவே கொள்ளப்படல் வேண்டும். இக்கட்டத்திலே, நாம் இலக்கியப்பாரம்பரியம் பற்றிய பிரக்ஞையின் சிறப்புப் பண்புகளை நினைவுறுத்திக் கொள்ளுதல் வேண்டும். கடந்த கால இலக்கியம், அதன் கடந்த கால முக்கியத்துவத்துக்காகவும், நிகழ்கால அர்த்தத்துக்காகவும் பயிலப்படல் வேண்டும். எனவே, இலக்கியத்தினைத் தொகுக்கும் அன்றேல் கோபைப்படுத்தும் ஒரு முயற்சியைக் காண நேரிடின், அதனை, இலக்கியம் பற்றிய-கடந்தகால, சமகால இலக்கியம் பற்றிய-பிரக்ஞையின் வெளிப்பாடகவே கொள்ளல் வேண்டும். அந்த நடவடிக்கையை இலக்கியத்தின் வரலாறு பற்றிய ஒரு நடவடிக்கையாகவே கொள்ளுதல் வேண்டும். இலக்கிய வரலாறு என்னும் தொடர் இவ் வாய்விற் கொள்ளப்படும் பொருளில், அதாவது இலக்கிய நிலை நின்று ஒரு குழுமத்தின் வரலாற்றைக் காணும் புலமை முயற்சி என்னும் வகையில், மேற்குறிப்பிட்ட ஒரு நடவடிக்கையினை குறித்த குழுமம் தனது வரலாறு பற்றிக் கொள்ளும் சுய பிரக்ஞையின் வெளிப்பாடு என்றே கொள்ளல் வேண்டும். எனவே அத்தகைய வரலாற்றுப் பிரக்ஞை பற்றிய எந்த ஒரு சந்தர்ப்பத்தினையும், இலக்கியத்தின் வரலாறு பற்றிய, இலக்கிய வரலாறு பற்றிய பிரக்ஞையின் வடிவமாகவே கொள்ளுதல் வேண்டும்.

  இத்தகைய ஓர் இலக்கியப் பாரம்பரியப் பிரக்ஞையினைத் தமிழர்களின் வரலாற்றில், ஓரளவு தொடக்கத்திலேயே காணக் கூடியதாகவுள்ளது.

  தமிழிலக்கிய வரலாற்றில், கடந்த கால இலக்கியத் தேட்டத்தைத் திண்ணமாக நிலைபேறுடையதாக்குவதற்கு எடுக்கப்பட்ட முதல் முயற்சி சங்க இலக்கியத் தொகுப்பு ஆகும்.10

  சங்க இலக்கியங்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என இரண்டு தொகுதிகளாக (தொகைகளாக)வுள்ளன. பத்துப்பாட்டு தனித்தனிப் பாடல்களின் 'தொகை'யாகும். எட்டுத் தொகையிலுள்ள ஒவ்வொரு நூலுமே வெவ்வேறு புலவர்களால் இயற்றப்பட்டனவாகக் கொள்ளப்படும். எட்டு வேறு வேறான 'தொகை' நூல்களின் 'தொகை' (தொகுதி)யாகும். பத்துப்பாட்டுத் 'தொகுதியினைச் சங்க இலக்கியங்களுள் ஒன்றாகக் கொள்வதனை மார் (Marr) எதிர்த்துள்ளார்.11

  இங்கு நாம் இந்த இரு தொகை நூல்களும் பற்றியே நோக்கல் வேண்டும். 'பத்துப்பாட்டு', 'எட்டுத்தொகை' எனும் பெயர்கள் பிற்காலத்தில் வழக்கில் வந்தவையே. 'பத்துப்பாட்டு' என்னும் தொடர், 11ஆம் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளப்படும் பன்னிருரு பாட்டியலிலேயே முதலில் வருகின்றது. சங்க இலக்கியப் பாடற்றொகைகளைக் குறிக்கும் வகையில், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என்னும் தொடர்கள் பயன்படுத்தப்படுவதை முதன் முதலில், தொல், பொருள் 362, 392ஆம் சூத்திரங்களுக்கா‘ன பேராசிரியர் உரையிலும், நன்னூல் 387 ஆம் சூத்திரத்துக்கான மயிலை நாதருரையிலுமே காண்கிறோம். இவர்கள் இருவருமே கி.பி. 13-14ம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவர்கள்.12

  இங்கு முக்கிய கவனத்துக்குரியது பெருந்தொகுதிகளின் பெயர்கள் அன்று, எட்டுத் தொகை நூல்கள் ஒவ்வொன்றினதும் 'தொகை நிலை'த் தன்மையேயாம். அத் தொகைகள் பின்வருமாறு.

  நற்றிணை, குறுந்தொகை, பதிற்றுப்பத்து, புறநானூறு, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல்.

  இவை ஒவ்வொன்றும் தொகுக்கப்பட்டதற்கான தெளிவான மரபுவழிச் செய்தியுண்டு.13 அகப் பாடல்களின் தொகை முறைமைக்கு அவற்றின் அடியளவு அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது.

  ஐங்குறுநூறு 3 - 6 அடிகள்
  குறுந்தொகை 4 - 8 அடிகள்
  நற்றினை 9 -12 அடிகள்
  அகநானூறு 12-31 அடிகள்

  புறச்செய்யுள்ளுகளுக்கு இத்தகைய ஒரு தொகை முறை பேசப்படவில்லை. பதிற்றுப்பத்து, சேர மன்னர்கள் பற்றியது; புறநானூற்றிலோ எல்லா மன்னர்களையும் பற்றிய செய்யுள்கள் உள்ளன.

  இலக்கிய வரலாற்றாசிரியனைப் பொறுத்த வரையில், பெருங் கவனத்துக்குரிய முக்கியமான தகவல், இத் தொகைகளிற் சிலவற்றை செய்வித்த மன்னர்களினது பெயர்களும், அத்தொகைகளைச் செய்த புலவர்கள் பெயரும் கிடைக்கின்றமையேயாகும்.


  அகநானூறு - -தொகுப்பித்தோன் - பாண்டியன்
  உக்கிரப்
  பெருவழி
  -தொகுத்தோன் - மதுரை உப்பூரி
  குடிக்கிழான்
  மகன் உருத்திரசன்மன்,

  குறுந்தொகை - தொகுப்பித்தோன் - யானைக் கட்சேய்
  மாந்தரஞ் சேரல்
  இரும்பொறை

  - தொகுத்தோன் - புலத்துறை முற்றிய கூடலூர்
  கிழார்.

  கலித்தொகை - தொகுப்பித்தோன் - தெரியாது

  - தொகுத்தோன் - நல்லந்துவனார்14

  ஐங்குறுநூறு - தொகுப்பித்தோன் - தெரியாது

  - தொகுத்தோன் - பூரிக்கோ15

  நற்றினை - தொகுப்பித்தோன் - பன்னாடு தந்த மாறன் வழுதி

  - தொகுத்தோன் - தெரியாது.

  பதிற்றுப்பத்து பரிபாடல் புறநானூறு ] இவற்றின் தொகுத்தோர், தொகுப்பித்தோர் பற்றிய தகவல்கள் எதுவும் தெரியாது. பதிற்றுப் பத்து முற்ற முழுதாகச் சேரர் பற்றியதாகையால், சேர மன்னர்களின் அனுசரனையுடனேயே செய்யப்பட்டிருத்தல் வேண்டும்.


  காமில் ஸ்வெலபில் இதுபற்றி எழுதியுள்ளது, தொகைப் படுத்தப்பட்ட காலங்கள் பற்றிய ஒரு தெளிவினை ஏற்படுத்துகின்றது.16 அவர் கூறவது போன்ற 'சிலவற்றைப் பொறுத்த வரையில், பாடல்கள் தொகுக்கப்பட்டது. பாடல்கள் இயற்றப்பட்ட காலத்துக்க அதிகம் பிந்தியிருத்தல் முடியாது; பாடலும் தொகுப்பும் சமகாலத்திலேயே செய்யப்பட்டிருத்தலுங் கூடும்', தொகுப்பித்தோர் எனக் குறிப்பிடப்பெறும் மன்னர்கள் சிலரின் காலம் முக்கியமானதாகும். யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரிலிரும்பொறை, உத்தேசம், கி.பி.210-230-க் காலப்பிரிவுக்கும் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி உத்தேசம் கி.பி. 215-க்கும் உரியவர்களெனக் கொள்ளப்படுகின்றது. பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி நற்.97, 301ஆம் பாடல்களையும், குறுந்தொகை 270ஆம் பாடலையும் எழுதியுள்ளான் என்று கொள்ளப்படுகின்றது. கலித்தொகை, சங்கத்திற்குப் பிந்திய, சிலப்பதிகாரத்துக்கு முந்திய இலக்கியமாகவே கொள்ளப்படுகின்றது.

  நம்மை எதிர் நோக்கும் பெருவினா, இவ்வாறான தொகைப்பாட்டினை அத்தியாவசியப் படுத்திய காரணிகள் யாவை என்பதே, இத்தொகுப்பு நடவடிக்கையில் மன்னர்கள் காட்டியுள்ள ஆர்வமானது. இதற்கு ஒரு சமூக-அரசியல் இயைபு. அன்றேல் தேவை இருந்தது என்பதைக் காட்டுகின்றது. எழுத்தறிவு பரவாத, அரசு நிறுவனம் முளைவிடும் கால கட்டங்களில் (வீரயுகம் என்பது இத்தகைய ஒரு கால கட்டமேயாகும்) பாடுநர் (பாண

  தமிழில் இலக்கிய வரலாற்றின் வளர்ச்சி,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
உலக செய்தி
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்