விவாகமானது எட்டு வகைப்படும்,
 • விவாகமானது எட்டு வகைப்படும்,

  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. இல்வாழ்க்கையானது அன்பையும், அறத்தையும் உடையதாக விளங்குமாயின், அவ்வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
  அவ்வாறு இல்வாழ்க்கை சிறக்க இல்லாளின் பங்கு மிகவும் அவசியமானது. இல்வாழ்கையைச் செவ்வனே நடந்த சிறந்த குணவதியான பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும். வேதங்களால் விதிக்கப்பட்ட ஸ்ரௌத ஸ்மார்த்த கர்மாக்களைச் செய்வதற்கு க்ருஹஸ்தனாக இருப்பது அவசியமாகும்.
  எனவே விவாஹம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்ய பங்கு வகிக்கின்றது. அத்தகைய விவாஹங்களின் வகைகளைப் பற்றிச் சில தகவல் அறிவோம்.
  (ப்ராஹ்மோ தைவஸ்ததைவார்ஷ: ப்ராஜாபத்ய: ததாஸுர:
  காந்தர்வோ ராக்ஷஸஸ்சைவ பைசாசஸ்சாஷ்டமோஸ்தம:)|
  விவாஹமானது எட்டு வகைப்படும் என்று மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.
  அவையாவன -

  1. ப்ராஹ்மம் 2. தைவம் 3. ஆர்ஷம் 4. ப்ராஜாபத்யம் 5. ஆஸுரம் 6. காந்தர்வம் 7. ராக்ஷஸம் 8.பைசாசம் எட்டாவது வகை பைசாசம் மிகவும் அதமமாகக் கருதப்படுகிறது.
  1. ப்ராஹ்மம்
  (ஆச்சாய சார்சயித்வா ச ச்ருதிசீலவதே ஸ்வயம்
  ஆஹூய தானம் கன்யாயா: ப்ராஹ்மோ தர்ம: ப்ரகீர்தித:)
  ஒழுக்கமும், கல்வியும், நற்குடிப்பிறப்பும், இளமையும், அழகும் உடைய வரனை தேர்ந்தெடுத்து பெரியவர்களால் நிச்சயிக்கப்பெற்று மணமகன், மணமகள் ஆகிய இருவருக்கும் சிறந்த முறையில் அலங்காரங்களைச் செய்து வேதவிதிப்படி கன்யாதானம் செய்வதை ‘ப்ராஹ்மம்’ என்று மனுஸ்மிருதி கூறுகின்றது.

  2. தைவம்
  (யக்ஞே து விததே ஸம்யக்ருத்விஜே கர்ம குர்வதே
  அலங்க்ருத்ய சுதாதானம் தைவம் தர்மம் ப்ரசக்ஷதே)
  என்று தைவ விவாஹத்தைப் பற்றி மனுஸ்மிருதி கூறுகிறது.
  யாகங்களில் இளமையும், அழகும், நல்ல குணநலன்கள் உடைய ருத்விக்கினை மணமகனாகத் தேர்ந்தெடுத்து ருத்விக் தக்ஷிணையாக தன்னுடைய பெண்ணைக் கொடுப்பது தைவம் எனப்படும்.
  ஜ்யோதிஷ்டோமம் முதலிய யாகங்களில் இவ்வாறு தக்ஷிணையாக பெண்ணை ஏற்றுக்கொண்ட ருத்விக் பின்னர் அவளை முறைப்படி உழீணீஜீவீtவீலஹ்ணீ< ஹ்க்ஷ்> (ப்ரஜாபதி ஸ்த்ரியாம் யச:) முதலிய ஆறு மந்த்ரங்களைக் கூறி விவாஹம் செய்து கொள்கின்றான். பின்னர் சுப நக்ஷத்ரத்தில் விவாஹ ஹோமம் செய்யப்பட வேண்டும்.

  3. ஆர்ஷம்
  (ஏகம் கோமிதும் த்வே வா வராதாதாய தர்மத:
  கன்யா ப்ரதானம் விதிவதார்ஷோ தர்ம: ஸ உச்யதே)
  மணமகன் மணமகளுக்காக அவளின் தந்தையிடத்தில் ஒரு காளையினையும், ஒரு பசுவினையும், அல்லது இரண்டு காளைகளையும் இரண்டு பசுக்களையும் கொடுத்துவிட்டு பின்னர் அவளை திருமணம் செய்துகொள்வதற்குப் பெயர் ஆர்ஷம் எனப்படும். ஆர்ஷத்தைப் பற்றி மனுஸ்மிருதியில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

  4. ப்ராஜாபத்யம்
  (ஸஹோபௌ சரதாம் தர்மமிதி வாசானுபாஷ்ய ச
  கன்யாப்ரதானமப்யர்ச்ய ப்ராஜாபத்யோ விதி: ஸ்ம்ருத:)
  நீங்கள் இருவரும் (மணமகன்-மணமகள்) திருமணம் செயது கொண்டு வேதத்தில் விதித்துள்ளபடி தர்மானுஷ்டானங்களைக் கடைபிடியுங்கள் என்று மந்த்ரபூர்வமாகக் கூறி முறைப்படி கன்னிகையை தானம் செயது கொடுப்பது ப்ராஜாபத்யம் எனப்படும்.

  5. ஆஸுரம்:-
  (ஞாதிப்யோ த்ரவிணம் தத்வா கன்யாயை சைவ சக்தித:
  கன்யா ப்ரதானம் ஸ்வாச்சந்யாத்தாஸுரோ தர்ம உச்யதே)
  பெண்ணின் தந்தையினிடத்திலோ அல்லது உறவினர்களிடத்திலோ மிகுந்த செல்வத்தைக் கொடுத்து தன்னைச் சார்ந்த உத்தமர்களான பெரியவர்களின் அனுமதியினைப் பெறாமல் தன்னிச்சையாக அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வது ஆஸுரம் எனப்படும்.

  6. காந்தர்வம்
  (இச்சயான்யோன்ய ஸம்யோக: கன்யாயாஸ்ச்ச வரஸ்ய ச
  காந்தர்வ: ஸ து விஞேயோ மைதுன்ய: காமஸம்பவ:)
  ஓர் ஆடவனும், இளம்பெண்ணும் மிகுந்த காதலினால் ஒருவரையொருவர் ஆலிங்கனம் செய்து கூடி மகிழ்ந்திருந்தால் அத்தகைய செயலுக்கு காந்தர்வ விவாஹம் என்று பெயர், விதிப்படி திருமணம் செய்து கொள்ளாமல் காமத்தினால் இவ்வாறு விவாஹம் செய்வது காந்தர்வம் என்று மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.

  7. ராக்ஷஸம்
  (ஹத்வா சித்வா ச பித்வா ச க்ரோசந்தீம் ருததீம் க்ருஹாத்
  ப்ரஸஹ்ய கன்யாஹரணம் ராக்ஷஸோ விதிருச்யதே)
  அழகிய ஓர் இளம்பெண்ணைக் கண்டு அவள் மீது மையலுற்று காமத்தினால் அவளைப் பாதுகாக்கும் உறவினர்கள் துன்புறுத்தி வீட்டின் கதவுகளை உடைத்து பெண்ணின் விருப்பமின்றி பலாத்காரமாக அவளைத் தூக்கிக்கொண்டு போய்த் திருமணம் செய்துகொள்வது “ராக்ஷஸம்” என்று கூறப்படும். இந்த மாதிரியான “ராக்ஷஸ” விவாஹம் மிகவும் இழிவாகக் கருதப்படுகின்றது.

  8.பைசாசம்
  (ஸுப்தாம் மத்தாம் ப்ரமத்தாம் வா ரஹோ யத்ரோபகச்சதி
  ஸ பாபிஷ்டோ விவாஹானாம் பைசாசஸ்ச்சாஷ்டமோதம:)
  உறங்கிக் கொண்டிருக்கும் பெண்ணையோ, அல்லது மதுபானத்தினால் மனங்கலங்கியிருப் பவளையோ, அல்லது இயல்பாகவே மனங்கலங்கியிருப்பவளையோ, உத்தமமான நடத்தைகளால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதவளையோ அபகரித்துக் கொண்டுபோய் ஜனசமூகமற்ற இடத்தில் உறவு கொள்வது பைசாசம் எனப்படும். இந்த பைசாசம் எனப்படும் விவாஹமானது மிகமிக நிந்திக்கப்பட்டதாக உள்ளது. இவ்வாறு செய்பவன் பாபிகளுக்குள்ளேயும் மஹாபாபி ஆகின்றான் எனக் கூறப்பட்டுள்ளது.
  எனவே “ப்ராஹ்மம்” எனப்படும் விவாஹமே மிக மிக உயர்ந்ததாக உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
சரித்திரம்
இந்திய சட்டம்
தமிழகச் செய்திகள்
 மரண அறித்தல்