பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-15): தமிழக முதல்வராக பதவி ஏற்றார்,
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-15): தமிழக முதல்வராக பதவி ஏற்றார்,

  உலகம் சுற்றும் வாலிபனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்து 10-8-1973-ல் வெளிவந்த படம் “பட்டிக்காட்டுப் பொன்னையா.” இதன்பின், 1974-ல் “நேற்று இன்று நாளை”, “உரிமைக்குரல்”, “சிரித்து வாழவேண்டும்” ஆகிய படங்கள் வெளிவந்தன.

  ஸ்ரீதர் டைரக்‌ஷனில் எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் “உரிமைக்குரல்.” இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி லதா. மற்றும் எம்.என்.நம்பியார், நாகேஷ், சகஸ்ரநாமம், வி.கே.ராமசாமி, அஞ்சலிதேவி, சச்சு, புஷ்பலதா ஆகியோரும் நடித்தனர்.

  வழக்கமாக சமூகக் கதைகளையே இயக்கி வந்த ஸ்ரீதர், கிராமப் பின்னணியில் எழுதிய கதை இது.

  எம்.ஜி.ஆர். வித்தியாசமான “கெட்டப்”பில், வேட்டியை புதுவிதமாக அணிந்து நடித்தார். லதாவும் ஈடுகொடுத்து நடித்தார். பாடல்கள், படத்தின் வெற்றிக்கு துணைபுரிந்தன.

  கண்ணதாசன் எழுதிய “விழியே கதை எழுது” என்ற பாடல் எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைப்பில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த பாடல் காட்சி வெகு சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தது. பல வெற்றிப் படங்களை ஸ்ரீதர் கொடுத்திருந்தாலும், வசூலில் சாதனை படைத்த படம் “உரிமைக்குரல்.”

  மதுரையில் இப்படம் 200 நாட்கள் ஓடியது. நெல்லையில் வெள்ளி விழா கொண்டாடியது. 12 தியேட்டர்களில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது.

  உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் தயாரித்த படம் “சிரித்து வாழவேண்டும்”. வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்தார். எஸ்.எஸ்.பாலன் டைரக்ட் செய்தார். இதில் எம்.ஜி.ஆருடன் லதா இணைந்து நடித்தார்.

  1975-ல் நினைத்ததை முடிப்பவன், நாளை நமதே, இதயக்கனி, பல்லாண்டு வாழ்க ஆகிய படங்கள் வெளிவந்தன.

  இதில் “இதயக்கனி” மெகா ஹிட் படம். இது சத்யா மூவிஸ் தயாரிப்பு. எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் இந்தி நடிகை ராதா சலுஜா. மற்றும் மனோகர், கோபாலகிருஷ்ணன், கே.கண்ணன், ராஜசுலோசனா, பண்டரிபாய், நிர்மலா ஆகியோரும் நடித்தனர்.

  பத்திரிகையாளராக இருந்து சினிமா டைரக்டரான ஏ.ஜெகந்நாதன் இப்படத்தை இயக்கினார். ஜெகதீசன் வசனம் எழுதினார்.

  புலமைப்பித்தன் எழுதிய “இதயக்கனி”, “நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற”, “இன்பமே உந்தன் பேர் பெண்மையோ” ஆகிய பாடல்களும், வாலி எழுதிய “இதழே இதழே தேன் வேண்டும்”, “புன்னகையில் கோடி” ஆகிய பாடல்கள் `ஹிட்’ ஆயின.

  “ராண்டார் கை” எழுதிய ஆங்கிலப்பாடல் ஒன்றும் இப்படத்தில் இடம் பெற்றது. உஷா உதூப் பாடிய அப்பாடல் ரசிகர்களிடம் பெரும் கைதட்டலைப் பெற்றது.

  சென்னையில் 3 தியேட்டர்களில் நூறு நாள் கொண்டாடிய இப்படம், மதுரையில் 146 நாட்களும், திருச்சி, கோவை, சேலம் உள்பட பல ஊர்களில் நூறு நாட்களும் ஓடியது. இலங்கையின் கொழும்பு நகரில் 158 நாட்களும், யாழ்ப்பாணத்தில் 132 நாட்களும் ஓடின.

  பிரபல இந்தி டைரக்டர் வி.சாந்தாராம் தயாரித்த “தோ ஆங்கேன் பாராஹாத்” என்ற சிறந்த படத்தை, “பல்லாண்டு வாழ்க” என்ற பெயரில் உதயம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்தது. ஆர்.கே.சண்முகம் வசனம் எழுத கே.சங்கர் டைரக்ட் செய்தார்.

  இந்தியில் சாந்தாராம் நடித்த வேடத்தில் (திருடர்களைத் திருத்தும் போலீஸ் அதிகாரியாக) எம்.ஜி.ஆர். நடித்தார். அவருடன் லதா இணைந்து நடித்தார். சிறந்த கதை அம்சம் கொண்ட இப்படம், முக்கிய ஊர்களில் நூறு நாள் ஓடியது.

  சிவாஜிகணேசனை வைத்து “திருவிளையாடல்”, “சரஸ்வதி சபதம்”, “தில்லானா மோகனாம்பாள்” போன்ற வெற்றிப்படங்களை எடுத்து வந்த ஏ.பி.நாகராஜன், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்க விரும்பினார். அதற்கு எம்.ஜி.ஆரும் சம்மதித்தார்.

  “நவரத்தினம்” என்ற கதையை உருவாக்கினார், ஏ.பி.நாகராஜன். 9 பெண்களை எம்.ஜி.ஆர். சந்திப்பது போன்ற கதை. எம்.ஜி.ஆருடன் லதா கதாநாயகியாக நடித்தார். குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்தார்.

  எம்.ஜி.ஆருக்கு ஏற்றபடி இருக்கவேண்டும் என்று, ஏ.பி.நாகராஜன் மிக சிரமப்பட்டு கதையை உருவாக்கினார் என்றாலும், அது எம்.ஜி.ஆர். ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. எனவே, எதிர்பார்த்த அளவுக்கு படம் பெரிய அளவில் ஓடவில்லை.

  “இன்று போல் என்றும் வாழ்க”, “மீனவ நண்பன்” ஆகிய படங்களும் 1977-ல் வெளிவந்தன.

  அகிலன் எழுதிய “கயல்விழி” என்ற வரலாற்று நாவலை பிரமாண்டமான படமாக “சோளீஸ்வரர் கம்பைன்ஸ்” நிறுவனம் தயாரித்தது. இதில் எம்.ஜி.ஆருடன் லதா, பத்மபிரியா ஆகியோர் நடித்தனர். ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார். படப்பிடிப்பின் பெரும்பகுதி முடிந்து விட்டது. சில காட்சிகள் மட்டும்தான் பாக்கி.

  இந்நிலையில், 1977 ஜுன் மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. அதில் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. முதல்-அமைச்சராக எம்.ஜி.ஆரை கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர்.

  “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” படத்தில் மீதியிருந்த காட்சிகளை இரவு- பகலாக நடித்துக் கொடுத்துவிட்டு, 30-6-1977-ல் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார், எம்.ஜி.ஆர்.

  அவர் முதல்-அமைச்சராகி 6 மாதங்களுக்குப் பின், 1978 பொங்கல் தினத்தன்று “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” வெளிவந்தது. இது நூறு நாள் படமாக அமைந்தது.

  “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்”தான், எம்.ஜி.ஆர். நடித்த கடைசி படம். முதல்-அமைச்சரான பிறகு அவர் படங்களில் நடிக்கவில்லை.

  எம்.ஜி.ஆரின் முதல் படமான “சதிலீலாவதி” 28-3-1936-ல் வெளிவந்தது. கடைசி படமான மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் 14-1-1978-ல் வெளிவந்தது. இந்த 42 வருட காலத்தில் அவர் நடித்த மொத்த படங்கள் 136.

  எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் இணைந்து நடித்தவர் ஜெயலலிதா. அவர் 28 படங்களில் நடித்தார்.

  அவருடன் அதிகப் படங்களில் அவருடன் நடித்த மற்ற நடிகைகள்: சரோஜாதேவி-26; லதா-13; பானுமதி-10; பத்மினி-8; கே.ஆர்.விஜயா-8; டி.ஆர்.ராஜகுமாரி-8; அஞ்சலிதேவி-5; மஞ்சுளா-5.

  அதிக படங்களை டைரக்ட் செய்தவர்கள்:-

  ப.நீலகண்டன் 17; எம்.ஏ.திருமுகம் 16; டி.ஆர்.ராமண்ணா 8; கே.சங்கர் 8. கிருஷ்ணன் பஞ்சு, ஏ.காசிலிங்கம், டி.ஆர்.ரகுநாத், பி.ஆர்.பந்துலு, சாணக்யா, எம்.கிருஷ்ணன் தலா 4 படங்களை டைரக்ட் செய்தனர்.

  எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் நடித்த நடிகர்கள், வில்லன்கள்:- எம்.என்.நம்பியார் 63; அசோகன் 57; பி.எஸ்.வீரப்பா 23; ஆர்.எஸ்.மனோகர் 23; எம்.ஆர். ராதா 20;

  நகைச்சுவை நடிகர்கள்:- நாகேஷ் 42; தேங்காய் சீனிவாசன் 26.

  அதிக படங்களுக்கு கதை-வசனம் எழுதியவர்கள்:- சொர்ணம் 16; ஆர்.கே.சண்முகம் 15; ஆரூர்தாஸ் 14; மு.கருணாநிதி 10; கண்ணதாசன் 7; சக்தி கிருஷ்ணசாமி 6; ஸ்ரீதர் 3.

  தமிழ் திரையுலகில் தனியொரு சகாப்தமாகவும், சரித்திரமாகவும் திகழ்ந்த எம்.ஜி.ஆரின் திரையுலக நெடும்பயணத்தின் சிறு பகுதியை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டதில்  ‘பெரு மகிழ்ச்சி.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
விளையாட்டு செய்தி
தங்க நகை
ஆய்வுக் கட்டுரை
 மரண அறித்தல்