பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-14): ஹாலிவுட் வசூல் சாதனையை முறியடித்த ரிக்‌ஷாக்காரன்,
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-14): ஹாலிவுட் வசூல் சாதனையை முறியடித்த ரிக்‌ஷாக்காரன்,

  1971-ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்‌ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

  “குமரிக்கோட்டம்”, கோவை செழியனின் “கேசி பிலிம்ஸ்” தயாரிப்பு. ப.நீலகண்டன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். வசனம்:சொர்ணம், இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்.

  சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த “ரிக்‌ஷாக்காரன்” வரலாறு படைத்த படமாகும்.

  படித்த இளைஞன் ஒருவன், ரிக்‌ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, டைரக்‌ஷனை எம்.கிருஷ்ணன் கவனித்தார்.

  இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், “சோ”, ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.

  29-5-1971-ல் வெளிவந்த “ரிக்‌ஷாக்காரன்” பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

  எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.

  இந்தப்படம் சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது.

  1971-ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, “பாரத்” விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.

  ஆயினும், இந்த விருது கொடுக்கப்பட்டதை சிலர் விமர்சித்த காரணத்தால், “விருது எனக்கு வேண்டாம்” என்று எம்.ஜி.ஆர். திருப்பிக் கொடுத்தார்.

  1949-ல் ஜெமினி தயாரித்த “அபூர்வ சகோதரர்கள்” படத்தின் கதையை, “நியோ மணிஜே சினி புரொடக்ஷன்ஸ்” சார்பில் டின்ஷா டி.தெஹ்ராணி “நீரும் நெருப்பும்” என்ற பெயரில் மீண்டும் தயாரித்தார்.

  அபூர்வ சகோதரர்கள் படத்தில் எம்.கே.ராதா நடித்த வேடத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதி நடித்த வேடத்தில் ஜெயலலிதாவும் நடித்தனர். வசனத்தை ஆர்.கே.சண்முகம் எழுத, ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார்.

  இந்தப்படம் 18-10-1971-ல் ரிலீஸ் ஆயிற்று. சிறப்புக் காட்சிக்கு எம்.கே.ராதா வந்திருந்து, எம்.ஜி.ஆரின் நடிப்பைப் பாராட்டினார்.

  நாஞ்சில் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் டி.ஏ.துரைராஜ் தயாரித்த படம் “ஒரு தாய் மக்கள்”.

  இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார்.

  சின்னப்பதேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ், 1967-ல் மேஜர் சுந்தரராஜனை கதாநாயகனாக நடிக்க வைத்து “தெய்வச் செயல்” என்ற படத்தைத் தயாரித்தது. இதில் மனோகர், பாரதி, சந்திரகாந்தா ஆகியோரும் நடித்தனர். அய்யாப்பிள்ளை வசனம் எழுத, எம்.ஜி.பாலு டைரக்ட் செய்தார். இந்தப்படம் தோல்வி அடைந்தது.

  இந்தக் கதையை எழுதியவர் சின்னப்பதேவர்தான். “என் கதை நல்ல கதைதான். சரியானபடி தயாரித்தால், அது வெற்றி பெறும்” என்று அவர் கூறி வந்தார்.

  கருத்து வேற்றுமையால் சில காலம் பிரிந்திருந்த எம்.ஜி.ஆரும், சின்னப்பதேவரும் ஒன்று சேர்ந்த பிறகு, இருவரும் இணைந்து பல படங்களை உருவாக்கினர். “தெய்வச்செயல்” கதையை எம்.ஜி.ஆரை வைத்து படமாக்கினால், நிச்சயமாக பெரிய வெற்றி பெறும் என்று தேவர் நினைத்தார்.

  கதையை எம்.ஜி. ஆரிடம் சொன்னார். எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. “தெய்வச் செயல்” என்ற பெயருக்கு பதிலாக “நல்ல நேரம்” என்று பெயர் சூட்டி, மீண்டும் அதே கதையை படமாக்கத் தொடங்கினார், தேவர்.

  எம்.ஜி.ஆருடன் கே.ஆர்.விஜயா, அசோகன், சுந்தரராஜன், நாகேஷ், சச்சு ஆகியோர் நடித்தனர். முழுக்க முழுக்க, ஒரு யானையையும், எம்.ஜி.ஆரையும் சுற்றிப் பின்னப்பட்ட கதை இது.

  ராஜு (எம்.ஜி.ஆர்) சிறுவனாக இருந்தபோது, சிறுத்தையிடம் இருந்து காப்பாற்றுகிறது, ஒரு யானை. இதனால், யானைகளிடம் மிகவும் அன்பு கொள்கிறான், ராஜு. தனக்குப் பல உதவிகள் செய்த ராமு என்ற யானையிடம், மிகவும் பாசம் கொள்கிறான்.

  அவனுடைய மனைவி (கே.ஆர்.விஜயா), யானை ராமு மீது கொலைக்குற்றம் சாட்டுகிறாள். அதை விரட்டி அடிக்கும்படி கூறுகிறாள். இதனால் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இறுதியில் தான் நிரபராதி என்பதை ராமு நிரூபிக்கிறது.

  வழக்கமான எம்.ஜி.ஆர். படங்களில் இருந்து மாறுபட்ட படம் “நல்ல நேரம்”. 10-3-1972-ல் வெளிவந்த இந்தப்படம் சென்னையில் 4 தியேட்டர்களிலும், மற்றும் முக்கிய ஊர்களிலும் நூறு நாட்கள் ஓடியது.

  கண்ணதாசன் எழுதிய “ஓடி ஓடி உழைக்கணும்”, “டிக்… டிக்… டிக்… இது மனசுக்குத் தாளம்”, “நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே”, அவிநாசி மணி எழுதிய “ஆகட்டுண்டா தம்பி நடராஜா” ஆகிய பாடல்கள் கே.வி.மகாதேவன் இசையில் ஹிட்டாக அமைந்தன.

  இதே ஆண்டில் சங்கே முழங்கு, ராமன் தேடிய சீதை, நான் ஏன் பிறந்தேன், அன்னமிட்ட கை, இதய வீணை ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

  “ராமன் தேடிய சீதை”, அன்னமிட்ட கை ஆகிய படங்களில் ஜெயலலிதாவும், “சங்கே முழங்கு” படத்தில் லட்சுமியும், “நான் ஏன் பிறந்தேன்” படத்தில் கே.ஆர்.விஜயாவும் எம்.ஜி.ஆருடன் நடித்தனர். இவற்றில் ராமன் தேடிய சீதை நூறு நாட்களுக்கு மேல் ஓடிய படம்.

  தனது நண்பர்களான “இதயம் பேசுகிறது” மணியன், வித்வான் வே.லட்சுமணன் ஆகியோருக்காக ஒரு படம் செய்து கொடுக்க விரும்பினார், எம்.ஜி.ஆர். இதைத்தொடர்ந்து, மணியனும், வித்வான் வே.லட்சுமணனும் சேர்ந்து “உதயம் புரொடக்‌ஷன்ஸ்” என்ற பட நிறுவனத்தைத் தொடங்கினர். இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பு “இதய வீணை”. இது மணியன் எழுதிய கதை.

  பெரும் பகுதி காஷ்மீரில் படமாக்கப்பட்ட இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடிக்க கிருஷ்ணன்- பஞ்சு டைரக்ட் செய்தனர். இந்தப்படம் முக்கிய ஊர்களில் எல்லாம் நூறு நாட்கள் ஓடியது.

  இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஜெமினி ஸ்டூடியோவில் தொடங்கி வைத்தவர் அன்றைய முதல்-அமைச்சர் கருணாநிதி.

  படப்பிடிப்பு தொடங்கும்போது நண்பர்களாக இருந்த கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், படம் வெளி வந்தபோது (20-10-1972) பிரிந்து விட்டனர். அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு 11 நாட்களுக்கு முன்னதாக தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டார். அதன்பின் எம்.ஜி.ஆர். தனிக்கட்சி தொடங்கினார்.

  திரை உலகில் எம்.ஜி.ஆர். நடித்த படங்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள போதிலும், சாதனைகளின் சிகரமாகத் திகழ்வது “உலகம் சுற்றும் வாலிபன்”.

  ஜப்பான் நாட்டில், உலகப் பொருட்காட்சி (“எக்ஸ்போ 70″) நடைபெற்றது. அதைப் பயன்படுத்தி, கண்ணுக்கு இனிய காட்சிகளுடன் உலகம் சுற்றும் வாலிபனை பிரமாண்டமாகத் தயாரிக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார்.

  அதற்கேற்றபடி, எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் கதை இலாகாவினர் கதையை உருவாக்கினர். வசனத்தை சொர்ணம் எழுதினார்.

  பாடல்களை கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார்.

  இதில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அவருடன் மஞ்சுளா, சந்திரகலா, லதா, தாய்லாந்து நடிகை மெட்டா ருங்ரட்டா, எம்.என்.நம்பியார், அசோகன், மனோகர், நாகேஷ், வி.கோபால கிருஷ்ணன், ஜஸ்டின் ஆகியோர் நடித்தனர். லதாவுக்கு இதுதான் முதல் படம்.

  விஞ்ஞானி முருகனாகவும், அவன் தம்பி ராஜுவாகவும் இரட்டை வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். ஜப்பானில் நடந்த உலகப் பொருட்காட்சியில் பல காட்சிகள் படமாக்கப்பட்டன.

  அத்துடன், ஜப்பானில் உள்ள நாரா என்ற இடத்தில் உள்ள பிரமாண்டமான புத்தர் சிலை முன்பாகவும் சில காட்சிகள் எடுக்கப்பட்டன. மற்றும் டோக்கியோ டவர், மாபெரும் கடை வீதியான “கின்சா”, பியுஜி எரிமலை முதலான இடங்களிலும் படப்பிடிப்பு நடந்தது.

  அத்துடன் மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஏறத்தாழ படம் முழுவதும் வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டதால் “நாம் பார்ப்பது தமிழ்ப்படமா?ஹாலிவுட் படமா?” என்ற பிரமிப்பை “உலகம் சுற்றும் வாலிபன்” ஏற்படுத்தியது.  சண்டைக் காட்சிகளும் புதுமையாக இருந்தன.

  கண்ணதாசன் எழுதிய “அவள் ஒரு நவரச நாடகம்”, “லில்லி மலருக்குக் கொண்டாட்டம், “உலகம்… உலகம்” ஆகிய பாடல்களும், வாலி எழுதிய “பச்சைக்கிளி முத்துச்சரம்”, “தங்க தோணியிலே தவழும் பெண்ணழகே”, “நிலவு ஒரு பெண்ணாகி உலவுகின்ற அழகோ”, “பன்சாயி…” ஆகிய பாடல்களும், புலமைப்பித்தன் எழுதிய “சிரித்து வாழவேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” பாடலும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றன. “நமது வெற்றியே நாளைய சரித்திரம்” என்று தொடங்கும் “டைட்டில்” பாடலை, சீர்காழி கோகாவிந்தராஜன் பாடினார். இதை எழுதியவர் புலவர் வேதா.

  11-5-1973-ல் இப்படம் திரையிடப்பட்டது. சென்னையில், சினிமா போஸ்டர்களுக்குக் கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், போஸ்டர்களே ஒட்டப்படவில்லை.9-ந்தேதி முன்பதிவு தொடங்கியது. இரண்டே நாட்களில், ஒரு மாதத்துக்கான டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தன.

  சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் தொடர்ந்து 227 காட்சிகள் “ஹவுஸ் புல்” ஆயின.

  இந்த தியேட்டரில், “மெக்கனாஸ் கோல்டு” என்ற ஆங்கிலப் படம் மொத்தம் 12 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வசூலித்து “இந்தியாவிலேயே ஒரே தியேட்டரில் அதிக வசூல் பெற்ற படம்” என்று சாதனை படைத்திருந்தது. அந்த சாதனையை, “உலகம் சுற்றும் வாலிபன்” முறியடித்தது. 182 நாட்களில், ரூ.13 லட்சத்து 63 ஆயிரம் வசூலித்தது.

  சென்னையில் தேவிபாரடைஸ் தியேட்டரில் இப்படம் 182 நாட்களும், அகஸ்தியாவில் 175 நாட்களும், உமாவில் 112 நாட்களும் ஓடியது.

  மதுரை மீனாட்சியில் 217 நாட்கள், திருச்சி பேலசில் 203 நாட்கள் ஓடியது. தமிழ்நாட்டில் 31 தியேட்டர்களில் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. பெங்களூரில் மூன்று தியேட்டர்கள் 100-வது நாளைக் கண்டன.

  மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில், 47 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அந்தக் காலக்கட்டத்தில், மலேசியாவில் நீண்ட காலம் ஓடிய இந்தியப்படம் “உலகம் சுற்றும் வாலிபன்”தான்.

  தமிழக முதல்வராக பதவி ஏற்றார்!

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
தையல்
விவசாயத் தகவல்கள்
மருத்துவம்
 மரண அறித்தல்