பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-12): ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” மகத்தான வெற்றி!
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-12): ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” மகத்தான வெற்றி!

  நாகி ரெட்டி -சக்ரபாணியின் “விஜயா கம்பைன்ஸ்” தயாரிப்பில் உருவான “எங்க வீட்டுப்பிள்ளை” 1965 பொங்கல் தினத்தன்று வெளிவந்தது.

  எம்.ஜி.ஆர். இரட்டை வேடங்களில் நடித்த இந்தப் படத்திற்கான வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுதினார். பாடல்கள்: வாலி, ஆலங்குடி சோமு. இசை. விஸ்வநாதன்- ராமமூர்த்தி. சாணக்யா டைரக்ட் செய்தார்.

  ஸ்ரீதரின் “கல்யாணப்பரிசு” படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட், “எங்கவீட்டுப்பிள்ளை”யின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார்.

  எம்.ஜி.ஆர். ஏற்கனவே “நாடோடி மன்னன்” படத்தில் இரட்டை வேடத்தில் அருமையாக நடித்திருந்தபோதிலும், சமூகப் படங்களில் அவர் மிகச்சிறப்பாக இரட்டை வேடங்களில் நடித்த படம் “எங்கவீட்டுப்பிள்ளை.” ஒரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. மற்றொரு எம்.ஜி.ஆருக்கு ஜோடி ரத்னா.

  எம்.என்.நம்பியார், எஸ்.வி.ரங்காராவ், தங்கவேலு, நாகேஷ், பண்டரிபாய், எல்.விஜயலட்சுமி, மாதவி, பேபி ஷகிலா ஆகியோரும் இதில் நடித்தனர்.

  சென்னையில் காசினோ, பிராட்வே, மேகலா ஆகிய 3 தியேட்டர்களிலும், மதுரை சென்ட்ரல், திருச்சி ஜுபிடர், கோவை ராயல், தஞ்சை யாகப்பா ஆகிய தியேட்டர்களிலும் இப்படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கொண்டாடியது.

  திருச்சி ஜுபிடரில் 236 நாட்களும், சென்னை காசினோவில் 211 நாட்களும் ஓடி, சாதனை படைத்தது.

  “எங்க வீட்டுப்பிள்ளை”யின் சென்னை நகர விநியோக உரிமையை எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் வாங்கி இருந்தது. படம் வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியதால், விநியோகஸ்தர்களுக்கு நிறைய லாபம் கிடைத்தது.

  எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் அதிபரான எம்.ஜி.ஆர், தனக்கு அதிக லாபம் வந்ததால், ரூ.1 லட்சத்தை பட அதிபர்களுக்கு வழங்க முடிவு செய்தார். விஜயா கம்பைன்ஸ் அதிபர்களான நாகிரெட்டி- சக்ரபாணி பெயரில் ரூ.1 லட்சத்துக்கு “செக்” அனுப்பி வைத்தார். அத்துடன், “நான் பேசிய தொகைக்கு மேல் லாபம் வந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த ஒரு லட்சம் ரூபாயை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று ஒரு கடிதத்தையும் இணைத்திருந்தார்.

  ஆனால் அந்தப் பணத்தை பட அதிபர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்கள். “உங்கள் நல்ல உள்ளத்தை பாராட்டுகிறோம். எனினும், இந்தப் பணத்தை நாங்கள் ஏற்பதற்கு இல்லை. இந்தப் பணத்தை, உங்கள் விருப்பப்படி தர்மகாரியத்திற்கு பயன்படுத்துங்கள்” என்று கடிதம் அனுப்பினார்கள்.

  எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல் படமான “ஆயிரத்தில் ஒருவன்” மாபெரும் வெற்றி பெற்று, வசூலில் சாதனை படைத்தது.

  சிவாஜிகணேசனை வைத்து, பல படங்களை எடுத்தவர், பி.ஆர்.பந்துலு. அவரது “வீரபாண்டிய கட்டபொம்மன்” மகத்தான வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது.

  பின்னர் சிவாஜியை வைத்து அவர் தயாரித்த “கர்ணன்”, “கப்பலோட்டிய தமிழன்” ஆகிய படங்கள் தரமானவையாக இருந்த போதிலும், போதிய வசூல் இல்லை. கடன் சுமையினால் பந்துலு தவித்தார்.

  கடனில் இருந்து மீள, எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் தயாரிக்கத் தீர்மானித்தார். எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசினார். அவர் படத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டு, கால்ஷீட் கொடுத்தார்.

  “ஆயிரத்தில் ஒருவன்” என்ற பெயரில், படத்தை பிரமாண்டமாக கலரில் தயாரிக்க பந்துலு ஏற்பாடு செய்தார். கதாநாயகியாக ஜெயலலிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த முதல் படம் இதுதான். எம்.என்.நம்பியார், மனோகர், ராம்தாஸ், நாகேஷ், எல்.விஜயலட்சுமி, மாதவி ஆகியோரும் இதில் நடித்தனர்.

  படத்தின் பெரும் பகுதி கோவாவிலும், அதன் அருகே கடல் பகுதியிலும் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதும் கடல் சண்டை காட்சி, ஏராளமான பொருட் செலவில் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக உருவாக்கப்பட்டது.

  9-7-1965-ல் “ஆயிரத்தில் ஒருவன்” வெளிவந்தது. முதல் காட்சியிலேயே அது “மெகா ஹிட்” படம் என்பது தெரிந்து விட்டது. தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது.

  எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மிகச்சிறப்பாக நடித்திருந்தனர். அவர்கள் ஏராளமான படங்களில் இணைந்து நடிக்க, “ஆயிரத்தில் ஒருவன்” வழிவகுத்தது. பி.ஆர்.பந்துலு, வசூல் மழையில் நனைந்தார். கடன் பிரச்சினையில் இருந்து மீண்டார்.

  1965-ல் எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் தவிர, பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், கன்னித்தாய், தாழம்பூ, ஆசை முகம் ஆகிய படங்களிலும் எம்.ஜி.ஆர். நடித்தார்.

  “ஆசை முகம்”, மோகன் புரொடக்சன்ஸ் சார்பில் பி.எல்.மோகன்ராம் தயாரித்த படம். எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

  தொடக்கத்தில், துறையூர் மூர்த்தி வசனம் எழுதினார். எம்.ஜி.ஆருடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு அவர் விலகிக் கொண்டார். எனவே, ஆரூர்தாஸ் வசனம் எழுதினார். எஸ்.எம்.சுப்பையா இசை அமைக்க பி.புல்லையா டைரக்ட் செய்தார்.

  இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேடம். அத்துடன் எம்.ஜி.ஆர். போல முகத்தை மாற்றிக்கொண்டு வில்லன் குழப்பங்கள் செய்வான். எனவே, எம்.ஜி.ஆர். மூன்று வேடங்களில் தோன்றினார்.

  1966-ம் ஆண்டில் அன்பே வா, நான் ஆணையிட்டால், முகராசி, நாடோடி, சந்திரோதயம், தாலி பாக்கியம், தனிப்பிறவி, பறக்கும் பாவை, பெற்றால்தான் பிள்ளையா ஆகிய 9 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

  “அன்பே வா” ஏவி.எம். தயாரித்து, மகத்தான வெற்றி கண்ட படம். இதில் அவருக்கு ஜோடி சரோஜாதேவி. முகராசி, தனிப்பிறவி ஆகிய இரண்டு படங்களும் தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டு படங்களிலும் ஜெயலலிதாதான் கதாநாயகி.

  ஆகஸ்ட் 18-ந்தேதியன்று “முகராசி”யும், செப்டம்பர் 16-ந்தேதி “தனிப்பிறவி”யும் வெளியாயின. அதாவது, ஒரு மாத இடைவெளியில், இரண்டு எம்.ஜி.ஆர். படங்களை வெளியிட்டு, சின்னப்ப தேவர் சாதனை படைத்தார். “முகராசி”க்கு ஆர்.கே.சண்முகமும், “தனிப் பிறவி”க்கு ஆரூர்தாசும் வசனம் எழுதினர். முகராசியில் எம்.ஜி.ஆருடன் ஜெமினிகணேசன் இணைந்து நடித்தார்.

  “பி.ஆர்.பந்துலு தயாரித்த ”நாடோடி”யில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி.

  எங்க வீட்டுப்பிள்ளை படத்தில் எம்.ஜி.ஆர். பாடிய “நான் ஆணையிட்டால்…” பாடலையே தலைப்பாக வைத்து சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம்.வீரப்பன் படம் எடுத்தார். இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. வசனத்தை வித்துவான் வே.லட்சுமணன் எழுதினார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்தார். சாணக்யா டைரக்ட் செய்தார்.

  எம்.ஜி.ஆர். மாறுபட்ட வேடத்தில் நடித்த படம் “பறக்கும் பாவை”. இதில் சர்க்கஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

  ஆர்.ஆர்.பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் எம்.ஜி. ஆரின் ஜோடி சரோஜாதேவி. வசனத்தை சக்தி கிருஷ்ணசாமி எழுத, ராமண்ணா டைரக்ட் செய்தார்.

  ஸ்ரீமுத்துக்குமரன் பிக்சர்ஸ் சார்பில் வாசு தயாரித்த “பெற்றால்தான் பிள்ளையா” 6-12-1966-ல் ரிலீஸ் ஆயிற்று. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்த இந்த படத்திற்கான வசனங்களை ஆரூர் தாஸ் எழுதினார். எம். எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில், இரட்டையர்களான கிருஷ்ணன்-பஞ்சு இயக்கினர்.

  இந்தப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த வேளையில், 12-1-1967 அன்று தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான “தாய்க்கு தலைமகன்” ரிலீஸ் ஆனது. இதில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். வசனம் ஆரூர்தாஸ். இசை: கே.வி.மகாதேவன். எம்.ஏ. திருமுகம் இயக்கியிருந்தார்.

  அன்று மாலை, “எம்.ஜி. ஆரை எம்.ஆர்.ராதா சுட்டு விட்டார்” என்ற செய்தி, எரிமலை வெடித்தது போல் வெளியாகியது.

  தமிழ்நாடு முழுவதும் காட்டுத்தீ போல் இச்செய்தி பரவியது. மக்கள் உறைந்து போனார்கள்; சினிமா தியேட்டர்களும், கடைகளும் மூடப்பட்டன. பஸ்களும், ரெயில்களும் ஓடவில்லை. தமிழ்நாடே ஸ்தம்பித்தது.

   

   

  பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-12): ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” மகத்தான வெற்றி!
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
ஆன்மிகம்
உலக செய்தி
 மரண அறித்தல்