பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-11): ஒரே ஆண்டில் 9 படங்கள்,
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-11): ஒரே ஆண்டில் 9 படங்கள்,

  1961-ல் “திருடாதே” படத்துக்கு பின், “சபாஷ் மாப்பிளே”, “நல்லவன் வாழ்வான்”, “தாய் சொல்லைத் தட்டாதே” ஆகிய மூன்று படங்கள் எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளிவந்தன. இதில், “சபாஷ் மாப்பிளே” என்ற படம், சபாஷ் மீனாவில் சிவாஜியுடன் கதாநாயகியாக நடித்த மாலினியின் சொந்தப்படம்.

  அரசு பிக்சர்ஸ் தயாரித்த “நல்லவன் வாழ்வான்” படத்தில் எம்.ஜி.ஆரும், ராஜசுலோசனாவும் ஜோடியாக நடித்தனர். அண்ணா எழுதிய கதையை ப.நீலகண்டன் டைரக்ட் செய்தார்.

  சாண்டோ சின்னப்ப தேவர் தயாரிப்பில் 7-11-1961-ல் வெளியான “தாய் சொல்லைத் தட்டாதே” பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஆர்.ராதாவும் இப்படத்தில் நடித்திருந்தார். கே.வி.மகாதேவன் இசை அமைக்க, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.

  ஒரே மாதத்தில் படப்பிடிப்பு வேகமாக படம் முடிவடைந்து, 7-11-61 தீபாவளித் திருநாளில் ரிலீஸ் ஆகியது.

  “தாய் சொல்லைத் தட்டாதே” சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. நூறு நாட்கள், தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி, வெற்றி விழா கொண்டாடியது. எம்.ஜி.ஆர் – தேவர் நட்புறவு முன்பைவிட பலமாக அமைய, தொடர்ந்து தேவரின் படங்களில் எம்.ஜி.ஆர். நடிக்கலானார்.

  ஒரு படத்துக்கு கொடுக்க வேண்டிய பணத்தை எம்.ஜி.ஆருக்கு மொத்தமாகக் கொடுத்து விடுவது தேவரின் வழக்கம். அத்துடன், அடுத்த படத்துக்கும் “அட்வான்ஸ்” கொடுத்து விடுவார்! இதனால், தேவர் பிலிம்ஸ் எடுக்கும் படம் ஒன்றில் எம்.ஜி.ஆர். தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பார்.

  இதற்கு முன்பெல்லாம், வருடத்துக்கு ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., 1962 முதல் ஐந்து அல்லது ஆறு படங்களில் நடிக்கத் தொடங்கினார். 1962-ல் “ராணி சம்யுக்தா”, “மாடப்புறா”, “தாயைக் காத்த தனயன்”, “குடும்பத் தலைவன்”,  “பாசம்”, “விக்ரமாதித்தன்” ஆகிய 6 படங்களில் நடித்தார். அதாவது 2 மாதங்களுக்கு ஒரு படம்!

  “பாசம்” படத்தை தயாரித்து   இயக்கியவர் டி.ஆர்.ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி, ஷீலா நடித்த இந்தப்படம் நன்றாகத்தான்   இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆர். இறந்து  விடுவது போல   படத்தை முடித்திருந்தார்கள். எம்.ஜி. ஆர். ரசிகர்கள் இதை ஏற்பார்களா? எம்.ஜி.ஆர். படத்தை பத்துப் பதினைந்து  முறை பார்க்கும்  அவரது ரசிகர்கள், ஒரே தடவையுடன் நிறுத்திக் கொண்டார்கள்!

  இன்னொன்றை கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர். படங்களில் சில படங்கள் 100 நாள் வரை ஓடாவிட்டாலும், அது தோல்விப்படம் என்று அர்த்தமல்ல. மற்ற எம்.ஜி.ஆர். படங்களைவிட வசூலில் குறைவாக இருக்கலாமே தவிர, பட அதிபர்களுக்கோ, விநியோகஸ்தர்களுக்கோ நஷ்டத்தை ஏற்படுத்தி விடாது. “யானை படுத்தால் குதிரை மட்டம்” என்று கூறுவதுபோல், நஷ்டம் ஏற்படாத அளவுக்கு வசூலித்துக் கொடுத்துவிடும்.

  “தாயைக் காத்த தனயன்”, “குடும்பத் தலைவன்” இரண்டும் தேவர் பிலிம்ஸ் தயாரித்த படங்கள். எம்.ஜி.ஆரை வைத்து ஒரே ஆண்டில் இரு படங்களைத் தயாரித்தவர் தேவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

  இரண்டு படங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சரோஜாதேவி. இரண்டு படங்களுக்கும் வசனம் எழுதியவர் ஆரூர்தாஸ்; இரண்டு படங்களையும் டைரக்ட் செய்தவர் தேவரின் தம்பி எம்.ஏ.திருமுகம். இரு படங்களுமே வெற்றிப் படங்கள்.

  ஏ.சி.பிள்ளையின்  “சரஸ்வதி பிக்சர்ஸ்” தயாரிப்பில் உருவான “ராணி சம்யுக்தா”வில் எம்.ஜி.ஆரும், பத்மினியும் இணைந்து நடித்தனர். வசனங்களை கண்ணதாசன் எழுத, டி. யோகானந்த் டைரக்ட் செய்தார். இசை: கே.வி.மகாதேவன்.

  ஏற்கனவே பி.யு.சின்னப்பா -ஏ.சகுந்தலா நடித்த “பிருதிவிராஜன்” படத்தின் கதைதான் “ராணி சம்யுக்தா.” சின்னப்பா வின் படம் கூட, சுமாரான வெற்றியைத்தான் பெற்றது. எம்.ஜி. ஆரின் “ராணி சம்யுக்தா” வெற்றிப்படமாக அமைந்தாலும் “சூப்பர் ஹிட்” படம் அல்ல.

  ஜெயபாரத் புரொடக்சன்ஸ் அதிகப் பொருட் செலவில் தயாரித்த படம் “விக்ரமாதித்தன்”. ராஜேஸ்வராவ் இசையமைப்பில் டி.ஆர்.ரகுநாத்தும், என்.எஸ்.ராமதாசும் இணைந்து டைரக்ட் செய்த இந்த படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக பத்மினி நடித்தார்.

  இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக சரோஜாதேவியும், சிவாஜிகணேசனுக்கு ஜோடியாக பத்மினியும், ஜெமினி கணேசனுக்கு ஜோடியாக சாவித்திரியும் நடித்து வந்தனர். இந்த ஜோடிப் பொருத்தத்தை ரசிகர்கள் மிகவும் விரும்பினர். படங்கள் மிக நன்றாக ஓடின.

  ஆனால், ஜோடி மாற்றத்தை ஏனோ ரசிகர்கள் விரும்பவில்லை. ஜோடி மாற்றப்பட்ட படங்கள், அவை எவ்வளவு சிறப்பாக இருந்தாலும், எதிர்பார்த்ததற்கு சற்று குறைவாகவே ஓடின! அந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டிய படம் “விக்ரமாதித்தன்”!

  நூறு படங்களுக்கு மேல் டைரக்ட் செய்துள்ள கே.பாலசந்தர், எம்.ஜி.ஆர். நடித்த படம் எதையும் டைரக்ட் செய்ததில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர். நடித்த “தெய்வத்தாய்” என்ற படத்தின் மூலம்தான், அவர் வசனகர்த்தாவாக திரை உலகில் அடியெடுத்து வைத்தார் என்பது பலருக்கு வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும்.

  எம்.ஜி.ஆர். 1963-ல் பணத்தோட்டம், கொடுத்து வைத்தவள், தர்மம் தலைகாக்கும், கலைஅரசி, பெரிய இடத்துப்பெண், ஆனந்தஜோதி, நீதிக்குப்பின்பாசம், காஞ்சித்தலைவன், பரிசு ஆகிய 9 படங்களில் நடித்தார்.

  “பணத்தோட்டம்”, ஜி.என். வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் தயாரித்த படமாகும். கே.சங்கர் டைரக்ட் செய்ய, சரோஜாதேவி கதாநாயகியாக நடித்தார். பி.எஸ்.ராமையாவின் கதைக்கு வசனம் எழுதியவர் பாசுமணி. இசை: விசுவநாதன் – ராமமூர்த்தி. வெற்றிகரமாக ஓடிய படம் இது.

  “பரிசு” படத்தில் எம்.ஜி.ஆரும், சாவித்திரியும் இணைந்து நடித்தனர். இசை: கே.வி.மகாதேவன். வசனம்: ஆரூர் தாஸ்.
  இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியவர்: யோகானந்த்.

  “தர்மம் தலைகாக்கும்”, “நீதிக்குப்பின்பாசம்” ஆகியவை தேவர் பிலிம்ஸ் தயாரிப்பு. இரண்டிலும் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். இந்தப்படங்களை இயக்கியவர், எம்.ஏ.திருமுகம்.

  டி.ஆர்.ராமண்ணாவின் “பெரிய இடத்துப் பெண்” பெரிய வெற்றிப்படம். இதில், எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்தவர் சரோஜாதேவி.

  மேகலா பிக்சர்ஸ் தயாரித்த “காஞ்சித் தலைவன்” படத்தில், மீண்டும் எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் இணைந்தனர்.

  காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு அரசாண்ட நரசிம்மவர்மர் வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட கதை. வசனங்களை கருணாநிதி எழுதினார். எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனும், விஜயகுமாரியும் இடம் பெற்றிருந்தனர்.

  வசனம், நடிப்பு, காட்சியமைப்பு எல்லாமே சிறப்பாக இருந்தன. காசிலிங்கம் டைரக்ட் செய்த “காஞ்சித் தலைவன்” 26-10-1963-ல் வெளிவந்தது.

  சரோடி பிரதர்ஸ் தயாரிப்பான “கலை அரசி”யில், எம்.ஜி.ஆருடன் பானுமதி நடித்தார். ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார். வசனம்: ரவீந்தர். “பறக்கும் தட்டு” காட்சிகள் இடம் பெற்ற படம் இது.

  பி.எஸ்.வீரப்பாவின் ஹரிஹரன் பிக்சர்ஸ் தயாரித்த “ஆனந்த ஜோதி”யில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக தேவிகா நடித்தார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் இதுதான். கமலஹாசனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

  வசனத்தை ஜாவர் சீதாராமன் எழுத, வி.என்.ரெட்டியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர்.

  1964-ல் வேட்டைக்காரன், என் கடமை, பணக்கார குடும்பம், தெய்வத்தாய், தொழிலாளி, படகோட்டி, தாயின் மடியில் ஆகிய 7 படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார். இதில் “தெய்வத்தாய்”, ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் தயாரிப்பு.

  இந்தப்படம் தயாரிக்கப்பட்ட காலக்கட்டத்தில், கே.பாலசந்தர் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். நாடகம் எழுதி, இயக்குவதில் புகழ் பெற்று விளங்கினார். அவர் எழுதிய “மெழுகுவர்த்தி”, “மேஜர் சந்திரகாந்த்” ஆகிய நாடகங்களில் ரசிகர்களிடம் மிகுந்த ஆதரவைப் பெற்றிருந்தன.

  ஒருமுறை “மெழுகுவர்த்தி” நாடகத்திற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அவர் பேசுகையில், பாலசந்தரின் திறமையை வெகுவாகப் பாராட்டியதுடன், அவரைப்போன்ற இளைஞர்கள் படத்துறையில் நுழையவேண்டும் என்று வற்புறுத்தினார்.

  அதன் விளைவாக, “தெய்வத்தாய்” படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு பாலசந்தருக்குக் கிடைத்தது.

  இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி இணைந்து நடித்தார். பி.மாதவன் டைரக்ட் செய்தார். இசை: விசுவநாதன் – ராமமூர்த்தி. இது வெற்றிப்படமாக அமைந்தது.

  தேவர் பிலிம்ஸ் தயாரித்த “வேட்டைக்காரன்” படத்தில் மேல் நாட்டு பாணியில் “கவ்பாய்” உடையில் எம்.ஜி.ஆர். நடித்தது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி சாவித்திரி.

  ஆரூர்தாஸ் வசனம் எழுத டைரக்ட் செய்தவர் எம்.ஏ.திருமுகம். இந்தப்படமும், இதே ஆண்டு வெளிவந்த “தொழிலாளி”யும் தேவர் பிலிம்சின் வெற்றிப்படங்கள்.

  வேலுமணி தயாரித்த “படகோட்டி”யில் எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் இணைந்து நடித்தனர்.

  சக்தி கிருஷ்ணசாமியும், ஏ.எல்.நாராயணனும் வசனத்தை எழுதினர். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசை அமைத்த இந்தப் படத்தை டி.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். இப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
தொழில்நுட்பம்
விவசாயத் தகவல்கள்
சரித்திரம்
 மரண அறித்தல்