பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-7): ‘மதுரை வீரன்’ மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார்,
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-7): ‘மதுரை வீரன்’ மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார்,

  நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலின் மூலக்கதையை தழுவி “மலைக்கள்ளன்” திரைப்படம் எடுக்கப்பட்டது. அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். “பராசக்தி” வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த அந்த நேரத்தில் அவர் “மனோகரா” படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.

  “நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா? என்று அஞ்சுகிறேன்” என்று கூறி, இந்தப் படத்துக்கு வசனம் எழுத கருணாநிதி மறுத்து விட்டார்.

  இந்த சமயத்தில், எம்.ஜி.ஆரை ஸ்ரீராமுலு நாயுடு சந்தித்தார். “மலைக்கள்ளன் படத்திற்கு கருணாநிதி வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.

  உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளன் கதையில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்” என்று எம்.ஜி.ஆர். கூறினார்.

  (1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் தயாரிக்கப்பட்ட காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)

  கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.

  கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய- இனிய நடையில் எழுதியிருந்தார்.

  முதல் முறையாக எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.

  எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகாதேவன், சந்தியா, சுரபி பாலசரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரர் கதாபாத்திரம் ஏற்ற டி.எஸ்.துரைராஜ், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.

  பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.

  பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற    “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்  இந்த நாட்டிலே” என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.

  இவ்வகையில், மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை “மலைக்கள்ளன்” பெற்றது.

  தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இந்தப் படத்தின் கதை தயாரிக்கப்பட்டது. இந்தியில் எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் திலீப்குமார் நடித்தார்.

  எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரின் நடிப்பு பாணியை பின்பற்றியே நடித்தனர். 6 மொழிகளிலும் “மலைக்கள்ளன்” மகத்தான வெற்றி பெற்றான்.

  மலைக்கள்ளனுக்குப் பிறகு எம்.ஜி.ஆரும் சிவாஜிகணேசனும் இணைந்து நடித்த “கூண்டுக்கிளி” வெளிவந்தது. டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில், ஆர்.ஆர்.பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்தது. விந்தன் வசனம் எழுதினார். இருபெரும் நடிகர்கள் சேர்ந்து நடித்த படம் என்பதால், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அது எம்.ஜி.ஆர். படமாகவோ, சிவாஜி படமாகவோ அமையாதது மட்டுமல்ல, ஒரு நல்ல படமாகவும் அமையவில்லை.

  முக்கியமாக கதை சரியாக இல்லாததால், படம் தோல்வி அடைந்தது.

  இந்த தோல்வியை ஈடுசெய்யும் வகையில் 1955-ல் “குலேபகாவலி”யை தயாரித்தார், ராமண்ணா. எம்.ஜி.ஆருடன் டி.ஆர். ராஜகுமாரி, ஜி.வரலட்சுமி, ஈ.வி.சரோஜா, ராஜசுலோசனா, சந்திரபாபு ஆகியோர் நடித்தனர். ஜனரஞ்சக படமான “குலேபகாவலி” வெற்றிகரமாக ஓடியது.

  இதன்பின் தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படமான “அலிபாபாவும் 40 திருடர்களும்” படத்தில் எம்.ஜி.ஆர். நடித்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இப்படம், 1956 பொங்கல் தினத்தில் வெளிவந்து, வெற்றி முரசு கொட்டியது.

  பழம் பெரும் படத்தயாரிப்பாளரான லேனா செட்டியார், தமது கிருஷ்ணா பிக்சர்ஸ் சார்பில் “மதுரை வீரன்” கதையை பிரமாண்டமாகத் தயாரித்தார். எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக பானுமதி, பத்மினி ஆகிய இருவரும் நடித்தனர்.

  டி.எஸ். பாலையா, ஓ.ஏ.கே.தேவர், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.கே.ராமச்சந்திரன், ஈ.வி.சரோஜா, எம்.ஆர்.சந்தான லட்சுமி, “மாடி” லட்சுமி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர்.

  கர்ண பரம்பரைக் கதையான மதுரை வீரனுக்கு, திரைக்கதை -வசனம் எழுதினார், கவிஞர் கண்ணதாசன்.

  பாடல்களை கண்ணதாசனுடன் உடுமலை நாராயணகவி, தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்த இந்தப் படத்தை யோகானந்த் இயக்கினார்.

  kulebakavali
  “மதுரைவீரன்” 13-4-1956-ல் வெளிவந்து பல ஊர்களில் 25 வாரங்களுக்கு மேல் ஓடி, வெள்ளி விழா கண்டு, வசூலில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக, மதுரையில் இமாலய வெற்றி பெற்றது.

  “மதுரை வீரன்” வெற்றியைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆருக்கு ஒவ்வொரு ஊரிலும் ரசிகர் மன்றங்கள் தோன்றின. ஏற்கனவே மிக வேகமாக வளர்ந்து கொண்டிருந்த தி.மு.கழகத்தில், சக்தி வாய்ந்த தலைவராக எம்.ஜி.ஆர். உருவாகத் தொடங்கினார்.

  `கால்ஷீட்’ வாங்க, எம்.ஜி.ஆர். வீட்டில் குவிந்த தயாரிப்பாளர் கூட்டம்!

   

  பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-7): ‘மதுரை வீரன்’ மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார், பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-7): ‘மதுரை வீரன்’ மூலம் வசூல் சக்ரவர்த்தி ஆனார்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
இலங்கை சட்டம்
சினிமா
 மரண அறித்தல்