பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-5): வி.என். ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்!
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-5): வி.என். ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார்!

  “ராஜகுமாரி” “சூப்பர் ஹிட்” படமாக வெற்றி பெறவே, மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், மிகவும் பிரபலமானார்.

  “ராஜகுமாரி” வெளிவந்தபோது, கருணாநிதியின் தந்தை முத்துவேலரின் கண் ஒளி மங்கியிருந்தது. இருப்பினும், திருவாரூரில் இந்தப்படம் ரிலீஸ் ஆன தியேட்டருக்குச் சென்று, வசனங்களைக் கேட்டு மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப்பின் அவர் காலமானார்.

  “ராஜகுமாரி”க்குப்பிறகு, “அபிமன்யூ” என்ற படத்தை ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தில் எஸ்.எம். குமரேசனும், அவருடைய ஜோடியாக யு.ஆர்.ஜீவரத்தினமும் நடித்தனர்.

  அபிமன்யூவின் தந்தை அர்ஜுனனாக எம்.ஜி.ஆர். நடித்தார். படத்தின் பிற்பகுதியில்தான் அவர் வருவார். எனினும், நடிப்பு சிறப்பாக இருந்தது. மற்றும் நரசிம்மபாரதி, எம்.ஜி. சக்ரபாணி, நம்பியார், கே.மாலதி, எம்.ஆர்.சந்தான லட்சுமி ஆகியோரும் இதில் நடித்தனர். இந்தப் படத்தை எம்.சோம சுந்தரமும், ஏ.காசிலிங்கமும் இணைந்து டைரக்ட் செய்தனர்.

  லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அடைந்து, லண்டனில் உள்ள பிரிவியூ கவுன்சில் (வெள்ளையர் ஆட்சியின்போது உச்சநீதி மன்றம்) வரை சென்று விடுதலையான எம்.கே.தியாகராஜ பாகவதர், “ராஜமுக்தி” என்ற படத்தை தயாரித்தார். இதன் படப்பிடிப்பு புனே நகரில் நடந்தது.

  இதில் பாகவதரும், வி.என்.ஜானகியும் ஜோடியாக நடித்தனர். பாகவதருக்கு அடுத்த வேடத்தில், தளபதியாக எம்.ஜி.ஆர். நடித்தார். வில்லி போன்ற வேடத்தில் பி.பானுமதி நடித்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப்படம் இதுதான்.

  இந்தப்படத்தில் நடிக்கும்போது, எம்.ஜி.ஆரும், வி.என். ஜானகியும் முதன் முதலாக நேரில் சந்தித்துக் கொண்டனர். ஜானகியை எம்.ஜி.ஆர். ஏற்கனவே படத்தில் பார்த்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் முதல் மனைவி பார்கவி என்கிற தங்கமணியின் சாயலில் ஜானகி இருந்தது அவருக்கு வியப்பளித்தது.

  நேரில் சந்தித்தபோது அசந்தே போனார். பார்கவியின் அசல் அச்சு போலவே எம்.ஜி.ஆரின் கண்களுக்கு ஜானகி காட்சி அளித்தார். இதன் காரணமாக, இருவரும் நெருங்கிப் பழகினார்கள். ஒருவர் மனதில் ஒருவர் இடம் பெற்றனர்.

  இதே சமயத்தில், ஜுபிடரின் “மோகினி” படத்தில் எம்.ஜி. ஆரும், ஜானகியும் ஜோடியாக நடித்தனர்.

  1948 அக்டோபர் 9-ந்தேதி “ராஜமுக்தி”யும், அதே மாதம் 31-ந்தேதி “மோகினி”யும் ரிலீஸ் ஆயின. இதில் “ராஜமுக்தி” தோல்வி அடைந்தது. “மோகினி” வெற்றி பெற்றது.

  பின்னர், கோவிந்தன் கம்பெனி தயாரித்த “மருதநாட்டு இளவரசி”யில், எம்.ஜி.ஆரும், வி.என்.ஜானகியும் இணைந்து நடித்தனர். இதில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, சி.கே.சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர்.

  கதை-வசனத்தை மு.கருணாநிதி எழுத ஏ.காசிலிங்கம் டைரக்ட் செய்தார்.

  இந்தப் படத்தில் வி.என். ஜானகி மருதநாட்டின் இளவரசி. அவர், சாதாரண இளைஞனான எம்.ஜி.ஆரை காதலிப்பார். அவர் இளவரசி என்று எம்.ஜி.ஆருக்குத் தெரியாது. அதனால் அவரும் காதலிப்பார். எம்.ஜி.ஆருக்கு கத்திச்சண்டை கற்றுத்தருவார், ஜானகி!

  மருதநாட்டு அரசரை பதவியில் இருந்து இறக்க அவரது இளைய மனைவியின் சகோதரன் (மைத்துனன்) திட்டம் தீட்டுவான். அதை எம்.ஜி.ஆரும், ஜானகியும் சேர்ந்து முறியடிப்பதே இப்படத்தின் மூலக்கதை.

  இந்தப் படத்தில், எம்.ஜி.ஆர். ஒரு வேட்டி மட்டும் அணிந்து சாதாரண குடிமகனாக நடிப்பார். படம் முழுவதும் இந்த ஒரே உடைதான்! கருணாநிதியின் வசனம் அருமையாக அமைந்தது. எம்.ஜி.ஆரும், ஜானகியும் சிறப்பாக நடித்திருந்தனர். எம்.ஜி.ஆரின் கத்திச்சண்டைகள் ரசிகர்களைக் கவர்ந்தன. படம் அமோக வெற்றி பெற்றது.

  மருதநாட்டு இளவரசி 1950-ல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து, ஜானகியை தன் வாழ்க்கைத் துணைவியாக ஏற்க எம்.ஜி.ஆர். தீர்மானித்தார். அதற்கு முன்னதாக நோயுற்றிருக்கும் மனைவியின் சம்மதத்தைப் பெற எண்ணினார்.

  ஜானகியை தன் வீட்டுக்கு அழைத்துச்சென்று, மனைவி சதானந்தவதியிடம் அறிமுகம் செய்து வைத்தார். சதானந்தவதியை, “அக்கா” என்றே அழைத்தார், ஜானகி. இருவரும் சகோதரிகள் போலவே பழகினார்கள்.

  நாளடைவில், எம்.ஜி.ஆர். மனதில் ஜானகி இடம் பெற்றிருப்பதை சதானந்தவதி தெரிந்து கொண்டார். ஒரு நாள் கணவரை அழைத்து, “வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு பாரமாக இருந்து வருகிறேன். என்னால் உங்களுக்கு ஒரு சுகமும் இல்லை. என் தங்கையை (ஜானகி) நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார்.

  இதைக்கேட்டு எம்.ஜி.ஆர். கண்கலங்கினார். “நீ மனப் பூர்வமாகத்தான் சொல்கிறாயா?” என்று கேட்டார்.

  “மனப்பூர்வமாகத்தான் கூறுகிறேன். ஜானகியை நீங்கள் மணந்து கொள்ளுங்கள். ஆனால், நானும், ஜானகியும் ஒரே வீட்டில் இருக்க வேண்டாம். அவளுக்குத் தனி வீடு பார்த்து குடிவையுங்கள்” என்றார், சதானந்தவதி.

  மனைவியின் பூரண சம்மதத்துடன், ஜானகியை வாழ்க்கைத் துணைவியாக ஏற்றார், எம்.ஜி.ஆர்.

  பாகவதர்- சின்னப்பா காலத்தில் பெரிய பாடல் ஆசிரியராகத் திகழ்ந்த பாபநாசம் சிவனின் அண்ணன் பி.ஆர். ராஜகோபாலய்யரின் மகள்தான் வி.என்.ஜானகி. (வைக்கம் நாராயணி ஜானகி என்பதன் சுருக்கமே வி.என்.ஜானகி)

  எம்.ஜி.ஆர். சாதாரண வேடங்களில் நடித்து வந்த காலக்கட்டத்திலேயே வி.என்.ஜானகி கதாநாயகியாக புகழ் பெற்று விளங்கினார். எம்.ஜி.ஆரை விட அதிக சம்பளம் வாங்கி வந்தவர். எனினும், எம்.ஜி.ஆரை மணந்தபின் நடிப்பதை நிறுத்திவிட்டு கணவரின் சாதனைகளுக்கு அவர் பெருந்துணையாக நின்றார்.

  தமிழ் திரையுலகின் ’எவர் கிரீன் சூப்பர் ஸ்டார்’ ஆக எம்.ஜி.ஆர். உயர்ந்த கதையை  காண்போம்.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
தொழில் நுட்பம்
மங்கையர் பகுதி
எம்மவர் நிகழ்வுகள்
 மரண அறித்தல்