சூப்பர் ஹிட்டான ராஜ குமாரி,
  • சூப்பர் ஹிட்டான  ராஜ குமாரி,

    தமிழ் திரையுலகின்  ’எவர்கிரீன் ஹீரோ’வாக  (என்றென்றும் பசுமையான கதாநாயகனாக) எம்.ஜி.ஆர். உயர்ந்தது எப்படி? என்பதை இன்றைய தொடரில் விரிவாக காண்போம்.

    நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.ஏ.சாமி, இலங்கையில் வாழ்ந்தவர். அவர் “பில்ஹணன்” என்ற நாடகத்தை எழுதி திருச்சி வானொலி நிலையத்துக்கு அனுப்பினார்.

    அதை வானொலி நாடகமாக தயாரிப்பதற்கு ஒப்புக்கொண்ட திருச்சி வானொலி நிலையம், 29-08-1944 அன்று ஒலிபரப்பியது. அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், இந்த நாடகத்தின் கதாநாயகன் பில்ஹணன் வேடமேற்று நடித்தார்.

    எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ஒரே ரேடியோ நாடகம் இதுதான். பாகவதர் பங்கேற்ற காரணத்தால், இந்த ரேடியோ நாடகத்தை தமிழகமே ஆவலுடன் கேட்டது. அப்படி கேட்டவர்களில் ஒருவர், நாடக மேதை டி.கே.சண்முகம். அவர்   “பில்ஹனன்”-ஐ மேடை நாடகமாக்க விரும்பினார்.

    உடனே ஏ.எஸ்.ஏ.சாமியை தொடர்பு கொண்ட அவர், “பில்ஹணன்” ரேடியோ நாடகத்தை மேடைக்கு ஏற்றவாறு மாற்றித்தருமாறு கேட்டுக்கொண்டார். அவரும், தக்கபடி மாற்றித் தந்தார். கதாநாயகனாக டி.கே.சண்முகம்; கதாநாயகியாக எம்.எஸ்.திரவுபதி நடிக்க மேடை நாடகமாக “பில்ஹணன்” அரங்கேறியது.

    இந்தக் காலக்கட்டத்தில் ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் போல ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனமும் படத்தயாரிப்பு தொழிலில் முன்னணியில் இருந்தது. எம். சோமசுந்தரம், எஸ்.கே.மொகிதீன் ஆகிய இருவரும் ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிபர்களாக இருந்தார்கள்.

    “பில்ஹணன்” மேடை நாடகத்தை பார்த்த “ஜுபிடர்” சோமு, அதை படமாக்க முடிவு செய்தார். உடனடியாக, ஏ.எஸ்.ஏ.சாமியை அழைத்து, ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிக்க திட்டமிட்டுள்ள 6 படங்களுக்கு வசனம் எழுத ஒப்பந்தம் செய்து கொண்டார்.

    அந்த ஒப்பந்தத்தின்படி, “வால்மீகி”, “ஸ்ரீமுருகன்” ஆகிய படங்களுக்கு ஏ.எஸ்.ஏ.சாமி முதலில் வசனம் எழுதினார்.

    “ஸ்ரீமுருகன்” படத்தில் கதாநாயகனாக (முருகனாக) ஹொன்னப்ப பாகவதர் நடித்தார். பரமசிவன் வேடத்தில் எம்.ஜி.ஆர். தோன்றினார். அவரும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் இப்படத்தில் ஆடிய சிவ- பார்வதி தாண்டவம், ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்தது.

    ஜுபிடர் பட நிறுவனத்தில் ஒன்றாக பணியாற்றிய எம்.ஜி.ஆரும், ஏ.எஸ்.ஏ. சாமியும் நண்பர்கள் ஆனார்கள். அடுத்தபடியாக, “ராஜகுமாரி” என்ற படத்தைத் தயாரிக்க ஜுபிடர் பிக்சர்ஸ் முடிவு செய்தது.

    கதை, வசனத்துடன் படத்தை இயக்கும் பொறுப்பையும் ஏற்கும்படி ஏ.எஸ்.ஏ.சாமியிடம் ஜுபிடர் சோமு கூறினார். சாமியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். இந்தப் படத்தின் கதாநாயகனாக பி.யு.சின்னப்பாவையும், கதாநாயகியாக டி.ஆர்.ராஜகுமாரியையும் ஒப்பந்தம் செய்ய ஜுபிடர் நிறுவனம் நினைத்தது.

    ஆனால், படத்தின் இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி, “ஸ்ரீமுருகன் படத்தில் சிவனாக நடித்த எம்.ஜி.ராமச்சந்திரனும், பார்வதியாக நடித்த கே.மாலதியும் திறமையானவர்கள். அவர்களையே கதாநாயகன் – கதாநாயகியாக நடிக்க வைத்து “ராஜகுமாரி”யை குறைந்த செலவில் தயாரிக்கலாம்” என்று கூறினார்.

    இந்த திட்டம் ஜுபிடர் அதிபர்களுக்கு ஆச்சரியம் அளித்தது. “நீங்கள் டைரக்ட் செய்யப்போகும் முதல் படம் இது. பிரபல நட்சத்திரங்களான சின்னப்பாவும், டி.ஆர்.ராஜகுமாரியும் நடித்தால் வெற்றி நிச்சயம். நாங்களே பெரிய நடிகர்- நடிகைகளை போடலாம் என்கிறபோது, நீங்கள் ராமச்சந்திரனையும், மாலதியையும் போடலாம் என்கிறீர்களே!” என்று கூறினார்கள்.

    “இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ராமச்சந்திரனையும், மாலதியையும் வைத்தே, இதை பெரிய வெற்றிப்படமாக்க நம்மால் முடியும்” என்று உறுதியாக சொன்னார், ஏ.எஸ்.ஏ.சாமி.

    “உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை இருக்கும்போது, நாங்கள் மறுப்பு சொல்லவில்லை. உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்” என்று கூறிய ஜுபிடர் சோமுவும், மொகிதீனும் ஏ.எஸ்.ஏ.சாமியின் யோசனைக்கு ஒப்புதல் அளித்தனர்.

    ஏற்கனவே எம்.கே.தியாகராஜ பாகவதரை வைத்து “உதயணன்” என்ற படத்தை ஜுபிடர் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. இதில் பாகவதரும், வசுந்தராதேவியும் ஜோடியாக நடிக்க இருந்தனர். லட்சுமிகாந்தன் வழக்கில் கைதாகிய பாகவதர் சிறை செல்ல நேர்ந்ததால், அந்தப் படத்தின் தயாரிப்பு கைவிடப்பட்டது.

    இந்தப் படத்திற்கு இசை அமைப்பதற்காக, சிதம்பரம் ஜெயராமன் ஜுபிடருக்கு வந்தார். அப்போது ஏ.எஸ்.ஏ. சாமிக்கும், அவருக்கும் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. “என் மைத்துனர் மு.கருணாநிதி, திராவிடர் கழகத்தில் இருக்கிறார். பெரியாரின் “குடியரசு” பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். எழுத்தாற்றல் மிக்கவர். வசனம் எழுதுவதற்கு அவருக்கு வாய்ப்பு கொடுங்கள்” என்று சாமியிடம், சிதம்பரம் ஜெயராமன் கேட்டுக் கொண்டார்.

    அதை ஞாபகத்தில் வைத்திருந்த ஏ.எஸ்.ஏ.சாமி, வசனம் எழுத வருமாறு கருணாநிதிக்கு தந்தி அனுப்பினார். தந்தியை பெரியாரிடம் காட்டினார், கருணாநிதி. “இது நல்ல வாய்ப்பு. போய் வாருங்கள்” என்று, பெரியார் அனுப்பி வைத்தார்.

    ஈரோட்டிலிருந்து கோவைக்கு சென்றார், கருணாநிதி. ஏற்கனவே நாடகங்கள் எழுதி அனுபவப்பட்ட அவர், ஏ.எஸ்.ஏ.சாமி சொன்ன காட்சிகளுக்கெல்லாம் வசனம் எழுதிக் கொடுத்தார். அவருடைய திறமையை புரிந்து கொண்ட ஏ.எஸ்.சாமி, படத்திற்கான முழு வசனத்தையும் எழுதித்தரும்படி சொன்னார். அதனையேற்று, கருணாநிதி முழு வசனத்தையும் எழுதிக் கொடுத்தார்.

    இந்தக் காலக்கட்டத்தில், எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் நெருங்கிப் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. விரைவிலேயே நெருங்கிய நண்பர்களானார்கள். அப்போது, எம்.ஜி.ஆர். காங்கிரஸ் அனுதாபியாகவும், ஆத்திகராகவும் இருந்தார். அவர் கழுத்தில் ருத்திராட்ச மாலை அணிந்திருப்பார்.

    காந்தி எழுதிய புத்தகங்களை கருணாநிதிக்கு எம்.ஜி.ஆர். பரிசளிப்பார். பெரியார் எழுதிய புத்தகங்களைக் எம்.ஜி.ஆருக்கு கொடுப்பார், கருணாநிதி.

    இதற்கிடையில்,”ராஜகுமாரி” படம் வேகமாக வளர்ந்தது. எம்.ஜி.ஆர். மீது ஏ.எஸ்.ஏ.சாமி வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை. இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். வெகு சிறப்பாக நடித்தார். எம்.ஜி.ஆரும், டி.எஸ். பாலையாவும் போடும் கத்திச்சண்டை படத்தின் சிறப்பு அம்சமாக இருந்தது.

    “ராஜகுமாரி” படத்தில் வில்லியாக நடித்தவர், இலங்கைக் குயில் தவமணிதேவி. படப்பிடிப்புக்காக மேக்கப் போட்டுக்கொண்டு வந்து நின்ற தவமணி தேவியைப் பார்த்து, டைரக்டர் உள்பட அனைவரும் அசந்து போனார்கள்.

    மர்லின் மன்றோவை தோற்கடிக்கும் விதத்தில் கவர்ச்சியின் சிகரமாக அவர் தோன்றினார். ஜாக்கெட் போட்டிருந்தார்; ஆனால் கடைசி பட்டன்களைத் தவிர மற்ற பட்டன்களைப் போடவில்லை! இதை பார்த்து மிரண்டுப் போன இயக்குனர் ஏ.எஸ்.ஏ.சாமி. “இவ்வளவு கவர்ச்சி வேண்டாம் தாயே!” என்று கூறினார்.

    “கதாநாயகனை மயக்கும் விதத்தில் நடனம் ஆடுவதற்காகத்தானே நான் வந்திருக்கிறேன். இப்படி இருந்தால்தான் இயற்கையாக இருக்கும்” என்றார், தவமணிதேவி.

    கடைசியில், டைரக்டரும், தவமணிதேவியும் கலந்து பேசி ஒரு “சமரச உடன்பாட்டு”க்கு வந்தனர். அதன்படி ஜாக்கெட்டுக்கு மத்தியில் ஒரு காகிதப்பூ சொருகப்பட்டது!

    இந்தப் படத்தில், எம்.ஜி.ஆருக்கு எம்.எம்.மாரியப்பா பின்னணி குரல் கொடுத்து பாடினார். எம்.ஜி.ஆருக்காக குரல் கொடுத்த பாடிய முதல் பின்னணி பாடகர் எம்.எம்.மாரியப்பா தான். பின்னாளில் பிரபல வில்லனாக தமிழ் சினிமாவை கலக்கிய எம்.என்.நம்பியார், இந்தப் படத்தில் நகைச்சுவை வேடமேற்று நடித்தார்.

    11-04-1947 அன்று “ராஜகுமாரி” படம் ரிலீஸ் ஆனது. படத்தின் “டைட்டில் கார்டில்” எம்.ஜி.ஆரின் பெயர் “எம்.ஜி.ராம்சந்தர்” என்று காட்டப்பட்டது. “வசனம் உதவி” என்று கருணாநிதியின் பெயர் இடம் பெற்றது.

    “ராஜகுமாரி” “சூப்பர் ஹிட்” படமாக வெற்றி பெறவே, மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆர், பிரபலமானார்.

    மகன் வசனம் எழுதிய முதல் திரைப்படத்தை பார்க்கும் பேறு, கருணாநிதியின் தந்தை முத்துவேலருக்கு கிடைத்ததா?

    சூப்பர் ஹிட்டான  ராஜ குமாரி, சூப்பர் ஹிட்டான  ராஜ குமாரி,
  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில் நுட்பம்
சிறுவர் உலகம்
சட்டம்
 மரண அறித்தல்