திருமணமும்-தகுதி உயர்வும்: பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-2)
 • திருமணமும்-தகுதி உயர்வும்: பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-2)

  எம்.ஜி.ஆரின் இரண்டாவது படம் “இரு சகோதரர்கள்”. இதில் சக்ரபாணியும் நடித்தார். இந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. தொடர்ந்து சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைக்க சத்யபாமா அம்மையார் விரும்பினார்.

  “நடிப்புத்துறையில்  முன்னேறிய பிறகுதான்  திருமணம்” என்று எம்.ஜி.ஆர். கூறினார். ஆனால் தாயார் தொடர்ந்து வற்புறுத்தவே திருமணத்துக்கு சம்மதித்தார். பாலக்காட்டைச் சேர்ந்த பார்க்கவி என்கிற தங்கமணியை எம்.ஜி.ஆருக்கு திருமணம் செய்து வைத்தார், சத்யபாமா.

  துரதிர்ஷ்டவசமாக, பார்க்கவி சில ஆண்டுகளில் காலமானார். மனைவியின்   மரணம் எம்.ஜி.ஆரை மிகவும் பாதித்தது. துறவிபோல்   வாழ்ந்தார். மகனின் நிலையைக் கண்டு வருந்திய சத்யபாமா, அவருக்கு மறுமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்கு எம்.ஜி.ஆர். சம்மதிக்கவில்லை. எனினும், “பார்க்கவியை இழந்தது நமது துரதிர்ஷ்டம். என்றாலும், நீ வாழ்க்கையில் வெறுப்படைவது நல்லதல்ல. அது உன் உடல் நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கும்” என்று சத்யபாமா எடுத்துக் கூறவே, மறுமணத்துக்கு எம்.ஜி.ஆர். சம்மதித்தார்.

  தாயார் பார்த்து முடித்த சதானந்தவதியை, 1942-ம் ஆண்டு ஆனி மாதம் 16-ந் தேதி எம்.ஜி.ஆர். மணந்தார்.

  சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் 25 ரூபாய் வாடகை வீட்டில் எம்.ஜி.ஆர். குடும்பத்துடன் குடியேறினார்.

  முதல் முறையாக சதானந்தவதி கருத்தரித்தபோது அவரை காச நோய் பற்றிக் கொண்டது. அவருடைய வயிற்றில் உருவாகியிருந்த கரு, கர்ப்பப்பைக்கு வெளியே இருந்ததை டாக்டர்கள் கண்டு பிடித்தனர். அது அப்படியே வளர்ந்தால், தாயின் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று  டாக்டர்கள் கருதியதால்  ஆபரேஷன் மூலம் அந்தக் கரு அகற்றப்பட்டது.

  1947-ம் ஆண்டில், சென்னை அடையாறில் மாதம் 170 ரூபாய் வாடகைக்கு ஒரு வீடு பார்த்து குடியேறினார், எம்.ஜி.ஆர்.அங்கு வசித்தபோது, அன்னை சத்யா அம்மையார் காலமானார். அந்த துயரத்தில் இருந்து மீள எம்.ஜி.ஆருக்கு வெகு காலம் தேவைப்பட்டது.

  1949-ம் ஆண்டில், சதானந்தவதிக்கு இரண்டாவது முறையாக கருச்சிதைவு ஏற்பட்டது. அதன் பின், அவர் உடல் நலம் குன்றி படுத்த படுக்கையானார். 1962-ல் அவர் மறையும் வரை, நோயாளியாகவே வாழ்ந்தார்.

  எம்.ஜி.ஆர். தனது மனைவியை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொண்டார். 20 ஆண்டு காலம், சதானந்தவதியுடன் குடும்பம் நடத்திய போதிலும், அவர் இல்லறத் துறவியாகவே வாழ்ந்தார்.

  குடும்பத்தில் சோதனை நிறைந்திருந்தபோதிலும், படத்துறையில் அவர் படிப்படியாக முன்னேறிக்கொண்டிருந்தார்.

  “வீர ஜெகதீஷ்”, “மாயா மச்சீந்திரா”, “பிரகலாதா”, “சீதா ஜனனம்” ஆகிய படங்களிலும் அவர் சிறிய வேடங்களில் நடித்தார்.

  1941-ல் “ஏழிசை மன்னர்” எம்.கே.தியாகராஜ பாகவதருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு, “அசோக்குமார்” படத்தின் மூலம் அவருக்கு கிடைத்தது. எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் “அசோக்குமார்.”அசோக்குமாரைத் தொடர்ந்து “தமிழறியும் பெருமாள்”, “தாசிப்பெண்”, “ஹரிச்சந்திரா” (ஜெமினி), “சாலிவாகனன்”, “மீரா”, “ஸ்ரீமுருகன்” முதலிய படங்களில் நடித்தார்.

  பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்படாத அந்த காலக்கட்டத்தில் சொந்தக் குரலில் பாடத்தெரிந்தவர்கள் மட்டுமே கதாநாயகனாக நடிக்க முடியும். அழகும், திறமையும் கொண்ட எம்.ஜி.ஆர்., அப்போதே கதாநாயகனாக உயர முடியாமல் போனதற்கு அதுதான் காரணம். 1946-ல் பின்னணி பாடும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் திருப்பம் ஏற்பட்டது.

  இந்தியாவின் வரலாற்றில் 1947-ம் ஆண்டு எப்படி முக்கியமானதோ. அதேபோல், எம்.ஜி.ஆரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாக அந்த ஆண்டு அமைந்தது.

  1947 ஆகஸ்ட் 15-ந்தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அதற்கு 4 மாதங்களுக்கு முன்னதாக – அதாவது ஏப்ரல் 11-ந் தேதி எம்.ஜி.ஆர். முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த “ராஜகுமாரி” படம் வெளியானது.

  எம்.ஜி.ஆர். நடித்த முதல் திரைப்படமான “சதிலீலாவதி” 1936-ல் வெளியானது. அதற்கு 11 ஆண்டுகளுக்குப் பிறகுதான் “ராஜகுமாரி” திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் சினிமாவின் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

  ’எவர்கிரீன் ஹீரோ’வாக எம்.ஜி.ஆர். உயர்ந்தது எப்படி?

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
மங்கையர் மருத்துவம்
உலக சட்டம்
உலக செய்தி
 மரண அறித்தல்