வள்ளல் பிறந்தார்!! பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-1)
 • வள்ளல் பிறந்தார்!! பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-1)

  திரை உலகிலும், அரசியலிலும் சகாப்தம் படைத்த எம்.ஜி.ஆரின் முழுப்பெயர் எம்.ஜி.ராமச்சந்திரன். பெற்றோர் பெயர் கோபாலமேனன் – சத்தியபாமா.

  கோபாலமேனன், மாஜிஸ்திரேட்டாக பணிபுரிந்து வந்தார். அரூர், எர்ணாகுளம், திருச்சூர், கரூர் முதலிய இடங்களில் வேலை பார்த்தார். அநீதிக்கு துணை போக மறுத்ததால் அவரை வேறு ஊருக்கு பணி மாற்றம் செய்து அன்றைய ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர்.

  இதனால் மன வேதனை அடைந்த கோபாலமேனன், தனது மாஜிஸ்திரேட் பதவியை ராஜினாமா செய்து விட்டு மனைவியுடன் இலங்கைக்கு சென்றார்.

  கோபாலமேனன் – சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்து வந்தபோது, 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி சுவாதி நட்சத்திரத்தில் அவர்களுக்கு ஓர் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாட்டில் குடியேறிய வனவாச காலத்தில் அந்த அழகு திருமகன் பிறந்ததாலோ…என்னவோ?..  ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு ஏற்பட்ட வனவாசத்தை நினைவு கூரும் விதமாக எதிர்கால தமிழக வரலாற்றில் நீங்காத சிறப்பிடத்தை பிடித்த அந்த அதிசயப் பிறவிக்கு ‘ராம் சந்தர்’ என பெயர் சூட்டி அவர்கள் மகிழ்ந்தனர்.

  கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார். அந்த இடம் தமிழில் “பச்சைக்காடு” என்று அழைக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர். பிறந்த வீட்டில், தற்போது பள்ளிக்கூடம் நடந்து வருகிறது.

  எம்.ஜி.ஆருக்கு எம்.ஜி.சக்ரபாணி, பாலகிருஷ்ணன் என்று இரண்டு அண்ணன்கள். கமலாட்சி, சுபத்ரா என்ற 2 தமக்கைகள். 4 குழந்தைகளுக்குப்பின் கடைக்குட்டியாகப் பிறந்தவர், எம்.ஜி.ஆர்.

  பாலகிருஷ்ணன், கமலாட்சி, சுபத்ரா ஆகிய மூவரும் சிறு வயதிலேயே இறந்து விட்டனர். சக்ரபாணியையும், எம்.ஜி.ஆரையும் கோபாலமேனனும், சத்தியபாமாவும் அன்புடன் வளர்த்து வந்தனர்.

  எம்.ஜி.ஆருக்கு 2 வயதானபோது, குடும்பத்துடன் தாயகம் திரும்பினார், கோபாலமேனன். முன்பு செல்வச் செழிப்புடன் வாழ்ந்த அவரது குடும்பம், ஒத்தப்பாலம் என்ற இடத்தில் வாடகை வீட்டில் வசித்தது.

  1920-ம் ஆண்டு, கோபாலமேனன் திடீரென்று மாரடைப்பால் காலமானார். தந்தை இறந்த போது எம்.ஜி.ஆருக்கு மூன்று வயது. இரண்டு மகன்களையும் வளர்த்து ஆளாக்கும் பெரும்பொறுப்பு சத்தியா அம்மையார் தலையில் விழுந்தது.

  அவருடைய தம்பி நாராயணனும், குடும்ப நண்பர் வேலு நாயரும் அப்போது கும்பகோணத்தில் வசித்து வந்தனர். ஆதரவு தேடி தனது இரு மகன்களுடன் சத்தியபாமாவும் கும்பகோணத்திற்கு வந்து சேர்ந்தார்.

  அவரது தம்பி நாராயணன், அப்போது  “ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி” என்ற நாடகக் குழுவில் பின்பாட்டு பாடி வந்தார்.

  சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் கும்பகோணம் ஆனையடியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டனர். இலங்கையில் இருந்து கொண்டு வந்திருந்த பணமும், நகைகளும் தீரும் வரை அன்றாட வாழ்க்கை சிரமம் இன்றி கழிந்தது. அதன்பின், குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க சத்தியபாமா அரும்பாடு பட்டார்.

  அவரது தம்பி நாராயணன், குடும்பக் கஷ்டத்தைப் போக்க சத்தியபாமா அம்மையாரிடம் ஒரு யோசனை தெரிவித்தார். “சக்ரபாணியும், ராமச்சந்திரனும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்கள். நான் வேலை பார்க்கும் நாடக கம்பெனியில் சேர்த்துவிட்டால், விரைவில் முன்னுக்கு வந்து விடுவார்கள்” என்று அவர் கூறினார்.

  குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்று சத்தியபாமா விரும்பிய போதிலும், குடும்ப சூழ்நிலையைக்கருதி அவர்களை நாடகத்தில் சேர்க்க சம்மதித்தார்.

  அதைத்தொடர்ந்து, அவர்களை நாடகத்தில் சேர்த்துவிட்டார், நாராயணன். அப்போது அந்த கம்பெனியில் பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா ஆகியோர் நடிகர்களாக இருந்தனர்.

  ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியின் நாடகங்களில் முதலில் சிறு வேடங்களில் தோன்றி நடித்துவந்த எம்.ஜி.ஆர், படிப்படியாக உயர்ந்து கதாநாயகன் பாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான் தமிழில் பேசும் படங்கள் வரத்தொடங்கின.

  1935-ம் ஆண்டு, எஸ்.எஸ். வாசன் எழுதிய “சதிலீலாவதி” என்ற கதை, சினிமாவாக தயாரிக்கப்பட்டது. இந்த படத்தின் மூலம் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்த எம்.ஜி.ஆர்., தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்கினார்.

  எஸ்.எஸ்.வாசன், எம்.ஜி.ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.எஸ். பாலையா ஆகிய நால்வருக்கும் இதுதான் முதல் படம்.

  இந்தப் படத்தில் நடித்தபோது எம்.ஜி. ஆருக்கு வயது 19. முதல் படத்தில் நடித்ததற்காக அவருக்கு கிடைத்த சம்பளம் நூறு ரூபாய். அதை அப்படியே சத்தியபாமாவிடம் கொண்டு போய் கொடுத்து, ஆசி வழங்கி தன்னை வாழ்த்தும்படி தலை தாழ்த்தி நின்றார்.

  எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் ஏழை-எளிய மக்களை வாழ்விக்க பிறந்த அந்த அன்பு மகனை உச்சி முகர்ந்த அருமை தாயார், அன்று தெய்வத்திடம் என்ன வரம் கேட்டு எம்.ஜி.ஆரை வாழ்த்தினாரோ…? அது வரம் கேட்ட சத்தியபாமாவும், கேட்ட வரத்தைவிட பன்மடங்கு அதிகமாகவே ஆசியளித்த தெய்வமும் மட்டுமே அறிந்த ரகசியம்.

  தொடரும்..

   

  வள்ளல் பிறந்தார்!! பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-1) வள்ளல் பிறந்தார்!! பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு.. (பாகம்-1)
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சிறுவர் உலகம்
தமிழகச் செய்திகள்
தையல்
மரண அறிவித்தல்
 மரண அறித்தல்